Enable Javscript for better performance
சார்வாகன்- Dinamani

சுடச்சுட

  

  வீன நாடகத்தின் பிதாமகர்களில் ஒருவராகவும் உலகம் முழுவதும் சிலாகிக்கப்படும் சிறுகதைகளை உருவாக்கியவருமான ஆண்டன் செகாவ், தன் பிரதானமான தொழில் மருத்துவம் என்றே சொல்லிக்கொண்டார். (‘மருத்துவம் எனது சட்டரீதியான மனைவி; இலக்கியம் துணைவி’).

  ‘‘ஈரான் அல்லது பெரூவின் ஏதோ ஒரு மலைப்பிரதேசத்தில் இதுவரை ஆய்வு செய்யப்பட்டாத ஒரு பூச்சியின் புதியதொரு உடல் உறுப்பை, மைக்ரோஸ்கோப்பின் மூலமாகப் புதிதாகக் கண்டுபிடிப்பதில் உள்ள சந்தோஷத்தோடு ஒப்பிடும்போது,  இலக்கியத்தினால் கிடைக்கும் பாராட்டுகளும் வெகுமதிகளும் ஒன்றுமே இல்லை.  ரஷ்யாவில் மட்டும் புரட்சி நடந்திருக்காவிட்டால் என் வாழ்க்கை முழுவதையும் வண்ணத்துப்பூச்சி ஆய்வுகளிலேயே செலவிட்டிருப்பேன். எந்த நாவலையும் எழுதியிருக்கமாட்டேன்” என்று சொல்லியிருக்கிறார், Lepidopterology எனப்படும் வண்ணத்துப்பூச்சி ஆய்வுகளில் பல உலக சாதனைகளை நிகழ்த்தியிருப்பவர் வ்ளதிமீர் நபக்கோவ். இப்படித் தன்னை ஒரு பூச்சி ஆய்வாளன் (Entomologist) என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் நபக்கோவ்தான், பின்நவீனத்துவ இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். 

  sarvakan.jpg 

  தமிழுக்கு வருவோம். அவர் பெயரை நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்கமாட்டோம்.   அவர் அதிகம் எழுதியது இல்லை. ஆண்டுக்கு இரண்டோ மூன்றோ சிறுகதைகள்.  அதுவும், 1965 முதல் 1976 காலகட்டத்தில்தான். தன்னை அவர் எழுத்தாளர் என்றும் சொல்லிக்கொண்டதில்லை. தொழில், மருத்துவம். அதுவும் சாதாரணமாக அல்ல.  தொழுநோயாளிகளின் உடல் ஊனங்களைச் சீராக்கும் அறுவைச் சிகிச்சையில் உலக அளவில் பேர் பெற்றவர். அந்தத் துறையில் பத்மஸ்ரீ விருது பெற்றவர். பெயர்: ஸ்ரீனிவாசன். இலக்கியத்தில், சார்வாகன். இவரைப் படித்தபோது பல்ஸாக், மாப்பஸான், ஆண்டன் செகாவ் போன்ற மேதைகளுக்கு ஒப்பானவர் என்றே சொல்லத் தோன்றுகிறது. 

  முன்னுரையிலிருந்து கடைசிப் பக்கம் வரை, எள்ளலும் துள்ளலுமான இவருடைய நடைக்கு ஒரு உதாரணமாக, 1988-ல் வல்லிக்கண்ணன் இவருக்கு எழுதிய இரங்கல் கட்டுரை பற்றி இவர் எழுதுவதைக் குறிப்பிடலாம். உண்மையில் இறந்தது சாலிவாஹனன். இந்தப் பாக்கியம், மார்க் ட்வெய்னுக்கு மட்டுமே கிடைத்திருப்பதாகவும், வல்லிக்கண்ணனின் கட்டுரை யாரிடமாவது இருந்தால், தனக்கு அனுப்பித் தரும்படியும் முன்னுரையில் எழுதுகிறார் சார்வாகன். 

  இந்தத் தொடரின் ஆரம்பமாக இவரைப் பற்றி எழுதலாம் என, நற்றிணை பதிப்பகத்தின் சார்வாகன் தொகுப்பை எடுத்தேன். மொத்தம் 41 சிறுகதைகள், 3 குறுநாவல்கள். இதில் எதைப்பற்றி எழுதுவது என்று நினைத்தபோது, பெரும் குழப்பமே ஏற்பட்டது. நவரத்தினங்களும் கொட்டிக் கிடக்கும் சுரங்கத்தில் எதை என்று எடுப்பது? இருந்தாலும், நமது பக்க வரையறையைக் கருதி மீண்டும் மீண்டும் புரட்டி, மீண்டும் மீண்டும் குழம்பி, கடைசியில் இரண்டு ரத்தினங்களை எடுத்தேன். அமர பண்டிதர் என்ற குறுநாவல். சுதந்தரப் போராட்டம் தீவிரமடைந்திருந்த நாற்பதுகளில் கதை துவங்கி, சுதந்தரத்துக்குப் பிறகு மதிப்பீடுகளின் சடுதியான வீழ்ச்சியோடு முடிவடைகிறது.

  பொதுவாகவே அரசியல், கலாசார, தனிமனிதப் போராட்டங்கள் யாவும் தம் குறிக்கோளை அடையும்வரை அக்னியைப்போல் தகிப்பதையும், அடைந்த பிறகு தாம் முன்வைத்த மதிப்பீடுகளுக்கு எதிராகச் செயல்படுவதையும் நாம் காணலாம்.  ரஷ்ய-சீன-கூபப் புரட்சிகளிலிருந்து நமது திராவிட இயக்கம்வரை நடந்த கதைதான்.  இன்னும் பின்னோக்கினால், அகிம்சையை போதித்த பௌத்தம், இலங்கையில் எந்திரத் துப்பாக்கிகளால் மனிதர்களைக் கொன்று குவித்த வரலாறு தெரிகிறது.

  1940-ல், தனிநபர் சத்யாக்கிரகம் துவங்கிய காலகட்டத்தில், சின்னூர் என்ற சிற்றூரில் கதை துவங்குகிறது, அமர பண்டிதர் கதை. சத்யாகிரகம் செய்து கைதாகிறார் ஷராப் நாராயணசாமி. அதேசமயம், சின்னூர் ராஜவிசுவாசிகளில் முதன்மையானவர் ராவ்சாகிப் சுந்தரமூர்த்தி முதலியார். கள்ளுக்கடை கான்ட்ராக்ட், லேவாதேவி, நிலம், நெல் மெஷின்கள், சினிமா தியேட்டர், இத்தியாதிகளுக்கு அதிபதி.  சத்யாகிரகத்தை வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் கலைந்து திரும்பிக்கொண்டிருந்தபோது, ராவ்சாகிபின் காரியஸ்தன் மாதவராவ், நாராயணசாமியின் சாதியைக் குறித்து மட்டமாகப் பேச, ஒரு குள்ளன் அவர் மீது சாணியை எறிந்துவிடுகிறான். குள்ளன்தான் கதையின் நாயகன். ஊரின் நாவிதன். அவன் எறிந்த சாணி, ராவின் மூக்கிலும், அதனடியில் வியாதி பிடித்த கம்பளிப்பூச்சிபோல் ஒண்டிக்கொண்டிருந்த மீசை மேலும் அப்பிக்கொண்டுவிடுகிறது. குள்ளனும் கைது செய்யப்பட்டு சிறை செல்கிறான். காட்சி மாறுகிறது.

  நாராயணசாமி, வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வருகிறார்.  வரவேற்பதற்கு அங்கே குள்ளனைத் தவிர வேறு யாரும் இல்லை. பரதேசியைப்போல் புளியமரத்தடியில் கதர்த்துண்டை விரித்துப் போட்டுத் தூங்கிக்கொண்டிருந்த நாராயணசாமியை, குள்ளன் யாரிடமோ கடன் வாங்கி ‘சண்முகா கேப்’புக்கு அழைத்துப்போகிறான். சுதந்தரம் வாங்கியதும் தேசியக் கொடி ஏற்றுபவர் தாசில்தார்; சலாம் போடுபவர் சுந்தரமூர்த்தி முதலியார்; விழுந்து கும்பிடுவது மாதவராவ். 

  குள்ளனுக்குள் ஓர் எண்ணம். நமக்கும் மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்? ‘சும்மா பொழுது விடிஞ்சா பொழுது போனா, முடிவெட்டி முடிவெட்டி ஒருநாளைக்கு மசிர்க்குப்பை மாதிரி குப்பைமேட்டுலே ஒதுங்கறதுதானா மனுஷ ஜன்மத்தின் வாழ்க்கை?’  எனவே, இந்த உலகத்தில் தான் வாழ்ந்ததற்கான ஒரு அடையாளத்தை நிறுவி விட்டுப்போக நினைக்கிறான். தன்னால் முடியாததை தன் சந்ததியால் சாதிக்கலாம் என்று பார்த்தால், குழந்தை பிறக்கவில்லை. இரண்டாம் திருமணமும் செய்துகொள்கிறான். அப்படியும் இல்லை. 

  நாயனம் வாசிப்பதில் ஆர்வமுள்ள தன் தம்பி தங்கராசுவையாவது பெரிய கலைஞனாக ஆக்க வேண்டும் என்று முயற்சிக்கிறான். ஆனால், அவனோ படு சோம்பேறி. பழகு என்றால் மூச்சுப் பிடிக்க முடியவில்லை என்கிறான்.  தவில் அடி என்றால் விரல் நோவுகிறது. ஒத்து ஊதுவதுதான் சிரமம் இல்லாத வேலை. வானொலியில் அவனை நிலைய வித்வானாக ஆக்க முயற்சிக்கிறான் குள்ளன்.  அங்கே போய் கக்கூஸில் ஒளிந்துகொள்கிறான் தங்கராசு. திரும்பி வீட்டுக்கு வரும்போது ‘‘கலையைக் காசுக்கு விற்க முடியாது” என்று வியாக்யானம் பேசுகிறான்.  ஒருநாள், இந்தக் கதையை எழுதிக்கொண்டிருக்கும் டாக்டர் வீட்டு வாசலில் ஒரு சத்தம் கேட்கிறது. 

  ‘‘ஒரு தீபாவளிக் காலை… ஆறரை ஏழு மணி சுமாருக்கு ரேடியோவை திருப்பினேன்.  அப்போது திடீரென்று ஒரு விசித்திர சப்தம் கேட்டது. என் ஆயுளில் அந்த மாதிரியான கர்ணகொடூரமான சப்தத்தை நான் கேட்டதேயில்லை. ஒரு விநாடி ரேடியோவுக்குதான் கெடுதல் நேர்ந்துவிட்டதோ என்று நினைத்தேன். மறு விநாடி, செவ்வாய் கிரகத்திலிருந்து யாராவது ராட்சசர்கள் படையெடுத்துவிட்டார்களோ என்றுகூட நினைத்தேன்! முதல் நாள் ராத்திரி எச்.ஜி.வெல்ஸ் படித்ததன் விளைவு.  பிறகுதான், சப்தம் வீட்டு ரேழியிலிருந்து வருகிறது என்று புரிந்தது. கம்பிக் கதவின் பின்னால் ஒரு ஆள் நின்றுகொண்டு, நான் கேட்ட விசித்திர சப்தத்தை உண்டாக்கிக்கொண்டிருந்தான். ஒரு நாயனத்தை வாயில் வைத்துக்கொண்டு, ஒரே சமயத்தில் அடிவயிற்றிலிருந்தும் தொண்டையிலிருந்தும் முக்கிக்கொண்டிருந்தான்.  என்னைப் பார்த்ததும் முக்குவதை நிறுத்தி, ‘குட்மார்னிங் சார்!’ என்றான் தங்கராசு!  மீண்டும் தன் ஹடயோக சங்கீதத்தை ஆரம்பித்தான்!” 

  (மொத்த தொகுப்புமே இப்படித்தான். எனக்குத் தெரிந்து தமிழில் இந்த அளவுக்குப் பகடியை யாரும் எழுதியதில்லை என்றே தோன்றுகிறது). இப்படியெல்லாம் போராடும் குள்ளன், கடைசியில் ஊரெல்லாம் உண்டியல் குலுக்கி ஒரு சிறிய கோவிலைக் கட்டிவிட்டு, வியாதி வந்து செத்துப்போகிறான். ஊர் மக்களால், அது குள்ளன் கோவில் என்று அழைக்கப்படுகிறது!

  இன்னொரு கதை, முடிவற்ற பாதை. சினிமா ரசிகர்கள் பதேர் பாஞ்சாலியை எந்த இடத்தில் வைக்கிறார்களோ அப்படி வைக்கப்பட வேண்டிய ஒரு கதை. கதிர்வேலு ஒரு தபால்காரர். மனைவி காச நோயாளி. மூத்த பெண், நாலாவது பிள்ளைப்பேற்றுக்காக வீட்டுக்கு வந்திருக்கிறாள். கடைக்குட்டிப் பெண், இந்த வருஷமோ அடுத்த வருஷமோ பெரியவளாகிவிடுவாள். புத்திசாலியான பெரியவன், கள்ளச் சாராயம் காய்ச்சி மாட்டிக்கொண்டு, ஊரை விட்டு எங்கோ ஓடிவிட்டான்.  ரெண்டாவது பிள்ளையால் பயனில்லை. மூணாவது பிள்ளை கெட்டிக்காரன். நல்ல குணவானும்கூட. எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும்போது காலரா வந்து வாரிக்கொண்டு போய்விட்டது. இவ்வளவு பிரச்னையிலும் கதிர்வேலு சந்தோஷமாக சிரித்துக்கொண்டே இருப்பார். காரணம், அவர் மனத்தில் எப்போதும் கற்பனைக் குதிரை ஓடிக்கொண்டே இருக்கும். தொடர்கதைபோல் ஒரே கதை வாரக்கணக்கில் அவர் மனத்தில் ஓடும். ‘‘எத்தனை காட்டுமிராண்டிகளை விரட்டியடித்து எத்தனை அழகிய இளங்குமரிகளைக் காப்பாற்றியிருக்கிறார். அதையெல்லாம் எழுதப் புகுந்தால், ‘ஆயிரத்தோரு அரேபிய இரவுகள்’ ஆசிரியர்கூடத் தன் கற்பனை வறட்சியை நினைத்துத் தற்கொலை செய்துகொண்டுவிடுவார்!”

  இந்த நிலையில், வடுகப்பட்டியில் வசிக்கும் எல்லம்மா என்ற கிழவிக்கு 500 ரூபாய் மணியார்டர் வருகிறது.  அனுப்பியது, வட இந்தியாவில் ஏதோ சுரங்கத் தொழிலுக்குப் போன அவளுடைய மகன் குருசாமி. போனதிலிருந்து கிழவியை வந்து பார்க்காதவன். மாதாமாதம் அஞ்சோ பத்தோ அனுப்புவதோடு சரி. ஆனால், இவ்வளவு பெரிய தொகை அனுப்பியதில்லை. (கதை எழுதப்பட்டது அறுபதுகளில்). தனக்கு இப்படி யாராவது 500 ரூபாய் அனுப்பிவைத்தால் எவ்வளவு சௌகரியமாக இருக்கும் என்று நினைக்கிறார் கதிர்வேலு. இதற்கிடையில், நடுக்காட்டில் நரமாமிச பட்சிணிகளிடையே மாட்டிக்கொண்ட அவருடைய கதாநாயகியை வேறு அவர் மீட்டுக்கொண்டு வர வேண்டும். அதற்குள் எல்லம்மா வீடு வந்துவிடுகிறது.  எல்லம்மா செத்து மூன்று மாதம் ஆகிறது என்கிறார் ஊர்க்காரர் ஒருவர். எவ்வளவு தொகை என்று அவருக்குத் தெரியாது. அஞ்சோ பத்தோ இருக்கும் என்பது அவர் நினைப்பு. சாவு செலவை நாங்கள்தான் பார்த்தோம்; காதும் காதும் வைத்தாற்போல் மணியார்டர் பணத்தை நாம் ரெண்டு பேரும் பங்கு போட்டுக்கொள்ளலாம் என்கிறார் அவர். அதை மறுத்துவிடுகிறார் கதிர்வேலு. 

  சின்னூர், வடுகப்பட்டியிலிருந்து ரெண்டு கல் தொலைவில் இருக்கிறது. முகத்தில் வழிந்த வேர்வையைத் துடைத்தபடி, பூவரச மர நிழலில் அமர்கிறார். கண்ணுக்கெட்டின தூரம் வரை ஒரு ஈ காக்காய், மனுஷன் மாடு ஒண்ணையும் காணவில்லை. கூசும் வெய்யிலில், சின்னூர் ரஸ்தாதான் நீண்டு நெளிந்து போய்க்கொண்டிருக்கிறது.

  மணியார்டர் கூப்பனை பார்க்கிறார். குருசாமி இல்லை. யாரோ சரவணன்.  தொழிற்சாலை விபத்தில் குருசாமி செத்துவிட்டான். சாகும் தறுவாயில் தன் சேமிப்புப் பணத்தை தன் அம்மாவுக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறான். ஆக, அனுப்பிய ஆளும் உயிரோடு இல்லை; வாங்க வேண்டிய ஆளும் உயிரோடு இல்லை. ஒரே ஒரு கையெழுத்தைப் போட்டுவிட்டுப் பணத்தை எடுத்துக்கொண்டால், யாருக்கும் தெரியப்போவதில்லை. நினைக்கும்போதே கதிர்வேலுவுக்குக் கைகால் நடுங்குகிறது. ‘‘விலாசதாரர் காலமாகிவிட்டார்” என்று எழுதிவிட்டு, அந்தக் கடும் வெய்யிலில் சின்னூர் நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார். 

  படித்துவிட்டுக் கண் கலங்கினேன். எப்பேர்ப்பட்ட தர்மம்! எப்பேர்ப்பட்ட அறவுணர்வு!  மதிப்பீடுகள் எத்தனைதான் வீழ்ச்சி அடைந்திருந்தாலும் இன்னமும் கதிர்வேலு போன்ற மனிதர்கள் இருப்பதால்தான், உலகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது.  சார்வாகனை நேரில் சந்தித்து, இன்னும் எழுதுங்கள் எங்கள் ஆசானே என்று அவர் கை பிடித்துச் சொல்லத் தோன்றுகிறது!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai