4. பொய் பேசும் கொன்றை

இந்தப் பாசுரத்தைக் காதல் பாடலாக ரசிக்கலாம். ஆனால், இதன் ஆழம் புரிய வேண்டுமானால், பெரியவாச்சான்பிள்ளையிடம்மண்டியிட வேண்டும்.
4. பொய் பேசும் கொன்றை

ரு முறை, தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னால், சிங்கப்பூருக்கு, வேலை விஷயமாகச் சென்றிருந்தேன். தீபாவளி அன்று அதிகாலை, ஊருக்கு  வந்து  சேரும்படிதான்டிக்கட் கிடைத்தது.

“என்னட்டி செய்ய முடியும்? இன்னி வரைக்கும் கடைல வேலை. மேனேஜர் ஆயிட்டேன்லா. மத்தவக  மாதிரி, மூணு நாளைக்கு முன்னாடி வர முடியல தாயி” என்று பக்கத்தில் உள்ளவர் போனில் பேசிக்கொண்டிருந்தார்.

“என்ன சார். நீங்களும் என் கேசா..?” என்று பேச்சுக் கொடுத்தேன்.

வறட்டுச் சிரிப்பு.

“நான் வந்துதான், காத்து இருக்குதுக. டிரஸ் எல்லாருக்கும் வாங்கிட்டேன். ஆனாலும், தீபாவளிக்குமுந்தின நாள் பட்டாசு வாங்கி, அதை பிள்ளைங்க ஆசையோட பிரிச்சுக்கறத, பாக்க முடியாது இந்தத் தடவை..”

“வீட்டம்மா என்ன சொல்றாங்க?”

“சுத்தி எல்லா வூட்டுலயும்  பட்டாசு போடுதாக. புஸ்வாணம்பளிச்சுனேஇல்ல. நீங்க வந்தாதான்எனக்குத்தீபாவளிங்கா” காதல் மனைவியின் கொஞ்சல், அவர் முகத்தில் முத்தங்களாய்ச் சிவந்து  இருந்தன.

ர் விட்டுப் பொருள் தேட வந்து விட்டு, பண்டிகைகளுக்கு ஊருக்குத் திரும்பி வரும் கணவர்களுக்குக் காத்திருக்கும் பெண்கள் இன்றும் இருக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத் தமிழ்நாட்டிலும் இருந்திருக்கிறார்கள்.

இப்போது பொங்கல், தீபாவளி. அப்போது மழைக் காலம். வெளி ஊர்களுக்குச் சென்ற கணவர்கள், மழை பெரிதாய்த்  தொடங்கும் முன் வந்து விடுவார்கள்.

இந்தப்பாடலில் வரும் பெண்ணும், காத்து இருக்கிறாள். இன்னும் அவர் வரவில்லை. மழைக் காலம் வந்து விட்டது என்பதற்கு அடையாளமாக, கொன்றைப் பூக்கள் மலரத் தொடங்கி விட்டன.

குறுந்தொகை – 21 ஓதலாந்தையார்.

வண்டுபடத்ததைந்த கொடி இணர்இடையிடுபு

பொன் செய்புனை இழை கட்டிய மகளிர்

கதுப்பின்தோன்றும் புதுப்பூங்கொன்றைக்

கானம் கார் எனக்கூறினும்,

யானோதேறேன், அவர் பொய் வழங்கலரே

ததைந்த – அடர்ந்து மலர்ந்த; கொடி இணர் – பூங்கொத்து; இடை-தழை; இழை-நகை; கதுப்பு-கூந்தல்;கார்-மழைக்காலம்; தேறேன்-நம்ப மாட்டேன்.

“பெண்கள் போல் மரங்கள். அவர்களின் கூந்தல், மரங்களின் கிளைகள். அவர்கள் கூந்தலில் அணியும் பொன் நகைகள் கொன்றைப் பூக்கள். அதில் வண்டுகள் வந்து மொய்க்கின்றன. அப்படி பூத்துக் குலுங்கும் மரங்கள் உள்ள காடு இது.  இது மழைக் காலம் என்று, இந்தக் காடு  சொன்னாலும், நான் நம்ப மாட்டேன். அவர் வந்தால் தான் அது மழைக்காலம்” என்று தேற்றிக்கொள்கிறாள்.

“பொன் போன்ற கொன்றைகள் கிளைகளில் பூத்தால், மரம் பெண்ணாகிவிடுமா? அது போல் இதுவும் கார் காலம் ஆகாது” என்று மனதுக்குள்  வாதம் செய்கிறாள்.

ங்க காலம் கடந்து, ஐநூறு ஆண்டுகள் கழித்து, இன்னொரு பெண்ணும், தாமிரபரணிநதிக்கரையில், ஆழ்வார்த்திருநகரில்,  இதே மாதிரி நாயகியாய்க் காத்திருக்கிறாள்.

பெருமாள் என்னும் தலைவன், நாட்கள் கடந்தும், வந்து ஆட்கொள்ள  வரவில்லையே என்று அந்த நாயகி புலம்பும்,  நம்மாழ்வாரின்திருவிருத்தம் ஒரு அற்புதமான காதல் காவியம்.

மலர்ந்தேயொழிலிந்திலமாலையும்மாலைப்பொன்வாசிகையும்

புலந்தோய்தழைப்பந்தர்தண்டுறநாற்றி, பொருகடல்சூழ்

நிலந்தாவியவெம்பெருமான் தனது வைகுந்தமன்னாய்

கலந்தார்வரவெதிர் கொண்டு வன்கொன்றைகள்கார்த்தனவே

2545-நம்மாழ்வார்; திருவிருத்தம்.

வாசிகை –சுருள் மாலை வட்டம்; பந்தர் – பந்தல்; நாற்றி – தொங்க விட்டு; தழை – கிளை; புலந்தோய் – (கண்ணுக்கும், மூக்குக்கும் ) புலம் விரும்பும்

இந்தப் பாசுரத்தைக் காதல் பாடலாக ரசிக்கலாம். ஆனால், இதன் ஆழம் புரிய வேண்டுமானால், பெரியவாச்சான்பிள்ளையிடம்மண்டியிட வேண்டும்.

ஆழ்வார், பெருமாளுக்காக காத்திருக்கும் பெண். பெருமாள் வருவேன் என்று சொல்லி விட்டு வராததால், தவித்துக் கொண்டு இருக்கிறாள் இந்த நாயகி. அவரை நல்லது சொல்லித்தேற்றும்பெரியோர்கள், நாயகியின் தோழிகள்.

“வைகுண்டம் போன்றவள் நீ” என்று சொல்லும் போதே, “அவர் எங்க போய் இருந்தா என்ன? கடல் சூழ்ந்த உலகத்தை அளந்தா என்ன? கடைசில, வைகுண்டத்துக்குத் தானே வரணும் அனந்தசயனத்துக்கு?” என்று சொல்லி விடுகிறாள் தோழி.

பிரிந்து போனவரைப் “பிரிந்தார்” என்று சொல்லவில்லை.  “கலந்தார்..” என்று சொல்லும் போது, அவர் உன்னுடையவர் என்று உறுதி கூறுகிறாள்.

“கொன்றைப் பூ மலர்ந்தா விட்டது? மலர்ந்தா இப்படியா இருக்கும்? மாலை, மாலையா, வட்ட வட்டமா, பந்தல் போட்ட மாதிரி, கண்ணுக்கு குளிர்ச்சியா கீழ வரைக்கும் பூத்துக்குலுங்காது?” என்று தேற்றுகிறாள்.

“கொன்றைக்கு மட்டும் அவரைப் பாக்கணும்னு ஆசை இருக்காதா? அதான் கொஞ்சம் அவசரப்பட்டு மொட்டு விட்டு விட்டது, அவசரக்குடுக்கை–‘வன் கொன்றை’ ” என்று திட்டுகிறாள்.

“நீங்க வந்தாதான் தீபாவளி” என்ற மனைவியும், “மழைக் காலம் வந்தா, நீங்க இங்க இருப்பீங்க” என்ற காதலியும்; “இந்தப் பூக்களுக்குஅறிவே இல்லை. அவசரக்குடுக்கை” என்னும் நாயகியும் தமிழ் நாகரிகத்தை இணைக்கும் சங்கிலிக்கண்ணிகள்.

ங்க இலக்கியத்தின் தாக்கத்தை காப்பியங்களிலும், பக்தி இலக்கியத்திலும், கம்பனிலும், பாரதியிலும் பார்க்க முடியும். அந்த தடங்களின் வழியே நடை போடுவது ஒரு சந்தோஷமான அனுபவம். தமிழ் நாகரிகத்தின் இந்த சங்கிலிக்கண்ணிகளை, பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் புரியும் மென்மையான உணர்வுகளைப் பாடும் வரிகளை,  மேலும்   தேடுவோம். ஒரே ராகத்தில் அமைந்த பாடல்களைத்தேடுவது போல் இதுவும் சுகமானதே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com