Enable Javscript for better performance
36. அறமே உருவெடுத்த ஆசான்- Dinamani

சுடச்சுட

  

   

  சமணத்தைப் போலவே பௌத்தமும் அன்பு நெறியாகிய அஹிம்சையை வலியுறுத்துகின்றபோதிலும், அதன் அடிப்படை அஸ்திவாரமாகத் திகழ்வது அறநெறியே. இந்த அறத்தை தம்மம் (தர்மம்) என்றழைக்கிறது பௌத்தம். வாழ்க்கை என்றால் அது நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்; நெறிமுறைகளில் இருந்து பிறழ்ந்தால் அது வாழ்வே அல்ல என்று கருதுகிறது பௌத்தம். இந்த மதத்தை, தத்துவ வழிமுறையைத் தோற்றுவித்த கௌதம புத்தரை, அறமே மனித உருவெடுத்து வந்த மகான் என்று அழைப்பதில் தவறேதும் இல்லை.

  தர்மம் சர (அறத்தைப் பின்பற்று) என்ற உபநிஷத வாக்கியத்துக்கு உயிரூட்டியவர் சித்தார்த்தர் என்ற இயற்பெயர் கொண்ட புத்தர். தாம் ஞானோதயம் பெற்றது முதல், பாரதம் மட்டுமின்றி பார் முழுவதும் தர்மச் சக்கரத்தை (அற ஆழியை) சுழலவிடுவதே தமது லட்சியம் என்று வாழ்ந்தவர். இன்று நமது தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ள அசோகச் சக்கரம் எனப்படுகின்ற தர்மச் சக்கரம் பௌத்த சின்னமே.

  ஹிந்து மதத்தை, குறிப்பாக வைதீக மார்க்கத்தை எதிர்த்தல்லவா புத்தர் புதிய பாதை கண்டறிந்தார். அப்படியிருக்க, அவர் உபநிஷதம் படித்தரா, பின்பற்றினாரா என்று இக்காலத்தில் சிலர் கேட்கக் கூடும். சித்தார்த்தருக்கு சிறு வயதில் விசுவாமித்திரர் என்ற ஆசிரியர் வேதமும், உபநிஷதமும் போதித்ததாக அவரது வாழ்க்கை வரலாறு தெரிவிக்கிறது. அத்துடன், சித்தார்த்தர் ஞான மார்க்கத்தில் நுழைந்து புத்தராகப் பரிணாமம் அடையத் தொடங்கியபோது, ஆண்டவனை மறுத்து ஆன்மிகம் பேசுகின்ற வைதீக தரிசனமான சாங்கியத்தின்பால் அதிகம் ஈர்க்கப்பட்டிருந்தார் என்றும் அவரது வரலாறு தெரிவிக்கிறது. புத்தர், நமது பாரதத்தின் பண்டைய பாரம்பரியத்தை அழித்துப்போட வரவில்லை. மாறாக, காலப்போக்கில் கலந்துவிட்ட தவறுகளைத் திருத்தி செழுமைப்படுத்தவே வந்தார்.

  ‘வேள்விச் சடங்குகள் அல்ல, ஆத்ம விசாரமே வாழ்வின் லட்சியம்; அதுவே முக்திக்கு வழி’ என்று கூறும் சாங்கியத்தைப் பல விஷயங்களில் பௌத்தம் ஒத்திருக்கிறது. வேள்விச் சடங்குகளை சாங்கியம் மேலோட்டமாக மறுதலிக்க, பட்டவர்த்தனமாகவே எதிர்க்கிறது பௌத்தம். சாங்கியத்தைப் போலவே பௌத்தமும் ஆண்டவனைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ‘அறநெறிகளே வாழ்வின் லட்சியம், ஆண்டவன் வழிபாடல்ல’ என்று முழங்குகிறார் புத்தர். ஆன்மா குறித்த புத்தரின் பார்வையும் சாங்கியத்தைத் தோற்றுவித்த கபிலரின் பார்வையோடு ஒத்திருக்கிறது. ‘நான் எதுவுமாக இல்லை என்று அறிவதே ஞானத்தின் இறுதிநிலை; ஆன்மாவின் இருப்பு இல்லாதிருப்பதே’ என்று சாங்கியம் கூறுகிறது.

  அதைப்போலவே, பௌத்தமும் கர்மவினைகளின் பலனாய் மறுபிறவி எடுப்பது அத்தா (ஆத்மா) என்று கூறிவிட்டு, அதனைத் தனியாகப் பிரித்துப் பார்க்க இயலாததால் அனத்தாவாகவும் இருக்கிறது என்று கூறுகிறது. ‘துக்கத்துக்குக் காரணம் பற்றுகளே’ என்று சாங்கியம் கூறுவதைப்போல, ‘ஆசைகளே துன்பத்துக்குக் காரணம்’ என்று பௌத்தம் கூறுகிறது. ‘பொருளில் இருந்து ஆன்மாவைப் பிரித்தறியும் பகுத்தறிவு வேண்டும்’ என்று வலியுறுத்துகிறார் கபிலர். ‘எதையும் நீயே உனது பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து ஏற்றுக்கொள்’ என்கிறார் புத்தர்.

  பிரகிருதியின் வடிவமாகிய புத்தியின் (அறிவின்) துணைகொண்டுதான் ஆன்மா தன்னைப் பற்றிய உண்மையை அறிந்துகொள்ள முடிகிறது என்கிறது சாங்கியம். அந்தவகையில், புத்தியை சரியாகப் பயன்படுத்தி வாழ்வியல் உண்மைகளை ஆய்ந்தறிந்து உரைத்தவர்தான் புத்தர். ‘எனது போதனை வெறும் கொள்கை முழக்கம் அல்ல; நடைமுறையில் பின்பற்றக்கூடிய வழிமுறை’ என்று மொழிந்தார் புத்தர்.

  அங்குத்தர நிகாயம் என்ற பௌத்த நூலில் புத்தர் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பொன்மொழிகள் முக்கியமானவை – “பல தலைமுறைகளாக சொல்லப்பட்டு வருவது என்பதாலேயே ஒன்றை ஏற்றுக்கொள்ளாதீர்கள். உங்களது மத, அற நூல்களில் கூறப்பட்டிருக்கிறது என்பதற்காகவோ, ஏற்கெனவே உங்கள் மனத்தில் பட்ட அபிப்பிராயங்களோடு ஒத்துப்போகிறது என்பதற்காகவோ எதனையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். இவையெல்லாம் அறப்பண்புகள் வாய்ந்தவை, குற்றம் சொல்ல முடியாதவை, அறிஞர் பெருமக்களால் உண்மையிலேயே போற்றப்பட்டிருப்பவை, இந்த விஷயங்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடைப்பிடிக்கப்படும்பட்சத்தில் நன்மையும் இன்பமும் தரக்கூடியவை என்பதை நீங்களே ஆராய்ந்து தெரிந்துகொண்ட பிறகே, அவற்றைப் பின்பற்றி வாழுங்கள்” என்கிறார் புத்தர்.

  தான் கூறிய போதனைகளைக்கூட ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளுங்கள் என்று தைரியமாகவும் நேர்மையாகவும் உரைத்தவர் புத்தர். உண்மையில், புத்தரின் பாதை நடுநிலையானது. அது நாத்திகர்களைப்போல கட்டுக்கடங்காத உலக சுகபோகங்களை அனுபவி என்று கூறவில்லை. அதேவேளையில் கடுமையான விரதம், தவத்தை வலியுறுத்தி உடலையும் உள்ளத்தையும் வருத்திக்கொள்ளவும் சொல்லவில்லை. ஒரேயடியாக சுகபோகங்களை அனுபவித்து பின் நாடி நரம்புகள் தளர்ந்துபோய் மனத்தையும் மாசுபடுத்திக்கொள்வது வாழ்க்கைக்கு உகந்ததல்ல. அதேபோல, ஒரேயடியாக உடலை வருத்துவதால் உடலும் துவண்டு, உள்ளமும் நலிந்துபோவதாலும் பலனில்லை. இவற்றுக்கு மாறாக, நன்னடத்தை, மனக்கட்டுப்பாடு, தியானம் ஆகிய மத்திமப் பாதையே புத்தரின் வழிமுறை. இரண்டு உச்சகட்டங்களுக்கும் சென்றுவிடாமல் நடுநிலையில் இருப்பதே ஞானம், அதுவே வாழ்க்கை முறை என்பதே பௌத்தம்.

  புத்தர் தமது போதனைகள் எதனையும் தமது கைப்பட எழுதவில்லை. அவரது உபதேசங்களை அவரது சீடர்கள் கேட்டு மனப்பாடம் செய்துகொண்டு பிறகு எழுதினார்கள். அவை பாலி மொழியில் (இன்றைய வங்காள மொழியின் மூலமொழி) எழுதப்பட்டன. இவ்வாறு எழுதப்பட்ட ஏடுகள் தொடக்கக் காலத்தில் பெட்டிகளில் (பெட்டகங்களில்) வைத்துப் பாதுகாக்கப்பட்டன. பெட்டி என்பதற்கு பாலி மொழியில் பிடகம் என்று பெயர். ஆகையால், இந்த நூல்களும் பிடகங்கள் என்றே பெயர் பெற்றன. சனாதன தர்மத்துக்கு வேதங்கள் எப்படியோ, அதுபோல பௌத்த தர்மத்துக்கு பிடகங்கள் முக்கியமானவை. இந்தப் பிடகங்கள் வினய பிடகம், சுத்த பிடகம், அபிதம்ம பிடகம் என்று மூன்று வகைப்படும். ஆகையால், இதற்கு திரிபிடிகம் என்றும் பெயர் உண்டு.

  வினய பிடகம்

  பௌத்த தர்மத்தில் சேரும் பிக்குகள் எனப்படும் பிக்ஷுக்கள் (ஆண் துறவிகள்) பிக்குணிகள் எனப்படும் பிக்ஷுணிகள் (பெண் துறவிகள்) ஆகியோர் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், நியமங்கள் ஆகியவற்றை இந்நூல் விவரிக்கிறது.

  சுத்த பிடகம்

  திரிபிடகத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தது சுத்த பிடகமே. இதில்தான் பௌத்த மதத்தின் அனைத்து முக்கியத் தத்துவங்களும், கோட்பாடுகளும் விளக்கப்பட்டிருக்கின்றன. சுத்த பிடகம் 5 நிகாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை – 1. தீக நிகாயம், 2. மஜ்ஜிம நிகாயம், 3. சம்யுத்த நிகாயம், 4. அங்குத்தர நிகாயம், 5. குத்தக நிகாயம். இதில் கடைசியாக உள்ள குத்தக நிகாயத்தில் 15 அங்கங்கள் உள்ளன. அந்த அங்கங்களுள் தலைசிறந்தது தம்மபதம். தம்மபதம் என்றால் தர்மத்தின் பாதை என்று பொருள். வேத வழிப்பட்ட ஹிந்துக்களுக்கு எப்படி பகவத் கீதை முக்கியமானதோ அதனைப்போல பௌத்தர்களுக்கு தம்மபதம் மிகவும் முக்கியமானது.

  அபிதம்ம பிடகம்

  இதில் தர்மமும் (அறநெறிகளும்) அதுசார்ந்த கிரியா கர்மங்களும் (செயல்முறை சடங்குகளும்) விளக்கப்பட்டிருக்கின்றன. வேதத்துக்கு பிராம்மணங்கள் எப்படியோ, அதுபோல திரிபிடகத்துக்கு அபிதம்ம பிடகம் அமைந்துள்ளது.

  புத்தரின் போதனைகளில் மனக்கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது. இதுகுறித்து தம்மபதத்தின் யமகவக்கோ (1) என்ற பகுதியில் கூறப்பட்டுள்ளதாவது -

  மனோ புப்பங்கமா தம்மா மனோஸேட்டா மனோமயா
  மனஸா சே பதுட்டேன பாஸதி பா கரோதி பா
  ததோ நம் துக்க மன்வேதி சக்கம் ப பஹதோ பதம்
  .

  இதன் பொருள் – “மனமே அனைத்துச் செயல்களுக்கும் காரணம். செயல் எதுவும் மனத்தில்தான் தொடங்குகிறது. செயல்கள் எல்லாம் மனத்தில் ஊறிக்கிடப்பவை. ஒருவன் தீய மனத்தோடு பேசுகையிலும், செயல்புரிகையிலும் மாட்டு வண்டியின் சக்கரங்கள், மாட்டின் பின்னாலேயே சுழன்று செல்வதைப்போல துன்பங்களும் அவனை விடாது பின்தொடருகின்றன”.

  பௌத்த அளவுகோலின்படி வெறும் செயல்கள் மாத்திரம் அல்ல; மனத்தின் எண்ணங்களும் கர்ம வினைகளாக அமைந்துவிடுகின்றன. மனக்கட்டுப்பாடு இல்லாத மனிதனே தவறுகளைச் செய்து பாவங்களைப் பெருக்கிக்கொள்கிறான். பாவங்களால் மாசடைந்து மீண்டும் பிறவிச் சுழலை உருவாக்கிக்கொள்கிறான். இதனை மனிதன் தனக்குத்தானே உருவாக்கிக்கொள்கிறான் என்பதை தம்மபதத்தில் உள்ள அத்தவக்கோ (12-9) இவ்வாறு குறிப்பிடுகிறது.

  அத்தனா வ கதம் பாபம் அத்தனா ஸங்கிலிஸ்ஸதி
  அத்தனா அகதம் பாபம் அத்தனா வ விஸுஜ்ஜதி
  ஸுத்தி அஸுத்தி பச்சந்தம்
  நாஞ்ஞோ அஞ்ஞம் விஸோதயே

  “தான் செய்த பாவம் தன்னைக் கெடுக்கவே செய்கிறது. பாவம் செய்யாதபோது மனிதன் தூயவனாக இருக்கிறான். மனிதன் தூய்மையாக இருப்பதோ மாசுறுவதோ அவன் கையில் இருக்கிறது. எந்த மனிதனாலும் இன்னொருவனைத் தூயவனாக்க முடியாது” என்பது இதன் பொருள்.

  அத்தாஹி அத்தனோ நாதோ கோஹி நாதோ பரோ ஸீயா
  அத்தனா ஹி ஸுதந்தேன நாதம் லபதி துல்லபம்

  என்கிறது அத்தவக்கோவின் மற்றொரு செய்யுள் (12-4). இதன் பொருள் – “எந்தவொரு மனிதனும் தனக்குத்தானே எஜமானன் ஆகிறான். அவனுக்குப் பிறர் எப்படி எஜமானன் ஆக முடியும்? மனிதன் தன்னைத்தானே நன்கு அடக்கிக்கொண்டால், பெறற்கரிய எஜமானத்துவம் ஆன நிர்வாணம் (முக்தி நிலை) பெற இயலும்”.

  தன்னைப்போல்தான் பிறரும் என்பதை உணர்ந்து, யாருக்கும் தீங்கு இழைக்காமல் இரு என்கிறார் புத்தர். இதுகுறித்து தம்மபதத்தின் தண்டவக்கோ பகுதி கூறும் செய்யுளை (10-2) பார்ப்போம்.

  ஸப்பே தஸந்தி தண்டஸ்ஸ ஸப்பேஸம் ஜீவிதம் பியம்
  அத்தானம் உபமம் கத்வா ந ஹனயே ந காதயே

  இதன் பொருள் – “அனைவருமே தண்டனை என்றால் பயந்து நடுங்குகிறார்கள். எல்லோருக்கும் தனது உயிர் பிரியமானதாக இருக்கிறது. ஆகையால், தன்னைப்போல்தான் பிறரும் என்பதை உணர்ந்து, மனிதன் எவரையும் கொல்லவோ (துன்புறுத்தவோ) பிறரைக் கொண்டு கொல்லுமாறு (துன்புறுத்துமாறு) செய்யவோ வேண்டாம்”.

  பிற மனிதர்களுக்கு மட்டுமல்ல எந்தவொரு உயிர்களுக்குமே துன்பம் இழைக்காமல் இருப்பதே உயர்வானது என்கிறார் புத்தர். இதுகுறித்து தம்மபத்தின் தம்மட்டவக்கோ பகுதியில் உள்ள செய்யுள் (19-15) கூறுவதைப் பார்ப்போம்.

  நதேன அரியோ ஹோதி யேன பாணான ஹிம்ஸதி
  அஹிம்ஸா ஸப்ப பாணானாம் அரியோ தி பவுச்சதி

  இதன் பொருள் – “உயிர்களை வதைக்கும் மனிதன் ஆரியன் ஆகமாட்டான். உயிர்களுக்கு இம்சை புரியாதவனே ஆரியன் எனப்படுவான்”. இங்கே, ஆரியன் என்ற சொல் உயர்ந்தவன், மேலானவன், சிறந்தவன் என்ற பொருளைத் தருகிறது. இது இனத்தைக் குறிப்பதல்ல.

  (ஆனால், நம்மை அடிமைப்படுத்திய காலத்தில் ஆங்கிலேயர்கள் அவர்களது வயிற்றுப் பிழைப்புக்காக சொல்லிவைத்த ஆரிய இனவாத மாயை, இப்போதும் நம்மை ஆட்டிப் படைக்கிறது. உயர்ந்த, சிறந்த என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட ஆரிய என்ற சொல்லை ஓர் இனத்தைக் குறிப்பதாக நம்மிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள குழப்பம் இன்னமும் நீடிக்கிறது. இருப்பினும், தெளிந்த ஞானம் உள்ளவர்கள் ஆரிய என்பதன் உண்மைப் பொருளை உணர்ந்துகொள்வார்கள். அதனால்தான் மகாகவி பாரதி, ‘அச்சம் கொண்டவன் ஆரியன் அல்லன்’ என்றும் ‘ஆரிய நாட்டில் நாரியரும் நரசூரியரும் சொல்லும் வீரிய மந்திரம் வந்தே மாதரம்’ என்றும் தெளிவுபட மொழிந்தான். அவனது பார்வையில், இந்தப் பாரத நாடு முழுமையுமே உயர்வான தேசம்; இங்கு வாழும் அனைவருமே உயர்வானவர்கள்).

  இதேபோல், கம்மத்தில் (கர்மங்களில்) கட்டுறச் செய்யும் அவித்தையை (அறியாமையை) அழித்து, நிப்பாணம் (நிர்வாணம் எனப்படும் முக்தி நிலை) அடைய 4 ஆரிய சத்தியங்கள் குறித்த விழிப்புணர்வு அவசியம் என்கிறார் புத்தர். அது என்ன ஆரிய சத்தியங்கள்? அடுத்த வாரம் காண்போம்...

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai