Enable Javscript for better performance
35. வினைகளை அறு, தத்துவங்கள் ஏழு- Dinamani

சுடச்சுட

  

   

  கர்மத்தின், அதாவது தான் செய்த வினைகளின் பயன்களை எந்தவொரு ஜீவனும் அனுபவித்துக் கழித்தால் மட்டுமே முக்தி சாத்தியம் என்று தீர்மானமாகச் சொல்கிறது ஜைனம். இந்தக் கர்ம வினைகளின் பயன்களை அனுபவித்துக் கழிப்பதுடன், மேலும் கர்ம வினைகள் சேராமல் பார்த்துக்கொள்வதன் மூலமே எந்தவொரு ஜீவனும் முக்திக்குத் தயாராகிறது.

  ஓர் ஆன்மாவை எட்டுவித கர்ம வினைகள் பற்றுவதாக சமணம் வரையறுக்கிறது. அவை, ஞானாவரணீயம், தரிசனாவரணீயம், வேதனீயம், மோஹனீயம், ஆயுள், நாமம், கோத்திரம், அந்தராயம் என்பனவாம்.

  eight_karma.jpg 

  1. ஞானாவரணீய கர்மம் – மேகங்களால் சூரியன் மறைவுறுவதைப்போல, எது ஆன்மாவின் ஞானத்தை திரையிட்டு மறைக்கிறதோ அத்தகைய வினை.

  2. தரிசனாவரணீய கர்மம் – எஜமானனைப் பார்க்கவிடாமல் வாயிற்காப்போன் தடுத்து நிறுத்துவதைப்போல, ஆன்மாவின் தெளிவான காட்சித் திறனை மறைக்கும் வினை.

  3. வேதனீய கர்மம் – ஆன்மாவை ஸாதா எனப்படும் இன்பத்தையும் அஸாதா எனப்படும் துன்பத்தையும் உணரும்படி செய்கின்ற கர்மம். வெல்லப் பானையில் வைத்திருந்த கத்தியை நாவில் இடுகையில் அது தித்திப்பாக இருக்கின்றபோதிலும், ஒருபுறத்தில் நாவை அறுப்பதை ஒத்தது இந்த க்கர்மம்.

  4. மோஹனீய கர்மம் – மது அருந்தியவன் தான் செய்வதை அறியாமல் மயங்கிக் கிடப்பதைப்போல, ஆன்மாவின் சிரத்தை, நன்னடத்தை ஆகிய நற்பண்புகளை உணரவிடாமல் மயக்குகின்ற வினை.

  5. ஆயுள் கர்மம் – தண்டனை பெற்ற குற்றவாளி குறிப்பிட்ட காலம் வரை சிறையில் இருப்பதைப்போல, ஆன்மா எதனால் குறிப்பிட்ட காலத்துக்கு ஓர் உடலில் இருக்க நேரிடுகிறதோ அத்தகைய வினை.

  6. நாம கர்மம் – ஓவியர் தீட்டும் பல வண்ணச் சித்திரங்களைப்போல, ஆன்மா ஓர் உருப்பெற்று நல்லதும் தீயதுமான உடலை எதனால் தாங்குகிறதோ அத்தகைய வினை.

  7. கோத்திர கர்மம் – குயவர் பெரிதும், சிறிதுமாக பல்வேறு பாண்டங்களைச் செய்வதைப்போல, ஆன்மாவுக்கு எதனால் உயர்ந்ததும், தாழ்ந்ததுமான நிலைமை கிட்டுகிறதோ அத்தகு வினை.

  8. அந்தராய கர்மம் – அரசனின் அல்லது ஆட்சியாளரின் உத்தரவு கிடைத்தும்கூட, குறிப்பிட்ட அதிகாரி அனுமதிக்காத வரையில், நாம் வேண்டுகின்ற செயல் நடக்காமல் இருப்பதைப்போல, உரிய தகுதிகள் இருந்தும் எதனால் ஆன்ம ஞானம் கிடைப்பதில் தடை ஏற்படுகிறதோ அத்தகு வினை.

  இவ்வாறாக, சேர்த்துவைத்த பாவ புண்ணிய வினைப் பயன்களை ஆன்மா அனுபவித்துத் தீர்த்தால்தான் முக்தி கிடைக்கும். இவ்விதம் ஓர் ஆன்மா, கர்மங்களால் சேர்ந்த வினைத்தொகுதியைக் கட்டறுத்து விடுதலை அடைய ஏழு தத்துவங்கள் குறித்த விழிப்புணர்வு அவசியம் என்று சமணம் கூறுகிறது. அவை –

  1. ஜீவன் – உயிர் உணர்வுள்ளவை. செடி, கொடி, மரம், விலங்குகள், மனிதர் உள்ளிட்ட அனைத்து வகை உயிரினங்களும் இதில் அடங்கும்.

  2. அஜீவன் – உயிர் உணர்வற்றவை. கல், கரி, மரக்கட்டை உள்ளிட்ட உயிரற்ற ஜடப் பொருள்கள்.

  3. ஆஸ்ரவம் – கட்டுவதற்குக் காரணம். ஆன்மாவை இன்ப-துன்ப நுகர்வில் செலுத்தி வினைப் பயன்களில் கட்டிவைப்பதற்குக் காரணமாக அமைவது. இவற்றுள் ஆன்மாவைப் பிணித்து, துன்புறுத்தி மாசுபடுத்துவது கஷாயம் எனப்படும். இந்தக் கஷாயம் நான்கு வகையாகும். அவை, குரோதம் (கோபம்), அபிமானம் (விடாப்பிடியான விருப்பம்), மாயை (மயக்கம்), லோபம் (பேராசை). இந்த நான்குமே, எந்தக் காலத்திலுமே மாறாத அனந்தானுபந்தி, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மாறக்கூடிய அப்பிரத்யாக்யானி, குறைந்த காலத்துக்குள் மாறக்கூடிய பிரத்யாக்யானி, உடனடியாக மாறக்கூடிய சம்ஜ்வலனம் என தலா நான்கு வகைப்படும். இவற்றை எவ்வாறு வெல்வது என்பதை தசவைகாலிகம் என்ற நூல் விளக்குகிறது.

  உவஸமனே ஹணே கோஹம் மாணம் மத்தவயாஜிவே
  மாயம்ச அஜ்ஜவ மாவுண லோஹம் ஸந்தோஸஹோஜிணே

  ‘கோபத்தை அமைதியாலும், அபிமானத்தை அடக்கத்தாலும், மாயையை கபடமின்மையாலும், பேராசையை மன நிறைவாலும் வெல்லு’ என்பதே இதன் பொருள்.

  4. பந்தம் – பிணைப்பு. ஆன்மாவுடன் கர்மம் பிணைக்கப்பட்டு இருத்தல். பாலும் நீரும் கலப்படையும்போது இரண்டற ஒன்றாகி விடுவதைப்போல.

  5. சம்வரம் – தடுத்தல். ஆஸ்ரவம் எனப்படும் கட்டுகளைத் தடுத்து கர்மவினைகளைத் தொற்றவிடாமல் செய்தல்.

  6. நிர்ஜரை – பிரிதல். கட்டுண்ட கர்மங்கள் ஆன்மாவிடமிருந்து பிரிதல். இது ஆவிபாகம், சவிபாகம் என இருவகைப்படுகிறது.

  7. மோக்ஷம் – விடுதலை. அனைத்துவகை கர்மங்களின் கட்டுகளில் இருந்தும் விடுபடுதல், பிறவிச் சுழலில் இருந்து விடுபடுதல். சம்யக் தரிசனம் (சரியான காட்சி), சம்யக் ஞானம் (சரியான அறிவு), சம்யக் சாரித்ரம் (சரியான நடத்தை) ஆகியவற்றால் கர்மங்களின் கட்டு தளர்ந்து, ஜீவனுக்கு முக்தி கிட்டுகிறது.

  (சிலர் பாவம், புண்ணியம் ஆகிய இரண்டையும் சேர்த்து 9 தத்துவங்கள் என்று கூறுவர். ஆனால், இவை இரண்டும் கர்மங்களின் கூறுகள் ஆதலால், தனியான தத்துவங்களாகக் கருதப்பட வேண்டாம் என்பது மறு சாராரின் கருத்து).

  இவ்வாறான முக்தி, மோக்ஷம் அல்லது நிர்வாணம் என்பது பரிபூரண அமைதியே அன்றி வேறல்ல. விருப்பு வெறுப்புகளைக் கடந்து சமநிலையான அமைதியில் திளைத்தலே முக்தி. இதற்கு தன்னைத்தானே வெல்ல வேண்டும் என்கிறது சமணம்.

  அப்பாணமேவ ஜுஜ்ஜாஹி கிம் தே ஜுஜ்ஜேண பஜ்ஜஓ
  அப்பாணமேவ அப்பாணம் ஜயித்தா ஸுஹமேஹ ஏ

  என்கிறது உத்தராத்யயனம். இதன் பொருள் – ‘உனது ஆன்மாவுடனேயே நீ போர் தொடு. புறத்தேயுள்ள பகைவரோடு ஏன் வீணே போரிடுகிறாய்? ஆன்மாவைக் கொண்டு ஆன்மாவை (தன்னைத் தானே) வெல்லுகையில் உனக்கு உண்மையான இன்பம் கிடைக்கும்’.

  sea.jpg 

  நீரில் மிதக்கும் சுரைக் குடுக்கையில், சிறிது சிறிதாக மண் படிந்து நிரம்பியதும் அது பளுவாகிவிடுவதால் மூழ்கத் தொடங்குகிறது. இதனைப்போல ஓர் உயிர், தீய கர்மங்களைப் புரிகையில் சிறிது சிறிதாக அவை ஆன்மாவின் மீது படிந்து அதை பளுவாக்கி, சம்சார சாகரத்தின் அதலபாதாளத்தில் அழுத்திவிடுகின்றன. அதே சுரைக் குடுக்கையில் படிந்துள்ள மண்ணை அகற்றிவிடும்போது, அது இலேசாகி நீருக்கு மேலே மிதக்கத் தொடங்குகிறது. அதேபோல, கர்மவினைகளைக் கட்டறுக்கும்போது உலகில் வாழ்ந்தாலும் அதன் விளைவுகள் ஆன்மாவைப் பற்றாமல் அது இலேசாகிவிடுகிறது. இவ்வாறாக, கர்மத்தின் கட்டிலிருந்து ஆன்மா முழுமையாக விடுபடுகையில், அது மேலே எழும்பி உலகின் உச்சிக்குப் போய் அங்கேயே நிலைபெற்றுவிடுகிறது என்கிறது சமணம். ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்’ என்று வள்ளுவர் குறிப்பிடுவது இதனைத்தான் போலும்.

  இவ்வாறாக, மண்ணுலகில் போற்றத்தக்க வகையில் வாழும் மகான்கள், பின்னர் தமது உடலை உயிர் பிரிந்த பிறகு, மீண்டும் பிறவாத உயர் நிலையை (முக்தி நிலையை) அடைகின்றனர். இவர்களை சித்தர்கள் என்று சமணம் அழைக்கிறது. தீர்த்தங்கரர்கள் போன்றவர்கள் இத்தகைய சித்தர்களே. எனினும், அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள மகான்கள், முக்தி நிலையை எட்டிவிட்டபோதிலும், மற்ற மக்களை வழிநடத்த வேண்டும் என்பதற்காகத் தங்களை விடுவித்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று சமணம் கூறுகிறது. அத்தகையவர்களை, முக்திக்கு அருகதை உடையவர்கள் என்ற பொருள் தரும் அருஹத் (அரிஹந்த்) என்று போற்றுகிறது. இதுதான் தமிழில் அருகர் என்ற சொல் ஆனது.

  எல்லாம் வல்ல ஆண்டவனை மறுக்கும் சமணம் (ஜைனம்) வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த, வாழும் மகான்களை தெய்வங்களாகப் போற்றுகிறது. அந்த வகையில், சமணர்கள் தினசரி கூறும் பஞ்ச நமக்காரம் (பஞ்ச நமஸ்காரம்) குறிப்பிடத்தகுந்தது. இந்தத் தினசரி வணக்கம் ஒவ்வொரு சமணரின் கடமையாகும்.

  நமோ அரிஹந்தாணம் நமோ சித்தாணம் நமோ ஆயிரியாணம்
  நமோ உவஜ்ஜாயாணம் நமோ லோயே ஸவ்வஸாஹூணம்

  அருஹதர்களுக்கு வணக்கம் (மற்ற மக்களுக்காகத் தங்களது முக்தியை ஒத்திவைத்ததால் அவர்களுக்கு முதல் வணக்கம்). சித்தர்களுக்கு (முக்தி அடைந்துவிட்ட தீர்த்தங்கரர்களுக்கு) வணக்கம். பெரிய குருமார்களான ஆசார்யர்களுக்கு (ஆயிரிய) வணக்கம். அடுத்த நிலையில் உள்ள சிறிய குருமார்களான உபாத்தியாயர்களுக்கு (உவஜ்ஜ) வணக்கம். இவர்கள் மட்டுமின்றி, உலகில் உள்ள இதர அனைத்து சாதுக்களுக்கும் (துறவிகளுக்கும்) வணக்கம் என்பதே இதன் பொருள்.

  தமிழகத்தில் சங்க காலத்திலேயே, அதாவது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமணம் பரவியுள்ளது. பதினென்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றாகிய நாலடியார், சமண முனிவர்களால் இயற்றப்பட்டிருப்பது இதற்குச் சான்றாகும். ஐம்பெரும் காப்பியங்களில் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம், திருத்தக்கத் தேவர் எழுதிய சீவக சிந்தாமணி ஆகியவற்றுடன் சிறு காப்பியமான நீலகேசியும் சமண இலக்கியங்களே.

  ஒருகாலத்தில் இந்தியா முழுவதும் பரவி, செழித்திருந்த சமண மதம், தற்போது ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டுமே பின்பற்றும் மதமாகச் சுருங்கிவிட்டது. இதற்கு அகக் காரணங்களும் உண்டு, புறக் காரணங்களும் உண்டு. அறநெறிகளைக் கடுமையாக வலியுறுத்தும் சமணம், அதன் காரணமாகவே பிற்காலத்தில் வெகுஜனங்களிடமிருந்து அந்நியப்பட்டுவிட்டது. ஒருகாலத்தில், அரசர்களின் அரவணைப்பால் வளர்ந்த சமணம், பிற்காலத்தில் அதே அரசர்களால் கடும் நிர்பந்தத்துக்கும் ஆளானது. கடல் தாண்டிப் போவதை சமணம் தடை செய்துள்ளதால், அக்காலத்தில் பௌத்தத்தைப்போல பிற நாடுகளில் பரவாமல் இந்தியாவில் மட்டுமே சமணம் பரவ முடிந்தது.

  அன்பையும், அஹிம்சையையும் வலியுறுத்தி அனேகாந்தவாதம் பேசும் சமணம், ஒரு காலத்தில் பௌத்தர்கள், ஆஜிவகர்களோடும் பின்னர் வைதீகம் சார்ந்த இதர சமயத்தினருடனும் ஆவேசமான சொற்போர்களிலும், சில சந்தர்ப்பங்களில் வதை படலங்களிலும் ஈடுபட்டது ஆச்சர்யமளிக்கிறது. வாதப் போர்களில் தோற்றவர்கள் கழுவேறும் நிபந்தனை, திருஞான சம்பந்தர் காலத்தில் சமணர்களுக்கே பாதகமாக அமைந்தது.

  அதேநேரத்தில் பாரதீய சிந்தனை மரபுக்கும், வாழ்வியல் நடைமுறைக்கும் சமணத்தின் பங்களிப்பு அளப்பரியது. அஹிம்சை, தீவிர புலால் மறுப்பு, கர்மவினைக் கோட்பாடு, முக்தி நாட்டம் ஆகியவை சமணத்தின் கொடைகள். சமணத்தின் செல்வாக்கால் ஏற்பட்ட தாக்கம் காரணமாகவே, சடங்கு சம்பிரதாயங்களை ஒதுக்கிவிட்டு அல்லது குறைத்துக்கொண்டு, ஆன்மிகப் பாதையில் மாற்றுக் கருத்துகளைச் சொல்ல வேண்டிய நிர்பந்தம் வைதீக ஹிந்துக்களுக்கு ஏற்பட்டது எனலாம். தொடக்கத்தில் முக்தி மார்க்கமும், பிற்காலத்தில் பக்தி மார்க்கமும் பெருக, சமணமும் ஒரு தூண்டுகோல். மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரியது என்பதைப்போல, சமண மதம் தற்போது அளவில் சுருங்கிவிட்டபோதிலும், ஆன்மிகப் பாதையில் அதன் வீர்யம் மிக உயர்ந்தது.

  சமணத்தைப் போலவே, வைதீகம் சாராத பாரதீய தத்துவ மரபுகளில் பௌத்தம் மிக முக்கியமானது. அதுகுறித்து அடுத்த வாரம் காண்போம்...

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai