பொருள் தரும் குறள்

வாசக அன்பர்களே, நண்பர்களே! ஓராண்டு காலமாக தங்களுடைய பேராதரவுடன் நமது தினமணி இணைய தளத்தில் வெளிவந்த எனது தத்துவ தரிசனம் தொடர், கடந்த 2016 செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்பார்கள். அந்தப் பொன்னான புதன்கிழமை தோறும் மீண்டும் உங்களைச் சந்திக்க இருக்கிறேன் பொருள் தரும் குறள் என்ற இப்புதிய தொடர் மூலம்.

நமது முன்னோர்கள் முதலில் அறவழிகளில் நிற்கச் சொன்னார்கள். பின்னர் அந்த அறவழியிலேயே பொருளை ஈட்டச் சொன்னார்கள். அதன் பிறகு அந்தப் பொருளைக் கொண்டு அறவழியிலேயே உலக இன்பங்களை அனுபவிக்கச் சொன்னார்கள்.

திருவள்ளுவப் பெருந்தகை படைத்த மாபெரும் இலக்கியமான திருக்குறள், இந்த மூன்றையும் சிறப்புற எடுத்துரைப்பதால் முப்பால் என்று போற்றப்படுகிறது. அப்பாலைப் பற்றி (மோட்சம் குறித்து) நேரடியாகச் சொல்லாமல் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் முழுமையாய் மொழிந்து அப்பாலுக்கு நம்மை அரவணைத்து அழைத்துச் செல்கிறது.

அறச் செயல்கள் புரிவதற்கும், இன்பங்களைத் துய்ப்பதற்கும் பொருளே ஆதாரம் என்பதால் அது குறித்த இயலுக்குப் பொருளாதாரம் என்றே பெயர். தனியொரு வீட்டு நிர்வாகத்திலும் சரி, சமூகத்துக்கான நாட்டு நிர்வாகத்திலும் சரி, பொருளியல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆக, பொருளை ஈட்டுவதற்கு மட்டுமல்ல, அதனை முறையாகச் செலவழிப்பதற்கும் ஓர் கோட்பாடு வேண்டும், நெறிமுறை வேண்டும். இத்தகு கோட்பாட்டை, இன்று பொருளாதார வல்லரசுகளாகத் திகழும் மேலைநாடுகளில் மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்திலேயே, மிக நுணுக்கமாக ஆராய்ந்து விரிவாக எடுத்துரைத்த பெருமை நமது பாரதத்துக்கு உண்டு.

அந்த வகையில், கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கௌடில்யர் எனப்படும் சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரம்தான் பொருளியல், அரசாட்சி முறை குறித்த நூல்களுக்கெல்லாம் முன்னோடி. ஏறத்தாழ அக்காலகட்டத்திலேயே வாழ்ந்த நம் தமிழகத்தைச் சேர்ந்த திருவள்ளுவர், தமது திருக்குறளின் நடுமையமாகிய பொருட்பாவில் 700 குறட்பாக்கள் மூலம் பொருளியலை அலசி ஆராய்ந்துள்ளார்.

அக் குறட்பாக்கள் தரும் பொருளாதார நுணுக்கங்களை இக்காலகட்டத்தோடு பொருத்திப் பார்த்து, எவ்வகையில் அவற்றைப் பொருள் கொண்டால் தற்போது பொருள் ‘கொள்’வதற்குப் பேருதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் கட்டுரைத் தொடர் எழுதப்படுகிறது. இதனைப் பொருள்படுத்துவோர் புதன்கிழமைதோறும் பயணத்தைத் தொடரலாம்...

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை