Enable Javscript for better performance
திரு.வி.க.- Dinamani

சுடச்சுட

  

  திரு.வி.க.

  By சாரு நிவேதிதா  |   Published on : 12th April 2015 10:26 AM  |   அ+அ அ-   |    |  


  மகால வாசிப்பு பற்றிய என் தீராத துக்கம் என்னவென்றால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் சுயசரித நூல்களை மொழிபெயர்த்துப் படிக்கிறோம். ஆனால், அதையெல்லாம்விட எத்தனையோ மடங்கு சிறப்பு வாய்ந்த ஒரு தமிழ் நூல் பற்றி யாருக்குமே தெரியாதிருக்கிறோம்.

  120 ஆண்டுகளுக்கு முந்தைய சென்னை நகரம், தமிழ் வாழ்க்கை, இந்திய அரசியல் பற்றிய அரிய ஆவணமான ஒரு சுயசரிதையே அது.  திரு.வி.க. (பிறப்பு: 1883, இறப்பு: 1953) எழுதியது. 1900-ல் இருந்து, இந்திய விடுதலைப் போராட்டம் அதன் உக்கிரத்தை அடையத் துவங்கியிருந்தது. அந்தக்  காலகட்டத்தில் மகாத்மா காந்தி, திலகர், அன்னி பெசன்ட், பாரதி, வ.வே.சு.ஐயர், மறைமலை அடிகள், ராஜாஜி, பெரியார், வ.உ.சி., சத்தியமூர்த்தி போன்றவர்களோடு நெருங்கிப் பழகி, சுதந்தரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற செயல்வீரர்களில் ஒருவராக விளங்கியவரின் வாழ்க்கைக் குறிப்புகள், எவ்வளவு சுவாரசியமாகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.
   

  thiruvika.jpg

  மகாத்மாவும், திலகரும் தமிழ்நாடு வரும்போது, அவர்களது சொற்பொழிவுகளைத் தமிழில் மொழிபெயர்ப்பவராக திரு.வி.க. இருந்திருக்கிறார்.

  அது பற்றிய ஒரு சுவாரசியமான சம்பவம் –

  காந்தியின் பேச்சை முதல்முறை மொழிபெயர்த்தது 1921-ல். அப்போதெல்லாம் திரு.வி.க.வைப் பார்க்கும்போது ‘வாரும், மொழிபெயர்ப்பாளரே’ என்றுதான் சிரித்துக்கொண்டே அழைப்பாராம் மகாத்மா. பிறகு, ஆறு ஆண்டுகள் கழித்து மகாத்மாவைச் சந்திக்கிறார் திரு.வி.க.. அப்போது, ‘சென்னையில் முதன்முதலில் என் பிரசங்கங்களை மொழிபெயர்த்தது நீங்கள்தானே? அப்போது ஒரு வாக்கியத்தை நீங்கள் விட்டுவிட்டீர்கள். நான் திருத்தினேன். நினைவிருக்கிறதா?’ என்று கேட்டாராம் காந்திஜி. அந்த ஆறு ஆண்டுகளில் மகாத்மா சந்தித்த மனிதர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள். இருந்தாலும், அவர் திரு.வி.க.வை நினைவில் வைத்திருந்தார் என்று மகாத்மாவின் ஞாபகசக்தி குறித்து சிலாகித்து எழுதுகிறார் கல்கி.

  பத்திரிகைத் துறையிலும் திரு.வி.க. பல புரட்சிகரமான மாற்றங்களைச் செய்தார். முக்கியமாக, துளியும் சமரசமின்றி அதிகாரத்தை எதிர்த்தார். 1917-ல் அன்னி பெசன்ட், அருண்டேல், வாடியா மூவரையும் கைது செய்தது அரசு. அந்த நிகழ்ச்சிதான், திரு.வி.க.வை நேரடி அரசியலில் இறங்கச் செய்தது. தீவிரமான உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய மேடைப் பேச்சாளரான திரு.வி.க.வின் அரசியல் சொற்பொழிவு, அன்னி பெசன்ட் கைதான அன்று துவங்கியது. அப்போதே, தேசபக்தன் நாளிதழின் ஆசிரியராகவும் ஆனார். அதில் அவர் எழுதிய தலையங்கக் கட்டுரைகள், நாம் அனைவரும் – குறிப்பாக பத்திரிகையாளர்கள் – அவசியம் படிக்க வேண்டியவை.

  பின்னர் தேசபக்தனில் இருந்து விலகி, 1920-ல் சாது அச்சகத்தை நிறுவி, நவசக்தி வார இதழைத் துவக்கி, 1940 வரை திரு.வி.க. நடத்தினார். இந்தக் காலத்தில், ஆங்கிலேய நிர்வாகத்திடம் இருந்தும் போலீஸிடம் இருந்தும் எக்கச்சக்கமான மிரட்டல்களைச் சந்தித்தார்.

  பத்திரிகை மட்டுமல்லாமல், தொழிலாளர் சங்கம் உருவாவதற்கும் காரணமாக இருந்தார். இந்தியாவிலேயே, சென்னையில்தான் 1918-ல் முதல் தொழிற்சங்கம் திரு.வி.க.வின் முயற்சியால் உருவானது. அதன்பிறகு, 1921-ல் சென்னை நெசவுத் தொழிலாளர் கதவடைப்பும் வேலை நிறுத்தமும் ஆறு மாத காலம் தொடர்ந்தது. அந்தப் போராட்டத்தில் தீவிரமாக இருந்தவர் திரு.வி.க..

  அப்போது கவர்னராக இருந்த வில்லிங்டன் பிரபு, தொழிலாளர்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர். அச்சமயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பல தொழிலாளர்கள் பலியாயினர். அந்த ஆறு மாத காலமும், தன் இல்லம் இருந்த ராயப்பேட்டையில் இருந்து வெண் குதிரை பூட்டிய வாடகை வண்டியில், தினமும் ஒவ்வொரு வழியாக அலுவலகம் சென்று வந்திருக்கிறார் திரு.வி.க.. அந்த அளவுக்கு அவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது.

  ‘வெண்குதிரையின் மணியொலி கேட்கும் வரை ராயப்பேட்டை கவலையில் கிடக்கும். தெருத் திண்ணைகளில் கூட்டம் இருக்கும். வீடு விழித்திருக்கும். என்னை ஈன்ற அருமை அன்னையார் தெரு வாயிற்படியிலே முகவாய்க் கட்டையிலே கையை வைத்து ஏக்கத்துடன் என் வருகையை நோக்கிய வண்ணம் அமர்ந்திருக்கும் காட்சி என் உள்ளத்தை உருக்கும்’.

  சமயங்களில், வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பும்போது, வழியில் உள்ள மக்களே அவருக்குப் பாதுகாப்பாக வந்திருக்கிறார்கள். வேலை நிறுத்தப் போராட்டமும், அதிகார வர்க்கத்தின் கெடுபிடிகளும் மும்முரமாக இருந்த ஒருநாள் - 1921 ஜூலை 5-ம் தேதி - மாலை ஆறு மணிக்கு, கவர்னர் மாளிகைக்கு வருமாறு திரு.வி.க.வுக்கு அழைப்பு வருகிறது. செல்கிறார். அவருக்கு முன்னரே தோழர்கள் சக்கரைச் செட்டியார், இ.எல்.ஐயர், ஜலீல்கான், அப்துல் ஹகீம் நால்வரும் அங்கே சென்றிருந்தனர்.

  ‘சென்னையில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களுக்கு நீங்கள் ஐந்து பேரும்தான் காரணம்; உங்களை நாடு கடத்தப்போகிறேன்’ என்கிறார் கவர்னர். பதிலுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்ல, திரு.வி.க. ‘எல்லார்க்கும் நியாயத் தீர்ப்பு நாள் இருக்கிறது’ என்று சொல்ல, அது வில்லிங்டனை உறுத்திவிடுகிறது. அதனால், ‘தொடர்ந்து இப்படியே செய்தால் நாடு கடத்தப்படுவீர்கள்’ என்ற மிரட்டலோடு அனுப்பிவிடுகிறார்.

  திரு.வி.க.வின் திருமணம் 1912-ல் நடைபெறுகிறது. ஒரு ஆண் குழந்தை பிறந்து ஒரு வாரத்திலும், ஒரு பெண் குழந்தை பிறந்து ஒரு ஆண்டிலும் இறக்கின்றன. மனைவி கமலம், எலும்புருக்கி நோயால் 1918-ல் மரணமடைகிறார். அந்த ஆறு ஆண்டு மண வாழ்க்கை பற்றித் திரு.வி.க. எழுதுவது காவிய நயம் மிகுந்தது. குறிப்பாக, திருவொற்றியூர் கடற்கரையில் அவரும் கமலமும் கழித்த மாலைப் பொழுதுகள். அதற்குப் பிறகு அவர் மணம் செய்துகொள்ளவில்லை.

  அதற்குத் திரு.வி.க. சொல்லும் காரணம் –

  ‘கமலத்தை நினைத்த மனதால் இன்னொரு பெண்ணை நினைக்க முடியாது’. ஆனால், மறுமணம் பற்றி அவரை நிர்ப்பந்திப்பவர்களிடம், மறுமண உரிமை இருபாலருக்கும் இல்லாதது நியாயமா என்று கேட்டுத் திருப்பி அனுப்பிவிடுவாராம்.

  தன் இல்வாழ்க்கையைப் பற்றி திரு.வி.க. இவ்வாறு சொல்கிறார் –


  ‘யான் திருக்குறள் படித்தவன். என்பால் பிடிவாதம், வன்மம், முன்கோபம் முதலிய தீக்குணங்கள் துதைந்திருந்தன. வெறும் திருக்குறள் படிப்பு, தீக்குணங்களை அறவே களையவில்லை. கமலாம்பிகையின் சேர்க்கை, அக்குணங்களைப் படிப்படியே ஒடுக்கியது. அவள் திருக்குறள் படித்தவள் அல்லள். ஆனால், அவளே எனக்குத் திருக்குறளாக விளங்கினாள். யான் பின்னாளில் எழுதிய திருக்குறள் விரிவுரைக்கு, இல்வாழ்க்கையின் அனுபவம் பெருந்துணையாய் நின்றது’.


  தன் தமிழாசிரியரான யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளையிடம் புராணங்களையும் யாப்பிலக்கணத்தையும்; மயிலை மகாவித்வான் தணிகாசல முதலியாரிடம் திருவருட்பயன், சிவப்பிரகாசம், சிவஞானபோதம் போன்ற நூல்களையும், வடமொழியையும் கற்றார் திரு.வி.க.. அதேபோல், பாம்பன் சுவாமிகளிடம் உபநிஷத்துக்களும், மருவூர் கணேச சாஸ்திரிகளிடம் சிவகீதையும், நீலகண்ட பாடியமும், அப்துல் கரீமிடம் திருக்குர்ஆனும், ஜஸ்டிஸ் சர்.டி.சதாசிவராவிடம் ஆங்கிலமும் கற்றார். மற்றபடி அவர் மெட்ரிகுலேஷன் பரீட்சையே எழுதவில்லை.

  காரணம், தேர்வு நாள் அன்று நீதிமன்றத்தில் அவர் தன் ஆசிரியருக்காக சாட்சி சொல்லவேண்டி இருந்தது. என்ன வழக்கு? கதிரைவேற்பிள்ளை மீது ராமலிங்க சுவாமிகள் சார்பில் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கு! இப்படி, தன் ஆசிரியருக்காகப் பள்ளிப் படிப்பையே தியாகம் செய்தார் திரு.வி.க..

  ‘திரு.வி.க.வை நாம் ஏன் வாசிக்க வேண்டும்? இந்தியாவின் முதல் தொழிற் சங்கத்தை அமைத்தவர் என்றால் நமக்கு என்ன? இன்றைய வாழ்க்கையில் அவருடைய தேவை என்ன?’ என்று நமக்குக் கேள்விகள் எழலாம்.

  அவரை நாம் வாசிக்க வேண்டியதன் காரணம், அவர் தன் வாழ்க்கையையே நமக்கான செய்தியாக மாற்றினார். அவர் எழுதிய சுயசரிதையின் ஒவ்வொரு பக்கமும் அதற்குச் சான்றாக விளங்குகிறது. உறவினர் தனக்குப் பெண் பார்க்கும்போதுகூட, பெண்ணின் அழகு பற்றியோ செல்வ நிலை பற்றியோ அவர் கவலைப்படவில்லை. ‘ஏழ்மையைக் கண்டு அஞ்சாத பெண்ணாக இருக்க வேண்டும்’ என்று தம் உறவினரிடம் வலியுறுத்துகிறார். எந்தப் பெண்ணையும் அவர் ஒருபோதும் காமக் கண் கொண்டு நோக்கியதில்லை. ஏன் என்பதற்கு அவரே காரணமும் சொல்கிறார். ‘ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும், தன் இருதயத்தில் அவளோடே விபசாரம் செய்வதாயிற்று’ - இந்த பைபிள் வசனமே எப்போதும் அவர் தன் நண்பர்களிடம் சொல்லி வந்த பதிலாக இருந்தது.

  வாழ்வின் அறம் பற்றி ஒரு இடத்தில் இப்படிச் சொல்கிறார் –

  ‘எவருடைய வாழ்க்கையில் அறிவு படிப்படியே உயர்ந்து எவ்வுயிரும் பொது எனும் தெளிவு தோன்றித் தம் உயிரே பிற உயிரும் என்னும் உணர்வு பொங்கித் தொண்டு செய்யும் அந்தண்மை அமைகிறதோ அவர் வாழ்க்கை வெற்றி அடைகிறது. மற்றவர் வாழ்க்கை தோல்வி அடைகிறது. மற்றவர் என்றால் பதவியையும் பொருளையும் மேலாக எண்ணும் மனிதர்’. இதை ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பேர் சொல்ல நாம் கேள்விப்படுகிறோம். ஆனால் அது வெறும் சொல்; திரு.வி.க.தான் சொன்னதை வாழ்ந்து காட்டினார்.

  திரு.வி.க.வை நாம் வாசிக்க வேண்டியதன் மற்றொரு காரணம், தமிழ். கவிதையில் பாரதி செய்ததை உரைநடையில் திரு.வி.க. செய்தார் என்று கல்கி கூறியது மிகவும் சரி. அந்நாளில், ஆங்கில மோகம் கடுமையாக இருந்தது. சட்டசபையில்கூட ஆங்கிலத்தில்தான் பேசினார்கள். அரசியலை தமிழில் எழுதவே முடியாது என்று கருதினார்கள். அப்போதுதான் வெஸ்லி கலாசாலைத் தமிழாசிரியர் பதவியைத் துறந்து வெளியே வந்து, தேசபக்தன் நாளிதழின் ஆசிரியர் ஆனார் திரு.வி.க.. அதிலிருந்து அவர் ஆற்றிய தமிழ்ப் பணி, ஒரு சிறிய கட்டுரையில் எழுதக் கூடியதன்று. முக்கியமாக, சமூகத்தின் கடைநிலையில் இருப்பவர்களிடம் இருந்து அறிஞர்கள் வரை வாசிக்கக்கூடியதாக தமிழை மாற்றிய பெருமை திரு.வி.க.வையே சாரும்.

  மூன்றாவது காரணம், வரலாறு. நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையை ஒரு நாவலாசிரியரைப்போல் வர்ணிக்கிறார் திரு.வி.க.. அவர் குறிப்பிடும் ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும் ஒரு பெரும் வரலாறு இருக்கிறது.

  உதாரணமாக, சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் கச்சேரிகளை ரசித்தது பற்றி எழுதுகிறார். இந்த சரப சாஸ்திரி யார் என்று பார்த்தால், அது புல்லாங்குழலின் வரலாற்றுக்கு இட்டுச் செல்கிறது. இரண்டு வயதிலேயே கண் பார்வையை இழந்துவிட்ட சரப சாஸ்திரியின் (1872–1904) காலத்துக்கு முன்னால், புல்லாங்குழல் ஒரு பக்கவாத்தியமாகவே இருந்தது. 32 வருடங்களே வாழ்ந்த சரப சாஸ்திரிதான், புல்லாங்குழலை முழுமையான கச்சேரி வாத்தியமாக மாற்றியவர். இவரைப் பற்றி பாரதி ‘மஹான்’ என்று குறிப்பிடுகிறார்.

  சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் வாசிப்பைக் கேட்டுவிட்டுத்தான், வயலின் கலைஞராக வளர்ந்து வந்த பல்லடம் சஞ்சீவ ராவ், வயலினை விட்டுவிட்டு புல்லாங்குழல் கற்றுக்கொண்டார். சரப சாஸ்திரி வசித்துவந்த கும்பகோணம் சென்று ஏழு ஆண்டுகள் உஞ்சவிருத்தி செய்தே அவரிடமிருந்து புல்லாங்குழல் கற்றார். மாலிக்கு முன், மாலி அளவுக்குப் பிரபலமாக இருந்தவர் இந்த சஞ்சீவ ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.

  முப்பதுகளின் இறுதியில், அரசியல் ஆபாசமாகவும் குப்பையாகவும் ஆகிவிட்டது என்று சொல்லி, நேரடி அரசியலில் இருந்து விலகிய திரு.வி.க., தன் இறுதிநாள் வரை மற்றவர்களுக்காகவே வாழ்ந்து, தமிழகத்தின் மகாத்மா என்று அழைக்கப்பட்டார். அவரது சுயசரிதையையும் மற்ற நூல்களையும் படிப்பது நம்மை இன்னும் மேம்பட்ட மனிதனாக உருமாற்றும்.

  திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகளில் இருந்து ஒரு பகுதி –

  இயற்கை வரவேற்பு

  அந்நாளில் இராயப்பேட்டையினின்றும் மயிலாப்பூர் செல்வோர் வெயிலின் தாக்குதல் இன்றியே போய்ச் சேர்தல் கூடும். செல்வோர்க்கு வழி நெடுக வரவேற்பு நிகழும். எத்தகைய வரவேற்பு? இயற்கை வரவேற்பு.

  இயற்கை அன்னை பலபட பசுமைக்கோலம் பூண்டு வரவேற்பு அளித்த வண்ணம் இருப்பாள். வழிப்போக்கரை கொடிகளிற் குலவும் வெற்றிலைத் தாள்கள் வாழ்த்தும், வாழைகள் பழங்களைத் தாங்கிக் கைகளை நீட்டி அழைக்கும், மாமரங்கள் காய்கனிகளை ஏந்தி இறைஞ்சும்.

  தென்னைகள் காய்களைச் சுமந்து, ‘இளநீர் பருக வாரும் வாரும்’ என்று தலையாட்டும், கரும்புகள் ‘அருந்துக அருந்துக’ என்று சாறு பொழியும், ஆலும் அரசும் வேம்பும் ஆங்காங்கே குடை பிடித்து நிற்கும். செஞ்சாலிக் கதிர்கள் (நெல் வகை) சாமரை இரட்டும். பொய்கைப் பூக்கள் கண்ணுக்கு விருந்தாகும். ஏற்றமும் மூங்கிலும் வண்டும் பறவையும் செவிக்கு அமுதம் ஊட்டும். இவ்வரவேற்புகள் இப்பொழுது உண்டோ?

  தாவரப் பெருக்கம்

  அட்லன் தோட்டம் என்ற சிறுவனம் காட்டைக் கடுக்கும். அவ்வனம், இராயப்பேட்டைக்குப் பொதுவுடைமையாகப் பயன்பட்டது. அதில் அத்தி, விளா, மா, நெல்லி, நாகை, கிச்சிலி, இலந்தை, இலுப்பை, புளியம், புரசை, புன்கு (புங்கம்), முண் (தாழை), முருக்கு (முள்முருங்கை), கொன்றை, மகிழம், அசோகு, புன்னை, நுணா, ஆல், அரசு, வேம்பு, பனை, மூங்கில் முதலிய மரங்கள் விரிந்து பரந்து அடர்ந்து ஓங்கி வெய்யோனுடன் பொருதும்; பெருங்களா (கரம்பை), காரை, நொச்சி, ஆமணக்கு, எருக்கு, வட்டத்தாரை முதலிய செடிகள் பரவி மரங்களை நோக்கும்; சிறுகளா, சங்கம், கள்ளி, கண்ணி (குண்டுமணி), மருட்டி, படர்காரை முதலிய தூறுகள் செடிகளைப் பார்த்து நகைக்கும்; தாளி, கோவை, பாலை, பிரண்டை முதலியன மரங்களையும் செடிகளையும் தூறுகளையும் பிணித்துப் பின்னிப் படர்ந்து இறுமாந்து கிடக்கும். முண்டகம் (நீர்முள்ளி), கண்டகம், முள்ளி, முளரி, ஆடாதோடை, ஆடுதின்னாப்பாலை, செருப்படை, தூதுவளை, தும்பை, துழாய், கண்டை, நாயுருவி, நாக்கடு, ஊமத்தை, கற்றாழை, கொடி, வேலி கண்டங்கத்திரி, அவுரி முதலிய மூலிகைகள் மருத்துவஞ் செய்யும்.

  பறவைகளும் உயிரினங்களும்

  ஆங்காங்கே குளம், கேணி, ஓடை முதலிய நீர்நிலைகள் தண்மை வழங்கும்; அவைகளின் உள்ளிலும் புறத்திலும் கொட்டி, ஆம்பல், தாமரை, நீலோற்பவம் முதலிய பூக்களும்; அறுகு, தருப்பை, நாணல் முதலிய புல்லினங்களும்; பொன்னாங்கண்ணி, கையாந்தகரை, வள்ளை, வல்லாரை முதலிய கீரை வகைகளும் பொலிந்து இன்பமூட்டும்; அங்கும் இங்கும் பழங்கள் தாமே கனிந்து கனிந்து வீழும்; பாம்பு, கீரி, உடும்பு, முயல், காட்டுப்பூனை, காட்டுக்கோழி முதலியன இரிந்தோடும்; கொக்கு, உள்ளான், நாரை, கள்ளிக்காக்கை, கிளி, பூவை (மைனா), சிட்டுக்குருவி, தவிட்டுக்குருவி, வர்ணக்குருவி முதலிய பறவைகள் பறந்தும் இருந்தும் பாடியும் மகிழும்; கால்நடைகள் உலவும், மேயும், நீர் அருந்தும், படுக்கும், உறங்கும்; மக்கள் விளையாடலும் நிகழும். அட்லன் தோட்டம் ஊருக்கு விறகு, பழம், கீரை, எருமுட்டை (வரட்டி) முதலியன தந்து உதவும். அதை இராயப்பேட்டை வனதேவதை என்று கூறலாம்.

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  flipboard facebook twitter whatsapp