19. காப்பரிசி செய்வது எப்படி?

பிரசவமான பெண்களுக்கான பத்திய சமையல்கள் பற்றி பார்த்தோம்.
19. காப்பரிசி செய்வது எப்படி?

பிரசவமான பெண்களுக்கான பத்திய சமையல்கள் பற்றி பார்த்தோம். ஒரு குழந்தை பிறந்ததும் அந்த வீட்டின் மூத்த பெண்டிருக்கு ஓயாத வேலைகள் இருந்து கொண்டே இருக்கும். தாய் சேய் இருவரையும் அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கென்றே அத்தை, மாமி, பாட்டி என்று உறவுக்காரர்கள் வீட்டில் இருந்து மாற்றி மாற்றி இருவரையும் கவனித்துக் கொள்வார்கள். குழந்தை பிறந்த பத்தாம்நாள் புண்யாவஜனம் செய்ய வேண்டும். குழந்தையைத் தொட்டிலிலிட்டு பெயரிட வேண்டும். குழந்தையைத் தொட்டிலில் இடும்போது கட்டாயம் செய்யவேண்டிய  இரண்டு இனிப்புகள் உண்டு. ஒன்று காப்பரிசி. மற்றது தொட்டில் பயறு. இவை இரண்டும் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

65)  காப்பரிசி

பிறந்த குழந்தைக்கு பத்தாம் நாளன்று புண்யாவஜனம் செய்து தொட்டிலில் இடும்போது அதன் பிஞ்சுக் கைகள் மற்றும் கால்களுக்கு காப்பிடுவது வழக்கம். கைகளுக்கு தங்கக்காப்பும், வெள்ளிக்காப்பும், கால்களுக்கு வெள்ளிக்காப்பும் இடுவார்கள். தங்கள் வெள்ளி இவற்றோடு வேப்பங் குச்சியிலும் காப்பு செய்து போடுவார்கள். அப்படி காப்பு போடும்போது செய்வதுதான் காப்பரிசி.  குழந்தைக்கு ஒரு வயதாகும்போது ஆயுஷ் ஹோமம் செய்து பின்னர் தாய்மாமன் மடியில் உட்கார வைத்து காது குத்துவார்கள். அப்போதும் காப்பரிசி செய்து வைப்பது வழக்கம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – ஒரு கோப்பை

வெல்லம் – முக்கால் கோப்பை

பொட்டுக் கடலை – அரை கோப்பை

தேங்காய் – பல்லு பல்லாக நறுக்கியது – இரண்டு டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் தூள் – ஒரு ஸ்பூன்

செய்முறை:

அரிசியை அலம்பிவிட்டு உடனே வடிகட்டி ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் காயவைக்க வேண்டும். அரிசி அதிகம் ஊறக்கூடாது. ஈரம் நீங்கி நன்கு உலர்ந்த அரிசியை ஒரு வாணலியில் போட்டு அது சிவந்து பொரியும் வரை கைவிடாமல் வறுக்க வேண்டும். நன்கு சிவக்கும்போது அரை ஸ்பூன் நெய் சேர்த்து  வறுத்து அடுப்பை அணைத்து அதை ஒரு தட்டில் மாற்றி விடவும்.

அதே வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு தேங்காய் பற்களையும் பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

வெல்லத்தை கால் கப் நீர் விட்டு கரைத்து வடிகட்டி வாணலியில் விட்டு அடுப்பில் வைத்து முற்றிய பாகு வைத்துக் கொள்ளவேண்டும். பாகில் சிறிது எடுத்து நீரில் விட்டால் அது உருண்டு கெட்டியாக வேண்டும். அதுதான் சரியான பதம். இந்தப் பதம் வந்ததும் ஏலக்காய் பொடியை சேர்த்து பின்னர் அதில் வறுத்து வைத்திருக்கும் அரிசி, அதோடு பொட்டுக் கடலை, வறுத்த தேங்காய் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து ஒரு இரண்டு நிமிடம் போல கிளறி விடவேண்டும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு சற்றுப் பொறுத்து கிளறி விட்டால் முற்றிய வெல்லப்பாகு அரிசியில் உறைந்து காப்பரிசி கையில் ஒட்டாமல் உதிர் உதிராகியிருக்கும். தாம்பூலத்துடன் இந்த காப்பரிசியும் சிறிய பாக்கெட்களாக செய்து வந்தவர்களுக்கு கொடுப்பது வழக்கம். 

66)  தொட்டில் பயறு

தேவையான பொருட்கள்

பச்சைப்பயறு – இரண்டு கப்

வெல்லம் – இரண்டரை கப் ( உங்களுக்கு இனிப்பு கூடுதலாக வேண்டுமென்றால் ஒரு கப்பிற்கு ஒன்றரை கப் என்ற கணக்கில்கூட வெல்லம் எடுத்துக் கொள்ளலாம்.

ஏலக்காய்த் பொடித்தது  – ஒரு ஸ்பூன்

தேங்காய் துருவல் – ஒரு கப்

பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

பச்சைப் பயறை காலையிலேயே நன்கு வாசனை வரும்வரை ஒரு வாணலியில் வறுத்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஐந்து மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

பிறகு ஊறிய பச்சைப்பயறை குக்கரில் போட்டு தேவையான நீர்விட்டு ஐந்தாறு விசில் வரும்வரை வேகவைக்க வேண்டும்.

பல்லுபல்லாக நறுக்கிய தேங்காயை ஒரு ஸ்பூன் நெய்யில் வறுத்துக் கொள்ள வேண்டும். 

வெல்லத்தைப் பொடி செய்து ஒரு கோப்பை நீர்விட்டு கரைத்து வடிகட்டி வாணலியில் விட்டு முற்றிய பாகு பதம் வரும்வரை கொதிக்கவிட வேண்டும். சிறிது பாகை தண்ணீரில் விட்டால் உருட்டி எடுக்கும்படி இருக்க வேண்டும். இந்த பதம் வந்தபிறகு ஏலக்காய்ப் பொடியையும், வறுத்த தேங்காய்ப் பற்களையும் போட்டு அதோடு வேக வைத்த பச்சைப் பயறையும் நீரை வடித்து அதில் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும். கிளறும்போதே வறுத்த தேங்காய் சேர்த்து கிளறிக் கொள்ளலாம். வெல்லம், பயறு, தேங்காய் எல்லாம் நன்கு கலந்து கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடலாம். மிக சுவையான இனிப்பு சுண்டல் இது. பிறந்த குழந்தையைத் தொட்டிலில் இடும்போது இந்த தொட்டில் பயறையும் ஒரு கிண்ணத்தில் எடுத்து தொட்டிலின் அடியில் வைப்பது வழக்கம். பிறகு எல்லோருக்கும் இதை சாப்பிடக் கொடுப்பார்கள்.

இதே போல வெள்ளைக் காராமணியிலும் நவராத்திரி சமயங்களில் ஒரு நாள் இனிப்பு சுண்டல் செய்யப்படுவதும் உண்டு. செய்முறை ஒன்றுதான். 

67)  வெந்த வெளிச்செண்ணெய்

பாலக்காட்டைப் பொறுத்தவரை எந்தவொரு வீட்டிலாவது யாருக்கேனும் குழந்தை பிறந்திருந்தால் அவர்கள் சொல்லா விட்டாலும், குழந்தை பிறந்த உடனே அவர்கள் வீட்டில் காய்ச்சப்படும் வெந்த வெளிச்செண்ணெயின் மணத்தை வைத்தே குழந்தை பிறந்திருக்கும் சேதியைத் தெரிந்து கொண்டு விடமுடியும். அந்த அளவுக்கு அந்த வாசம் தெருக்கோடிவரை வீசும். பொதுவாக கேரளத்து பெண்களின் தலைமுடியின் கருமையும், வளர்ச்சியும், மென்மையும், அவர்களது மேனியின் மினுமினுப்பும் வேறு எவரிடத்தும் காணமுடியாது. அதற்குக் காரணம் அவர்கள் உள்ளுக்கும், புறத்திற்கும் உபயோகிப்பது வெளிச்செண்ணெய்தான். எல்லோரது வீட்டின் கொல்லைப்புறத்திலும் நிச்சயம் இரண்டு மூன்று தென்னை மரங்களாவது இருக்கும் என்பதால் தேங்காய்களுக்குப் பஞ்சமில்லை. வீட்டில் யாருக்குக்  குழந்தை பிறந்தாலும் உடனே வீட்டுப் பெரியவர்கள் எண்ணெய் காய்ச்சத் ஆயத்தமாவார்கள். வீட்டில் காய்ச்சும் வெளிச்செண்ணெயை வெந்த வெளிச்செண்ணெய் என்பார்கள். எவ்வித கலப்படமும் அற்ற சுத்தமான தேங்காய் எண்ணெய் இது. இதன் வாசம் ஊரையே கூட்டும். இதன் மருத்துவ குணங்கள் அபாரமானது.  இனி இந்த வெந்த வெளிச்செண்ணெய் காய்ச்சுவது எப்படி, இதன் மருத்துவ குணங்கள் என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்.  

தேவையான பொருட்கள்:

முற்றிய தேங்காய் (பெரியது) – 5

செய்முறை:

தேங்காய்களை உடைத்து துருவிக் கொள்ளவும். பிறகு மிக்சியில் இரண்டிரண்டு கப்பாகப் போட்டு ஒரு கரண்டி வெதுவெதுப்பான சுடுநீர் விட்டு நன்கு அரைத்துப் பிழிந்து பால் எடுத்துக்கொள்ளவும். அதிகம் நீர் விட்டு அரைக்கக் கூடாது. அப்படி அரைத்து எடுத்தால் அது வற்றுவதற்கு அதிக நேரமெடுக்கும். முதல் பால் மட்டுமே இதற்குத் தேவை. எனவே முதல் முறையிலேயே முடிந்த வரை நன்கு அரைத்து ஒட்டப் பிழிந்து பால் எடுத்துக்கொள்ளவும். பிறகு எடுக்கும் இரண்டாம் பாலை சமையலில் வேறு எதற்காவது உபயோகித்துக் கொள்ளலாம். இப்படியே ஐந்து தேங்காயிலிருந்தும் எடுக்கும் முதல் பாலை ஒரு பெரிய வாணலியில் விட்டு கொதிக்கவிட வேண்டும். ஓரளவு கொதி வந்த பிறகு அடுப்பை சிம்மில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். பால் வற்றி வற்றி பால்கோவா மாதிரி கெட்டியாக ஆகும். என்னடா இது என்று கவலைப்பட வேண்டாம்.  கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள். அடுப்பு சிம்மில் இருந்தால் போதும். ஒரு கட்டத்தில் இந்த கெட்டியான கலவை மெல்ல நிறம் மாறிக் கொண்டே வரும். வாசனை  ஊரைக்கூட்டும். பிறகு நன்கு சிவந்து வரும் இந்தக் கலவையின் ஓரங்களில் வெளிச்செண்ணெய் பிரிய ஆரம்பிக்கும். தொடர்ந்து கிளறவும். இந்தக் கலவை கரிந்து போவதற்கு முன்பு அடுப்பை அணைத்து விடவும். இப்போது எண்ணெய் நன்கு வெளிப்பட்டிருக்கும். இதை ஒரு வடிகட்டியினால் ஒரு பாத்திரத்தில் வடித்து எடுத்து காற்று புகாத பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டியதுதான். சிலர் எண்ணெய் வெளிப்பட ஆரம்பிக்கும்போது வாணலியில் ஒரு கால் ஸ்பூன் மஞ்சள் தூளும் சேர்ப்பார்கள். அந்த மஞ்சள் தூளின் நிறமும் எண்ணெயில் சேரும். மஞ்சள் தூள் சேர்ப்பதும் சேர்க்காததும் உங்கள் விருப்பம்.  தேங்காய்ப் பாலிலிருந்து நேரடியாக எண்ணெய் எடுக்கும்போது எண்ணெய் குறைவாகத்தான் கிடைக்கும். ஆனால் இது நிறைந்த மருத்துவ குணம் கொண்டது. தீரத்தீர அவ்வப்போது இது போல காய்ச்சி எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம். இதனுடைய வண்டல் மிகவும் ருசியாக இருக்கும். வெறும் வாயிலேயே சாப்பிடலாம். கறி, மற்றும் கூட்டு வகைகளின் மீது தூவலாம். முகம் கை கால்களின் மீது தடவி மசாஜ் செய்தால் நல்ல ஸ்கிரப்பர் ஆகவும் இருக்கும். அதில் படிந்திருக்கும் எண்ணெய் தோலுக்கு மினுமினுப்பும் கொடுக்கும்.

இனி இந்த வெந்த வெளிச்செண்ணெயின் மருத்துவ குணங்களையும் குழந்தை வளர்ப்பில் இதன் பங்கையும் பற்றி பார்ப்போம்.

வளர்சிதை மாற்றத்திற்குப் பெரிதும் உதவும் ஒருவகை கொழுப்பு அமிலம் தாய்ப்பாலுக்கு அடுத்து தேங்காய் எண்ணெயில் மட்டுமே இருப்பதாக ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. தவிர சருமத்தைப் பாதுகாக்கும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் சுத்தமான வெளிச்செண்ணெயில் அதிக அளவில் உள்ளது. உடலின் உட்புறமும் வெளிப்புறமும் உள்ள மாசுகளை அகற்றுவதற்கு உதவுபவைதான் ஆன்டி ஆக்சிடென்ட்கள். கேரளப் பெண்களின் மேனி பளபளப்பிற்கான காரணம் இதுதான். தவிர இதற்கு வீக்கத்தைக் குறைக்கும் ஆற்றல் உள்ளது. தோலின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கிறது.

பிறந்த குழந்தைகளுக்கு தலையின் மேற்புறம் கிராடில்கேப் எனப்படும் ஒரு வித மஞ்சள் நிற படிமம் ஏற்படும். தவிர உடலிலும் சிவப்புநிறத் திட்டுகள் ஏற்படும்.  பழைய தோல் உரிந்து புதிய தோல் வளரும். கருப்பையில் பாதுகாப்பாக இருந்த குழந்தை வெளியுலக மாசுகளால் பாதிக்கப்படுவதால் பரு போன்று சிறிய அளவில் ஏற்படும். வணிக மயமாகிவிட்ட உலகில் குழந்தைகளைப் பாதுகாக்கும் என்பதாகக் கூறி பலவகை ரசாயனம் கலந்த கிரீம்கள் சந்தையில் இறக்கப்பட்டுள்ளது.  அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் இது போன்ற எந்த பேபி கிரீம்களையும், சோப்புகளையும், எண்ணெய்களையும் உபயோகித்ததில்லை. குழந்தைகளின் சருமத்தைப் பாதுகாப்பதற்காக வீட்டிலேயே வெளிச்செண்ணெய் தயாரிப்பார்கள். குளிப்பாட்டுவதற்கும் பயத்த மாவு, கடலைமாவு போன்றவற்றைத்தான் உபயோகிப்பார்கள்.

குழந்தைகளின் தலையிலும் உடலிலும் தினமும் இந்த வெந்த  வெளிச்செண்ணெய் தடவி மென்மையாக மசாஜ் செய்து, பயத்தமாவு தேய்த்து குளிப்பாட்டினால் மேற்படியான கிராடில்கேப், எக்சிமா, சிறிய பருக்கள், சிவப்பு திட்டுகள் எல்லாவற்றையும் குணப்படுத்திவிடும் இந்த வெளிச்செண்ணெய். டயப்பர் போடுவதால் குழந்தைகளின் தொடை இடுக்குகளில் ராஷஸ் ஏற்படும். அதற்கும் இந்த வெளிச்செண்ணெய் தடவினால் குணம் கிடைக்கும். தொப்புள் கொடி விழுந்த பிறகு தொப்புளைச் சுற்றி இந்த வெளிச்செண்ணெய் தடவி வைப்பார்கள். (ஆனால் இதன் வாசத்திற்கு எறும்பு அருகில் வந்து விடாமல் குழந்தையை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்) குழந்தைகளின் உதடு வெடிப்பிற்கும் இது மிகச்சிறந்த மருந்து. உதட்டின்மீது இதைத் தடவலாம்.

முலைப்பால் குடிக்கும் குழந்தைகளின் வாயின் உட்புறம் வெள்ளை நிறத்தில் ஒரு திட்டு (திராஷஸ்) படிந்திருக்கும். இதனால் பால் குடிக்க முடியாமல் குழந்தை அழும். அச்சமயத்தில் இந்த வெந்த வெளிச்செண்ணெயை தாய் தன் முலைக்காம்பில் தடவிக்கொண்டு குழந்தைக்குப் பால் கொடுக்கலாம். அல்லது ஒரு துளி எண்ணெயை குழந்தையின் வாயின் உட்புறம் அந்த வெள்ளைப் படிமத்தின் மீது தடவியும் விடலாம். குழந்தைக்கு பற்கள் முளைக்கும்போது அதன் ஈறுகளில் வலி ஏற்படக்கூடும். அச்சமயத்தில் ஒரு விரலால் இந்த வெந்த வெளிச்செண்ணெயைத் தொட்டு ஈறுகளின் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்து விடுவார்கள்.

தோல் சுருக்கத்தை நீக்கும் குணமுடையது இது. இப்படி பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருந்த காரணத்தினால்தான் கேரளத்து தாய்மார்கள் குழந்தை பிறந்த கையோடு வீட்டில் வெளிச்செண்ணெய் காய்ச்சுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். வசம்பு மாதிரி இதையும்பிள்ளை வளர்ப்பான் என்று சொல்வதில் தவறில்லை. என் பெண்கள் பிறந்த போது என் அம்மா வெந்த வெளிச்செண்ணெய் காய்ச்சினாள். என் பெண்களுக்குக் குழந்தைகள் பிறந்தபோது நானும் இந்த வழக்கத்தை விட்டுவிடாமல் வீட்டிலேயே தேங்காய்ப்பால் எடுத்து எண்ணெய் காய்ச்சினேன். இது இயற்கை நமக்களித்திருக்கும் அருமருந்து.

                            *****************

அடுத்த வாரம் குழந்தைகளுக்கு ஆறாம் மாதம் செய்யும் அன்னப்பிராசனம் பற்றியும், மற்றும் குழந்தைக்குத் தேவையான சில உணவு வகைகளை வீட்டிலேயே எப்படி தயார் செய்து கொள்ளலாம் என்று பார்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com