குருநாதர் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக நான் ஆசிரமத்தை விட்டு வெளியேறிச் சென்றேன். அவர் இறந்து ஆறு மாத காலத்துக்கு நான் மடிகேரி இருக்கும் திசைப்பக்கம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. கர்நாடக மாநிலம் முழுதும் அலைந்து திரிந்துவிட்டு சிறிது காலம் ஆந்திரப் பிரதேசத்துக்குப் போய் இருந்தேன். அக்காலத்தில்தான் நான் சொற்பொழிவுகள் ஆற்ற ஆரம்பித்தது. உலகில் உள்ள ஒவ்வொரு நபரையும் என்னை அறிந்தவராக மாற்றும் முயற்சியையும் அப்போதுதான் மேற்கொள்ளத் தொடங்கினேன். ஒரு சன்னியாசி பிரபலமாவதற்கு இரண்டு வழிகள் உண்டு. தடாலடியாக எதையாவது சொல்லி அல்லது செய்து, கவன ஈர்ப்பில் ஈடுபடுவது முதலாவது. யாரும் எண்ணிப் பார்த்திருக்க முடியாத சிநேகபாவத்தை இருபத்து நான்கு மணி நேரமும் சுமந்திருப்பது இரண்டாவது.
இதில் முதலாவது வழி எனக்குரியதல்ல என்று முதலிலேயே முடிவு செய்திருந்தேன். ஒரு சில சில்லறைச் சித்து ஆட்டங்களைப் பயின்றிருந்தால்கூட இது பலனளிக்கும். கூட்டத்தை இழுப்பதற்கு மூடித் திறக்கும் உள்ளங்கையில் இருந்து ஒரு சாக்லேட் எடுத்துக் கொடுத்தால் போதும். இழுத்த கூட்டத்தை உட்காரச் செய்யத்தான் அதிரடி நடவடிக்கைகள் வேண்டும். உதாரணமாக, ராமன் ஒரு கிரிமினல் என்று சொற்பொழிவைத் தொடங்க வேண்டியிருக்கும். அல்லது இயேசுநாதரின் காதலிகளைக் குறித்துச் சில புனைகதைகளை மீள் உருவாக்கம் செய்ய வேண்டியிருக்கும். மதங்களையும் தேசிய அரசியலையும் சரி விகிதத்தில் கலந்து ஒரு சில சாராரின் உணர்வுகளைப் புண்படுத்தி அலங்கரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
இதெல்லாம் எத்தனை மலினமான உத்திகள்! இறப்பதற்குச் சில தினங்களுக்கு முன்னர் குருநாதர் என்னிடம் சொன்னார், ‘விமல்! வாழ்நாளில் மதத்தையோ கடவுளையோ மருந்துக்கும் தொட்டுப் பாராமல் உன்னால் மக்களுக்கு நாலு நல்ல விஷயங்களைச் சொல்ல முடியுமானால் உன்னைக்காட்டிலும் உயர்ந்த ஜீவன் வேறில்லை’.
என்னை மிகவும் பாதித்த போதனை அது. ஒட்டுமொத்தமாக நான் அவரிடம் பயின்றவற்றின் சாரமே அந்த ஒரு வரிதான் என்று நினைத்தேன். ஆனால் என்னால் மட்டுமல்ல; யாராலுமே அது முடியாது என்றுதான் தோன்றியது. நான் வளர்ந்துகொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில்தான் வடஇந்தியாவில் ரஜனீஷும் வளர்ந்துகொண்டிருந்தார். அவர் ஒரு நிறுவனம். அதாவது, பிறக்கும்போதே நிறுவனமாகப் பிறந்த மனிதர். தோன்றும்போது மிகப் பல நிறுவனங்களாக அவர் பல்கிப் பெருகியே தோன்றினார். முதல் முதலில் நான் அவரைக் குறித்து சிந்திக்கத் தொடங்கியபோது, அவர் ஓர் உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அமெரிக்காவில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு, பல ஐரோப்பிய தேசங்கள் அவரைத் தரையில் கால் வைக்க விடாமல் தொடர்ந்து பறக்கவைத்துக்கொண்டே இருந்தன. ஸ்பெயின், பிரேசில், உருகுவே என்று எங்கெங்கோ போய்ப் பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி, இங்கிருந்து நேபாளத்துக்குப் போய், அங்கிருந்து மீண்டும் இந்தியாவுக்கு வந்து சேர்ந்திருந்தார்.
என்ன சொல்ல? ரஜனீஷ் தான் பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை; இந்தப் பூமிக்கு வந்து போன ஒரு பிரஜை என்று அறிவித்துக்கொண்டவர். சந்தேகமின்றி அவர் ஒரு பயணிதான். அலையும் துறவி. விசாகப்பட்டினத்தில் நான் சந்தித்த கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் அவரைப் பற்றி மணிக்கணக்காக என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். ரஜனீஷின் ஒரு புத்தகத்தைக் கொடுத்து என்னைப் படித்துப் பார்க்கச் சொன்னார்.
அன்றிரவே நான் அந்தப் புத்தகத்தைப் படித்தேன். மனத்தை இல்லாமல் ஆக்கும் கலையை விவரிக்கும் கேள்வி பதில் வடிவிலான புத்தகம் அது. அதைப் படித்தபோது அந்தக் கணமே அவருடன் பேச வேண்டும் போலிருந்தது. ஏனென்றால் அந்தப் புத்தகத்தில் அவர் விவரித்திருந்த பல விஷயங்கள் என் குருநாதர் மூலமாக நான் ஏற்கெனவே அறிந்தவை. எந்த மத நூலும் தத்துவ நூலும் சாஸ்திரங்களும் சொல்லித்தராத, அவற்றுக்குத் தெரிந்தே இராத சூட்சுமம் அது. ‘சராசரி மனிதர்களிடம் ஆத்மாவைக் குறித்துப் பேசுவது வீண்’ என்று குருநாதர் சொல்வார். ரஜனீஷ் தனது புத்தகத்தில் ஆத்மாவின் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்காதது எனக்கு ஆறுதலாக இருந்தது.
ஆனால் தனது பிரபலத்தை அவர் அந்தப் பிராந்தியத்தில் இருந்து பெற உத்தேசித்திருக்கவில்லை என்று எனக்குத் தோன்றியது. மதங்கள் மீதும் கடவுள்கள் மீதும் அவர் முன்வைத்த விமரிசனங்கள் பல சமயம் எனக்குக் குழந்தைத்தனமாகத் தோன்றியிருக்கின்றன. ஞானமடைந்த ஒருவன் மதத்தைப் பொருட்படுத்த மாட்டான் என்பதே என் கருத்தாக இருந்தது. ஞானத்தின் மிகக் கனிந்த நிலையில் அவனுக்குக் கடவுளும் வேண்டியிருக்காது. ஆனால் பிரபலத்துக்கு அது தேவை. அதில் சந்தேகமில்லை. எனக்குப் புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்ன பேராசிரியர் ஒரு வார இடைவெளியில், ‘ரஜனீஷ் மணாலிக்குப் போயிருக்கிறார். நான் அங்கு சென்று அவரைச் சந்திக்க முடிவு செய்திருக்கிறேன்’ என்று சொன்னார்.
‘நீங்களும் வருகிறீர்களா?’
‘எதற்கு?’ என்று நான் கேட்ட பின்புதான் அவருக்குத் தான் கேட்டதன் அபத்தம் புரிந்தது.
நான் சிரித்தேன். ‘சினிமா பாட்டு கேட்பது போலச் சொற்பொழிவு கேட்பது ஒரு வழக்கம் என்றால் அதை நான் தவறு என்று சொல்லமாட்டேன். ஆனால் வாழ்வில் ஒரு வெளிச்சம் பெற வேண்டுமென்றால் ஓரிடமாக அடங்கி உட்கார்வதுதான் வழி’ என்று சொன்னேன்.
என்னிடம் அக்காலத்தில் இன்னொரு உத்தியும் இருந்தது. குறிப்பிட்ட நபரை நான் நிரந்தரமாக என்னிடத்தில் தக்கவைத்துக்கொள்ள விரும்பினால், முதலில் அவர்களைப் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பேன். என்னிடம் வருகிற ஒரு நபர் ரஜனீஷைக் குறித்தோ, தயானந்த சரஸ்வதியைக் குறித்தோ, சின்மயானந்தரைக் குறித்தோ சற்று அதிகமாகச் சிலாகித்தாரென்றால், அவரோடு சேர்ந்து நானும் அவர்களை வானளாவப் புகழ ஆரம்பிப்பேன். ‘நீங்கள் உடனடியாக ஓடிப் போய் சரணடைய வேண்டிய பாதங்கள் அவருடையவைதான்’ என்று அடித்துச் சொல்லி அனுப்பிவைப்பேன்.
போகிற இடத்தில் சம்பந்தப்பட்ட நபர் மறக்காமல் என்னைப் பற்றிப் பேசுவார். ‘விமல்ஜி எத்தனை உயர்ந்த சன்னியாசி தெரியுமா? உங்களைப் பற்றி அவ்வளவு தெரிந்துவைத்திருக்கிறார். வார்த்தைக்கு வார்த்தை உங்களைப் பற்றித்தான் பேசுகிறார். அவரளவு படித்த, ஞானம் பெற்ற ஒரு மகான், இன்னொரு துறவியைப் பற்றி இப்படிப் பேசிக் கண்டதேயில்லை’.
அது ரஜனீஷோ, தயானந்தரோ எனக்கு அது குறித்து அக்கறையில்லை. நான் ஒரு மூலாதாரம் என்றால் அவர்கள் வேறு வேறு மூலாதாரங்கள். எனக்கு மிக நன்றாகத் தெரியும், என்னைக் குறித்து அவர்கள் அவ்வளவு தூரம் அறிந்து வைத்திருக்கவோ, எடுத்துப் பேசவோ ஒன்றுமற்று இருப்பார்கள். எனவே வெறுமனே தலையசைத்துக் கேட்டுக்கொள்வார்கள். இங்கிருந்து கிளம்பிப் போன நபருக்கு அது சற்று வேறு விதமான அனுபவமாக இருக்கும். என்ன இவர் இப்படி இருக்கிறாரே. அவரளவுக்குப் பரந்த மனம் ஏன் இவருக்கு இல்லை என்று ஏதோ ஒரு கட்டத்தில் அவசியம் தோன்றும்.
திரும்பி வந்த பின்பு மீண்டும் என்னை அந்த நபர் சந்திக்க வருவார். நான் மிகுந்த அக்கறையுடன் அவரது பயணத்தைக் குறித்து விசாரித்துவிட்டு, அவர் யாரைச் சந்திக்கச் சென்றாரோ, அவரது நலனைக் குறித்து நிச்சயமாக விசாரிப்பேன். ‘நீங்கள் பாக்யவான். ஒரு பெரும் ஞானியைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறீர்கள். நமது நண்பர்களுடன் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்’ என்று என் சதஸில் அவரை வலுக்கட்டாயமாகப் பேச வைப்பேன்.
எனக்கு மிக நிச்சயமாகத் தெரியும். அவரது அந்த உரையின் இறுதி வரிகளில் அவர் சந்தித்த ஞானியின் நிழலினும் எனது நிழல் நீண்டு வளர்ந்து நிறைந்திருக்கும்.
நான் அந்தப் பேராசிரியருடன்தான் ரஜனீஷைச் சந்திக்கப் போகவில்லையே தவிர, இயல்பாகவே எனக்கு அதற்கொரு சந்தர்ப்பம் வந்தது. அப்போது நான் மடிகேரியிலேயே எனது ஆசிரமத்தை நிறுவுவது என்று முடிவு செய்துகொண்டு, ஆந்திரத்தில் இருந்து கர்நாடகத்துக்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். விசாகப்பட்டினத்தில் என்னைச் சந்திக்க வந்துகொண்டிருந்த இளைஞன் ஒருவனுக்கு அப்போது புனேவில் வேலை கிடைத்துப் போயிருந்தான். என்னைப் புனேவுக்கு வரும்படியும், மடிகேரியில் நான் ஆசிரமம் அமைத்துத் தங்குவதற்கு அங்குள்ள சில நண்பர்கள் மூலம் உதவி பெற முடியும் என்றும் அவன் எனக்குக் கடிதம் எழுதியிருந்தான். அதனால் நான் புனேவுக்கு முதலில் சென்றேன்.
அவன் பெயர் கணேஷ் ராம். விசாகப்பட்டினத்தில் அவனது தந்தையார் ஒரு சுருட்டுத் தொழிற்சாலை வைத்து நடத்திக்கொண்டிருந்தார். பையன் தனது தொழிலில் தனக்குப் பக்க பலமாக வருவான் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். அவனோ, தத்துவம் படித்துப் பேராசிரியராக விருப்பம் கொண்டவனாயிருந்தான். தனது விருப்பத்தில் அரையங்குலமாவது முன்னேற வேண்டுமென்றால் முதலில் விசாகப்பட்டினத்தைவிட்டு நகர்ந்துவிட வேண்டும் என்று முடிவு செய்து, சிறிய வேலை ஒன்றை ஒப்புக்கொண்டு அவன் புனேவுக்குப் போயிருந்தான். உண்மையில் மாதச் சம்பளம் அவசியம் என்று கருதக்கூடிய பின்னணி அவனுக்கு இருக்கவில்லை.
நான் ஒரு வார இடைவெளியில் புனேவுக்குப் போய்ச் சேர்ந்த அதே தினத்தில்தான், ரஜனீஷ் மும்பையில் இருந்து புனேவுக்கு இடம் பெயர்ந்திருந்தார். நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை அவருக்காக அங்கே அவரது பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆசிரமம் என்றால் ஒரு பெரிய நகரத்தை உள்ளடக்கியது என்பதே அவரது சித்தாந்தமாக இருந்தது. அமெரிக்காவிலும் அவர் அதைத்தான் செய்தார். பிரச்னை வந்ததே அதனால்தான். எனக்குச் சிரிப்பு வந்தது. மடிகேரியில் நான் உருவாக்க நினைத்த ஆசிரமத்துக்கு எனக்கு இரண்டாயிரத்தில் இருந்து மூவாயிரம் சதுர அடிகள் நிலம் போதும். சுற்றிலும் முள் வேலி. மிகச் சிறிய அளவில் இரண்டு மூன்று குடில்கள். சாத்தியமுள்ள அனைத்து மலர்ச் செடிகளையும் நட்டு, ஏழெட்டு மரங்கள் வைத்தால் போதும் என்று திட்டமிட்டிருந்தேன். எனது வகுப்புகளை நான் வானத்தின் அடியில் நடத்தவே விரும்பினேன். மூடிய கதவுகளுக்கு பின்னால் மறைந்துகொண்டு பேசுவதில் என்ன இருக்கிறது? இயேசுநாதர் ஒருநாளும் அறையில் அமர்ந்து பிரசங்கம் நிகழ்த்தியதில்லை. நபி முகம்மது வீட்டு வாசலில் உட்கார்ந்துதான் ஆயிரக்கணக்கான பக்கங்கள் பேசியிருக்கிறார். அதில் மிஞ்சியவற்றைப் போர்க்களத்திலும் போர்க்களத்துக்குப் போகும் வழியிலும் பேசியிருக்கிறார். ஜரதுஷ்டிராவின் பாறை என்று என் குருநாதர் ஒரு பாறையைக் குறித்துச் சொல்வார். போகிற இடங்களுக்கெல்லாம் அந்தப் பாறையைத் தூக்கிச் சென்று, தோன்றிய இடத்தில் கீழே போட்டு, அதன் மீது அமர்ந்து பிரசங்கம் நிகழ்த்துவாராம்.
எனக்கு ஒரு பாறை போதும். விலை மதிப்பற்ற அதன் எளிமையின் மீது நான் என் கோட்டையைக் கட்டிக்கொள்வேன்.
நான் புனேவுக்குப் போய்ச் சேர்ந்தபோது சரியான குளிர்காலம் ஆரம்பித்திருந்தது. மடிகேரியின் குளிருக்கும் புனேவின் குளிருக்கும் சம்மந்தமே இல்லை என்று தோன்றியது. மடிகேரிக் குளிரில் ஒரு கவர்ச்சி உண்டு. அதை ரசிக்க முடியும். அனுபவிக்கத் தோன்றும். நள்ளிரவுப் பொழுதுகளில் எவ்வளவோ தினங்கள் ஆடைகளைக் களைந்துவிட்டு நான் நிர்வாணமாக அமர்ந்து குளிரை தியானம் செய்திருக்கிறேன். பன்னிரண்டு, பதிமூன்று டிகிரி வெப்பநிலையில்கூட சுவாசப் பிரச்னை எழாது. ஆனால் புனேவில் எனக்கு மூச்சு வாங்கியது. இத்தனைக்கும் அங்கு பதினெட்டு டிகிரி குளிர்தான் இருந்தது. அந்த நகரத்தில் என்னால் வெகுநாள் தங்க முடியாது என்று தோன்றியது. கணேஷ் ராமிடம் அதிகபட்சம் மூன்று நாள் இருப்பேன் என்று சொல்லியிருந்தேன்.
அதில் இரண்டாம் நாள் ரஜனீஷைப் பார்த்து வரலாம் என்று தோன்றிக் கிளம்பினேன். கவனமாக எனது காவி ஆடைகளைக் களைந்துவிட்டு எளிய குர்த்தா மட்டும் அணிந்து புறப்பட்டேன்.
(தொடரும்)