Enable Javscript for better performance
poetic approach to sangam literature | தனியே உதிரும் பூக்கள்- Dinamani

சுடச்சுட

  
  kurunthogai

  குறுந்தொகை


  நான் வேலைகாரணமாக பல ஊர்களைச் சுற்றியிருக்கிறேன். அங்கெல்லாம் ஏதோ ஒரு ஹோட்டல் அறையில் தனித்துக் கிடக்கும் போது, அந்தப் புது நகரத்தின் ஓசைகள் என்னைப் பாதித்ததே இல்லை. 

  ஆனால், என் வீட்டில் நான் தனித்து இருக்க, மகளும், மனைவியும் இல்லாத சில இரவுகளில், சொந்த அறையிலேயே தூக்கம் வர வெகு நேரமாகும். தெரிந்த சத்தங்கள் கூட புதிதாய் ஒலிக்கும்.  கதவு காற்றில் மூடுவதோ, திரைச்சீலையின் அசைவோ, சிள்வண்டின் சத்தமோ, சுவர்க்கோழியின் கிணுக்கிணுக்கோ, பல்லியின் ஓசையோ  - எல்லாமே தவித்து அலறும் பூனையின் அழு குரல் போல் முழிக்க வைக்கும்.  எப்போது  திரும்பி வருவாள் என்று தெரிந்த பிரிவுக்கே இந்த நிலை என்றால், வருவதே நிச்சயம் இல்லாமல் பிரிந்து சென்ற தன் காதலனை எண்ணித் தவிக்கும் பெண்ணின்  நிலை எப்படி இருக்கும்?. 

  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க இலக்கியத்தில் அப்படி ஒரு பெண் துன்பப்படுகிறாள். பறவைகளும், ஆடு மாடுகளும் தங்கள் துணையுடன் தனி இடம் தேடி சேர்ந்து விட்டன.தன் காதலன் வரவில்லை மாலை 'நள்' என்ற ஓசையுடன் வருகிறது. அன்பு இல்லாத மாலைப்பொழுதே என்று காதலனை நேரிடையாக நொந்து கொள்ளாமல்மாலைப்பொழுதைத் திட்டுகிறாள். . 

  புள்ளும்மாவும்புலம்பொடுவதிய,
      நள்ளென வந்த நாரில்மாலைப்

  குறுந்தொகை – 118 நன்னாகையார்

  மாலை போய் இரவும் வந்தது. ஓசைகள் எல்லாம் அடங்கிய இரவில், இவள் முழித்துக் கிடக்கிறாள். பகலின் சத்தங்கள் காதில் விழவே இல்லையோ என்று நினைக்க வைக்கும் வகையில், எதிலும் பற்றின்றி நடந்து கொள்ளும் அந்தப் பெண், இரவின் ஓசையற்ற 

  படம் 15. வீடு, தொழுவம், காதலி, பசு, எருது 

  அடங்கலிலும், இடி போல் ஒலிக்கும் மெல்லிய அசைவுகளில் துடிக்கிறாள். 

  கொன்னூர்துஞ்சினும்யாந்துஞ்சலமே,
           எம்இல்அயலது, ஏழில்உம்பர்
        மயிலடிஇலைய மா குரல் நொச்சி
       அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
   மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே

   – குறுந்தொகை 138 கொல்லன் அழிசியார்

  வம்பு பேசும் ஊர் தூங்கி விட்டது. அவள் தூங்கவில்லை. அவள் வீட்டின் அருகில் ஒரு அழகிய நொச்சி மரம். மயிலின் அடிகளைப் போல் அதன் இலைகள்.  அங்கு பூத்துக் குலுங்கும் பூக்கள். மெல்லிய காம்புகளில், நீல மணி போல் பூக்கள். அவை ஒவ்வொன்றாய் உதிர்கின்றன. அந்த சத்தம் கூட அவளுக்குக் கேட்கிறது. அதனால் அவளுக்கு தூக்கம் வர வில்லை. 

  பூக்கள் உதிரும் சத்தம் கூட கேட்கும் தனிமை. எப்படிப் பட்ட காதல்?

  நாட்கள் நகர அவள் இளமையும் தேய்கிறது. மெல்லிய காம்புகளில் இருந்து உதிரும் பூக்கள் அவள் இளமை கழிந்து, கடந்து  செல்லும் தனிமை நாட்களே. காதலனைப் பிரிந்த இரவுக்கு ஒன்றாய் உதிர்ந்து கரைகிறது. 

  ஆயிரம் ஆண்டுகள் கடந்து, இதே போல் தவிக்கும் ஒரு பெண், அப்படி மறைத்து, மறைத்துச் சொல்லாமல் தன் நிலையைப் போட்டு உடைக்கிறாள். 

    கல் நவிலும்காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்
           நல் நறு வாசம் மற்றுஆரானும்எய்தாமே
      மன்னும் வறு நிலத்துவாளாங்குஉகுத்தது போல்
    என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
        மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து
    பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம்                                                                         தோயாவேல் என் இவைதான்வாளா?

  – திருமங்கையாழ்வார் பெரிய திரு மடல் . 

  அடர்ந்த காடு. மணம் வீசும் மலர்க் கொடி. அந்த காட்டுக்குள் உதிரும் பூ இவளுக்கு கேட்கிறது. 'கல்' என்று உதிர்கிறதாம். 

  காட்டில் மலர்ந்த பூ, மணந்தால் என்ன? வாடி உதிர்ந்தால் தான் என்ன? அதைப் போல் அவள்  இளமையும் வீணாய்க் கரைகிறது. அடர்ந்த காட்டில் மலர்ந்து, மணம் வீசித் தனியே உதிரும் பூக்கள் – தனிமையின்இளமைத் தவிப்பை இந்த ஒரு வரியில் சொல்லி விட்டுப் போய் விடுகிறார் ஆழ்வார். 

  அதை சொல்லி விட்டு நிறுத்திக் கொள்ள அவள் சங்க காலப் பெண் இல்லையே. 'என் பெண்மையும், என் உடல் நலனும், என் மார்பகங்களும் அவன் தங்க மார்பில் படரா விட்டால் இதானால் என்ன பயன்?' வாய் விட்டே சொல்லி விடுகிறாள். 

  என் இவைதான்வாளாவெனக்கேபொறையாகி
     முன்னிருந்துமூக்கின்றுமூவாமைக்காப்பதோர்
             மன்னு மருந்து அறிவீர் இல்லையே

  இன்னும் ஒரு படி மேலே சென்று, அந்த அவயங்களை நீக்கி விட வேண்டும் என்று உருகுகிறாள். இவை என் கண் முன்னே இருப்பதை நீக்குவதற்கு ஒரு மருந்து இல்லையா? என்று வேண்டுகிறாள். 

  அடர்ந்த காட்டில் மலர்ந்து, மணம் வீசித் தனியே உதிரும் பூக்கள் இறைவனைச் சென்று அடையாத, அவன் தாள் பற்றி நடக்காமல் வீணடிக்கும் நாட்களை இதை விட உருக்கமாக எப்படிச் சொல்ல முடியும்?

  முதலில் வரும் சங்கப் பாடலை பாடியது ஒரு பெண். இரண்டாம் பாடலை எழுதியவர் ஒரு கொல்லன். திருமங்கையாழ்வார் ஒரு படைத் தலைவன், கொள்ளைக்காரன். எல்லோரும் எழுத, எல்லோரும் படித்த காலங்கள்.

  சங்க இலக்கியத்தின்தடங்களை  பல பாசுரங்களில் பார்க்க முடிகிறது. ஆயிரம் ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்ட இரண்டு கவிதைகளில், தனியே உதிரும் பூக்கள் உவமையாக வருகிறது. இரண்டும் பிரிவின் கொடுமையை, கரைந்து வீணாகும் இளமையைஉருக்கமாகச் சொல்கின்றன. 

  பக்தி இலக்கியத்தில் பாசுர அகப்பாடல்களில்  தலைவன் கடவுள். தமிழ் இலக்கியம், வாழ்வையும், இறை வணக்கத்தையும் ஒன்றுக்கொன்று இணைத்து பக்தி இயக்கம் பெருக உதவியது. காதல் ரசம் சொட்டும் இந்தப் பாசுரங்களுக்குள் விசிட்டாத்வைதம் ஒளிந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பல ஆச்சார்யார்கள் அருமையான விளக்கங்களை அருளிச் செய்து இருக்கிறார்கள் தமிழ் நாகரிகத்தின் இந்த சங்கிலிக் கண்ணிகளை, பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் புரியும் மென்மையான உணர்வுகளைப் பாடும் வரிகளை  மேலும்   தேடுவோம்.  ஒரே ராகத்தில் அமைந்த பாடல்களைத் தேடுவது போல் இதுவும் சுகமானதே. 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai