Enable Javscript for better performance
37. ஆரிய சத்தியங்கள்- Dinamani

சுடச்சுட

  

   

  வேள்விச் சடங்குகளை அன்றி வாழ்வியல் அறநெறிகளை மொழியும் வேதத்தின் உபநிஷதங்களைப் படைத்தவர்களில் பெரும்பாலானோர், போர் புரிவதையே தொழிலாகக் கொண்ட க்ஷத்திரியர்களே. போர்களின்போது அவர்கள் புரிந்த கொலைகளும் ஜீவஹிம்சையும் மனத்தைச் சுட்டெரித்து அதற்கு மாற்றாக அன்புவழியை, அறநெறியை போதிக்கும் பக்குவத்தை மலரச் செய்துள்ளன. மனத்தையும் ஆசைகளையும் அடக்கும் தவத்தை நாடச் செய்துள்ளன. வாழ்க்கையில்கூட போராட்டங்களைச் சந்திப்பவர்தாம் தத்துவங்களை உதிர்ப்பார், தவத்தில் திளைப்பார். வெற்றிகளில் மிக உயர்ந்ததும், மிகக் கடினமானதும் தன்னைத் தானே வெல்வதுதான் என்றும் அத்தகைய வெற்றியையே ஒருவர் நாட வேண்டும் என்றும் மகாவீரரைப்போலவே புத்தரும் மொழிந்துள்ளார். மகாவீரரைப் போலவே புத்தரும் க்ஷத்திரிய மகாபுருஷரே.

  ஒரு காலத்தில், பாரதத்தின் பகுதியாக இருந்து தற்போது தனிநாடாக விளங்கும் நேபாளத்தில், கபிலவஸ்து என்ற நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சிற்றரசர் சுத்தோதனருக்கும் அரசி மகாமாயாதேவிக்கும் மகனாக, கி.மு. 563-ல் தோன்றியவர் சித்தார்த்தர் என்ற இயற்பெயர் கொண்ட புத்தர். அக்காலத்தில் வாரிசுரிமையுடன் கூடிய குடியரசாக விளங்கிய ஜனபதங்களில் (மக்கள் குழு) ஒன்றின் தலைவர்தான் சுத்தோதனர் என்றும் கூறப்படுகிறது. கபிலவஸ்துவில் இருந்து தனது பிறந்த வீடு அமைந்த தேவதஹ் நகருக்கு மகாமாயாதேவி செல்லும் வழியில், லும்பினி என்ற வனப்பகுதியில் சித்தார்த்தர் பிறந்தார். அவர் பிறந்த 7 நாட்களில் தாயார் இறந்துவிட, சிற்றன்னை (பெரியம்மா என்று சிலர் கூறுகிறார்கள்) கௌதமி என்பவரால் வளர்க்கப்பட்டார். இதனால் சித்தார்த்தருக்கு கௌதமர் என்ற பெயரும் ஏற்பட்டது. கௌதம ரிஷி கோத்திரத்தில் உதித்தவர் என்பதால் கௌதமர் என்று அழைக்கப்பட்டதாகக் கூறுவாரும் உண்டு.

  சித்தார்த்தரின் ஜாதகத்தைக் கணித்த பெரியவர்கள், அவர் உலகின் சக்கரவர்த்தியாக வருவார்; இல்லையேல் மாபெரும் ஞானியாக உருவாவார் என்று தெரிவித்தனர். தன் மகன் துறவியாகிவிடுவானோ என்ற பயத்தால், சுத்தோதனர் தனது மகன் சித்தார்த்தனை வெளி உலகம் தெரியாமல் வளர்த்தார். இவ்வாறு வளர்க்கப்பட்ட நிலையிலேயே இளைஞனான சித்தார்த்தருக்கு, யசோதை என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ராகுலன் என்று பெயரிடப்பட்ட அக்குழந்தை பிறந்த 7-வது நாளில், உலக வாழ்வைத் துறந்து சித்தார்த்தர் துறவியாக வீட்டைவிட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 26.

  பிள்ளைப் பருவத்தில் இருந்து சுகத்தை மட்டுமே அனுபவித்து வந்த சித்தார்த்தர், ஒருநாள் தனது மாளிகையை விட்டு வெளியே வந்து வெளியுலகைக் கண்டபோது அடுத்தடுத்து நோயாளி, உயிரிழந்த ஒருவரின் சவ ஊர்வலம், துறவி ஆகியோரைப் பார்த்ததன் பாதிப்பே, அவருக்கு வாழ்வின் நிலையாமையையும், துன்பமயத்தையும் போதித்தது. இந்தத் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான விடையைத் தேடி துறவியாகப் புறப்பட்ட சித்தார்த்தர், முதலில் ராஜகிருஹம் (ராஜ்கிர்) என்ற இடத்துக்குச் சென்று பிட்சை எடுத்து உண்டு, ஞானிகளைத் தேடி உபதேசம் பெற்றார். அப்போது ஆலாரகலாமர் என்ற பண்டிதரிடம் தத்துவஞானத்தையும், உத்தகராமபுத்திரன் என்ற யோகியிடம் யோகப்பயிற்சிகள் மற்றும் தியானத்தையும் கற்றுத் தேர்ந்தார். (இவர்கள் இருவரும் சாங்கிய தத்துவஞானிகளாகக் கருதப்படுகிறது). அப்போதும் தனது தேடலுக்கு முழுமையான விடை கிடைக்காத சித்தார்த்தர், உருவேலா என்ற வனத்துக்குச் சென்று சுமார் 7 ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார். இதனால் உடல் மெலிந்ததே தவிர, உண்மை கிடைக்கவில்லை.

  அப்போது ஒருமுறை ஓர் இசைக்குழு அந்த வனப்பகுதியாக வந்தது. அவர்களில் சில பெண்கள், ‘வீணையின் கம்பிகளைத் தொய்யவிடாதே, கம்பி தளர்ந்தால் வீணை இசைக்காது, இறுக்கி முடுக்கினாலோ கம்பி அறுந்துவிடும்’ என்று பொருள்படும்படியான பாடலைப் பாடியபடி சென்றனர். இந்தப் பாடல் அவருக்கு உண்மையை உணர்த்தியது.

  Buddha.jpg 

  வாழ்க்கையைத் துன்பமின்றி வாழ, சுகங்களை மிக அதிகமாக நாடாமலும், அதேநேரத்தில் உடலையும் உள்ளத்தையும் மிக வருத்தாமலும் இருக்கின்ற மத்திமப் பாதையை (நடுவழியை) தேர்ந்தெடுப்பதே நல்லது என்று முடிவுக்கு வந்தார் சித்தார்த்தர். அதன்படி, எளிய யோக சாதனைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கி, ஓர் அரச மரத்தின் கீழ் தியானத்தில் ஆழ்ந்த சித்தார்த்தருக்கு, வைகாசி மாதம் பௌர்ணமி தினத்தன்று ஞானோதயம் ஏற்பட்டது. அந்த அரச மரத்தை பிள்ளைப்பேறு வேண்டி சுற்றிவந்த சுஜாதா என்ற பெண்மணி, தனக்கு குழந்தை பிறந்ததும், வேண்டுதலை நிறைவேற்ற அரச மரத்துக்கு பாயசத்தைப் படையலிட வந்தார். சித்தார்த்தரைப் பார்த்ததும் அவர்தான் அரச மர தேவதையோ என்று கருதி பாயசத்தைக் கொடுத்தார். அதனைப் பருகிய சித்தார்த்தருக்கு, அன்றிரவு (வைகாசி பௌர்ணமி இரவு) தியானத்தில் இருந்தபோது ஞானம் கிடைத்தது. அவர் புத்தர் (புத்தி நிறைந்த ஞானி) ஆனார். அந்த மரமும் போதி மரம் (புத்தியை போதித்த மரம்) என்று புகழ் பெற்றது. அந்த வனப்பகுதிதான் தற்போது பிகார் மாநிலத்தில் உள்ள புத்த கயா நகரம். புத்தருக்கு ஞானம் கிடைத்தபோது அவருக்கு வயது 35.

  ‘ஆசையே துன்பத்துக்குக் காரணம். அதனை ஒழிக்க 4 ஆரிய சத்தியங்களை உணர்ந்து, அஷ்டாங்கிக மார்க்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்’ என்பதே புத்தரின் ஞானோதயம். இதுகுறித்த பௌத்த ஸ்லோகத்தைக் காண்போம் -

  யோ ச புத்தம் ச தம்மம் ச ஸங்கம் ச ஸரணம் கதோ
  சத்தாரி அரிய ஸச்சானி ஸம்மப்பஞ்ஞாய பஸ்ஸதீ
  துக்கம் துக்க ஸமுப்பாதம் துக்கஸ்ஸ ச அதிக்கமம்
  அரியம் சட்டங்கிகம் மக்கம் துக்கூபஸமகாமினம்
  ஏதம் கோ ஸரணம் கேமம் ஏதம் ஸரணமுத்தமம்
  ஏதம் ஸரணமாகம்ம ஸப்ப துக்கா பமூச்சதி

  இதன் பொருள் – “புத்தரிடமும், தருமத்திடமும், சங்கத்திடமும் சரண் புகுகின்றவன் பூரண ஞானம் பெற்று, நான்கு ஆரிய சத்தியங்களையும் தெரிந்துகொள்வான். துக்கம், துக்கத்துக்கான காரணம், துக்கத்திலிருந்து விடுதலை, அவ்விடுதலைக்கு உதவும் அஷ்டாங்கிக மார்க்கம் (எட்டு உறுப்பு வழிமுறை) ஆகியவையே அந்த நான்கு ஆரிய சத்தியங்கள். இந்த மார்க்கத்தில் செல்வதால் நன்மை விளையும். இதுவே மிகச் சிறந்த வழிமுறை. இந்த வழியை ஏற்கும் மனிதன், அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுதலை அடைகிறான்”.

  இனி 4 ஆரிய சத்தியங்களைப் பார்ப்போம்.

  1. துக்கம்

  உயிர்கள் அடையும் துக்கம், அதாவது துயரமே முதலாவது ஆரிய சத்தியம். பிறவியும் துக்கம், முதுமையும் துக்கம். நோயும் துக்கம், சாவும் துக்கம். வேண்டாதவை, விரும்பாதவை வந்தாலும் துக்கம். விரும்பியவை பிரிவதும் துக்கம், விரும்பும் ஒன்று கிடைக்காமல் போவதும் துக்கம். இவ்வாறாக வாழ்க்கையே துன்பமயமானது. சம்ஸ்காரங்களால் (மன எண்ணம், நடத்தைப் பதிவுகளால்) துன்பமயமான உலகில் மீண்டும் பிறவி ஏற்படுகிறது. பிறவிக்கு அடிப்படையான ரூபம் (வடிவம்), வேதனை (உணர்வுகள்), சம்ஞை (உணர்வுகளை அறியச் செய்யும் மனம்), சம்ஸ்காரம் (மனத்தின் போக்குகள் அல்லது விருத்திகள்), விஞ்ஞானம் (சித்தம் அதாவது வேதனை, சம்ஸ்காரம் உள்ளிட்டவற்றால் அடைவது) ஆகிய ஐந்தும் உபாதானக் கொத்து எனப்படுகின்றன. இந்த உபாதானக் கொத்தே துன்பமயமானதுதான்.

  பௌதீக விஷயங்களால் உடலாகிய வடிவம் கிடைக்கிறது. சுகம், துக்கம், நட்பு, பகை ஆகிய உணர்வுகள் வேதனைகளாகும். இந்த உணர்வுகளை அறியச்செய்வது மனமாகிய சம்ஞை. வேதனை, அதாவது உணர்வு, நமக்கு வெளித் தொடர்பால் வருவது. அதற்கு மாறாக, மனத்தில் தோன்றி வெளியுலகோடு தொடர்புகொள்வது சம்ஸ்காரம் ஆகும். அன்பு, வெறுப்பு, பேராசை அல்லது கருமித்தனம் (லோபம்), கருணை ஆகிய நான்கும் சம்ஸ்காரங்கள். பாவம், புண்ணியம் ஆகிய சித்தங்கள் விஞ்ஞானம் ஆகும்.

  2. துக்க சமுதாயம்

  துன்பத்துக்கான காரணம் எனப்படும் இதுவே இரண்டாவது ஆரிய சத்தியம். ஆசையே துன்பத்துக்குக் காரணம். மகிழ்ச்சியில் ஆசை, காமத்தில் ஆசை, உண்பதில் ஆசை, பணத்தில் ஆசை, பதவியில் ஆசை - இப்படிப் பலப்பல ஆசைகளால் மேலும் அனுபவிப்பதற்கான, அதாவது அடுத்தடுத்து அனுபவங்களைப் பெறுவதற்கான பிறவிகள் அமைகின்றன. இன்பங்களை அனுபவிக்கும் ஆசையால், துன்பங்களையும் அனுபவிக்கும் பிறவி ஏற்படுகிறது.

  3. துக்க நிரோதம்

  ஆசைகளை ஒழிப்பதன் மூலம் துன்பங்களுக்கு முடிவுகட்டுவதே இந்த மூன்றாவது ஆரிய சத்தியம். ஆசைகளை அழிப்பதன் மூலம் அவற்றில் இருந்து தோன்றுகின்ற துன்பங்களும் நீங்கிவிடுகின்றன. பற்றின் காரணமாகத்தான் பந்தம் ஏற்படுகிறது. பற்றை நீக்கினால் பந்தமும் அறுந்துவிடும். அதேநேரத்தில், ஆசை என்பது வேறு. தேவை என்பது வேறு. உயிர் வாழ்வதற்கு உணவு தேவை, ஓரளவு பொருள் தேவை. நடுநிலையில் நின்று இவற்றைத் தேடுவதும் பயன்படுத்திக்கொள்வதும் ஆசை ஆகாது. ஆனால், அதற்குரிய எல்லையை மீறும்போது ஆசை பிடித்துக்கொள்கிறது. எவ்வளவு அனுபவித்தாலும் இந்த ஆசை அகலாது. விட்டொழித்தால்தான் ஆசை நீங்கி, துன்பமும் விடுபடும்.

  4. பிரதிபதம்

  துன்பத்துக்கு முடிவு கட்டுவதற்கு நம்மை இட்டுச்செல்லும் வழிமுறை (மார்க்கம்) என்பதே பிரதிபதம் என்ற இந்த நான்காவது ஆரிய சத்தியம். இதுவே நிப்பாணத்துக்கு (நிர்வாணம் எனப்படும் முக்திக்கு, அதாவது முழுமையான விடுதலைக்கு) அழைத்துச் செல்லும் வழியான அஷ்டாங்கிக மார்க்கம் ஆகும். பதஞ்சலி முனிவரின் யோக மார்க்கத்தில் கூறப்படும் அஷ்டாங்க மார்க்கம் வேறு, இது வேறு. புத்தர் கூறுகின்ற அஷ்டாங்கிக மார்க்கம் (8 வழிமுறைகள்) என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

  1) சம்யக் ஞானம் (நல்லறிவு) – ஆரிய சத்தியங்களைச் சரியாக அறிந்துகொள்ளுதல்.

  2) சம்யக் சங்கல்பம் (நல்லுறுதி) – அன்பும், அறனும் கொண்டு வாழ்வதில் உறுதி.

  3) சம்யக் வசனம் (நன்மொழி) – உண்மை பேசுதல், இனிமையாகப் பேசுதல்.

  4) சம்யக் கர்மாந்தம் (நன்னடத்தை) – உயிர்களைத் துன்புறுத்துதல் (ஜீவஹிம்சை), துரோகம், துர்நடத்தை, சுயநலம் ஆகியவற்றைக் களைந்து நற்செயல்களைச் செய்தல்.

  5) சம்யக் ஆஜீவம் (நல்வாழ்வு) – கோபம், பகை, வெறுப்பு ஆகியவற்றைக் கைக்கொள்ளாமலும், நியாயமான வழிமுறைகளிலும் வாழ்க்கையை நடத்துதல்.

  6) சம்யக் வியாயாமம் (நன்முயற்சி) – தீயகுணங்களை அகற்றி, நல்ல குணங்களை அடையவும், நல்ல செயல்களைப் புரியவும் இடைவிடாது முயற்சி செய்தல்.

  7) சம்யக் ஸ்மிருதி (நற்சிந்தனை) – மாசு ஏற்படுத்தும் தீய எண்ணங்களைக் கைவிடுதல், மனத்தைக் கட்டுப்படுத்துதல்.

  8) சம்யக் சமாதி (நற்பேருவகை) – தியானத்தின் மூலம் ஆனந்தப் பரவச நிலையை அடைவது. விருப்பு, வெறுப்பில்லாமல் மனத்தை ஒருமுகப்படுத்தி, தான் என்ற எண்ணத்தைத் துறந்து திளைப்பது.

  இந்த 8 வழிமுறைகளையும் பின்பற்றுவதன் மூலம் மனிதனுக்கு பிரக்ஞை (விழிப்புணர்வு) தோன்றி, அதன்மூலம் நிப்பாணம் கிடைத்துவிடுகிறது. நிப்பாணம் என்றால் ஆசைகள் அணைதல், வாசனைகள் (சம்ஸ்காரங்கள் எனப்படும் எண்ண, செயல் பதிவுகள்) அடங்கிப்போதல் என்று பொருள். இந்த அஷ்டாங்கிக மார்க்கத்தை பௌத்தர்களில் மிகவும் பழைமையான கோட்பாட்டைப் பின்பற்றும் தேராவாதிகள் வலியுறுத்துகின்றனர். தேரர்கள் அல்லது தேராக்கள் என்றால் துறவிகள் என்று பொருள். இந்தத் தேராவாதிகள் நல்லவை, கெட்டவை ஆகிய இரு வகையிலான வாசனைகளையும் கைவிட வேண்டும் என்றும் இதற்கு நிவ்ருத்தி எனப்படும் துறவு அவசியம் என்றும் வலியுறுத்துகிறார்கள்.

  இதற்கு மாறாக, தீய வாசனைகளை ஒழித்து, நல்ல வாசனைகளை வளர்க்க வேண்டும் என்று கருதுவதுடன், துறவை வலியுறுத்தாமல், சிறந்த இல்வாழ்வை வலியுறுத்தும் மகாயானப் பிரிவினர் பிற்காலத்தில் தோன்றினர். கனிஷ்கப் பேரரசர் காலத்தில் மகாயானப் பிரிவின் தோற்றம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. மகாயானம் என்றால் பெரிய வழி என்று பொருள். துறவுதான் வாழ்வின் லட்சியமல்ல, சாதாரண பொதுமக்களையும் புத்தரின் போதனைகள் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று கருதுபவர்களே இந்த மகாயானர்கள். இவர்கள், தேராவாதிகளை ஹீனயானர்கள், அதாவது சிறிய வழியினர் என்று அழைத்தனர்.

  கடையனுக்கும் கடைத்தேற்றம் கிடைக்க வேண்டும் என்பதால், தான்மட்டும் நிப்பாணம் அடைய முயலும் தேராவாதம் குறுகியது என்ற பொருளில் அதனை ஹீனயானம் என்றார்கள். ஆகையால், மஹாயானர்கள் அஷ்டாங்கிக மார்க்கத்துக்குப் பதிலாக, பாரமிதா மார்க்கம் எனப்படும் ஆறு அங்கங்கள் கொண்ட வழிமுறையைப் போற்றுகிறார்கள். பாரமிதா என்பது பரமம் என்ற சொல்லில் இருந்து உருவானது. பரமம் என்பதற்கு அனைத்திலும் மேலானது என்று பொருள். இனி 6 பாரமிதைகளை (உயர்ந்த நிலைகளை) காண்போம்.

  1. தான பாரமிதா – பிறர் நலனைக் கருதி தன் உடைமைகள் அனைத்தையும் துறத்தல் தானமாகும். அனைத்து உயிர்களுக்கும் தானம் வழங்குதல், தன்னிடம் உள்ள அனைத்தையும் தானம் வழங்க சித்தமாகுதல், தானத்துக்குப் பிரதிபலன் விரும்பாமல் இருத்தல் ஆகிய மூன்றும் இதில் அடங்கும்.

  2. சீல பாரமிதா – சீலம் என்பது நன்னடத்தை. அஹிம்சை (துன்புறுத்தாமை), சத்தியம் (உண்மை) ஆகிய அறப் பண்புகளை இறுதிவரை பின்பற்றுதல்.

  3. சாந்தி பாரமிதா – சாந்தி என்றால் அமைதி என்று பொருள். மன்னித்தல், பொறுத்துக்கொள்ளுதல், கலங்காது இருத்தல், தைரியத்தைக் கைவிடாமல் இருத்தல், உயிருக்கு ஆபத்து என்றாலும் அமைதியாக எதிர்கொள்ளுதல் ஆகியவை இதில் அடங்கும்.

  4. வீரிய பாரமிதா – வீரியம் என்றால் ஆற்றல், உற்சாகம். தீயவற்றை விலக்கி, உற்சாகத்துடன் முன்னேறிச் செல்கின்ற ஆற்றல் இதுவாகும்.

  5. தியான பாரமிதா – சித்தத்தை ஓரிடத்தில் தெளிவாகச் செலுத்துதல், மனத்தைக் கட்டுதல்.

  6. பிரக்ஞா பாரமிதா – பிரக்ஞை என்றால் விழிப்படைதல். உண்மையை நேரே காணும்போது இது பெறப்படுகிறது. சிந்தனைகளில் மாசுகள் நீங்கும்போது சித்தம் நிர்மலமாகி, சத்தியத்தைக் காண முடிகிறது. அதன்மூலம் பிரக்ஞை கிடைக்கிறது.

  துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு 4 ஆரிய சத்தியங்களை மொழிந்த புத்தர், ஆன்மா, உலகம், ஆண்டவன் ஆகியவை குறித்து என்ன உரைத்திருக்கிறார் என்பதுபற்றி அடுத்த வாரம் காண்போம்...

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai