Enable Javscript for better performance
Natural hair aroma | கூந்தலின் நறுமணம்இயற்கையா?- Dinamani

சுடச்சுட

  
  netrikann

  sivan

   

  திருவிளையாடல் படத்தில், என் பதினாலு வயது மகளுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் நக்கீரர். வந்திருப்பது கடவுள் என்று தெரிந்தும்“குற்றம்,குற்றமே” என்று எதிர்த்துக் கேள்வி கேட்கத் துணிந்த வரை டீனேஜ் பருவத்தில் இருக்கும் பெண்ணுக்குப் பிடித்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் அவர் வளையல்  கடைக்காரர் என்பதுதான் அவளுக்கு, அவரைப் பிடித்ததற்கு முக்கியமான காரணம்.

  சங்கை அறுத்து வளையல் செய்வதுதான் நக்கீரரின் தொழில். தமிழ் சங்கத்தின் தலைமைப் புலவர் ஒரு வளையல் கடைக்காரர் என்பதுதான் பல தொழில் செய்தவரும் படித்த, எழுதிய, நம் சங்க கால நாகரிகத்தின் சிறப்பு. அரசாங்க தலைமைப் புலவர், தங்கள் கட்சிக்காரராய் இருக்க வேண்டியதில்லாத காலம்.  .

  “சங்கை அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல்
  இரந்துண்டு வாழ்வதில்லை..!!”

  என்று இறைவனையே எதிர்த்த அவருக்கு ஆதரவாக, “சிவனோட லாஜிக் என்னப்பா..?நெற்றிக் கண் காமிச்சி எரிச்சுட்டா அவர் சொன்னது சரியாயிடுமா? டீச்சர் கைலே அதிகாரம் இருந்தா அவங்க சொல்றதெல்லாம் நாங்க சரின்னு கேட்டுக்கனுமா?” அப்படின்னு ஒரே வாக்குவாதம். 

  “நீ என்ன சொல்ல வர..? பெண்களுக்கு முடியிலே வாசனை கிடையாதுன்னு சொல்றயா?”

  என் மகளுக்கு நீள முடி. பரதநாட்டியம் பயின்று வருவதால், அவளுக்கு அதை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும் என ஆசை. “உன் முடில வாசனை வரல?”

  இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் மனைவி.. “ம்ம் இந்த ஆராய்ச்சிக்கல்லாம் குறைச்சல் இல்ல.. குளிக்கும் பொது ஒழுங்கா ஷாம்பு போகக் குளிச்சா, இயற்கை மணமா; செயற்கையான்னு தெரியும்..” என்று விவாதத்தை முடித்து வைத்தாள்.

  ல்லோருக்கும் தெரிந்த இந்தப் பாடலை, கணவன், மனைவியை அல்லது காதலன் காதலியைக் குளிர்விக்கப் பாடியதாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்.

  கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

           காமம் செப்பாது கண்டது மொழிமோ

           பயிலியதுகெழீஇயநட்பின்மயிலியற்

                செறி எயிற்று அரிவை கூந்தலின்

              நறியவும்உளவோ நீ அறியும் பூவே.

  கொங்கு என்றால் தேன். “தேனைக் குடித்து வாழும் அழகிய சிறகை உடைய தும்பியே” ன்னு கொஞ்சம் ஐஸ் வச்சுக் கூப்பிட்டுட்டு “நான் கேட்கறேன்னு என் ஊர் வண்டான நீ சும்மால்லாம் சொல்ல வேண்டாம்” அப்படின்னு நூல் விட்டுட்டு, மனைவிக்கு சாமரம் வீசுகிறார். “மயில் போல பொண்ணு, வரிசையான பல்லு, ஏழேழ் பிறவிக்கும் என் கூடவே இருக்கப் போற கண்ணு..”. இப்படியெல்லாம் சொல்லிட்டு “இவ முடி மாதிரி வாசனை உள்ள பூவை நீ பார்த்திருக்கியா” ன்னுகேட்டா, அந்த வண்டு என்ன சொல்ல முடியும்?

  யிரம் வருடங்கள் கழித்து இதே கேள்வியை நம்மாழ்வாரும் கேட்கிறார்.

  வண்டுகளோவம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
  உண்டு களித் துழல்வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
   மண்டுகளாடி வைகுந்த மன்னாள்குழல்வாய் விரை போல்
  விண்டுகள்வாரும்மலருளவோ நும் வியலிடத்தே

  நம்மாழ்வார் (3634)

  ஆனால் பதிலில் சடகோபருக்கு சந்தேகம் கிடையாது.

  அவருக்கு வண்டால் ஆக வேண்டிய காரியம் ஒன்றும் இல்லை. அதனால் எடுத்த உடனேயே “வண்டுகளோ..”

  “வண்டுகளே வாருங்கள். உங்களுக்கு, நல்ல வார்த்தை ஓன்று சொல்கிறேன். நீரில், நிலத்தில், கொடியில் உள்ள பூக்கள் எல்லாவற்றிலும், தேனைக் குடித்து, அதுவே வேலையாக, வீணாகச் சுற்றி வருகிறீர்கள். வராக அவதாரம் எடுத்து, பூமியை மீட்ட எம் பெருமாள் உறையும் வைகுந்தத்தைப் போல் மணக்கும் இந்த பெண்ணின் கூந்தலைப் போல, மலரையும் நீங்கள் கண்டதுண்டோ?”

  இதற்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்கியானம் “அவன் வந்து ரஷித்துபோம் இவ்விபூதி போல் அன்றியிலே - அவன் சதா சன்னதி பண்ணுகிற அவ்விபூதியோடு ஒத்து - உள்ளவள்   இவள் – தன் சன்னதியிலே வேறு ஒன்றின் உடைய போக்யதை நெஞ்சில் படாதபடி இருக்கும் இவளுடைய குழலில் பரிமளம் போல்” என்று சொல்லுகிறார்

  “பெருமாளை மட்டுமே நெஞ்சில் வைத்து வணங்கும் இந்தப் பெண்ணின் கூந்தல், அவன் உறையும் வைகுந்தம் போல் மணக்கும்” என்று நான் புரிந்து கொண்டதில் தவறிருந்தால் மன்னிக்கவும்.

  “இத்தால்பர வியூகவிபவாதிகள் எங்கும் புக்குபகவத் குணங்களை அனுபவித்து திரிகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அக்குணங்களில் அவஹாகித்து இருக்கிற இவர்படி, நீங்கள் அனுபவிக்கிற அவ்விஷயத்தில் தானுண்டோ” என்று மேலும் சொல்லி பெருமாளை மட்டுமே நினைத்து வாழும் வாழ்க்கைதான் மணக்கும் என்று அருளிச் செய்கிறார்.

  சங்ககாலத்தில், காதல் பாடலாக இருந்த அதே வண்டு, பூ, கூந்தல், நறுமணம், பக்தி இலக்கிய காலத்தில் எப்படிக் கையாளாப்பட்டு இருக்கிறது என்பதில்தான் தமிழின் செம்மை வியக்க வைக்கிறது.

  தமிழ் இலக்கியம், வாழ்வையும், இறை வணக்கத்தையும் ஒன்றுக்கொன்று இணைத்து, பக்தி இயக்கம் பெருக உதவியது. காதல் ரசம் சொட்டும் இந்தப் பாசுரங்களுக்குள் விசிட்டாத்வைதம் ஒளிந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பல ஆச்சார்யார்கள் அருமையான விளக்கங்களை அருளிச் செய்து இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

  தமிழ் நாகரிகத்தின் இந்த சங்கிலிக்கண்ணிகளை, பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் புரியும் மென்மையான உணர்வுகளைப் பாடும் வரிகளை  மேலும்   தேடுவோம். ஒரே ராகத்தில் அமைந்த பாடல்களைத் தேடுவது போல் இதுவும் சுகமானதே.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai