சுடச்சுட

  


  வர் ஒரு தமிழ்ப் பதிப்பாளர். பதிப்பாளர் என்பதைவிட, புத்தகங்களை வெகுவாக நேசிக்கும் இளைஞர். கு.அழகிரிசாமி, தி.ஜ.ர. போன்ற பழைய படைப்பாளிகளின் நூல்கள் இன்று கிடைப்பதற்கு அரிதாக இருப்பதால், அவற்றை மறுபிரசுரம் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.
  1.jpg 

  வாசிப்புச் சூழல் கொஞ்சம்கூட அனுசரணையாக இல்லை; அதிகபட்சம் 300 பிரதிகள் போகும் என்றார் அவர். பிரபலமான எழுத்தாளரின் புதிய நாவல் என்றால் 2000 போகுமாம். அதிர்ச்சியாக இருந்தது. புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஒரு கலாசாரமாக மாற்றாத வரை இந்த நிலை மாறாது என நினைக்கிறேன்.

  இன்று, நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் தமிழில் வந்துவிட்டன. இந்த நிலையில் தமிழ்ப் பதிப்புத் துறையின் தந்தை எனக் குறிப்பிடப்பட வேண்டிய ஒருவர் பற்றிப் பார்ப்போம்.

  சில ஆங்கில இலக்கிய இதழ்களைப் பார்க்கும்போது அதுபோல் தமிழில் இல்லையே என நான் வருத்தப்படுவதுண்டு. உதாரணம், TDR எனச் சுருக்கமாக அழைக்கப்படும் The Drama Review, Granta போன்றவை. ஆனால் அந்தப் பத்திரிகைகளின் தரத்தில், 1939-ல் தமிழில் ஒரு மாதப் பத்திரிகையை நடத்தியிருக்கிறார் வைகோ என அழைக்கப்பட்ட வை.கோவிந்தன். அந்தப் பத்திரிகையின் பெயர், சக்தி.

  வழவழப்பான தாளில், மேல்நாட்டுப் பத்திரிகைகளின் தரத்தில் அமைந்த ‘சக்தி’யின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்தபோது நான் அடைந்த ஆச்சரியத்துக்கு அளவில்லை. இவ்வளவுக்கும், இரண்டாம் உலகப் போரின் காரணமாகக் காகிதப் பற்றாக்குறை இருந்த காலம் அது. ஒரு இதழில் விலை குறைப்பையும் அறிவித்து, அதிலிருந்து இதழின் விலையை நாலணாவாகக் குறைக்கிறார் வைகோ.

  தி.ஜ.ரங்கநாதன், தொ.மு.சி.ரகுநாதன், கு.அழகிரிசாமி, வலம்புரி சோமநாதன், தமிழ்வாணன், ரா.கி.ரங்கராஜன், அழ.வள்ளியப்பா எனப் பலரும் ‘சக்தி’யின் ஆசிரியர் குழுவில் இருந்திருக்கிறார்கள். ரோஜா முத்தையா நூலகத்தில் அமர்ந்து, மொத்தம் 16 ஆண்டுகள் வெளிவந்திருக்கும் ‘சக்தி’யின் (1940-1944) அறுபது இதழ்களை மட்டும் மாத வாரியாகப் படித்துக்கொண்டிருந்தேன். பாரதிதாஸன் (ஆரம்ப காலத்தில் அவர் பெயர் அப்படித்தான் அச்சாகியிருக்கிறது).

  தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, யோகி சுத்தானந்த பாரதியார் போன்றவர்களின் கவிதைகளும், மு.அருணாசலம். ராய.சொக்கலிங்கம், எஸ்.வையாபுரிப்பிள்ளை, அ.சீனிவாச ராகவன், மு.வரதராசனார் போன்ற தமிழறிஞர்களின் தமிழ் இலக்கியம் பற்றியக் கட்டுரைகளும், ஏ.கே. செட்டியாரின் பயணக் கட்டுரைகளும், அநேகமாக ஒவ்வொரு இதழிலும் வெளியாகி இருக்கின்றன.

  ‘சக்தி’யில் எழுதிய மற்றவர்கள் - சக்கரவர்த்தி ராஜ கோபாலாச்சாரியார், டி.கே.சிதம்பர முதலியார், பெ.தூரன், த.நா.குமாரஸ்வாமி, வெ.சாமிநாத சர்மா, ந.பிச்சமூர்த்தி, ந.சிதம்பர சுப்ரமணியன், சரோஜா ராமமூர்த்தி (சமீபத்தில் இறந்துபோன ‘குடிசை’ ஜெயபாரதியின் தாயார். இதேபோல், ஜெயபாரதியின் தகப்பனார் து.ராமமூர்த்தியின் கதைகளும் வேறு சக்தி இதழ்களில் வந்துள்ளன), க.நா.சுப்ரமணியன், கு.ப.ராஜகோபாலன், அ.கி.ஜயராமன், பி.ஸ்ரீ. மற்றும் பலர். ஒவ்வொரு இதழும் சுமார் 125 பக்கங்கள் இருந்தாலும், இடையில் ஒரு படம்கூட இல்லை.

  நம்முடைய சிறுபிராயத்திலிருந்து அறிந்து வந்துள்ள இந்த அறிஞர்களின் எழுத்துகளை, அவை எழுதப்பட்ட உடனேயே பத்திரிகையில் வெளிவந்த வடிவத்தில் காணும்போது ஏற்படும் உணர்வுகளை வார்த்தையால் எழுத முடியவில்லை.  இதையெல்லாம் நம் இளைஞர்கள் பயின்றால், தமிழ் இலக்கியம் பற்றியும், சமூகம் பற்றியும் இளைய சமுதாயத்திடம் எப்பேர்ப்பட்ட விழிப்புணர்வு ஏற்படும் என்று எண்ணி விம்மினேன்.

  ‘சக்தி’ இதழ்களில் தல்ஸ்தோயின் படையெடுப்பு என்ற நாவல் தொடராக வந்திருக்கிறது. (பிறகு அந்த நாவல் மூன்று பாகங்களாக ‘சக்தி’யின் வெளியீட்டில் வந்தது). க.நா.சு.வின் பல உலக இலக்கிய மொழிபெயர்ப்புகள், தொடர்ந்து ‘சக்தி’யில் வெளியாயின. ஒரு தலையங்கம், போரின் காரணமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு பற்றிக் கவலைப்படுகிறது. 1.8.1943 தலையங்கம், பெர்னார்ட் ஷாவால் மேதை என்று வர்ணிக்கப்பட்ட முஸலினி வீழ்ந்துவிட்டது பற்றிப் பேசுகிறது.

  ந.சிதம்பர சுப்ரமணியனின் கட்டுரையில் இருந்த ஒரு விஷயம், 75 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையைப் பற்றிய ஏக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது. சிதம்பர சுப்ரமணியன் ஒரு அங்கவஸ்திரம் வாங்குவதற்காக ஒரு ஜவுளிக் கடைக்குச் செல்கிறார். அதன் விலை ஏழரை ரூபாய். இவர் கையிலோ நான்கு ரூபாய்தான் இருக்கிறது. வேண்டாம் என்று வெளியேறுகிறார் சி.சு. காரணத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் கடைக்காரர், மீதிப் பணத்தை மெதுவாகப் பிறகு கொண்டு வந்து கொடுக்கச் சொல்லி, சி.சு.விடம் அங்கவஸ்திரத்தை கொடுக்கிறார்.

  கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும்போது, அவரைப் பலரும், “மூர் மார்க்கெட்டில் ஃபவுன்டன் பேனாவை அடித்துவிடுவான்; செண்ட்ரலில் பர்ஸை அமுக்கிவிடுவான்; ஜாக்கிரதையாக இரும்” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், சென்னையோ இப்படி இருக்கிறதே என்று ஆச்சரியப்படுகிறார்.

  அதே கட்டுரையில், சி.சு. தன் நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, நண்பரின் வீட்டு வாசலில் ஒரு பிச்சைக்காரனின் தொல்லை.  நண்பரோ, உடனடியாகப் பிச்சை போடாததால், வாசலில் வந்து நின்ற பிச்சைக்காரன் பாடிக்கொண்டே நிற்கிறான். சி.சு.வுக்கு அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அந்தக் காலத்துப் பிச்சைக்காரர்கள் அப்படிப் பாடிப் பாடித்தான் பிச்சை எடுத்தார்கள். நமக்குத்தான் அவை ஆச்சரியம்.  பிச்சைக்காரன் பாடிய பாடல்கள், தாயுமானவர் பாடலும் ராமலிங்க ஸ்வாமிகள் பாடலும்.

  ஒவ்வொரு சக்தி இதழிலும், சக்தி காரியாலயத்தின் புத்தக வெளியீடு பற்றிய விளம்பரமும், நாலைந்து பக்கங்களுக்கு புதிய புத்தகங்களுக்கான மதிப்புரையும் வந்துள்ளன. ஏப்ரல் (‘43) இதழ் தலையங்கம், தீரர் சத்யமூர்த்தியின் மறைவு பற்றி வருந்துகிறது. இணையற்ற பிரசங்கியான அவர் சிறையில் இருந்தபோது பீடித்த நோயினால்தான் இறந்தார் என்கிறது தலையங்கம்.

  ஃபெப்ருவரி (‘44) இதழில் வ.ரா., லெனின் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மார்ச் இதழில் “தாயை இழந்தோம்” என்ற தலையங்கம்.  (கஸ்தூர்பா காந்தி மறைந்தது அந்த ஆண்டு ஃபெப்ருவரி 22-ம் தேதி).  ந.பிச்சமூர்த்தியின் நீண்ட வசன கவிதை. மாஸ்தி வேங்கடேச ஐயங்கார் கதை ஒன்றின் மொழிபெயர்ப்பு. விளம்பரங்கள் - டி.கே.சி.யின் ஆரண்ய காண்டம். புதுமைப் பதிப்பகம் வெளியீடு. விலை 5 ரூ. பி.எஸ்.ராமய்யாவின் “சினிமா…?” ஜோதி நிலையம், திருவல்லிக்கேணி.  நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் புத்தகம் - இசைத் தமிழ். தேசிய விநாயகம் பிள்ளையின் நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழி மான்மியம், புதுமைப் பதிப்பகம், காரைக்குடி.

  சக்தி பிரசுராலயத்தின் விளம்பரத்தில், வெ.சாமிநாத சர்மாவின் புதிய சீனா, கார்ல் மார்க்ஸின் ஜீவிய சரித்திரம் போன்ற புதிய நூல்கள் பற்றிய அறிவிப்பு. வெ.சா.வின் இன்னொரு புத்தகமான ரூஸோவும் வெளிவர இருக்கும் புத்தகப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. சக்தி காரியாலயம், தமிழ் நூல்கள் மட்டுமன்றி ஆங்கில நூல்களையும் பிரசுரித்துள்ளது. உ-ம். நாஜி ஜெர்மனியின் மனமும் முகமும்.  தொகுப்பாசிரியர் பேராசிரியர் என்.கங்குலி; கே.எம்.முன்ஷியின் அகண்ட இந்தியா ரூ.1.4.0.

  ‘சக்தி’ இதழில் வந்துள்ள வேறு சில பதிப்பகங்களின் விளம்பரங்கள் -  ஆஸ்கார் ஒயில்டின் சிறந்த சிறுகதைகள் – மொழிபெயர்ப்பு - ஆ.சுப்பையா, ஸ்டார் பிரசுரம். ஒயில்டின் சிறை அனுபவம் – மொழிபெயர்ப்பு - வி.ஆர்.எம்.செட்டியார், மோலியர் – யோகி சுத்தானந்த பாரதி. டி.கே.சி. எழுதிய கம்ப ராமாயணம். விலை 6 ரூ. (இந்த விலை, அப்போதைய மதிப்பில் மிக அதிகம் என்பதால், நூல் அதிகப் பக்கங்களைக் கொண்டது என யூகிக்க முடிகிறது). சி.சு.செல்லப்பாவின் ஸரஸாவின் பொம்மை – கலைமகள் காரியாலயம்.

  சக்தி வெளியிட்ட மேலும் சில நூல்கள் - டி.கே.எஸ். சகோதரர்களில் ஒருவரான டி.கே.முத்துசாமி எழுதிய ராஜா பர்த்ருஹரி நாடகம்; சந்தியா – சரத் சந்திரர் – மொழி பெயர்ப்பு - அ.கி.ஜயராமன், ரா.ஸ்ரீ.தேசிகன், எம்.ஏ. எழுதிய குழந்தை ராமு விலை: 0-8-0. (ரூ-அணா-பைசா) எட்டணா என்பது இக்காலத்திய அரை ரூபாய்; கு.ப.ராஜகோபாலன் & பெ.கோ.சுந்தரராஜன் இணைந்து எழுதிய கண்ணன் என் கவி, 0.12.0; பிரபல அமெரிக்க நாவலாசிரியர் அப்டன் சிங்க்ளேரின் மதுவிலக்கு மங்கை; இந்தியப் பொருளாதார நூல் - தி.சு. அவினாசிலிங்கம், 2.0.0, டால்ஸ்டாயின் இனி நாம் செய்ய வேண்டுவது யாது, 1.0.0, டால்ஸ்டாயின் இருளின் வலிமை; டால்ஸ்டாயின் சிறுகதைகள்; மகாத்மா காந்தியின் அரசியல் அனுபவங்கள், சிறை அனுபவங்கள், தென் ஆப்ரிக்கா சத்தியாக்கிரகம் (மூன்று நூல்கள்); எப்படி எழுதினேன், தி.ஜ.ர., யான் பெற்ற இன்பம், மு.அருணாசலம், எம்.ஏ.; குழந்தை வளர்ப்பு பற்றி ராஜாஜி எழுதிய சிசுபாலனம், ராஜாஜியின் ஹிந்து மத சாரம், புதுக்கவி விட்மன் பற்றிய யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியின் நூல், கவிதைத் தோரணம் – வி.ஆர்.எம்.செட்டியார்; காலைப் பிறை – F.W.பெயின்; கட்டுரைக் கோவை – பண்டித லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார்; தூங்குமூஞ்சி – செக்காவ்.

  ‘‘மகான் மணி ஐயர்” என்று ஒரு நூல் பற்றிய விளம்பரம். இவர் நாற்பதுகளில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்.  அப்போதைய அமெரிக்க அதிபர் வில்சனுக்கு, பிரிட்டிஷ் சர்க்கார் இந்தியாவில் செய்து வரும் ஊழல்கள் பற்றிக் கடிதம் எழுதி, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அல்லாமல், பிரிட்டிஷ் சர்க்காருக்கும் அதன் மூலம் நெருக்கடி கொடுத்தவர்.

  இதையெல்லாம் பார்த்தபோது, வாசகருக்கு எது வேண்டும் என்பதைத் தருவதில் ‘சக்தி’ கோவிந்தனுக்கு இருந்த பிடிவாதத்தை என்னால் யூகிக்க முடிந்தது. சக்தி இதழ்களில் பல்வேறு ஆச்சரியங்கள் காணக் கிடைத்தன.

  முதலில், 2007 வரை நம்மிடையே வாழ்ந்து, தனது 91-வது வயது வரை எழுதிக்கொண்டிருந்த லா.ச.ராமாமிர்தம், சக்தியில் ஏராளமான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அடுத்து, ‘சக்தி’யில் ஒன்றிரண்டு சினிமா விளம்பரங்களைத் தவிர, சினிமா பற்றிய எந்த விஷயத்தையும் காண முடியவில்லை. (ஒரு சினிமா விளம்பரம் - ஹொன்னப்ப பாகவதர்,  T.R. ராமச்சந்திரன், U.R. ஜீவரத்தினம், V.N.ஜானகி நடித்த படம் ‘தேவ கன்யா’.  டைரக்‌ஷன்: R.பத்மநாபன். இன்னொரு விளம்பரம் - கொலம்பியா ரிகார்டுகளில் கேளுங்கள், T.R.ராஜகுமாரி, T.R.மஹாலிங்கம் பாடிய இன்னின்ன பாடல்கள்…).

  ‘சக்தி’ கோவிந்தன், ‘சக்தி’ இதழ் தவிர குழந்தைகளுக்காக ‘அணில்’ என்ற வார இதழையும், பெண்களுக்காக ‘மங்கை’ என்ற மாத இதழையும், சிறுகதைகளுக்காக ‘கதைக் கடல்’ என்ற மாத வெளியீட்டையும், காந்தியின் எழுத்துகளை மட்டுமே மாதம் ஒரு நூலாகவும், குழந்தைகள் செய்தி என்ற இதழையும் நடத்தினார்.

  சக்தி காரியாலயம் மூலம் பல மலிவுப் பதிப்புகளையும் கொண்டுவந்து, பதிப்புத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார். ராஜாஜியின் வியாசர் விருந்தை, ஒரு ரூபாய்க்கு ‘தினமணி’ வெளியிட்டதற்கு கோவிந்தனின் முயற்சியே காரணம். வெளியான அன்றே, அந்நூல்  80 ஆயிரம் பிரதிகள் விற்றது.

  ‘சக்தி’ இதழ்களின் பெட்டிச் செய்திகளில்கூட, உலகப் புகழ்பெற்ற இலக்கியங்களில் இருந்தும் வரலாற்றில் இருந்தும்தான் சுவாரசியமான விஷயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. அல்லது, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஞானிகளின் பொன்மொழிகள் இடம் பெற்றுள்ளன. ‘சக்தி’ இதழ்களின் ஒவ்வொரு துளி இடமும், மனித குல மேன்மை குறித்து சிந்தித்த ஒரு மகத்தான மனிதனின் உழைப்பே தெரிகிறது.

  2.jpg 

  ‘சக்தி’ கோவிந்தன் பற்றி யூமா வாசுகி ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் இருந்த இரண்டு மேற்கோள்கள் இவை –

  ‘சரஸ்வதி’ விஜயபாஸ்கரன் கூறுகிறார் –

  “சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று சங்கீத வித்வத் சபை (மியூஸிக் அகாடமி) இருக்கும் இடத்தில்தான் அன்று சக்தி காரியாலயம் இருந்தது. போர்த்துக்கீசியர் கட்டிய பிரம்மாண்டமான கட்டடம். முன்புற வராந்தாவில் வலது கைப் பக்கத்தில் ஒரு சிவப்பு நிறத் திண்ணை. சோபா மாதிரியிருக்கும். வை.கோ.வின் யதாஸ்தானம் அதுதான். அந்த வராந்தா, ஒரு சங்கப் பலகை. தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள் என்று எப்போதும் சபை நிறைந்திருக்கும். மாடியில் அவரது குடும்பமும் இருந்தது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் ரகசியமாகச் சந்தித்துக்கொண்ட இடமும் அவரது மாடிதான்”.

  வை.கோவிந்தனின் மகன் அழகப்பன் –

  “…கடைசியா அப்பா - ராயப்பேட்டை பக்கம் சத்யசாய் லாட்ஜின்னு கவுடியா மடத்துக்குப் பக்கத்துல ஒரு லாட்ஜ் இருக்கு. அந்த பில்டிங்குலதான் - யார் உதவியும் இல்லாம ஒரு ரூம் வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தாங்க. மியூஸிக் அகாடமி இருக்கிற அதே ரோடுலதான். நாங்கெல்லாம் ஊருல இருந்தோம். அப்பாவால குடும்பத்த சென்னையில வைக்க முடியல. அவங்க தனியா இருந்து ரொம்பத் துன்பப்பட்டாங்க. இனி எழுதித்தான் சம்பாதிக்கணும்கிற நெலம வந்தபோது, ஆள் உயிரோட இல்ல. எந்தக் கஷ்டமும் அவங்களப் பெரிய அளவுல பாதிச்சது கிடையாது. எப்போதும் படிச்சிக்கிட்டே இருப்பாங்க. அவங்க எழுத முயற்சி செஞ்சப்போ, அவங்களுக்கு சாப்பாட்டுக்கே ரொம்ப சிரமமாயிருந்துச்சி…

  வைகோ பற்றிய கட்டுரையை சக்தி இதழ்களை வைத்து மட்டுமே எழுத வேண்டும் என விரும்பியதால், பழ.அதியமான் எழுதியுள்ள ‘‘சக்தி வை.கோவிந்தன்: தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை” என்ற நூலை, இந்தக் கட்டுரையை எழுதி முடித்த பின்னரே படித்தேன். நாம் அனைவரும் வாசிக்க வேண்டிய அற்புதமான நூல்.

                                      •••

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai