18. பிள்ளைபெத்தா பத்திய சமையலில் இதுவும் ஒன்று

18. பிள்ளைபெத்தா பத்திய சமையலில் இதுவும் ஒன்று

மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

59)  மணத்தக்காளி கீரை முளகூஷ்யம்:

பிள்ளைபெத்தா பத்திய சமையலில் இதுவும் ஒன்று

தேவையான பொருட்கள்

மணத்தக்காளி கீரை – ஒரு கட்டு (இலைகளை ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும்)

பாசிப்பருப்பு – ஓரு கப் (வேக வைத்துக் கொள்ளவும்)

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகு சீரகம் – பொடித்தது – ஒரு டீஸ்பூன்

மிளகுப்பொடி – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சர்க்கரை – இரண்டு சிட்டிகை

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

செய்முறை: மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது நீர்விட்டு கீரையை வேகப்போட்டு இரண்டு சிட்டிகை சர்க்கரையும் மஞ்சள்தூளும், கால் ஸ்பூன் மிளகுப்பொடியும்  சேர்க்கவும். கீரையின் பச்சை நிறம் மாறாமல் இருக்கத்தான் சர்க்கரை சேர்க்கிறோம். உப்பு முதலிலேயே போடவேண்டாம்.

கீரை நன்கு வெந்ததும் மசித்துவிட்டு வேகவைத்த பருப்பை சேர்த்து அதோடு தேவையான உப்பும் சேர்த்து கொதிக்கவிடவும். பருப்பும் கீரையும் ஒன்றோடொன்று சேர்த்து கொதித்ததும் பொடித்து வைத்திருக்கும் மிளகு சீரகப் பொடியை அதில் சேர்த்து மேலே ஒரு டீஸ்பூன் வெளிச்செண்ணெய் விட்டு மூடிவிடலாம். இதற்கு தாளிப்பு கிடையாது. தேவைபட்டால், ஒரு ஸ்பூன் நெய்யில் சீரகம் மட்டும்தாளித்து சேர்க்கலாம்.

60)  பச்சைத்  தாமரைத் தண்டு கூட்டு

தாமரைத்தண்டின் மருத்துவ குணங்கள் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

இதற்குத் தேவையானவை

பச்சை தாமரைத் தண்டு – கால் கிலோ

வெங்காயம் – பெரியது 1

தக்காளி –– 2 அல்லது 3

பச்சை மிளகாய் – 2 பாதியாக கீறி வைத்துக் கொள்ள வேண்டும்)

பூண்டு – நான்கு பற்கள்

இஞ்சி – பொடியாக நறுக்கியது – ஒரு ஸ்பூன்

தேங்காய் – சிறியது ஒன்று துருவி முதல் பால் அரை கோப்பை, இரண்டாம் பால் – ஒரு கோப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்  (அல்லது ரெடிமேட் தேங்காய்ப்பாலும் உபயோகிக்கலாம்)

கசகசா – ஒரு ஸ்பூன்

மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

மஞ்சள்  தூள் – அரை ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

கடுகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெருங்காயம் – சிறிது

செய்முறை:

தாமரைக் கிழங்கை சுத்தம் செய்து, தோல் சீவி, குறுக்குவாட்டில் வட்ட வட்டமாக நறுக்கி கொதிக்கும் நீரில் போட்டு வைக்கவும்.

வெங்காயம், தக்காளி இவைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலி வைத்து கொஞ்சம் வெளிச்செண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும், சீரகம், ஒரு காய்ந்த மிளகாய், இவற்றை சேர்த்து தாளித்து அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, மற்றும் நறுக்கிய வெங்காயத்தை முதலில் சேர்த்து வதக்கவும், பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கி, அதில் தேங்காயின் இரண்டாம் பாலைவிட்டு, வெந்நீரில் போட்டு வைத்திருக்கும் தாமரைக் கிழங்கையும் நீரை வடிகட்டி எடுத்து அதில் போட்டு மூடிவைத்து வேண்டிய உப்பு போட்டு நன்கு வேக விடவும்.

கசகசாவை நன்கு மசிய அரைத்துக் கொண்டு அல்லது பொடித்து   தேங்காயின் முதல் பாலுடன் கலந்து கொள்ளவும்.

வாணலியில் கொதித்துக் கொண்டிருக்கும் கலவை நன்கு வெந்து வற்றியதும் முதல் பாலை அதில் சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு கலந்துவிடவும். இதன்மீது கொஞ்சம் கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கித் தூவி மூடவும்.

வெறும் நெய் சாதத்திற்கு இதைத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். வெங்காயம், பூண்டு, தாமரைத் தண்டு எல்லாமே பிரசவித்த பெண்களுக்கு நல்லது. பிரசவித்தவர்கள் மட்டுமல்ல, அனைவருமே இதை உண்ணலாம். பூரி சப்பாத்தி போன்றவற்றிற்கும் தொட்டுக் கொள்ளலாம்.

61) பிரண்டைத் தொகையல்

எங்கள் வீட்டில் யாருக்குப் பிரசவமானாலும் வாரத்திற்கு ஒரு நாளோ இரண்டு நாளோ கண்டிப்பாக பிரண்டைத் தொகையல் செய்வாள் அம்மா. பிரண்டைக்கு மருத்துவ குணமுண்டு. சுண்ணாம்பு சத்து நிறைந்தது. மூட்டுவலி இருப்பவர்கள் அடிக்கடி சாப்பிட்டால் கண்டிப்பாக மூட்டுவலி குறையும் என்பார்கள். அந்தக்காலத்து மனிதர்கள் தொண்ணூறு வயதிலும் தரையில் உட்கார்ந்து சாப்பிட்டார்கள், கோவில்களுக்குச் சென்றால் குனிந்து நமஸ்கரித்து எழுந்திருப்பார்கள் என்றால் அவர்களது உணவு முறையும் அதற்கொரு காரணம் எனலாம். அரிசி அப்பளம் முதற்கொண்டு வடாம் வகைகளிலும் பிரண்டைச்சாறு விட்டுதான் உண்டாக்குவார்கள்.

தேவையான பொருட்கள்:

பிரண்டைத் தண்டு – பொடியாக நறுக்கியது அரை கப்

உளுத்தம்பருப்பு – இரண்டு டேபிள் ஸ்பூன் 

தனியா –இரண்டு டீஸ்பூன்

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

இஞ்சி நறுக்கியது – ஒரு ஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, தனியா, மிளகு, உளுத்தம்பருப்பை முதலில் போட்டு அவை பாதி வறுந்ததும் சீரகம், தேவையான உப்பு, கறிவேப்பிலை, கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு வாணலியில் பிரண்டை, இஞ்சி இரண்டையும் தனியே சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கவும்.

பத்திய சமையலில் புளி அதிகம் சேர்க்க மாட்டார்கள் என்பதால் புளிப்பு சுவைக்கு, சிறிது நறுக்கிய மாங்காய் சேர்த்து வதக்கியும் அரைக்கலாம். அல்லது கடைசியில் அரை மூடி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடலாம். சாதாரண நாட்களில் இந்த தொகையல் அரைக்கும்போது, பொருட்களை வறுக்கும்போதே இரண்டு சுண்டைக்காய் புளியை கிள்ளிப்போட்டு வறுத்துக் கொள்ளலாம். உடனடியாக செலவழிந்துவிடும் இரண்டு பத்தை தேங்காய் கூட வைத்து அரைக்கலாம்.

மேற்படி வறுத்த, வதக்கிய எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு தண்ணீர் விடாமல் கெட்டியாக கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். வெறும் சாதத்தில் நெய்விட்டு இதைக் கொஞ்சம் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சப்புக்கொட்டியவாறு சாப்பிடலாம்.

62) கண்டந்திப்பிலி ரசம்:

ஜலதோஷம், உடம்புவலி இவற்றிற்கெல்லாம் மிகவும் நல்லது இந்த ரசம்.

தேவையான பொருட்கள்

கண்டந்திப்பிலி -  ஏழெட்டு குச்சிகள் ( நட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.இது)

தனியா – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

துவரம்பருப்பு – இரண்டு டேபிள் ஸ்பூன்

தக்காளி – ஒன்று

புளி – நெல்லிக்காய் அளவு (கரைத்து வைத்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலை – இரண்டு கொத்து

பெருங்காயம் – அரை ஸ்பூன்

வெல்லம் – சிறிய  துண்டு

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு 

செய்முறை:

ஒரு வாணலியில் கண்டந்திப்பிலி, துவரம்பருப்பு இரண்டையும் முதலில் போட்டு எண்ணெய்விடாது வறுத்து தனியே எடுத்துவைக்கவும்.

பிறகு அதே வாணலியில், மிளகு, சீரகம், கறிவேப்பிலை பெருங்காயம், ஆகியவற்றையும் வறுத்துக் கொள்ளவும். பிறகு எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் நைசாகப் பொடித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி, வெல்லம் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். புளியின் பச்சை வாசனை நீங்கி, தக்காளியும் நன்கு வெந்தவுடன், தேவையான நீர்சேர்த்து கொதிக்கவிட்டு அதில் இந்த கண்டந்திப்பிலி பொடியை தேவையான அளவுக்கு போடவும். ருசி சரியாக இருந்தால் பொடியை நிறுத்தி விடலாம். தேவை என்றால் இன்னும் கொஞ்சம் போடலாம். சோர்வான உடலுக்கு புத்துணர்ச்சியைத் தந்து சட்டென கலகலப்பாக்கிவிடும் இந்த ரசம்.

63) அங்காயப் பொடி:

அங்காயப்பொடி இல்லாத பிள்ளைபெத்தா உணவா? அஜீரணத்தை நீக்கும் மிகச்சிறந்த மருந்து இது. வயிறு சம்பந்தமான எந்த பிரச்சனை என்றாலும், அமீபியாசிஸ் பிரச்சனைகளையும் தீர்க்கும் மருந்து இது. அனாவசியமாக  ஆன்டிபயாடிக்ஸ் எல்லாம் அந்தக் காலத்தில் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஒரு பிடி சூடான சாதத்தில் கொஞ்சம் நெய் ஊற்றி, இந்தப் பொடியை ஒரு ஸ்பூனோ, இரண்டு ஸ்பூனோ போட்டு கலந்து சாப்பிடுவார்கள். இது கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும் என்றாலும் அது எந்த அளவுக்குத் தரமாக இருக்கும் என்பது கேள்விக்குறி. என்பதால் இதை வீட்டிலேயே தயாரித்துக் கொள்வதுதான் நல்லது. அப்படி ஒன்றும் சிரமமான காரியமில்லை இது. பத்து நிமிடத்தில் தயாரித்து விடலாம். அந்தக்காலத்தில் சமையலறை என்பது ஒரு சிறிய மருந்துக் கூடமாகவும் இருந்தது. மருத்துவ குணம் நிறைந்திருந்த பொருட்களை அவர்கள் வற்றலாக சேமித்து வைத்துக் கொண்டார்கள். எல்லோர் வீட்டிலும் மணத்தக்காளி, சுண்டைக்காய், நன்கு காய்ந்த வேப்பம்பூ என எல்லாம் இருக்கும். அவற்றைக்கொண்டு நிமிஷமாக இந்த அங்காயப்பொடியைத தயாரித்துக் கொள்வார்கள். 

தேவையான பொருட்கள்:

நன்கு காய்ந்த வேப்பம்பூ – கால் கப்

சுண்டைக்காய் வற்றல் – கால் கப்

மணத்தக்காளி வற்றல் – கால் கப்

மிளகு – அரை  டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – ஒன்று அல்லது இரண்டு

பெருங்காயம் – சிறிது

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – இரண்டு கொத்து

செய்முறை:

கறிவேப்பிலை உட்பட மேற்படி பொருட்களை எல்லாம் எண்ணெய் விடாமல் தனித்தனியே சிவக்க வறுத்துக் கொள்ளவும். பொன்னிறத்திற்கும் மேலேயே கூட வறுத்துக் கொள்ளலாம். உப்பையும் கூட வறுத்துக் கொள்ளவேண்டும். சுண்டைக்காய், மணத்தக்காளி வற்றல்களில் ஏற்கனவே உப்பு இருக்கும் என்பதால் பார்த்து உப்பு போட்டுக் கொள்ளவும். வறுத்த பொருட்களை மிக்சியில் ஒன்றாகப் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும்.

64)  ஜீரணப் பொடி

இதுவும் ஜீரண சக்தியை அதிகரித்து வாதம் பித்தம், கபம் எல்லாவற்றையும் சமநிலையில் வைக்கக்கூடிய ஒரு சிறந்த பொடிதான். என் அத்தை அடிக்கடி செய்வாள் இதை. அவளிடம் கேட்டு நானும் செய்திருக்கிறேன்.

தேவையான பொருட்கள்

கருப்பு உளுத்து – அரை  கப்

தனியா – அரை  கப்

சீரகம் – அரை கப்

மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – இரண்டு கொத்து

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து மேற்படி பொருட்களை தனித்தனியாக சிவக்க வறுக்க வேண்டும். சீரகம் வறுபடும்போது வெடிக்கும். உடனே அதை எடுத்து விடலாம். கருப்பு உளுந்து வறுபடும்போது நல்ல மணம்வரும். அதுதான் அதன் பக்குவம்.  உப்பையும்கூட வறுத்துக்கொள்ள வேண்டும்.

மேற்படி பொருட்களை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டியதுதான். இதை சூடான சாதத்தில் போட்டு நெய் ஊற்றி பிசைந்தும் சாப்பிடலாம். ஒரு ஸ்பூன் பொடியில் நீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி குடிக்கவும் செய்யலாம். உப்பு போடாமல் பொடித்து வைத்துக் கொண்டால் தேனில் குழைத்து சாப்பிடலாம்.

                             ***************

பிரசவமான வீட்டில் அடுத்து என்ன செய்வார்கள்? ஆம் புண்யாவஜனம், தொட்டில், என்று வரிசையாய் வருமே. அவற்றிற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று அடுத்தவாரம் பார்ப்போம். அதோடு பிறந்த குழந்தைக்குத தேவையான  சில முக்கிய சமாச்சாரங்களை எப்படி உண்டாக்குவதென்றும் பார்ப்போம். அதுவரை காத்திருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com