Enable Javscript for better performance
24. ஆதி மனதும் ஆண்டவனும்- Dinamani

சுடச்சுட

  

   

  மனத்துக்கு மிகப்பெரிய ஆற்றல் உண்டு. படைப்பாற்றல் அதில்தான் அடங்கியுள்ளது. எவ்வித புதிய படைப்புகளுக்கும், அதுசார்ந்த மனத்தின் விருப்பமே முதல் காரணியாக விளங்குகிறது. அதுபோல்தான், உலகின் தொடக்கத்திலும் ஆதி மனத்தில் விருப்பமாகிய படைப்பின் முதல் விதை எழுந்ததாக நாஸதீய சூக்தத்தின் 4-வது ஸ்லோகம் எடுத்துரைத்தது.

  உயிரினங்களின் உயிர்ப்புக்கும் பரிணாம வளர்ச்சிக்கும் அவற்றின் விருப்பமே, எண்ணமே காரணம். நீரில் தோன்றிய உயிரினம், நிலத்துக்கு இடம்பெயர்ந்ததற்கு அதன் விருப்பமே காரணம். நிலத்தில் உலவிய சில உயிரினங்கள் பறவையாகப் பரிணமித்துப் பறக்கத் தொடங்கியதற்கும் அவற்றின் விருப்பமே, கருத்தே காரணம். நிலத்தில் உருவான உயிரினங்களும் படிப்படியாகப் பரிணமித்து, அவற்றின் உச்சமான மனிதன் என்பவன் பிறந்ததற்கும் விருப்பமே, கருத்தே காரணம். மனிதனின் பல்வேறு மாற்றங்களுக்கும் மனமே காரணம். அதேபோல்தான், உலகின் தோற்றத்துக்கும் அதன் செயல்பாட்டுக்கும் ஆதி மனதே காரணம் என்கிறது நாஸதீய சூக்தம்.

  ஆதி மனது நினைத்தது - அதுவே நிகழ்ந்தது. மனிதன் நினைக்கிறான், செயல்படுகிறான் - அதற்கேற்ப நிகழ்வுகள் நடைபெறுகின்றன. எல்லாப் பொருள்களுமே ஜடங்களின் கூட்டுக் கலவையாக மட்டுமே இருப்பதில்லை; அவற்றுக்குள் ஒரு நோக்கம், இலக்கு இருக்கிறது. உலகை வியாபித்துள்ள அந்த நோக்கத்தின் அடிப்படையில், ஒவ்வொன்றும் நோக்கத்துடன் செயல்படுகிறது. இதற்கு ஆதி மனதும் அதன் ஆற்றலும் யாவற்றிலும் வியாபித்திருப்பதே காரணம் என்பதை நாம் உணர வேண்டும். உலகில் எவையுமே வெறுமனே இருப்பதில்லை. அந்த இருப்புக்குள் ஒரு விருப்பு இருக்கிறது. அதுதான் உயிர்ப்பு. இதனை நாஸதீய சூக்தத்தின் 5-வது செய்யுள் இவ்விதம் கூறுகிறது -

  திரஸ்சீனோ விததோ ரஸ்மிரேஷாமத(ஹ்)
  ஸ்விதாஸீதுபரி ஸ்விதாஸீத்
  ரேதோதா ஆஸன்மஹிமான ஆஸன்த்ஸ்வதா
  ஆவஸ்தாத்ப்ரயதி(ஹ்) புரஸ்தாத்

  (இருப்புக்கும் இன்மைக்கும் இடையில் இணைப்பு

  அதனடியில் என்ன? அதற்கு மேலென்ன?
  அத்தொடர்பில் அனைத்தின் விதையும் ஆற்றல்களும்
  அதனுள்ளே உந்துதல் அப்புறத்தில் செயல்பாடு)

  இருப்புக்கும் இல்லாமைக்கும் இடையே அறியவொண்ணாத இணைப்பு உள்ளது. இந்த இணைப்புக்கு உள்ளே (அடியில்) என்ன இருக்கிறது? அதற்கு வெளியே (மேலே) என்ன இருக்கிறது? விளங்கிக்கொள்ள முடியாத அந்தத் தொடர்பில்தான், படைப்புகள் அனைத்துக்குமான விதையும், படைப்புகளை வெளிக்கொண்டு வருவதற்கான ஆற்றல்களும் இருக்கின்றன. அதற்கு உள்ளே ஏற்பட்ட விருப்பமாகிய உந்துதல் காரணமாக, வெளிப்புறத்தில் அதன் இயக்கமாகிய உலகமும் படைப்புகளும் உருவாகின என்கிறது நாஸதீய சூக்தம். என்ன அருமையான கவித்துவமான அறிவியல் சிந்தனை.

  RIG VEDA.jpg 

  உலகின் தொடக்க கணம் மிகவும் மர்மமானதுதான். மாபெரும் அறிவியல் ஆராய்ச்சிகளால்கூட அதனை முழுமையாகக் கண்டறிய முடியவில்லை. புதிய புதிய கண்டறிதல்களும், ஆராய்ச்சி முடிவுகளும், தெளிவான விடை தருவதைவிட ஆச்சரியத்தைத்தான் அதிகப்படுத்துகின்றன. பிக் பேங்க் தியரி, குவான்டம் தியரி, ரிலேடிவிட்டி தியரி என பல்வேறு ஆய்வுக் கோட்பாடுகள் கூறப்பட்டாலும், அவை அனைத்திலும் ஆகச் சிறந்த அறிவியல் அறிஞர்கள் பெருவியப்போடுதான் இயற்கையை நோக்குகிறார்கள். நாம் கண்டறிந்ததைவிட காணவியலாத பேராற்றல் - உலகின் (படைப்பின்) தொடக்கத்துக்குப் பின்னணியில் இருப்பதாக அவர்கள் பணிவுடன் கூறுகிறார்கள். அறியவொண்ணா அந்தப் பேராற்றல்தான் ஆண்டவனோ என்றும் மலைக்கிறார்கள். அதே திகைப்பும் மலைப்பும், அக்கால ரிஷிகளுக்கும், யோகிகளுக்கும் ஏற்பட்டிருப்பதை நாஸதீய சூக்தத்தின் 6-வது செய்யுள் எடுத்தியம்புகிறது.

  கோ அத்தா வேத க இஹ ப்ரவோசத்
  குத ஆஜாதா குத இயம் விஸ்ருஸ்டி
  அர்வாக் தேவா அஸ்ய விஸர்ஜனேனாதா
  கோ வேத யத ஆபபூவ

  (யார்தான் அறிவர்? இதனையார் சொல்வர்?
  எதிலிருந்து வந்ததிது? படைத்தது எவ்விதம்?
  அதன்பிறகே தேவர்களும் வந்தவர்கள் ஆவதனால்
  யார்தான் சொல்வர் தோன்றியது எவ்விதம்?)

  இந்த உலகம் தோன்றிய அக்கணத்தின் நிகழ்வை யார்தான் உண்மையாக அறிவார்கள்? யாரால் இதனைத் தெளிவாகச் சொல்ல முடியும்? எந்த மூலத்தில் இருந்து இது (இந்தப் படைப்பு) வந்தது? எதனைக் கொண்டு இது படைக்கப்பட்டது? படைப்பு தொடங்கிய பிறகுதான் தேவர்களும் (நாம் இப்போது காண்கின்ற இயற்கை ஆற்றல்கள்) தோன்றினார்கள் என்பதால், இந்தப் படைப்பு எவ்விதம் தோன்றியது என்பதை யாரால் கூற முடியும்? என்று வினவுகிறது நாஸதீய சூக்தம்.

  காரணம் என்ன என்று தேடிக்கொண்டே இருப்பதன் மூலம் இதற்கான விடையைக் கண்டறிய முடியாது என்பதே இதன் பொருள். இதனை, நவீன அறிவியல் மேதைகளும் ஒப்புக்கொள்கின்றனர். உலகம், அதாவது படைப்பு தோன்றிய கணத்தில் அதனை நேரடியாகக் கண்டவர்கள் யாரும் இல்லை. ஆகையால், அதனை ஓரளவு ஊகித்தே அறிய முடியும். இப்போது கண்டறியப்படுகின்ற காரண ஆற்றல்களும் அப்போது இல்லை. படைப்பு தோன்றிய பிறகே அவை தோன்றின. ஆகையால், இதற்கான காரணத்தைக் கண்டறிய இயலாது என்கின்றனர் அறிவியலாளர்கள்.

  robert_jastrow.jpg 

  ராபர்ட் ஜாஸ்ட்ரோ என்பவர், நாஸா விண்வெளி ஆய்வு அமைப்பின் கீழ் இயங்கும் காட்டார்ட் விண்வெளி ஆய்வு மையத்தின் நிறுவனர். சர்வதேசப் புகழ்பெற்ற விண்வெளி ஆய்வாளரான இவர், அண்டங்களில் உயிர் வாழ்வு தொடர்பான ஆய்வில் ஏற்கத்தகுந்த விற்பன்னர். அவர், ‘கடவுளும் விண்வெளி ஆய்வாளர்களும்’ (காட் அண்ட் த அஸ்ட்ரானமர்ஸ்) என்ற தனது நூலில் இவ்விதம் கூறியுள்ளார் -

  “நட்சத்திரக் கூட்டங்கள் (கேலக்ஸி) குறித்த கணக்கியல் மதிப்பீடுகள் மற்றும் அறிவியல் கூராய்வுகள் கூறுகின்ற சாராம்சம் என்ன தெரியுமா? இந்த உலகத்துக்கு ஒரு தொடக்கம் இருக்கிறது. காலத்தின் ஒரு குறிப்பிட்ட கணத்தில் இந்த உலகம் தோன்றியது. இது தோன்றுவதற்குச் சாத்தியமில்லை என்ற சூழலில்தான் உலகம் தோன்றியது. இப்போது மட்டுமல்ல, எப்போதுமே எந்த ஆற்றல் அல்லது ஆற்றல்கள் உலகத்தை அக்கணத்தில் தோற்றுவித்தன என்பதைக் கண்டறிவது சாத்தியமல்ல என்பதுதான் அந்த சாராம்சம்” என்கிறார் ஜாஸ்ட்ரோ.

  இதேபோல், பிரிட்டனின் பிரபல கோட்பாட்டியலாளர் (தியரிஸ்ட்) எட்வர்டு மில்னே என்பவர், சார்பியல் கோட்பாடு (ரிலேடிவிட்டி தியரி) குறித்த தமது கணக்கியல் மதிப்பீட்டு விளக்கவுரையில் என்ன கூறுகிறார் தெரியுமா? “…உலகின் தொடக்கத்துக்கு முதல் காரணத்தை, விரிவடைதல் என்ற சூழல் எவ்வாறு தோன்றியது என்பதை, இதனைப் படிப்பவரின் முடிவுக்கு விட்டுவிடுகிறோம். அதேநேரத்தில் எங்களது (விஞ்ஞானிகளின்) அனுமானம் அவன் (ஆண்டவன்) இல்லையேல் இது முழுமையடையாது என்பதே”.

  ஆகையால், இன்றைய அதிநவீன அறிவியல் அறிஞர்களும்கூட, உலகம் எவ்வாறு தோன்றியது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் என்கிறார்கள். அதேநேரத்தில், நாஸதீய சூக்தம் இதிலும் ஒரு வித்தியாசமான கருத்தை திருப்புமுனையாகக் கூறி, தனது நிறைவுச் செய்யுளில் முத்திரை பதித்துள்ளது.

  இயம் விஸ்ருஷ்டிர்யத ஆபபூவ
  யதி வா ததே யதி வா ந
  யோ அஸ்யாத்யக்ஷ(ஹ்) பரமே வ்யோமந்த்ஸோ
  அங்க வேத யதி வா ந வேத

  (எதிலிருந்து இந்தப் படைப்பு வெளிப்பட்டதோ
  அதுதான் இதனை ஆக்கியதா? இல்லையா?
  இதனைக் கண்காணிக்கும் உயர்வானில் இருப்பவர்
  இதனை அறியலாம் அறியாமலும் இருக்கலாம்)

  அறிய முடியாத ஒரு புதிருக்கு ஆண்டவன்தான் விடைகூற வேண்டும் என்று அறிவியல் அறிஞர்களே கூறுகின்ற நிலையில், அப்படிப்பட ஒரு நிலைப்பாட்டை எடுத்தாலும்கூட, அந்த ஆண்டவன்தான் இந்த உலகைப் படைத்தாரா அல்லது தன்னிச்சைச் செயலாக நிகழ்ந்ததா? என்ற கேள்வியையும், இந்தப் படைப்பின் ரகசியத்தை, உயர் வானில் இருந்து உலகைக் கண்காணிக்கும் ஆற்றலாக உருவகப்படுத்தப்படும் அந்த ஆண்டவனுக்கே இது தெரியுமோ தெரியாதோ? என்ற ஐயப்பாட்டையும் ஒருங்கே எழுப்புகிறது நாஸதீய சூக்தம். இதுதான் துல்லியமான நேர்மை.

  earth-under-water-in.jpg 

  விடை காண முடியாத ஒரு விஞ்ஞானப் புதிருக்கு இதுதான் விடை என்ற எந்தத் திணிப்பிலோ அல்லது சமரசத்திலோ நாஸதீய சூக்தத்தை இயற்றிய அல்லது அதில் கூறப்படுகின்ற வேதகால ரிஷிகள் ஈடுபடவில்லை. மாறாக, உண்மையை உள்ளபடி ஏற்றுக்கொள்கிறார்கள். இல்லாததில் இருந்து இந்த உலகம் படைக்கப்படவில்லை; அதற்கு ஓர் இருப்பு இருக்கிறது. இருப்பினும், அது முழுமையாக அறிந்துகொள்ளப்படாமல் இருக்கிறது என்பதை நாஸதீய சூக்தம் தெளிவாகக் கூறுகிறது.

  அதேநேரத்தில், விருப்பத்தின் உந்துதலால் இந்த உலகம் தோன்றியபோதிலும், அதனை உருவாக்கிய ஆற்றல் அதனை அறிந்தே படைத்ததா, இல்லையேல் அதுவாக நிகழ்ந்ததா என்று நாஸதீய சூக்தம் எழுப்புகின்ற கேள்வி, இன்னமும் விடைகாண முடியாமலேயே நீடிக்கிறது. இதேபோல், உலகின் மூலகாரணமாகவும் இதனைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துவதாகவும் இருக்கிற ஆற்றலுக்கு (ஆண்டவனுக்கு), படைப்பின் ரகசியம் தெரிந்திருக்குமோ இல்லையோ என்ற சந்தேகமும் இன்றளவிலும் நீடிக்கத்தான் செய்கிறது.

  ஆகையால்தான் சாங்கியம், நாஸதீய சூக்தத்தில் ஐயப்பாட்டுடன் குறிப்பிடப்படுகின்ற ஆண்டவனை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதனை விடுத்து, நாஸதீய சூக்தத்தில் கூறப்படுகின்ற இல்லாமைக்குள் உள்ள இருப்பை மூலப் பிரகிருதியாகவும், ஆதிமனதை புருஷனாகவும், முதல் விருப்பத்தை மஹத் எனப்படும் புத்தியாகவும் உருவகித்து அதன் தத்துவத்தை எடுத்துரைத்தது. அதேநேரத்தில், ஒற்றைப் புருஷன் என்பதற்குப் பதிலாகப் பலபுருஷ தத்துவத்தை சாங்கியம் கூறுகிறது. இதற்கு மாறாக, ஒற்றைப் பரமபுருஷ தத்துவத்தை வேதாந்தமும் (அத்வைதமும்), யோக தரிசனமும் எடுத்துரைக்கின்றன. இவற்றின் தத்துவங்களுக்கு ஆதாரமாக விளங்குவது, ரிக் வேதத்தில் நாஸதீய சூக்தத்துக்கு அடுத்தபடியாக இடம்பெற்றுள்ள புருஷ சூக்தம்.

  அதுகூறும் முக்கியத் தத்துவங்கள் குறித்து அடுத்த வாரம் காண்போம்...

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai