வரலாற்றின் வண்ணங்கள்

வரலாறு ஒரு வானத்தைப் போன்றது. அதன் வண்ணங்கள் பதிவுகளாகப் பிற்கால தலைமுறையினருக்கு வாழ்வியலை ஊட்டுபவை. அதன் வண்ணங்கள், கல்வெட்டுகளிலும் மற்றைய பதிவுகளிலும் தன் நிறம்காட்டி நிற்பவை. அத்தகைய வண்ணமுறு செய்திகளையெல்லாம் தொகுத்தளித்து, நிகழும் வாழ்வியலுக்கும் கடந்த காலத்தின் வாழ்க்கைமுறைக்கும் ஒரு பாலமாகத் திகழவிருப்பதே வரலாற்றின் வண்ணங்கள். கல்வெட்டுகளில் பொதிந்துள்ள பல்வேறு தரவுகளையும் திரட்டி சுவைமிகுந்த வரிகளோடு தரவிருக்கும் தொடர்தான் வரலாற்றின் வண்ணங்கள். வாழ்வின் ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு வண்ணம். இந்த வண்ணங்கள், கடந்த காலத்தில் எப்படியெல்லாம் தீட்டப்பெற்றிருந்தன என்பது கல்வெட்டு மற்றும் மற்றைய தரவுகளை ஆயும்போது தெளிவாகிறது. இதனைத் தொகுத்துப் பார்த்தால், கடந்த காலத்தின் கதிர் ஒன்று நினைவலைகளைக் கலைத்துவிட்டுப் போகும். இறந்த காலத்தின் எச்சங்களே எதிர்காலத்தின் திட்டங்களுக்கான படிகள் என்பதும் புரியும். ஆக, வரலாற்றின் வண்ணங்கள் கடந்த காலத்திய பதிவுகள் மட்டுமல்ல; வருங்காலத்தின் வாசல்கள் என்பது தொடரில் ஆழ்ந்தறிந்தால் விளங்கும்.

முனைவர் க. சங்கரநாராயணன்

முனைவர் க. சங்கரநாராயணன்

இத்தொடரின் ஆசிரியர் முனைவர் க. சங்கரநாராயணன், காஞ்சி, ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விச்வமகா வித்யாலயத்தில் வடமொழிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். வடமொழியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழ், வடமொழி, தெலுகு ஆகிய மொழிகளில் கவிதை புனைபவர். சோழர் செப்பேடுகளைத் துணைப்பதிப்பாசிரியராக இருந்து தொகுத்துள்ளார். பல்வேறு புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்து பதிப்பித்துள்ளார். தன்னுடைய சாரஸ்வதம் என்னும் வலைத்தளத்தில் கோயில் கட்டடக் கலை, கல்வெட்டியல், வரலாறு, சுவடியியல், படிமவியல் தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். அரிய வடமொழிச் சுவடிகளைப் பதிப்பித்துள்ளார். பல்வேறு தேசிய கருத்தரங்குகளையும் ஒருங்கிணைத்திருக்கிறார். பல்வேறு கருத்தரங்குகளிலும் பங்குகொண்டு கட்டுரைகள் வரைந்துள்ளார்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை