Enable Javscript for better performance
Na. Muthuswamy- Dinamani

சுடச்சுட

  

  ந. முத்துசாமி - பகுதி 2

  By சாரு நிவேதிதா  |   Published on : 15th September 2016 12:15 PM  |   அ+அ அ-   |    |  

   

  அந்தக் காலத்தில் வீட்டுக்கு விலக்காகும் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து குளத்துக்குச் சென்று விடுவார்கள். அப்போதுதான் ஆண் பார்வை படும் முன் திரும்பலாம். கணவன் கண்ணில் படாமல் உப்பும் அரிசியும் போட்டுக் கொண்டு விடலாம். தனியாகப் போகாமல் ஒரு பெண் துணையோடுதான் போவார்கள். அப்படிப் போகும் போது இருள் பிரியாத அந்த அதிகாலை வேளையில் கூட நம் கதையின் நாயகியான ‘தண்ணிப் பிசாசு’ குளத்தில் இருப்பாள். கண்களில் படாமல், இருட்டில் அலைந்து எழுப்பும் சலசலப்பு நிசப்தத்தில் பயமூட்டுவதாக இருக்கும்.

  ‘நீர்மை’ கதையைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு ஸ்வீடிஷ் இயக்குனர் பெர்க்மனின் நினைவு வரத் தவறுவதில்லை. ‘நீர்மை’யை ஒரு சினிமாவாக இயக்கினால் அது ஒரு பெர்க்மன் ‘கிளாஸிக்’ போல் இருக்கும். அந்த அளவு துயரம், அமானுஷ்யம், தனிமை, நுணுக்கமான விவரம், செவ்வியல் தன்மை எல்லாம் நிறைந்தது ‘நீர்மை’.

  அந்தக் காலத்தில் வீட்டுக்கு விலக்காகி மாட்டுக் கொட்டகையில் தங்கியிருக்கும் பெண்களை அடிக்கடி பிசாசு பிடித்துக் கொள்வதுண்டு. ‘நீர்மை’யிலும் அப்படி ஒரு இடம் வருகிறது. ‘விலக்காகி மாட்டுக் கொட்டாயில் ஒதுங்கியிருந்தவளைக் காமமுற்று மூன்று நாட்களும் கொல்லைப் புளியமரத்திலிருந்து கவனித்துக் கொண்டு வந்ததாம் பிசாசு. மூன்றாம் நாள், குளிக்கக் கிளம்ப வேண்டுமென்று அரைத் தூக்கத்தில் இருந்தவளை, பக்கத்து வீட்டில் விலக்கானவள் வேஷத்தில் வந்து வாசல் கதவைத் தட்டி எழுப்பிக் கொண்டு போயிற்று. முதல்நாள் அவர்கள் கொல்லையில் ஒருவருக்கொருவர் துணையாகப் போக வேண்டுமென்று பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறது. முதலில் அவளைக் குளத்தில் குளிக்க விட்டு, இவளை வந்து அழைத்துக் கொண்டு போயிற்று. பக்கத்தில் துணையாக வந்தவள் முன்பே குளத்தில் குளித்துக் கொண்டிருப்பது கண்டு இவள் திரும்பிப் பார்க்க, வந்தவளைக் காணவில்லை. தன்னோடு குளிக்க இறங்கியவள் இப்போதுதான் வீட்டிலிருந்து வரும் கோலத்தில், முழுகி எழுந்தவள் பார்த்துத் தன்னோடு குளிக்க இறங்கியவள் எங்கே எனத் தேடிக் குழம்பி விட்டாள். உண்மையான இருவரும் ஒருவரை ஒருவர் பிசாசு என்று பயந்து அலறிப் புடைத்துக்கொண்டு ஓடி வந்து வீட்டுக் கதவை இடித்து வாய் குழறி நின்றார்கள். பிறகு விடிந்து கொல்லைக் கிணற்றடியில் தலையில் தண்ணீர் இழுத்துக் கொட்டக் குளித்து விட்டுப் படுத்தவர்கள்தான். பேய் விரட்டிய பிறகே இருவருக்கும் ஜுரம் தணிந்தது. இருவரும் அடுத்த மாதம் விலக்காகவில்லை. அவர்கள் வயிற்றில் பிசாசுக் கரு வளர்கிறது என்று எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்... பிசாசுக் கருவை விரட்டிய பிறகே அவர்கள் தன் நிலைக்குத் திரும்பினார்கள்.

  வீட்டு விலக்கானவர்கள் குடும்பத்தில் ஒருவர், வீட்டிலிருந்தே தூங்கி எழுந்து வருகிறவர் என்ற நிச்சயமான துணையுடன் தான் குளிக்கப் போவார்கள். மாற்றி மாற்றி ஒருவர் காலை ஒருவர் பார்த்துக் கொள்வார்கள். பார்வையில் தாங்களே பிசாசாகும் பயமும் இருக்கும். ஆனால், முன்பே அவள் குளத்தில் அலைந்து கொண்டிருப்பதில் யாரும் பயந்து கொண்டதில்லை. அது பிசாசாகவே இருந்திருந்தால் கூட பயந்திருக்க மாட்டார்கள். அவள் இறக்கும் வரை மற்றொரு துணையாகவே இருந்து கொண்டிருந்தாள்.’

  கிருஷ்ண ஜெயந்திக்குக் குழந்தைகள் ‘சீசந்தி அம்பாரம், சிவராத்திரி அம்பாரம்’ என்று பாடியபடி வீடு வீடாக எண்ணெய் வாங்கப் போகிறார்கள். அவள் வீடும் வருகிறது. நூறு வருஷத்திற்கு முந்திய வீடு. ‘குடுமியுள்ள ஒற்றைக் கதவில்லை. இரட்டைக் கதவுகள். அவை சித்திர வேலைப்பாடுகள் செய்த நிலைப்படியும் கதவுகளும். சட்டம் சட்டமாக இழைத்து அலுத்த தச்சன், கிடைத்த சந்தர்ப்பத்தில் தன் சொந்த திருப்திக்காகச் செய்தவை போலிருக்கும் அவை. இடப்புறக் கதவு கிராமப் பழக்கம் போல மேலும் கீழும் தாழிட்டு எப்போதும் போல் சாத்தப்பட்டிருந்தது. வலக்கதவு திறந்திருக்கும் போது ஒருக்களித்திருப்பது போல் ஒருக்களித்து வைக்கப்பட்டிருந்தது. மூடிய கதவின் ஓரங்களைச் சுவரோடு வைத்துத் தைத்து விட்டது போலச் சிலந்தி வலை பின்னியிருந்தது. நிலைப்படியில் மேல் சிற்ப இடுக்குகளில் வெள்ளை வட்டங்களாகத் தம்பிடி அளவில் பூச்சிக் கூடுகள் இருந்தன. அவற்றை, காயம்படும் போது காயத்தில் ஒட்டிக் கொள்ள எடுக்கப் போகும் போதுதான் அவள் வீட்டுடன் எங்களுக்குப் பரிச்சயம். அங்குதான் கிடைக்கும் அவை, காயத்திற்கான அரிய மருந்து எங்களுக்கு.’

  இப்படியே இன்னும் இரண்டு பத்திகள் நுண்ணிய விபரங்களைக் கொண்டு நமக்குக் கதையைச் சொல்கின்றன. அடுத்து:

  ‘ரேழியில் வௌவால் புழுக்கையின் நாற்றமடித்தது. இது கிராமத்தில் தொன்மையின் நெடியாக சுவாசிக்க சுவாசிக்க அனுபவமாகியிருப்பது. அரவம் கேட்டவுடன் உத்திரத்திலும் சரத்திலும் தொங்கித் தரையைக் கூரையாகப் பார்த்து எங்களைத் தொங்குவதாகக் கண்டு வௌவால்கள் அச்சத்துடன் சிதறிப் பறக்க ஆரம்பித்தன. காக்கைகள் அடங்கும் மரத்தில் இரவில் கல்லெறிந்தது போலாயிற்று. காக்கைகள் போலக் கூச்சலிடாமல் இறக்கைகளைப் புடைத்துக் கொண்டு பறந்தன. அவற்றின் உயிர்ப்பை அகாலமாய் அவற்றுக்கு நினைவூட்டியது போலாயிற்று.

  முற்றத்தில் வேலைக்காரி அரிசி புடைத்துக் கொண்டிருந்தாள். அவள் அசை போட்டுக் கொண்டிருந்த அரிசி, கடைவாயில் வெள்ளையாயிருந்தது. பூந்தவிடு படிந்து மீசையிருப்பது தெரிந்தது.

  நாங்கள் முற்றத்திலிருந்து தாழ்வாரத்தில் ஏறிய போது அவள் பூஜை அறையில் விளக்கேற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். அழுக்குப் பிடித்த பழந்திரியை நிமிண்டி விட்டு விளக்கை ஏற்றினாள். சுடர் பிடிக்க ஆரம்பித்தது. தலையிலோ புடவையிலோ எண்ணெய்க் கையைத் துடைத்துக் கொள்ளும் கிராமப் பெண்களின் வழக்கம்போல் அவள் கை எண்ணெய்க் கரியைப் புடவையில் துடைத்துக் கொண்டாள்.’

  இப்படியே விவரணங்களாக நான்கு நீண்ட பத்திகள் தொடர்கின்றன. அடுத்து:

  ‘எங்கள் வருகை அவள் கவனத்தைக் கவரவில்லை. விளக்கேற்றி விட்டு மேற்புறச் சுவரைப் பார்த்துத் திரும்பிக் கொண்டாள். அவள் பார்த்து நின்ற சுவரிலிருந்த படங்கள் புழுதி படிந்து கண்ணாடிச் சட்டங்களாகத் தோன்றின. நம் பார்வைக்குத் தோன்ற அவற்றில் ஒன்றுமில்லை. படங்களின் கீழ் கஸ்தூரிக் கட்டைகளில் பாராயணப் புத்தகங்கள் போலும், ஓலைச் சுவடிகள் போலும் புழுதி படிந்த கும்பல்களிருந்தன. எல்லாம், அன்னியக் கை படாமல் ஞாபகார்த்தமாக விட்டுச் சென்ற நிலையில் காப்பாற்ற இயலாதென இருந்தன. அவற்றிலிருந்தவை அவள் நினைவிலிருக்கலாம். அவள் இப்போது விமோசனம் இல்லாத சாபம் போலத் தோன்றினாள்.

  ஒருவன் ‘பாட்டி’ என்றான். இதுவரை அவளை யாரும் இவ்விதம் கூப்பிட்டதில்லை. கூப்பிட்டவன் ஒரு மாதிரியாக உச்சரித்தான். அவன் கூப்பிட்டதற்கு மற்ற குழந்தைகள் வெட்கப்பட்டார்கள் போலிருந்தது.

  இன்னொருவன் ஓரடி உள்ளே எடுத்து வைத்தான். சுவர்ப்புறம் பார்த்துக் கொண்டிருந்தவள் கையை நீட்டி அவனைத் தடுத்தாள். அவன் நிழலும் விளக்கு வெளிச்சத்தில் அறைக்கு வெளியில்தான் விழுந்திருக்க முடியும். நிழலைக் காண்பிக்க வெளியில் இருட்டவில்லை. அவள் ஒரு உள்ளுணர்வில் மட்டுமே அவனை உணர்ந்திருக்க வேண்டும். இப்போதும் அவள் எங்கள் பக்கம் திரும்பவில்லை. அறைக்கு வெளியில் உள்ள எதுவும் அவள் கவனத்தைக் கவர முடியாது போலிருந்தது.

  ‘கொஞ்சம் எண்ணெய் ஊத்தறேளா?’ என்று யாசித்தாள் எங்களில் ஒரு பெண்.

  அவள் கேட்டது, ஒலி வெளியைக் கடந்து அவள் காதுக்குப் போய்ச் சேர முடியும் என நம்புவதாக இருந்தது. பேச்சுக் காற்றுப் பட்டு, ஒட்டடை சல்லாத் துணியாய் ஆடிற்று. அவள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

  விளக்கு வெளிச்சத்தில் பெரிய சிலந்திகள் மின்னின. புதிதாக நூலிழுத்து ஓடி நெய்து கொண்டிருந்தன. புதிய இழைகளும் மின்னின.

  நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
  ‘சீசந்தி அம்பாரம்... சிவராத்திரி அம்பாரம், பட்டினி அம்பாரம், பாரணை அம்பாரம்’ என்று திடீரென்று ஒருமித்துணர்ந்து பாடினோம். சப்தம் இங்கு விகாரமாய் ஒலித்தது.

  ‘ஏன் சும்மா நின்னுக்கிட்டு, அது எங்கே ஊத்தப் போவுது?’ என்றாள் அரிசி புடைத்துக் கொண்டிருந்தவள்.

  பூஜை அறையிலிருந்து கிளம்பி அவள் வாசலுக்குப் போக ஆரம்பித்தாள். களவுக்கு வீட்டில் எதுவும் இல்லையென நம்புபவள் போலத் தோன்றினாள்.’

  அவளைப் பொறுத்தவரை காலமே உறைந்து போய் விட்டது என்பதை மிக அற்புதமாக எழுதியிருக்கிறார் முத்துசாமி. கதைசொல்லியான கண்ணனின் அம்மாவின் கதை இந்தக் கதையிலேயே மற்றொரு உபகதை.

  ***

  இப்போதெல்லாம் ஆண்டு தோறும் நடக்கும் புத்தக விழாவுக்காக அவசர கோலத்தில் எழுத்தாளர்கள் எழுதிக் குவிக்கும் புத்தகங்களைக் கண்டு மிகவும் துக்கப்படுவது என் வழக்கம். பதிப்பாளர்கள் கொடுக்கும் நெருக்கடியும், எங்கே புதிய புத்தகம் வராவிட்டால் நம்மை எல்லோரும் மறந்து விடுவார்களோ என்ற அச்சமும் பீடிக்க எழுத்தாளர்கள் எழுதிக் குவிக்கிறார்கள். இந்த நிலையில் ‘நீர்மை’ தொகுப்புக்கு ந. முத்துசாமி எழுதிய முன்னுரையை நாம் வாசிக்க வேண்டும். அவர் சொல்கிறார்:

  ‘இந்தக் கதைகளை எல்லாம் எப்படி எழுதினேன் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஆர்வம் குன்றாமல், வேண்டியது வருகிற வரையில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். ஒரு கதையை நான்கைந்து முறை கூட எழுதி இருக்கிறேன். எழுத எழுதத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்துக் கொள்வேன். எத்தனை முறை அதைப் படித்திருப்பேன் என்று தெரியாது. கதையின் ஆரம்பம் கதை முடிகிற வரையில் தொடர்ந்து படித்துக் கொண்டு வரப்படுவதால் அது அதிக முறை படிக்கப்பட்டிருக்கும். மிகவும் குறைந்த முறை படிக்கப்படுவது கதையின் முடிவாக இருக்கும். முடிவு திருப்தி தருகிற வரையில் படிக்கப்படும். என்றாலும் கடைசியில் இருக்கிறபடியால் அதைப் படித்த தடவைகள் ஆரம்பப் பகுதியைப் படித்த தடவைகளை விடக் குறைவாக இருக்கும். தொடர்ந்து எழுதிக் கொண்டு போகிற போது படித்துப் படித்து, விரும்புகிற சப்த ஓட்டமும் கதை ஓட்டமும் கிடைக்கிற வரையில் திருத்தித் திருத்தி எழுதிக் கொண்டிருப்பேன். பகுதி பகுதியாகத் திருத்தி எழுதிக் கொண்டிருப்பேன். திருத்தி எழுதப்பட்ட பகுதிகளை எறியாமல் வைத்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொரு முறையும் திருத்தி எழுதுகிற போது ஆரம்பத்திலிருந்து எழுதுவேன். மேலும் இன்னொரு திருத்தம் வருகிற போது மீண்டும் ஆரம்பத்திலிருந்து. இப்படித் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறபோது கதை முடிந்தவுடன் பார்த்தால் ஏராளமான தாள்கள் குவிந்து போயிருக்கும். இதில் முழுதாக, முழுக் கதையாகத் திருத்தப்பட்டதும் சேரும். எழுதப்பட்ட பின்னர் கிடப்பில் போடப்பட்டு மீண்டும் அது எடுத்துப் படித்துப் பார்க்கப்படும். அப்போது திருப்தி இல்லையென்றால் மீண்டும் தொடங்கி விடுவேன். அவன், அவள், அது என்று படர்க்கையில் ஒருமுறை. நான் நீ, அவன், அது என்று தன்மை முன்னிலையில் ஒருமுறை. ஒரு கதையை எழுதுவதற்குச் சில மாதங்கள் கூட ஆகும். ‘நீர்மை’ அப்படித்தான் எழுதப்பட்டது. எழுதி எழுதி என் மனைவியிடம் படித்துக் காண்பித்து அவள் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் கூட, விடாமல் மீண்டும் திருத்தித் திருத்தி எழுதி முடிக்கப்பட்டது அது. அதற்காகவே அவள் நன்றாக இருக்கிறது என்று சொல்ல மாட்டேன் என்பாள். நன்றாக இருக்கிறது என்று சொன்னால் திருத்தி எழுதத் தொடங்கி விடுவீர்கள் என்பாள். நன்றாக இல்லை என்றாலும் திருத்தி எழுதத் தொடங்கி விடுவீர்கள் என்பாள். இதற்கு அபிப்பிராயம் எதற்கு என்பாள். நான் அவளையா கேட்கிறேன். என்னைக் கேட்டுக் கொள்கிறேன். என்னிடமிருந்து என்ன பதில் வருகிறது என்பதுதான் முடிவாக இருக்கிறது...’

  ‘சி. மணியிடம் ‘நீர்மை’ படித்துக் காண்பிக்கப்பட்டு அவர் சொன்ன யோசனைகளின் பேரில் திருப்பித் திருப்பி எழுதப்பட்ட கதை. படர்க்கையிலும், தன்மை முன்னிலையிலும் மாற்றி மாற்றி எழுதப்பட்ட கதை. கதை சொல்பவனின் தன்மை, முன்னிலை. ‘நீர்மை’யின் பாத்திரம் வெளிச்சலனங்கள் அற்றது. உட்சலனங்களாலேயே ஆட்பட்டு வெளி மௌனத்தை மேற்கொண்டது. உட்குரலைக் கேட்பதற்கே செவிகள் தீட்டி விடப்பட்டிருக்கின்றன அதற்கு...’

  (தொடரும்)

   

   

   

   

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  flipboard facebook twitter whatsapp