குவியத்தின் எதிரிகள் - 14. பல்முனை இயக்கம்

வாழ்வில் ஒரே வேலையைத் தடுமாற்றத்துடன் செய்பவர்களைப்போல சராசரியான வெற்றிகளையே அடைந்திருக்கிறார்கள். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதில் உள்ள சிக்கல் என்ன?

‘‘கணேசன் மாதிரி வேலை பாக்கணும். நம்மகிட்ட பேசிட்டிருக்கறப்பவே, லெட்ஜர்ல எண்ட்ரி போட்டுருவாரு. நாம வேலைய ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அவர் வேலையை முடிச்சுட்டு, பாஸ் கேபின்ல போய் ஒக்காந்துருவாரு. ஏன் பிரமோஷன் கிடைக்காது?’’

‘‘கைக்கு கை, வாய்க்கு வாய்-ன்னு இருக்கணும். பேசிக்கிட்டே இருக்கும்போது நம்ம வேலையைப் பாத்துகிட்டே போணும்’’.

ஒரே நேரத்தில் பல்வகை இயக்கத்தைச் செய்பவர்களை உலகம் வியக்கிறது. முன்னேறும் தகுதியில் இது ஒன்று எனச் சிலாகிக்கிக்கிறோம். காணும்போது, அவர்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்து முடித்துவிடுவதைப்போல் தோற்றமளிக்கிறது.

ஆனால், இது ஒரு பிறழ்வு என்கிறார்கள் வல்லுநர்கள். மல்ட்டி டாஸ்க்கிங் என்பது மூளையையும் உடல் உறுப்புகளையும் அதிகப் பளு தந்து அயர்வடையைச் செய்யும் தவறான பழக்கம் என்பது பல உளவியல் ஆய்வாளர்களின் முடிவு.

அஷ்டாவதானி, தசாவதானி என்று எட்டு / பத்து வேலைகளை ஒரே நேரத்தில் செய்பவர்களை வியக்கும் நமக்கு, அவர்கள், அந்தத் திறமையால் பெற்ற பயன்களைப் பற்றித் தெரியாது. வாழ்வில் ஒரே வேலையைத் தடுமாற்றத்துடன் செய்பவர்களைப்போல சராசரியான வெற்றிகளையே அடைந்திருக்கிறார்கள். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதில் உள்ள சிக்கல் என்ன?

ஒரு வேலையை நம் மூளை கிரகிக்கும்போது, ஹிப்போகேம்பஸ் என்ற பகுதி, முன் அனுபவங்கள், முன்பு பெற்ற தகவல்களை முன்னெடுத்து, சமீபத்தில் பெற்ற தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறது. புரிதல், அறிதல், புரிதலின் வேறு பரிணாமங்கள், முன்பு தவறாகப் புரிந்தது, அல்லது தற்போது தவறாக வரும் தகவல்கள் என அனைத்தையும் மூளை படுவேகமாகக் கிரகித்து எதிர்வினையாற்ற முயல்கிறது.

ஆனால், மூளை என்பது ஒரு சோம்பேறி. எவ்வளவு குறைவான ஆற்றல் செலவிட்டு, அதிகமாகப் பலன் கிடைக்கும் என்ற கணக்கிலேயே எப்போதும் அது இருக்கும். எனவே, பல சமிக்ஞைகள் ஒரே நேரத்தில் கிடைத்தால், தானியங்கு நிலையில் எத்தனை பணிகளைச் செய்ய முடியுமெனத் தீர்மானித்து, அந்தந்தப் பகுதிக்கு அனுப்பிவைக்கும். இயல்பாக, காபி டம்ளரை எடுத்தபடியே மில்லியன் டாலர் பிரச்னைகளை அலசுபவர்களுக்கு, கை செய்யும் வேலை பற்றிய கவனம் அதிகம் இருக்காது. சிலர், போனில் பேசும்போது காகிதத்தில் ஏதோ வரைந்தபடியே இருப்பார்கள். அல்லது தலைக்கு மேல் கையைத் தூக்கி, நெற்றியை வருடியபடி… இந்த ஆக்க நிலை அனிச்சைச் செயலை மூளை தானியங்கி நிலைக்குத் தள்ளிவிடுகிறது.

எல்லாச் செயலையும் இப்படி மூளையால் அனிச்சைச் செயலுக்குத் தள்ளமுடியாது. உணர்வும், மூளையின் சில பகுதிகளும் கவனத்தினை அதிகம் கையாளவேண்டி இருக்கிறது.

உதாரணமாக, ஒருவரை ஒரு போன் உரையாடலின்போது, நான்கு இலக்க எண்கள் இரண்டைப் பெருக்கிக் காட்டச் சொல்லுங்கள். மிகக் கடினம்.

சமையலறையில் பொருள்களைத் தேடும்போது, இந்தப் பெருக்கலோ, கூட்டலோ கடினம். ‘இருடா, வேலையா இருக்கேன்ல’ என்று பதில் வரும். அதேநேரம், உப்புமாவுக்கு ரவை வறுத்துக்கொண்டிருக்கையில், மூளையால் இந்தப் பெருக்கலைப் போட்டுவிடமுடியும். மூளை, ஆக்க நிலை அனிச்சைச் செயலாக, ஒரு தானியங்கி நிலையில் கைகளை, வாணலியில் வேலை பார்க்க விட்டுவிடுகிறது. தேடும்போது, கவனம் வேண்டியிருக்கிறது. காண்பதை கிரகித்து, முன் நினைவுகளின் தகவல்நிலையில், அந்தப் பொருளைப் பொருத்திப் பார்த்து, ‘‘இதுதான் /  இது இல்லை’’ என்று சொல்லவேண்டி இருக்கிறது. இதற்கு மூளைக்கு கவனம், ஆற்றல் குவியம் தேவைப்படுகிறது. எனவே, பெருக்கல் என்பது அந்த நேரத்தில் இயலாத ஒன்று.

இதனை கானேமான், ‘சிஸ்டம் 1 மற்றும் சிஸ்டம் 2-ன் வேலைத்திறன்’ என்பதாகத் தனது நூலில் குறிப்பிடுகிறார். எதனை சிஸ்டம் 1-க்குத் தர வேண்டும், எதனை 2-க்குத் தர வேண்டும் என்பதை சிறுவயதினர் அறியமாட்டார்கள். அவர்களது மூளை இந்தப் பதப்படுத்தலில் இன்னும் ஈடுபடாத நிலையில், சிஸ்டம் ஒன்றிலிருந்தே பதில் சொல்ல எத்தனிப்பார்கள். எனவே, கேள்வி கேட்டால், டக்கென தவறாகப் பதில் சொல்லும்போது, ‘‘அவசரக் குடுக்கை, நல்லா யோசிச்சுப் பதில் சொல்லு’’ என்றெல்லாம் சொல்லவேண்டி இருக்கிறது. இது அவர்களது மூளை பல்திறம்பட்ட வேலைகளில் ஒரே நேரத்தில் ஈடுபட எத்தனிப்பதால் வருவது மட்டுமல்ல; அவர்களுக்குத் தூண்டும்பொருளின் ஆழம் புரியாததால், எந்த நிலையிலிருந்து பதில் சொல்ல வேண்டும் எனத் தெரியாததால் வரும் குழப்பம்.

அனுபவம் பெற்ற பின்னும் இது தொடர்வதற்குக் காரணங்கள் இரண்டு.

1. எதிர்வினையாற்ற வேண்டிய பதற்றம், அழுத்தம், உணர்வுக் கொந்தளிப்பு, நம்மை ‘child’ மனநிலையிலிருந்து பதில் சொல்ல வைக்கிறது. இந்த அநிலையில் கேள்விகளை உள்வாங்கி, சரியாகப் புரிந்து, பகுத்தாய்ந்து, நிலைத்தகவல்களில் இருந்து தகவலைத் தேடி, பொருத்திப் பார்த்து, நிலைமைக்குத் தக்கவாறு எதிர்வினையாற்றும் முதிர்வு அந்த நேரத்தில், சைல்ட் மனநிலைப்பாங்கால் மழுங்கடிக்கப்படுகிறது. இது உணர்வுபூர்வமான மனநிலை எதிர்வினை. இதுபற்றி விரிவாகப் பின் ஆராய்வோம்.

2. பல்திறம்பட்ட செயலாற்றம். ஒரே நேரத்தில் பலதரப்பட்ட வேலைகளில் மூளை ஈடுபடும்போது, அது குவியத்துடன் ஆற்ற வேண்டிய வேலை ஒன்றினை மட்டுமே முக்கியமாக ஏற்றுக்கொண்டு, பிறவற்றைத் தானியங்கி நிலையில் தள்ளிவிட எத்தனிப்பதை சற்று முன் கவனித்தோம். எனவே, ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டுமே மூளையால், குவியத்துடன், உணர்வுடன் ஒருங்கிணைந்து செயலாற்றமுடியும். ஒரே நேரத்தில் குவியம், உணர்வு வேண்டிய பல வேலைகள் வரும்பொழுது, மூளை சிலவற்றைக் கவனத்திலிருந்து கழற்றிவிட்டு விடுகிறது. இதன் விளைவு, தோல்விகள், ஏமாற்றம், கோபம். இயலாமை உணர்வு.

ஒரே நேரத்தில் பல வேலைகள் வரும்போது, நாமே தன்னுணர்வுடன் எதனை முக்கியமாக, உடனுக்குடன் செய்ய வேண்டியது எனத் தீர்மானித்து ஒரு பட்டியலிடுவது நன்று. அடுத்தடுத்த சவாலான வேலைகளை, மூளை தானே நினைவிலிருந்து மறக்கச் செய்கிறது. எனவேதான், பட்டியலிடுவது அவசியம்.

பல வேலைகள் வரும்போது, அவற்றின் முக்கியம் மற்றும் அவசியத்தின் அடிப்படையில் பட்டியலிட்டுச் செயலாற்ற முனைவது, நேரா யோசிப்பதன் ஒரு இன்றியமையாத அங்கம்.

(யோசிப்போம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com