3. காலைச் சுற்றி அழும் குழந்தை

என் மகள் பிறந்த உடன்,அவளுக்குத்தடுப்பூசி போட ஒரு குழந்தை நலமருத்துவரிடம், மாதம் இரு முறை அழைத்துச் செல்வோம்.
3. காலைச் சுற்றி அழும் குழந்தை

ன் மகள் பிறந்த உடன், அவளுக்குத் தடுப்பூசி போட ஒரு குழந்தை நலமருத்துவரிடம், மாதம் இரு முறை அழைத்துச் செல்வோம்.

முழங்கை அகலமே இருப்பாள் என் மகள், பெங்களூர் குளிருக்கு இதமாய், அவளை, அம்மா ஒரு பூப்பொட்டலம் போல் துணிகளால், பொதிந்து வைத்திருப்பாள்.

நீண்ட தாடியுடன், கிட்டத்தட்ட கிறிஸ்மஸ் தாத்தா மாதிரி உருவம் உள்ள அந்த டாக்டர், இரக்கமே இல்லாமல் அவள் துணிகளைக் கழட்டி, அவளை எடை பார்க்கும் இயந்திரத்தில் படுக்க வைப்பார். உடனேயே வீல் என்று அழத் தொடங்கும் குழந்தை. அதை, எதை எதையோ காட்டி, சிரிக்க வைத்து, அவள் கொஞ்சம் சமாதானப்பட்டு சிரிக்க முயலும்போது, ஊசியை எடுத்துக் குத்தி விட்டு விடுவார். மீண்டும் வீல் என்று வீடு வரை அழும் அந்தப் பச்சைக் குழந்தை.

என் மாமனாருக்கு, அவர் பேத்தி அழுவது பொறுக்காது. 'என்ன டாக்டர்.. ! அழாம ஊசிப் போடத் தெரியாது? கிராதகன்'

மூன்று தடவை இப்படிச் சென்ற பின், என் மகளுக்கு அந்த இடமும், தாடி மனிதரும், கொஞ்சம் ஆபத்தானவர்கள் என்று தெரிந்து விட்டது. அந்த மருத்துவமனைக்குள் நுழைந்ததுமே அழ ஆரம்பித்து விடுவாள். அவளைத் தூக்கி வைத்து இருக்கும் தன் அம்மாவின் உடையை, அந்தச் சிறுசு, தன் பிஞ்சுக் கரங்களால் முடிந்தவரை பிடித்துக் கொள்ளும். இருந்தாலும், அம்மா அவள் கைகளை அகற்றி, அந்தக்  'கிராதகனிடம்' கொடுக்கத்தான் வேண்டி இருந்தது. 

அவள் வளர்ந்து, இரண்டு, மூன்று வயது வந்ததும் எல்லாக் குழந்தைகளைப் போல, அடம் பிடித்து அழுவாள். 'அழுதா ஒன்னும் கிடைக்காது. என்ன வேணும்னு காமி. நோன்னாநோதான்.' என் மனைவியின் கண்டிப்பையும் மீறி அழும். இருந்தாலும்  அவள் காலைத்தான் கட்டிக் கொள்ளும்.

ரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சங்க இலக்கியத்தில் இந்தக் காட்சி வருகிறது. கணவன் பிரிந்து சென்று விட்டான். காதலியின் நிலை பொறுக்காமல், அவள் தோழி, கணவனிடம் செல்லுகிறாள்.

குறுந்தொகை 397, அம்மூவனார்நெய்தற் திணைதோழி தலைவனிடம் சொன்னது

  நனைமுதிர் ஞாழல் சினை மருள் திரள் வீ

    நெய்தல் மா மலர்ப் பெய்தல் போல,

     ஊதை தூற்றும்உரவுநீர்ச்சேர்ப்ப!

தாய்உடன்றுஅலைக்கும்காலையும் வாய்விட்டு

அன்னாஎன்னுங்குழவி போல

இன்னா செயினும், இனிது தலையளிப்பினும்,

  நின் வரைப்பினள் என் தோழி,

தன் உறு விழுமங்களைஞரோஇலளே.

நனை- மொட்டு; பெய்தல் – மழை போல உதிர்தல்; ஊதை – குளிர் ; உரவு நீர் –  பலமான அலைகள் ; உடன்று– கோபம்; விழுமம்– வலி; களைஞர் –நீக்குபவர்

'அவளுக்கு, உன்னை விட்டா வேற யார் இருக்கா? நீ நல்லது செய்தாலும், கெட்டது செய்தாலும் அவ உன் கூடத்தான் இருப்பேன் என்கிறாள்.  அம்மா, கோபத்திலே திட்டினா, குழந்தை அழும். ‘அம்மா’ன்னு தான் அழும்.  ஆனா, அம்மாக் காலை விடுமா? அது மாதிரிதான் அவளும். கஷ்டமோ, நஷ்டமோ, அவளை  நீதான் நல்லாப் பாத்துக்கணும்.' 

முதிர்ந்த புலி நகக்கொன்றையின் (ஞாழல்) மொட்டுக்கள், ஆம்பல் மலரில் விழுந்து நிரப்புவதும், வீசும் குளிர் காற்றும், பலமான அலைகளும்குறியீடுகள்.

கொன்றை பூத்து இருப்பது, காதலர், காதலி இணையும் காலம் வரப் போகிறது என்பதற்கும்; கடுமையான குளிர்க் காற்றில் அந்த மொட்டுக்கள் பிரிந்து மலராமல்வீழ்வது, பிரிவால் வாடும் மனைவிக்கும்; பலமான அலைகள், வம்பு பேசும் ஊருக்கும்.

குலசேகர ஆழ்வார், ‘வித்துவக் கோட்டு அம்மானே” என்று பெருமாளை அழைத்து, மனதை  உருக்க வைக்கும் பாசுரங்களைப் பாடி இருக்கிறார். அதில் பிரபலமான பாசுரம் இது.

      வாளால்அறுத்துச்சுடினும்மருத்துவன்பால்

  மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர் தரினும்வித்துவக்கோட்டு அம்மா நீ

   ஆளா உனது அருளேபார்ப்பன்அடியேனே

கத்தியால் அறுத்து வைத்தியம் பார்க்கும் டாக்டரிடம், நமக்கு கோபம் வரலாமா? அவர் நன்றாக வைத்தியம் செய்தால் தானே நாம் குணம் அடைய முடியும். அது போல, 'நீ எனக்குத் தரும் துன்பங்களும், அருள் வைத்தியமே! உன் காலடியில் தான் நான் திரும்பித், திரும்பி வருவேன்' என்று பெருமாளிடம் சொல்கிறார் குலசேகரர்.

'அம்மா குழந்தையிடம் கோபப்படுகிறாள். குழந்தை அழுகிறது. அழற குழந்தையை, அம்மா தள்ளி விட மாட்டாள். அப்படி தள்ளி விட்டால் கூட, அவளைப்பாத்தே அழும் அந்தக் குழந்தை. அப்படித்தானே நானும் இருக்கேன்', என்று சொல்லும் இந்த உருக்கமான வரிகள் ஒரு அற்புதம்.

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை;

                     விரை குழுவும்மலர்ப்பொழில்சூழ்  வித்துவக்கோட்டுஅம்மானே;

அரி சினத்தால் ஈன்ற தாய்  அகற்றிடினும்  மற்று அவள்தன் 

               அருள் நினைந்தே அழும் குழவி; அதுவே

                                        போன்றுஇருந்தேனே

சங்க இலக்கியத்தின் தடங்கள் தெரியும் இந்தப் பாசுரத்தில் 'தரு துயரம் தடாயேல்' என்ற வரிகளுக்கு நீண்ட வியாக்கியானங்கள்அருளிச் செய்யப்பட்டு இருக்கின்றன. 'நீயே எனக்குக் குடுத்த இந்தத் துன்பங்களை, நீதான் நீக்கணும். உன்னை விட்டா எனக்கு கதியே இல்லை' என்பதில் வைணவத்தின் அர்த்தங்கள் பல ஒளிந்து கொண்டு இருக்கின்றன.

'தரு துயரத்துக்கு தாய்: குழந்தை; சூரியன்: தாமரை; அரசன்:மக்கள்: கப்பல்: பறவை; கடல்:நதி; கணவன்:மனைவி”, என்று பல விஷயங்களைச் சொல்லி, 'நாமெல்லாம் பெருமாளின் சொத்து, உரிமையாளரைத் தேடி, சொத்து போகாது. அவர்தான் வரணும். அவர் வந்து கவனிக்கலேன்னு, சொத்து வேற யாரையும் தேடிக் கொண்டும் போய் விடாது. அவன் நம்மை எப்படி வைத்து இருந்தாலும், அது அவன் கருணையே' என்னும் சேஷ-சேஷி சம்பந்தம் விளக்கும் அற்புத பாசுரங்கள்.

சிறு வயதில், அழ அழத் தடுப்பூசி போட்டு விட்ட அம்மாவிடம், குழந்தை வளர்ந்த பின் நன்றியுடன்தானே இருக்கும்?

சங்க காலத்தில் காதல் பாடலாக இருந்த அம்மாவும், குழந்தையும்,பக்தி இலக்கிய காலத்தில் எப்படி கையாளாப்பட்டு இருக்கிறது என்பதில்தான் தமிழின் செம்மை வியக்க வைக்கிறது.

தமிழ் நாகரிகத்தின் இந்த சங்கிலிக்கண்ணிகளை, பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் புரியும் மென்மையான உணர்வுகளைப் பாடும் வரிகளை,  மேலும்  தேடுவோம். ஒரே ராகத்தில் அமைந்த பாடல்களை தேடுவது போல் இதுவும் சுகமானதே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com