Enable Javscript for better performance
ப. சிங்காரம் – பகுதி 4- Dinamani

சுடச்சுட

  

  ப. சிங்காரம் – பகுதி 4

  By சாரு நிவேதிதா  |   Published on : 17th September 2016 03:40 PM  |   அ+அ அ-   |    |  

   

  Barroco என்ற போர்த்துக்கீசிய வார்த்தையிலிருந்து பிறந்தது baroque. ‘அலங்காரமான’ என்பது இதன் பொருள். ஆரம்பத்தில் இது ஆபரண உலகில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு பின்பு பதினாறாம் நூற்றாண்டுக்கும் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டடக் கலையிலும் புகுந்தது. அதன் பிறகு இசை, ஓவியம் போன்ற துறைகளிலும் பரோக் என்ற வார்த்தை புழங்கலாயிற்று. ஸ்பெய்னில் உள்ள ஸந்த்தியாகோ தெ கம்ப்போஸ்தலா கதீட்ரல் ‘பரோக்’ பாணி கட்டடக் கலைக்கு ஓர் உதாரணம். (படம் கீழே). இலக்கியத்திலும் ‘பரோக்’ பாணி உண்டு என்பதைப் பல ஆண்டுகளுக்கு முன்பு கூப எழுத்தாளர் அலெஹோ கார்ப்பெந்த்தியரின் (Alejo Carpentier) நாவல்களைப் படித்தபோது உணர்ந்தேன். ‘புயலிலே ஒரு தோணி’யை சந்தேகமில்லாமல் ஒரு ‘பரோக்’ பாணி நாவல் என்று சொல்லலாம். ஒருவகையில் சிங்காரம் கார்ப்பெந்த்தியரையும் விஞ்சி விட்டார்; எப்படியென்றால்,

  ‘புயலிலே ஒரு தோணி’யில் ‘பரோக்’ பாணியோடு கூட பின்நவீனத்துவப் பகடியும் சேர்ந்து கொண்டு விட்டது.

  நாவலில் நாவன்னா என்று ஒரு கதாபாத்திரம். அவர் பாவன்னாவிடம் (பாண்டியன்) போதையில் இப்படிச் சொல்கிறார்:

  ‘பாவன்னா! வண்டி பிடிஸ்ஸி ஏதி விட்ருங்க...கொலும்பு ஸ்திராட்டுக்கு. பிரகு கடைஹி போரேன்... பாவன்னா! பாவன்னா! கொலும்பு பொயிருகிகலா? கொலும்பு கொலும்பு கொலும்பு. நல்ல ஊரு கொலும்பு. நல்ல ஊரு கொலும்பு. ம்க்ம் ம்க்ம் க்ர்ர்.” காறித் துப்பிக் காலால் தேய்த்தார்; சில விநாடிகள் தேய்த்துக் கொண்டே இருந்தார். ‘ம்க்ம் ம்க்ம்... பாவன்ன்னா! இங்க பாருங்க பாவன்னா! பாவன்னா! உங்களுக்கு பிராமலக் கல்யானிய த்ரியுமால்யா. கல்யானி கல்யானி உடலு என்னா உடலு வுடலு வுடலு வில் போல வலையும். வில், வயில், ஹிஹி. உங்கலுக்கு வில் கையில் வஸ்ஸி அம்பு போடுறவில் கல்யானிஹி நான்னா உயிரு. கலுஃத்தை சேர்த்துக் கட்டிகிருவா. ம்க்ம் ம்க்ம்... வெஃத்தில எஸ்ஸி இறங்குறது அவ தொண்டையில சிவஃப்பா ரஃத்தமாட்டமா தெரியும்... ம்க்ம் ம்க்ம் ம்க்ம் கர்க்ர்ர்...’

  இன்னொரு இடம்.  

  ‘பெண் மயிலே! முடியாது, முடியாது. நான் தாலி கட்டும் வகையைச் சேர்ந்தவனல்லன். விலங்கு போட்ட தொழுவ வாழ்க்கை எனக்கு ஒத்து வராது. கண்மணியே கேள்: தாயின் பாதுகாப்பில் இருக்க வேண்டிய காலத்தில் வேசையரின் மார்பில் மிதந்தேன். மனையாளின் அரவணைப்பில் அடங்க வேண்டிய வயதில் மனையறத்தை வெறுத்து மனம் குழம்பித் திரிகின்றேன். பொன்னே மணியே புனைபூங்கோதாய்! என் இல்லத்தரசியாயிருக்க நீ உடன்படுவது என் பாக்கியமே. ஆனால் நானோ இல்லறத்தை வெறுக்கும் இளைஞன். முடியாததால் வெறுப்பவனின் வெறுப்பை விட, முடிந்திருந்தும் வெறுப்பவனின் வெறுப்பு மிகமிகக் கொடிதன்றோ! காரளகப் பெண்மணியே! நான் மந்தையிலிருந்து விலகிப் பிரிந்த ஓடுகாலி. பிரிந்ததால் மந்தையின் வெறுப்புக்கும், பிரிய நேர்ந்ததால் தன் வெறுப்புக்கும் உள்ளாகி இந்தப் பரந்த வையகத்தில் காலூன்ற இடமின்றி, ஒட்டிப் பற்ற ஈரப்பசை காணாமல் தன்னந்தனியனாய் அலைந்து திரிகிறேன்; அலைந்தலைந்தே திரிவேன்; அலைந்தலைந்து திரிந்தே அழிவேன். கன்னற்சுவை மொழி மின்னிடையாய்! உன் திரண்டுருண்ட மார்பிலே என்னைச் சயனித்து, உன் சேலொத்த விழியிலே என்னைக் கண்ணுற்று, உன் பாலொத்த மொழியிலே என்னைச் செவியுற்று, உன்னை அறிவதால் என்னை மறுக்கிறேன். ஆகவே, உன் உடலணைப்பில் இருக்குங்காறும் சங்க நிதி பதும நிதி இரண்டும் வேண்டேன்! கங்கை வார்சடை கரந்தான் அருளும் வேண்டேன்! எனினும், பெண் மயிலே, நான் தன்னந்தனியன். என் காதலீ! மார்பிற் படுத்து மயலூட்டி மகிழ்வித்து மறப்பூட்டும் நாயகீ! அன்னையற்ற எனக்குத் தாயாகி மடியிற் கிடத்தித் தாலாட்டவல்லையோ? தமக்கையறியா என்னை இடுப்பில் வைத்துக் கிள்ளி அழுகூட்டிப் பின் முத்தாடி ஆற்ற ஒவ்வாயோ? தங்கையற்ற என்னைத் தொடர்ந்தோடிப் பற்றிச் சிணுங்கி நச்சரியாயோ...’

  நாயகீ, காதலீ என்ற வார்த்தைகளில் உள்ள நெடிலை கவனியுங்கள். தமிழ் உரைநடையின் உச்சங்களில் ஒன்றான மேற்கண்ட பத்தியை ப. சிங்காரம் எந்த மனநிலையில், எந்த இடத்தில் வைத்து எழுதினார் என்று யோசித்துப் பார்க்கிறேன். ஒருவிதப் பரவச உணர்வில், உன்மத்த நிலையில்தான் இதை எழுதியிருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழ்தான் என்று இல்லை. இந்தப் பத்திக்கு முந்தின பத்தியில் பாண்டியனை மணந்து கொள்ள விரும்பும் பெண் அவனை ‘சாயா பூஞா சிந்தா! சாயா பூஞா ராஜா!’ என்று கொஞ்சுகிறாள். இந்த வார்த்தைகளின் அர்த்தத்தைத் தேடித்தான் மலேஷியாவின் பல இடங்களில் அலைந்தேன் என்று முன்பு ஒரு அத்தியாயத்தில் குறிப்பிட்டேன்.

  சிங்காரத்திடம் நான் வியந்த மற்றொரு விஷயம், துல்லியம். மொழியில் இவ்வளவு துல்லியத்தை நம்முடைய சமகால எழுத்தாளர் யாரிடத்திலும் காண முடியவில்லை. உதாரணமாக, ஒரு ஆளின் பெயர் சு. இன்னொருவரின் பெயர் ந. இதில் முதலாமவரிடமிருந்து இரண்டாமவருக்கு நிறைய ஆலோசனைகள் கிடைத்திருந்தன. இதை, பிழையே இல்லாமல் துல்லியமாக எப்படி எழுதுவது என்று ஒரு பரீட்சை செய்தால் இன்றைய எழுத்தாளர்கள் அத்தனை பேரும் தோற்று விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

  சிங்காரத்தின் நாவலில் பழ. கருப்பையா என்று ஒரு பாத்திரம் வருகிறது. அந்தக் காலத்தில் செட்டிமார் சமூகத்தில் முதல் எழுத்தை வைத்தே குறிப்பிடுவார்கள். அதன்படி ‘பழ. கரு’ என்ற நான்கு எழுத்துக்களை வைத்து எப்படி எழுதுவது என்று இப்போதைய எழுத்தாளர்களிடம் பரீட்சை பண்ணுங்கள். அத்தனை பேரும் விழுந்து விடுவார்கள். பானாழானா கானாரூனா என்று நெடிலில் எழுதியவர் மட்டுமே தேர்வடைந்தார் எனக் கொள்ளலாம்.  பனாழனா கனாருனா என்று, முழுப்பெயரையும் எழுதும் போது போடும் குறிலிலேயே எழுதினால் அவர் தோல்வி அடைந்தார். ‘பழ. கரு’வை செட்டிநாட்டார் போல் வாய் விட்டுச் சொல்லிப் பாருங்கள். பானாழானா கானாரூனா என்றுதானே வருகிறது? அப்படிப் பார்த்தால் சுவிடமிருந்து நவுக்கு நிறைய ஆலோசனைகள் கிடைத்தன என்று எழுதுவது தவறுதானே? தேவிபாரதியின் நட்ராஜ் மகராஜ் நாவல் முழுவதுமே இப்படித்தான் எழுதப்பட்டுள்ளது. சூவிடமிருந்து நாவுக்கு நிறைய ஆலோசனைகள் கிடைத்தன என்று எழுதுவதே சரியானது. சிங்காரத்திடம் இது போன்ற ஒரு பிழை கூட இல்லை. இவ்வளவுக்கும் சிங்காரம் தமிழ்ச் சிறு பத்திரிகை உலகைச் சாராதவர். இருந்தும் இவ்வளவு துல்லியமாக எழுதியதற்குக் காரணம், அவருடைய ‘பரோக்’ பாணி எழுத்துதான். ஆடம்பரம், அலங்காரம் என்றால் அதில் துல்லியமும் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் வெற்று ஆரவாரமாக, கூச்சலாகப் போய் விடும். மேலும், ‘புயலிலே ஒரு தோணி’யில் நாகூர் இஸ்லாமியர் பேச்சுத் தமிழ், சீன மொழி, மலாய், இந்தோனேசியா, ஜப்பான் போன்ற பல மொழிகளின் பேச்சு வழக்குகள் கலந்து வருகின்றன. இவற்றில் ஒரு எழுத்து கூட, ஒரு பிரயோகம் கூட தவறாக எழுதப்படவில்லை.

  மலேஷியா மற்றும் இந்தோனேஷியாவின் 1940 காலகட்டத்திய வாழ்க்கையை அந்த நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களே கூட எழுதியிருக்க மாட்டார்கள். என்றைக்காவது ஒருநாள் ‘புயலிலே ஒரு தோணி’ இந்த மொழிகளில் அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் (இதுவரை செய்யப்படவில்லையெனில்) அது அந்த நாட்டு இலக்கிய வாசகர்களுக்கு மிகப் பெரும் அதிசயமாகவே விளங்கும்.

  இந்த நாவலின் மற்றொரு முக்கியத்துவம், இதன் கதை இரண்டாம் உலகப் போரின் திருப்புமுனையாக இருந்த ஒரு காலகட்டத்தில் நடக்கிறது.

  ‘ஜெர்மன் படைகள் தொடர்ந்து ரஷியாவுக்குள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. தென் அரங்கில் ஃபீல்ட் மார்ஷல் ‘ருண்ட்ஸ்டெட்’டின் சம்மட்டி அடிகளைத் தாங்கி நிற்க முடியாமல் செஞ்சேனை அணிகள் நொறுங்கிச் சின்னாபின்னமாகி விட்டன. வட அரங்கிலோ மார்ஷல் ஒராஷிலாவ்வின் எஞ்சிய படைகள் லெனின்கிராட் வட்டகைக்குள் அடைபட்டுத் தொடர்பிழந்து தத்தளிக்கின்றன. நடு அரங்கில் - மாஸ்கோ முகப்பில், மார்ஷல் திமாஷெங்க்கோவின் சேனைகள் அளவிறந்த சேதத்துடன் பின்னேறிக் கொண்டிருக்கின்றன... இந்த அரங்கில் மட்டுமே 11 லட்சம் ரஷியத் துருப்புகள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வளவு பெரிய சேதத்தை ஈடு செய்ய முடியுமா? புதிய சேனைகளை அமைப்பதாயிருந்தாலும், தகுதியுள்ள சேனாபதிகள்? துக்காஷெஸ்கிகளும், புளூக்கர்களும் உருண்டு போனார்கள்.’

  ‘ரஷியாவுடன் மோதி இழுபறிப் போரில் ஈடுபடுவதை விட, தெற்கு ஆசியாவில் பாய்ந்து ரப்பர், ஈயம், பெட்ரோல் முதலிய அடித்தேவைப் பொருள்களை எளிதாய்ப் பெறுவதே நலம்’ என்று கருதி ஜப்பானிய ராணுவம் பேர்ள் ஹார்பர் தளத்தை நொறுக்கித் தள்ளியது. அதுதான் ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில் அணுகுண்டு விழவும் இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வரவும் காரணமாக இருந்தது.

  சிங்காரம் அந்த உலக யுத்தத்தில் பங்கு கொண்டவராக இருந்ததால் அந்த வரலாற்றுப் பின்னணியில்தான் ‘புயலிலே ஒரு தோணி’ அமைந்திருக்கிறது.

  இந்த நாவல் தமிழின் மிக முக்கியமான நாவல்கள் என்ற பட்டியலில் தவறாமல் இடம் பெற்றாலும் இது பற்றிய மதிப்புரைகள், விவாதங்கள் வெகு சொற்பமாகவே நடந்துள்ளன. எனக்குத் தெரிந்து இந்த நாவலைப் படித்த இளைஞர்களையும் நான் அதிகம் சந்தித்ததில்லை. எனவே ‘புயலிலே ஒரு தோணி’ பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டால்தான் புதிய வாசகர்களால் இது வாசிக்கப்படும் சூழல் உருவாகும்.

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  flipboard facebook twitter whatsapp