குவியத்தின் எதிரிகள் - 18. நினைவின் கற்பனை

வீட்டிலிருந்து கிளம்பும்போது சாவியைப் பையில் போட்டதாக மிக உறுதியான நினைவு. ஆனால், பூட்டிய கதவின் மறுபுறம் இரவு நேரத்தில், பையில், இல்லாத சாவியைத் தேடுவது கொடுமையான அனுபவம்.

தடவியல் துறைக்கான மென்பொருள் கட்டமைப்பது, நிறுவுவது குறித்தான துறையில் என் பணி சில வருடங்கள் தொடர்ந்தது. அப்போது, காவல் துறை அதிகாரிகள், புலனாய்வுத் துறை அதிகாரிகள் எனச் சிலரோடு கலந்தாலோசித்த தருணங்கள் உண்டு.

நாக்பூரிலிருந்து வந்த ஒரு மூத்த அதிகாரி, மென்பொருளில் அவர்களது முடிவை எழுதும் இடத்தில் குறைந்தது இரு தேர்வுகள் இருக்குமாறு வடிவமைக்கச் சொன்னார். அதாவது, ஒரு முடிவு எழுதுமிடத்தில் இரு முடிவுகளுக்கான சாத்தியம் தேவை.

“எதற்கு இப்படி? உங்களிடம் ஒரு முடிவுதானே இருக்கும்?” என்றேன்.

“இல்லை” என்றார் சிரித்தவாறு. “பெரும்பாலும், விசாரணைக்கு உட்படுத்தபடுவோர் மிகத்திடமாக, உறுதியாகச் சொல்லுமிடத்திலும், கிடைக்கும் தடயத்திலும் தவறு இருக்கும். கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரித்து அறிவதே மெய்”.

நான் எழுதுவதை நிறுத்தினேன். “தீர விசாரித்து என்று சொல்கிறீர்களே. விசாரணையிலும் கண், காது கொண்டுதானே அறிகிறீர்கள்? அப்போ அதுவும் பொய்யாகத்தானே இருக்கும்?”

‘‘முக்கியமான சொல் ‘‘விசாரணை” அல்ல ‘‘தீர” என்பது. எவ்வளவுக்கு எவ்வளவு சுழன்று சுழன்று தகவல்களை அறிகிறோமோ, அந்த அளவுக்கு தடயம் மாறும், செய்தி மாறும், விசாரணையின் ரூபம் மாறும். அதோடு, முடிவுகளேகூட மாறும். இது மனம், உடல் அறிவு தாண்டி நம்பிக்கை தொடர்புடையது. நம்பிக்கை என்பதும், நினைவு என்பதும் தவறிழைக்க முடியும்”.

டேனியல் கோல்மேன் (Daniel Goleman) இதனை, “மனம், நம்பிக்கை, நினைவுகள்தான் முன் நம்பிய நிகழ்வை, நிஜமென பதிந்துகொள்ளும் விபரீதம்’’ என்கிறார். பெரும் விபத்தில் சிக்கி மீண்டவர்கள் சொன்ன விவரங்களில் பல தவறாக இருப்பதைப் பார்க்கமுடியும். அவர்கள் பொய் சொல்ல வேண்டுமென்று நினைத்துச் சொல்லியிருக்கமாட்டார்கள். சம்பவம் அவர்களது நினைவில் பதிந்ததும், சொல்வது போலவே இருக்கும். (இதனை, நவீன கருவிகள் மூலம் உறுதிப்படுத்தமுடியும்). ஆனால், நிகழ்வு அவ்வாறு நடந்திருக்காது.

இதன் காரணம், நமது புலன்கள் மட்டுமல்ல, மூளையின் தாற்காலிக நினைவுப் பகுதி, நினைவு சேமிப்புப் பகுதி போன்றவையும், நிகழ்வுகளைத் தாம் ஏற்றெடுக்கும் விதத்தில் பதிந்துவைக்கின்றன. அதாவது, கற்பனை சொல்லும் கட்டளையில் ஒரு நிகழ்வை உருவாக்கிக்கொள்கின்றன.

டேனியல் கோல்மேன்

ஒரு உறுமல் ஒலி கேட்கிறது என வைத்துக்கொள்வோம். புலன்கள் மூளையிடம் சேர்க்க, அது தாற்காலிக நினைவில் உறுமலைத் தேடுகிறது. இது சிங்கத்தின் கர்ஜனை. நாம் இருப்பது மிருகக்காட்சி சாலையோ, அல்லது கிர் காடுகளாகவோ இருந்தால் இந்த முடிவு சரியானது. வீட்டில் இருக்கையில்? டிவியில் ஓடும் டிஸ்கவரி சேனல். இந்த துரிதச் சரிபார்த்தல் நடக்க நேரமானால், நாம் சமீபத்தில் கேள்விப்பட்டபடி, வீட்டில் சிறுத்தை நுழைந்திருக்கும் என முடிவு வந்துவிடுகிறது. அதன்பின் பதற்றம் தணிந்தபின்னும் மூளை சொல்வது, “இல்ல, நான் ஜன்னல் பக்கம் பார்த்தேன். ஒரு சிறுத்தையோட வால் தெரிஞ்சது”. நம் நினைவு சேர்த்துவைத்திருப்பது சமீபத்திய நிகழ்வின் தாக்கம் (Recency effect). இதுபற்றிப் பின்னர் காண்போம். இப்போதைக்கு நாம் சிந்திக்க வேண்டியது, நாம் கேட்ட உறுமல் ஒலி, பார்த்த சிறுத்தையின் வால், இவை நிஜமா, பொய்யா?

பொய் என்பது உலகு சொல்லும். நிஜமென்பதை மனம் சொல்லும். இரண்டும் உண்மைதான். உணர்ந்தறிதலுக்கு, மூளை தன்னுள் வைத்திருக்கும் ஒலி, காட்சியை ஒன்று சேர்த்து ஒரு நிகழ்வை உருவாக்கிவிடுகிறது. இந்தத் தூண்டல்கள், காட்சிகள் எல்லாம் வெளியில் இருந்து வரவில்லை. உள்ளிருந்தே உருவாக்கப்பட்டவை. உணர்ந்தறிதலுக்கு இந்த இரண்டுக்குமான வித்தியாசம் தெரியாது.

2015-ல், இந்தூர் அருகே நிகழ்ந்த ஒரு ரயில் விபத்தில், ஆற்றின் கரையில் வீழ்ந்த ஒருவர் பாம்பு கடித்ததாகச் சிகிக்சைக்கு அழைத்துவரப்பட்டார். காயத்தைப் பார்த்த சீனியர் செவிலி, இது பாம்புக்கடி அல்ல என்பதை உணர்ந்து, வேறு மருந்துகளை உடனே செலுத்திக் காப்பாற்றினார். ஆனால் பாதிக்கப்பட்டவர், “ஒரு பெரிய பாம்பு நெளிந்து செல்வதைப் பார்த்தேன்” என்றார் உறுதியாக. அவர் சொன்ன தடயம், இடம் எல்லாம் சரியாக இருந்தது. இடம், காலம், வலி, காயம் எல்லாம் நிஜம். ஆனால், பாம்பு கற்பனை.

வீட்டிலிருந்து கிளம்பும்போது சாவியைப் பையில் போட்டதாக மிக உறுதியான நினைவு. ஆனால், பூட்டிய கதவின் மறுபுறம் இரவு நேரத்தில், பையில், இல்லாத சாவியைத் தேடுவது கொடுமையான அனுபவம். கேட்டால், “நல்லா நினைவிருக்கு. சாவி எடுத்தாச்சான்னு நீ கேட்டே, அப்ப சாவியைப் பாத்துட்டு, பைக்குள்ள போட்டுட்டுத்தான் ஆமான்னேன்” என்போம். சாவி, வரவேற்பரையில் டிவி-யின் மேல் பத்திரமாக இருக்கும். நினைவு என்பதை மூளை தவறாக உறுதி செய்ததன் அடையாளம் இது.

இதற்கும் யோசிப்பதற்கும் என்ன தொடர்பு? காட்சிகள் பிம்பங்களாவே விரிய வேண்டுமென்பதில்லை. ஒருவர் நம்மிடம், “அடுத்த வாரம் வாங்க; பேசி முடிச்சிடலாம்” என்றால், “நிஜமாகவே நமக்குச் சாதகமாக முடிந்துவிடும்” என்று நினைப்பதில், இந்த உணர்வு, நினைவுப்பிழை வருவதற்குச் சாத்தியமிருக்கிறது. அவர் சொன்ன வார்த்தைகள் மட்டுமல்ல, உடல்மொழி, அன்றைய சூழ்நிலை அனைத்தையும் சேர்த்து அளவிடவேண்டி இருக்கிறது.. ‘‘முடிச்சிடலாம்னுதானே அன்னிக்குச் சொன்னாரு?” என்றால், “ஏறக்குறைய முடிச்சிறலாம்னுதான் சொன்னாரு. நீங்க தப்பாப் புரிஞ்சுகிட்டா?” என்று பின்னால் கேட்கவேண்டி வரும்.

சந்தேகப்பிராணியாக இருக்க வேண்டுமென்பதில்லை. காரணி ஒன்றல்ல. பலவும் இருக்கக்கூடும் என்ற சாத்தியத்தை உணர்ந்துகொண்டு, புரிதலைத் தொடர வேண்டும். இந்த உணர்வு, நினைவுப்பிழை, நாம் உணர்வுக்குழம்பாக இருக்கும்வேளையிலும், குழம்பிய நிலையிலும் மிக அதிகமாகத் தாக்கும். மருத்துவத் துறை, போலீஸ், சட்டம், வியாபாரப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோர் கவனிக்க வேண்டிய புரிதல்நிலைப் பிழை இது.

நமக்கு ஒருவரைப் பிடித்துப்போனால், அவர் செய்வதெல்லாம் நமக்கு நல்லது போன்றே உணர்வைத் தோற்றுவிக்கும். செய்யாததையெல்லாம் செய்தது போலவே நினைவும் சேகரித்து வைக்கும். ஒருவரிடமிருக்கும் வெறுப்பும் இதைத்தான் செய்யவைக்கும்.

அந்தக் காவல் அதிகாரி தொடர்ந்தார். “மும்பையில் சில வருடங்கள் முன்பு நடந்த சீரியல் கொலைகள் நினைவிருக்கிறதா? நாங்கள் அனைவரும் பார்த்த தடயங்கள், கேட்ட சாட்சியங்கள் ஒருவனை நோக்கி அழைத்துச் சென்றன. அனைவருக்கும் இவன்தான் கொலையாளி என்று தோன்றியிருக்க, சாட்சியங்கள் அதற்குச் சாதகமாகவே தோன்றின. வேறு இடத்திலிருந்து வந்த என்னை அது தாக்கவில்லை. ஒவ்வொரு சாட்சியத்தையும் மறுத்துக்கொண்டே வந்தேன். இறுதியில் உண்மை வேறாக இருந்தது’’.

நமது நினைவிலிருந்து தெளிவாக உறுதியாகச் சொல்வதாயிருந்தாலும், ஒருமுறை ‘‘இப்படித்தான் இருந்ததா?” என ஒரு நிமிட மவுனச் சோதிப்புக்குப் பிறகு பகிர்ந்துகொள்ளுதல், நேராக யோசிப்பதின் அடையாளம், இது கடினமானது எனினும்.

(யோசிப்போம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com