17. பிரசவித்த பெண்களுக்கு பூண்டு குழம்பு ரெஸிபி

பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்க வேண்டும் என்பதற்காக அவர்களது உணவில் பூண்டு அதிகம் சேர்ப்பார்கள்.
17. பிரசவித்த பெண்களுக்கு பூண்டு குழம்பு ரெஸிபி

பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்க வேண்டும் என்பதற்காக அவர்களது உணவில் பூண்டு அதிகம் சேர்ப்பார்கள். என் அம்மா பத்து பூண்டுப் பற்களை நெய்யில் வதக்கி அதில் கறிவேப்பிலைப் பொடியை சேர்த்து சாதத்தில் நெய் ஊற்றி இந்த பூண்டையும், பொடியையும் பிசைந்து சாப்பிடச் சொல்லுவாள். சில நேரம் பூண்டு குழம்பாகவும் வைத்துக் கொடுப்பாள். உடலிலுள்ள கேட்ட கொழுப்பை நீக்கும் குணமும் பூண்டுக்கு உண்டு. அதை எப்படி செய்வதென்று பார்ப்போம். 

55)  பூண்டு குழம்பு:

தேவையான பொருட்கள்

புளி – எலுமிச்சம் பழ அளவு

உரித்த பூண்டு பற்கள் –  அரை கோப்பை 

உரித்த சாம்பார் வெங்காயம் அல்லது நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒரு கோப்பை

தக்காளி – சிறியது நான்கு. பெரிதாக இருந்தால் இரண்டு

பச்சை மிளகாய் – 2 (கீறி வைத்துக்கொள்ள வேண்டும்)

வெல்லம்- ஒரு சிறிய கட்டி

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – இரண்டு கொத்து

நல்லெண்ணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

வெந்தயம் – அரை ஸ்பூன்

சாம்பார் பொடி – இரண்டு டீஸ்பூன் (அல்லது உங்களுக்குத் தேவையான காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்) அல்லது காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை இவற்றை வறுத்து பொடி செய்து ஃபிரஷ் ஆகவும் சேர்க்கலாம். உங்கள் விருப்பம்.

செய்முறை

அடுப்பில் வாணலியை வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி அது கொதித்ததும், கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கொஞ்சம் பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றை போட்டு வெடிக்கவிட்டு, உரித்த பூண்டுகளை அதில் போட்டு சிவக்க வதக்க வேண்டும். பிறகு வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கி, கடைசியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து சற்றுநேரம் வதக்கிய பின்னர் கரைத்து வைத்திருக்கும் புளித்தண்ணீரை அதில் விடவும். உப்பு, மஞ்சள் தூள், சாம்பார்பொடி, (வறுத்துப் பொடித்த பொடியானால் கடைசியில் சேர்த்து ஒரு கொத்தி விட்டால் போதும்) சிறிய வெல்லக்கட்டி அல்லது ஒரு ஸ்பூன் சர்க்கரை இவற்றை சேர்த்து மூடிவைத்து நன்கு கொதிக்கவிடவும். குழம்பு பச்சை வாசனை நீங்கி பளபளவென்று கொதித்து கொஞ்சம் வற்றி எண்ணெய் வெளிப்படத் துவங்கியதும், அடுப்பை அணைத்துவிடலாம். சாதத்தில் கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி  இந்தக் குழம்பை விட்டு பிசைந்து சாப்பிட்டுப் பாருங்கள். அத்தனை ருசியாக இருக்கும். தொட்டுக்கொள்ள எண்ணெய் கத்திரிக்காயோ, வேறு ஏதேனும் கறியோ, பருப்புசிலியோ உங்கள் விருப்பப்படி செய்து கொள்ளலாம்.

56)  மிளகு சீரக ரசம்:

அந்தக் காலத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் கண்டிப்பாக வீட்டில் சீரக ரசம் வைக்கப்படும். தவிர யாருக்கேனும் ஜுரம் என்றாலும் சீரக ரசம்தான். குழைய சாதம் வடித்து சீரக ரசத்தை விட்டு நன்கு மசித்து கரைத்தாற் போல் ரெண்டு டம்ளர் கொடுத்து குடிக்கச் சொல்லுவார்கள். நாக்கிற்கும் தொண்டைக்கும் அவ்வளவு இதமாக இருக்கும். உடம்பு கலகலவென்று ஆகிவிடும். பிரசவமான பெண்களுக்கும் அவர்களது பத்திய சமையலில் நிச்சயம் மிளகு சீரக ரசமும் இருக்கும். இதற்கு தக்காளி, பருப்புத் தண்ணீர், பெருங்காயம் எதுவும் தேவையில்லை. சீரக வாசனை மட்டும்தான். செய்வதும் சுலபம். மழைக்காலங்களில் இந்த சீரக ரசத்தை அப்படியே ஒரு டம்ளர் குடிக்கும் போது குளிருக்கு அப்படி ஒரு இதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

புளி – எலுமிச்சை அளவு

ரசப்பொடி – ஒரு ஸ்பூன்

தனியா – ஒரு ஸ்பூன்

துவரம்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகு – அரை ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

வெல்லம் – சிறிது

தாளிக்க 

நெய் – ஒரு ஸ்பூன்  

கடுகு – ஒரு ஸ்பூன்

சீரகம் = அரை ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 1

கறிவேப்பிலை – இரண்டு கொத்து

கொத்தமல்லி – பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை:

தனியா, துவரம்பருப்பு, சீரகம், மிளகு இவற்றை அப்படியே கொஞ்சம் தண்ணீரில் ஊறவைத்து கறிவேப்பிலை ஒரு கொத்து சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். அல்லது நீங்கள் விரும்பினால் இவற்றை வாணலியில் லேசாக வறுத்து பொடித்தும் கொள்ளலாம். அல்லது சிறிது நீர் விட்டு . கொரகொரப்பாக அரைத்தும் கொள்ளலாம். உங்கள் சௌகர்யம்.

புளியைக் கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு அது சுட்டதும், கடுகு போட்டு வெடித்ததும் அரை ஸ்பூன் சீரகமும், கறிவேப்பிலையும் போட்டு, அதிலேயே மஞ்சள் தூளை சேர்த்து பிரட்டி பிறகு கரைத்து வைத்திருக்கும் புளித்தண்ணீரை அதில் சேர்க்க வேண்டும். ஒரு ஸ்பூன் ரசப்பொடி, வேண்டிய உப்பு, சிறிது வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து கொதிக்க விட வேண்டும். புளியின் பச்சை வாசனை நீங்கியதும், அரைத்து வைத்திருக்கும் கலவையைக் கொஞ்சம் நீர்விட்டு கரைத்து கொதித்துக் கொண்டிருக்கும் ரசத்தில் விடவேண்டும்.

ரசம் நன்கு கொதித்து பொங்கி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை அதில் போட்டு மூடிவிடலாம். கமகம மிளகு சீரக ரசம் ரெடி. விருப்பமுள்ளவர்கள் இந்த ரசத்தில் நான்கைந்து பூண்டும் கூட சேர்த்துக் கொள்ளலாம். டம்ளரில் ஊற்றி குடிக்க விரும்புகிறவர்கள் அரை ஸ்பூன் உருக்கிய நெய்யும் ஊற்றி கலந்து கொண்டு குடித்தால் தனி சுவையைத் தரும்.

57)  கொட்டு ரசம்

இதை என் அத்தை பண்ணினால் தெருக்கோடி வரை மணம்வீசும். ஐந்தே நிமிடத்தில் செய்து விடுவாள். ஒன்றுமே இல்லையென்றால் ஒரு கொட்டு ரசமும் ரெண்டு சுட்ட அப்பளமும் போதும்.

தேவையானவை

புளி – நெல்லிக்காய் அளவு

கடுகு – ஒரு ஸ்பூன்

மிளகாய் – மூன்று

துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

பெருங்காயம் – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

வெல்லம் அல்லது சர்க்கரை – சிறிது

மஞ்சள் தூள்

செய்முறை

ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும், துவரம்பருப்பு, மற்றும் சீரகத்தையும் சேர்த்து பருப்பு சிவந்ததும், மிளகாய் மூன்றையும் கிள்ளிப் போட்டு, பெருங்காயமும், கறிவேப்பிலையும் அதில் சேர்த்து புளித்தண்ணீரை அதில் கொஞ்சம் நீர்க்க விட்டு உப்பும் மஞ்சள் தூளும், வெல்லத் துண்டும் சேர்த்து கொதிக்க விடவேண்டியதுதான்.

என் அத்தை புளியைக் கரைக்கக்கூட மாட்டாள். தண்ணீரில் போட்டு நன்கு கசக்கி சக்கையோடு அப்படியே தாளிப்பில் ஊற்றி கூடவே ரெண்டு கிளாஸ் தண்ணீரும் சேர்த்து கொதிக்க விடுவாள். புளிச்சக்கை  மண்டியாக அடியில் தங்கிவிடும். இது பிடிக்காதவர்கள் புளிசக்கையை வடிகட்டிவிட்டு ஊற்றலாம்.

நீங்கள் விரும்பினால், துவரம்பருப்பு சீரகத்தை கொரகொரப்பாகப் மிக்சியில் பொடி செய்தும் புளித்தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடலாம். எப்படி செய்தாலும் அதன் மனத்திற்கும், குணத்திற்கும், ருசிக்கும் உத்தரவாதமுண்டு.

                         ********************************

58)  தாமரைத்தண்டு குழம்பு

வைட்டமின்களும், தாது உப்புக்களும், புரதமும் மிகுத்தது தாமரைத் தண்டு.  முதுமையைத் தள்ளிப் போட்டு, ஆயுளை நீட்டிக்கும் குணமும் தாமரைத் தன்டிற்குண்டு. இதயத்திற்கு மிகவும் நல்லது. இரத்த அழுத்தத்தை சீராக்கி மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும். இரும்பு சத்து மிக்கது என்பதால் இரத்த சோகைக்கு நல்லது. பொட்டாசியம் மிகுந்தது என்பதால் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சுவாசக் கோளாறுகள், ஜீரணக் கோளாறுகளை சரிசெய்யும் ஆற்றல் கொண்டது. மூளை நரம்புகளை ஆரோக்கியமாக வைக்கும் என்பதால் மன அழுத்தம் உள்ளவர்களுக்கும், மனநலம் குன்றியவர்களுக்கும் இதை உணவில் சேர்த்துக் கொடுத்தால் விரைவில் குணம் தெரியும்.. பிரசவித்த பெண்களுக்கு இது மிகவும் நல்லது. பிரசவத்திற்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் ரத்த சோகையை சரிசெய்யும். தவிர கருப்பையில் தங்கியிருக்கும் மஷ்டு என சொல்லப்படும் கசடுகளையும் நீக்கும் என்பார்கள். அதனால் பாலக்காட்டுக்காரர்கள் பத்திய சமையலில் கண்டிப்பாக இதை சேர்ப்பார்கள். 

தாமரைத் தண்டு கிடைக்கும் காலங்களில் என் அம்மா அதை வற்றலாகப் போட்டு காயவைத்து விடுவாள். தாமரைத்தண்டை பச்சையாகவும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். நான் எப்போது பாலக்காடு சென்றாலும் மறக்காது தாமரைத் தண்டு வற்றல் வாங்கி வந்து விடுவேன்.

உங்கள் அருகாமை காய்கறி மார்கெட்டுகளில்  பச்சை தாமரைத் தண்டு கிடைத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். கிடைக்காதவர்கள் கடைகளில் வற்றலாக கிடைக்கும் தாமரைத் தண்டையும் வாங்கி சமையலில் உபயோகிக்கலாம்.

இனி தாமரைத் தண்டில் எப்படி குழம்பு செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் .

தாமரைத் தண்டு – பச்சையானது என்றால் கால்கிலோ (வற்றல் என்றால் ஒரு கைப்பிடி)

புளி – ஒரு எலுமிச்சை அளவு

சாம்பார் பொடி – இரண்டு தேக்கரண்டி (அல்லது மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, சிறிது வெந்தயத்தை வறுத்துப் பொடித்தும் கொள்ளலாம்)

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு.  (வற்றல் உபயோகித்தால் அதிலும் உப்பு இருக்கும் என்பதால் உப்பு குறைவாகவே போட்டுக் கொள்ளவும்)

வெல்லம் – ஒரு சிறு கட்டி

தேங்காய் துருவல் – ஒரு சிறிய கப்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெருங்காயம் – சிறிது

காய்ந்த மிளகாய் – 2

கடுகு – ஒரு ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

தாளிக்க நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை:

பச்சை தாமரைத் தண்டு என்றால் முதலில் அதை நன்கு கழுவி மேல் தோலை பீலர் கொண்டு சீவி எடுக்க வேண்டும். (முள்ளங்கியின் தோலை சீவி எடுப்பது போல) பிறகு அதை குறுக்குவாட்டில் வட்ட வட்டமாக மெலிதாக நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கியவற்றை கொதிக்கும் வெந்நீரில் போட்டு சிறிது நேரம் மூடி மேடையின் ஒரு பக்கமாக வைத்து விடவும்

புளியை நன்கு கரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை ஏற்றி, அதில் வெளிச்செண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஏதேனும் ஒன்று ஒரு டேபிள்ஸ்பூன் ஊற்றி, அது சுட்டதும், கடுகு போட்டு பொரிந்ததும், வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றையும் கிள்ளிப் போட்டு வறுபட்டதும் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை ஊற்றவேண்டும். பிறகு மஞ்சள்தூள், சாம்பார் பொடி, உப்பு, சிறிது வெல்லம், அதோடு வெந்நீரில் போட்டு வைத்திருக்கும் நறுக்கிய தாமரைத் தண்டு இவற்றையும் நீரிலிருந்து எடுத்து  சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும். பச்சை வாசனை நீங்கி குழம்பு ஓரளவுக்கு வற்றி வரும்போது உப்பு சரிபார்த்து அடுப்பை அணைத்து விடலாம். தாளிப்பு கரண்டியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, துருவி வைத்திருக்கும் தேங்காயை சிவக்க வறுத்து குழம்பில் சேர்க்க வேண்டும்.

ஒருவேளை தாமரைத் தண்டு வற்றலைல் நீங்கள் உபயோகிக்கப் போகிறீர்கள் என்றால் கொஞ்சமாக  வெளிச்செண்ணெய் அடுப்பில் வைத்து வற்றலை அதில் பொரித்து எடுத்து தனியே எடுத்து வைத்துக் கொண்டு மீத எண்ணெயில் தேங்காய்த் துருவலையும் சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இரண்டையும் கடைசியாகக் குழம்பில் சேர்க்க வேண்டியதுதான். வற்றல் சேர்க்கும்போது அது  குழம்பில் ஊறி பொத பொதவென்று பெரிதாகி குழம்பு கெட்டிப்பட வாய்ப்புண்டு என்பதால் குழம்பு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கட்டும். அல்லது தேவையானால் சிறிது வெந்நீரும் அதில் சேர்த்துக் கொள்ளலாம்.

வாசனையான தாமரைத் தண்டு குழம்பு ரெடி. இதற்கு சுட்ட அப்பளமும், கீரை மசியல், அல்லது புடலங்காய் மொளகூஷ்யம் இதெல்லாம் பெஸ்ட் காம்பினேஷன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com