5. அன்றிலும், ஆற்றாமையும்

தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என, பல தொகுப்புகளில் இடம் பெறுகிறது. 
5. அன்றிலும், ஆற்றாமையும்


கு.பா.ராவின், அருமையான சிறுகதைகளில் ஒன்று ஆற்றாமை. நாற்பதுகளின் இறுதியில் எழதப்பட்டஇந்தக் கதை, தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என, பல தொகுப்புகளில் இடம் பெறுகிறது. 

இரண்டு பெண்கள். சாவித்திரி, கல்யாணம் ஆகி, கணவனுடன்  ஒரு வாரமே கூடி மகிழ்ந்து சேர்ந்து இருந்து விட்டு, அவன் இராணுவத்துக்குச் சென்று விட, தனிமையில் தவிக்கும் ஒரு பெண். கமலா, கூடவே இருக்கும் கணவனுடன் மகிழ்ந்து குலாவியிருக்கும், மற்றொரு பெண். ஒண்டுக் குடித்தனம். 

ஓரிரவில், அவர்கள் தனிமையில் சேர்ந்து, புணர்ந்து  இருக்கும் நேரம் சாவித்திரிக்குப் பெரும் தவிப்பை உண்டு பண்ணுகிறது. கமலாவின் கணவனைத் தேடிக் கொண்டு ஒருவன் அந்த நேரத்தில் வந்து விட, அவனை வைத்துக் கதவைத் தட்டி, தெரிந்தே அவர்களின் உறவைக் கலைத்து விடுகிறாள். (“ஏகாந்தம் ஆடையற்று நின்றது போன்ற அந்த ஒளி அவள் கண்களுக்குக் கூச்சத்தைக் கொடுத்தது”)

அந்த இரவு, தம்பதிகளுக்குள் சண்டையில் முடிகிறது. ``திருப்திதானா பேயே!'' என்று சாவித்திரி தன்னைத்தானே உரக்கக் கேட்டுக் கொண்டாள். இவ்வாறு `ஆற்றாமை' கதை முடிகிறது.

அன்றில் பறவைகள், தமிழ் இலக்கியத்தில் யானைகளுக்கு அடுத்து அதிகம் கொண்டாடப்படுகின்றன. ஆணும், பெண்ணும் எப்பொழுதும் சேர்ந்தே இருக்கும் வகையாம் இந்தப் பறவை. தூங்கும் போது கூட ஒருவரை, ஒருவர் பார்த்தபடியே தூங்கும் இந்தப் பறவைகள், ஒன்று பிரிந்தாலும், மற்றொன்று உடனேயே உயிரை விட்டுவிடுமாம். இந்தப் பறவைகள், சங்க காலம் முதல், இன்றைய திரைப்படப்பாடல்கள் வரைக் கூடிக் களித்து இருக்கின்றன. 

நம்மாழ்வாரின் திருவிருத்தத்தில், பெருமாள் இன்னும் வந்து ஆட்கொள்ளாததால் தனிமையில் தவிக்கும் ஒரு பெண், முயங்கி மகிழும் அன்றில்களைக் கண்டு, ஆற்றாமை கொள்ளும் ஒரு அற்புதப் பாசுரம் இருக்கிறது. 

இந்தப் பெண்ணின் முன் வாசலில் பனை மரம். அதன் மேல். முட்களால் செய்யப்பட்ட அன்றில்களின் வீடு. இங்கும் ஒண்டுக் குடித்தனம்தான். தலைவனைச் சேர இயலாத, இந்தப் பெண், தன் மெலிந்த உயிரையும், தவிக்கும் உடலையும் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறாள். அதே நேரத்தில் அன்றில் பறவைகளின் அன்பின் முயக்கம்; “இது இதுவாக” என்று சொல்லிச் செல்கிறார் ஆழ்வார். அந்த நேரத்தில் பறவைகள்  எழுப்பும்  களி ஒலி, விளரி சுவரத்தில் அவளை மேலும் வாட்டுகிறது. 

விளரிக்குரலன்றில்மென்படைமேகின்றமுன்றில்பெண்ணை,
   முளரிக்குரம்பையிதுவிதுவாக, முகில்வண்ணன்பேர்
          கிளரிக்கிளரிப்பிதற்றும்மெல்லாவியும்
   தளரில்கொலோவறியேன்,உய்யலாவதித்தையலுக்கே.

நம்மாழ்வார். 2560

மேகின்ற–அணைக்கிற; ஆவி – உடம்பு; உய்ய– பிழைக்க; தையல்- பெண் 

நாம், தமிழில் பலவற்றை இழந்து விட்டோம். அதில் மிகப் பெரிய இழப்பு தமிழிசை. ஏழு சுவரங்கள் தமிழிலும் உண்டு.  குரல்,துத்தம்,கைக்கிளை, உழை,இளி,விளரி, தாரம் – ச, ரி, க, ம, ப, த, நி.  இதில் அன்றிலின் குரல், தைவத சுவரத்தில் ஒலிக்கிறது. 

இணைந்து மகிழும் அந்தப் பறவைகள் எழுப்பும்  சத்தங்களை மறக்கடிக்க, கண்ணனின் திருநாமங்களைத் திரும்பத், திரும்பச் சொல்லித் தளர்ந்து போகிறாள் இந்தப் பெண். “இவள் பிழைக்கும் வழி தெரியவில்லையே” என்று தோழி புலம்புவதாகப் பாசுரம். 

அந்த அன்றில்கள், நிறுத்துவதாய்த் தெரியவில்லை. கும்மாளம் கூடிக் கொண்டே போகிறது. எவ்வளவு நேரம்தான் சகித்துக் கொள்வாள் அந்தப் பெண்?.

      அவன் கையதே எனது ஆருயிர் அன்றில்பேடைகாள்
      எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லாவினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
   எவன் சொல்லி நிற்றும்நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே

நம்மாழ்வார். 3827

“யார் சொல்லி நீங்கள் இப்படி புணர்ந்து ஆடுகிறீர்கள்? நலிந்து கிடக்கும் என்னை ஏன் இப்படிக்குடைகிறீர்கள்? நீங்கள் இப்படிக் கூக்குரல் போடுவதை நிப்பாட்டாவிட்டால், என் உயிர் போயே விடும். அதை எப்படி நிப்பட்டுவேன்?” என்று அதட்டுகிறார். 

நம்மாழ்வாரின் பெண், கு.பா.ராவின் சாவித்திரி மாதிரி  இல்லை. அதற்கு, திருமங்கையாழ்வாரிடம் போக வேண்டும். கலியனின் பரகால நாயகிக்கும் அதே நிலைதான். ஆனால், இவள் கொஞ்சம் சாவித்திரி மாதிரி வேகமானவள். 

          குன்றம் எடுத்து மழை தடுத்து இளையாரொடும்
  மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால்செய்தான்
      முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்து ஈர்கின்ற
                அன்றிலின்கூட்டைபிரிக்ககிற்பவர்ஆர்-கொலோ

திருமங்கையாழ்வார் –1962

பெண்ணை – பனை மரம்; ஈர்கின்ற-இம்சிக்கின்ற
கோவர்த்தன மாலையைத் தூக்கி, மழையை நிறுத்தி, இளம் பெண்களுடன் குரவைக் கூத்து ஆடிய திருமால் அவள் காதலன். 

“மால் என்னை மால் செய்தான்”; குறும்பு ஆழ்வாருக்கு. “மலையைத் தூக்கி எல்லோரையும் காத்தவன், என்னையும் காப்பான் என்று நம்பி விட்டேனே? அவன் மற்ற பெண்களுடன் குரவைக் கூத்தாடியவன் என்பதை மறந்து விட்டேனே?” கிடந்து தவிக்கிறாள். 

அவளும் ஒண்டுக் குடித்தனம்தான். அங்கும், பனை மரத்தின் மேல் கட்டிய கூட்டில்,  கூடி முயங்கி இம்சிக்கின்றன அன்றில்கள். 

இங்குதான், கு. பா. ராவின் சாவித்திரி ஆகி விடுகிறாள் இந்தப் பெண், “இந்தப் கூட்டைப் பிரிக்கத் தெரிந்தவர் யாரவது இருக்கிறார்களா?” என்று அலறுகிறாள். கூட்டுக்கு கதவு உண்டா என்ன? பிணைந்து முயங்கும் பறவைகளைத், தட்டிச் சிதறடிப்பதற்கு?

    கு.பா.ராவின் சாவித்திரி சொல்வதிலும் கொஞ்சம் நியாயம் இருக்கிறது. சாவித்திரி புலம்புகிறாள்: “நான் கிடக்கிறேன் வாழாவெட்டி போல. வேண்டுமென்றுதான், நான் பார்த்து வேதனைப்பட வேண்டும் என்றுதான், இப்படியெல்லாம் செய்கிறாள் போலிருக்கிறது! உடனொத்தவள் நான் தனியாகக் கிடந்து சாவதைப் பார்த்து நாம் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோமே என்று அவளுக்குப் பெருமை! நான் நொந்து கிடக்கிறேன், நொந்து போயிருப்பேன் என்று கொஞ்சமாவது அவளுக்குத் தோன்றினால். எப்படித் தோன்றும்? பட்டால் அல்லவா தெரியும் அவளுக்கு’ - சாவித்திரி பொருமிக் கொண்டே படுத்திருந்தாள்.”

கமலா செய்ததும் தவறுதானே? ஒரு பெண்ணின் மனதை அறிந்து கொண்டு, இன்னும் கொஞ்சம் கூட  நாசூக்கோடு, கணவனுடன் கூடி மகிழ்ந்து, இருந்திருக்கலாம். 

இது சங்க இலக்கிய காலத்தில், நல்லந்துவனார் என்ற ஒரு அற்புதக் கவிஞன் எழுத்தில் உயிர் பெறுகிறது. சாவித்திரி போல், தனிமையில் தவிக்கும் ஒரு பெண்ணும், அவள் தோழியும் பேசிக் கொள்வது போல் ஒரு கவிதை. 

          பார்த்து உற்றன தோழி! பார்த்து உற்றன தோழி! 
   இரவு எலாம் நல் தோழி! பார்த்து உற்றனஎன்பவை
      தன் துணை இல்லாள் வருந்தினாள் கொல்? என
          இன் துணை அன்றில்இரவின்அகவாவே,
    அன்று தான் ஈர்த்த கரும்பு அணி வாட, என்
            மென்தோள்ஞெகிழ்த்தான் துறை. 

கலித்தொகை-131; நல்லந்துவனார்    

உற்றன–வருந்தின;அகவாவே– குரல் எழுப்பவில்லை ; 
ஞெகிழ்த்தான்–நெகிழ்த்தான்    

“பாத்துண்டுதான் இருந்தன அந்த ரெண்டும். ராத்திரி பூராக, கொட்ட கொட்ட விழிச்சுண்டு, நான் பட்ட அவஸ்தையை. என் உடம்பு கிடந்து தவிச்சத. ஆனா, இரண்டும் இங்கிதம் தெரிஞ்சதுகள். நான் இப்படி இருக்கேன்னு தெரிஞ்சுண்டும், வெளிச்சத்தலேயே புரண்டு முயங்கும் மனுஷா மாதிரி இல்லாம, இந்த ரெண்டுப் பறவைகள், பாடவே இல்ல. கூடவே இல்ல. என்ன ஒரு அன்பு?” 

இந்தப் பறவைகள், அவள் கணவனுடன் கூடிக் கிடந்த  கடற்கரையில் இருந்த பறவைகள். அந்த இடம்,சித்திரங்கள் தீட்டிய தன் தோள் நெகிழ அவள், அவனுடன்  முயங்கி, மகிழ்ந்து இருந்த கடற்கரை. இந்த வரிகள் எழுதப்பட்ட காலம், குறைந்தது 1800 வருடங்களுக்கு முன். எப்படி வாழ்ந்த நாகரீகம்! 

சங்க இலக்கியத்தின் தாக்கத்தை, காப்பியங்களிலும், பக்தி இலக்கியத்திலும், கம்பனிலும், பாரதியிலும் பார்க்க முடியும். அந்த தடங்களின் வழியே நடை போடுவது ஒரு சந்தோஷமான அனுபவம். தமிழ் நாகரிகத்தின் இந்த சங்கிலிக் கண்ணிகளை, பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் புரியும் மென்மையான உணர்வுகளைப் பாடும் வரிகளை,  மேலும்   தேடுவோம். ஒரே ராகத்தில் அமைந்த பாடல்களைத்தேடுவது போல் இதுவும் சுகமானதே.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com