முகப்பு சாளரம் வரலாற்றின் வண்ணங்கள்
46. ஊரழிந்து ஆவணங்கள் அழிந்தால்..
By முனைவர் க. சங்கரநாராயணன் | Published On : 30th July 2019 11:00 AM | Last Updated : 30th July 2019 11:00 AM | அ+அ அ- |

இயற்கையின் சீற்றத்தினால் ஓர் ஊர் அழிந்துபடுவதும் மீட்டமைப்பதும் சென்னை முதற்கொண்டு பல்வேறு நகரங்களிலும் காணும் ஒரு செய்திதான். இந்தச் சூழ்நிலையில் ஆவணங்களும் மறைந்திருக்கும். மறுபடியும் அந்த ஆவணங்களை வழங்க ஆவன செய்யவேண்டி வரும். அப்படி ஆவணங்களை அளிப்பதும் கடினமாக இருக்கிறது. ஆனால், பண்டைய நாளில் இப்படி ஆவணங்கள் அழிந்துபட்டபோது, ஊர்ச்சபையினர் கூடி மிகச் சரியாகச் செயல்பட்டு நிலங்களைக் கொடுத்த நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது.
சிவகாசியை அடுத்த மங்கலம் என்ற ஊரிலுள்ள சிவாலயத்திலுள்ள கல்வெட்டொன்று இந்தத் தகவலைத் தருகிறது. பொ.நூ. 1176-ஐ சேர்ந்த இந்தக் கல்வெட்டு, சடையவர்மன் குலசேகர பாண்டியனின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது. கோயிலுக்கு அளிக்கப்பட்ட வரிவிகிதங்களைப் பற்றிய ஆவணங்கள் அழிந்துபட்டிருப்பதைக் கண்டனர். ஆகவே ஊர்ச்சபையினர் கூடி முன்பு வழங்கியிருந்த வட்டி விகிதத்தை நினைவுகூர்ந்து அதே வட்டியை மீண்டும் அளிக்க முடிவு செய்தனர்.
இப்பிரமாணங்கள் முன்பு மங்கலம் அழிந்த நாளில் கொள்ளை கொண்டிடத்தே அந்தர பட்டமையால் பிரமாணங்காட்டமாட்டாதே அந்தராயம் ஆண்ட சறுதாளாய் வந்தட்டின இறைத்தரம் விட்டு பொருள் கொள்ளுதலால் இந்தத் திருப்படி மாற்று இன்றி கிடந்தமையிலித்தன்மம் அழிவுபடலாகாதென்று நடுவு நிருப எம்பெருமான் சீவல விண்ணகராழ்வார் திருமுற்றத்துக் கூட்டங்குறைவற கூடியிருந்து சேரி பணி பணித்து பண்டாடு பழநடையே சுட்டிறை அந்தராயம் ஆட்சி ஒரு காசும் ஒரு திரமமும் கொள்வதாக..
என்பது கல்வெட்டு வரிகள்.
ஊர் அழிந்துபோனதால் கோயில் ஆவணங்களும் அழிந்துபோயின. கோயிலுக்கான வருவாய் குறைந்ததால் ஊர்ச்சபையினர் கூடி பண்டாடு பழநடையே அதாவது பழைய கால நடைமுறையையே மீண்டும் கொள்வதாக வைத்து, ஒரு காசும் ஒரு திரமமும், அதாவது காசின் பின்னமும் பெற்றுக்கொள்வதாக முடிவு செய்தனர்.
இப்படி ஊரே அழிந்து ஆவணம் அழிந்துபட்டாலும் ஊர்ச்சபையினர் கூடி எடுத்த முடிவு அவர்களின் ஒற்றுமையையும் பொறுப்பையும் உணர்த்துகிறது. பண்டாடு பழநடை என்ற அழகிய தமிழ்ச்சொல் காதுகளில் இனிமையைப் பரப்புகிறது.