Enable Javscript for better performance
ஆசனம் 38. அர்த்த ஊர்த்துவமுக புஜங்காசனம்- Dinamani

சுடச்சுட

  

  அஷ்டாங்க யோகம் - நியமம்

  யோக நீதிக் கதை

  நிபந்தனை

  இரவு மணி ஒன்பது.

  விளக்குகள் அணைக்கப்பட்டு ஜீரோ வாட் விளக்கு மட்டும் விழித்துக்கொண்டிருந்தது.

  விஜயசங்கர் படுக்கையில் சாய்ந்ததும், உதய் ஓடிவந்து மார்பில் ஏறிக்கொண்டு, ம் கதை சொல்லுங்கப்பா என்றான்.

  அவனைப் பக்கவாட்டில் தள்ளிவிட்டு, விஜயசங்கர் மார்பில் சரிகா இடம் பிடித்துக்கொண்டாள்.

  ச்சீ போடி, நான்தான் மூத்தவன். அப்பா மேல நான்தான் உட்கார்ந்து கதை கேட்கணும் என்று சரிகாவைப் பிடித்துத் தள்ளினான் உதய்.

  பாருங்கப்பா. நான்தான சின்னப்பொண்ணு. பாப்பா பாப்பான்னுதானே எல்லாருமே என்னை கூப்பிடறாங்க. நான்தான் உங்க மேல உங்கார்ந்து கதை கேட்கணும். எனக்குத்தான் நீங்க கதை சொல்லணும் என்று சிணுங்கியவாறு அடம் பிடித்தாள் சரிகா.

  ஆமான்டா உதய், சரிகா சின்னப்பொண்ணுடா, அவ பாப்பாடா. அவ என் மேலயே இருக்கட்டும்டா. நீ போய் அம்மா மேல படுத்துக்கோ என்றான் விஜயசங்கர்.

  மஹும்… உங்க மேல உட்கார்ந்து கதை கேட்டாதான், தியேட்டர்ல படம் பார்க்கற மாதிரி இருக்கும். அம்மா மேல படுத்துகிட்டு கேட்டா டிவியில படம் பார்க்கற மாதிரி இருக்கும். எஃபெக்டே இருக்காதுப்பா என்று முகத்தைச் சுழித்துக்கொண்டே சொன்னான் உதய்.

  சரி சரிகா, நீ இன்னிக்கு மட்டும் அம்மாகிட்ட போ.

  ஊஹூம்... அம்மா சட்டுனு தூங்கிடுவா. அப்புறம் எனக்கும் தூக்கம் வந்துடும், கதையை மிஸ் பண்ணிடுவேன் டாடி.

  வேற வழியில்லை என்று எழுந்து அமர்ந்த விஜயசங்கர், யார் அப்பா மேல உட்கார்றதுன்னு பூவா தலையா போட்டுப் பார்த்துடுவோம், சரியா? என்றபடி டேபிள் பக்கம் கையை நீட்டினான்.

  உதய் ஓடிப்போய் பர்ஸில் இருந்து பத்து ரூபாய் நாணயத்தை எடுத்து வந்து நீட்டினான்.

  நாணயத்தை வாங்கிய விஜயசங்கர், பூ விழுந்தா சரிகா. தலை விழுந்தா உதய், சரியா? என்று சொல்லிவிட்டுச் சுண்டினான்.

  சரிகா, விஜயசங்கரின் மார்பின் மீது கவிழ்ந்துகொண்டு கதை கேட்டாள்.

  ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அந்த ராஜா தினமும் காட்டுக்கு வேட்டைக்குப் போவாராம். ஒருநாள் அவர் வேட்டைக்குப் போன இடத்துல, ஒரு பெரிய காட்டு யானைய பார்த்தாராம். அந்த யானை, ஒரு காட்டை நோக்கி வேக வேகமா போச்சாம். அதோட குட்டிகளும் கூடவே ஓடிச்சாம். தாய் யானை ஒரு மேட்டு மேல ஏறும்போது, குட்டிகளால ஏற முடியாம கீழே விழுந்து, அப்படியே உருண்டுகிட்டே பள்ளத்துக்குப் போச்சிங்களாம்…

  மனக்கண்களால் சிரித்தபடியே, புறக்கண்களைச் செருகி மறுபக்கமாகச் சரிந்தாள் சரிகா.

  இன்னொரு பக்கத்தில், பச்சை விளக்கை பார்த்தபடியே கதை கேட்டுக்கொண்டிருந்த உதய், விழிகளுக்கு இமைகளால் திரைபோட்டுத் தூங்கிவிட்டான். இருவரையும் உச்சி நுகர்ந்து, ஓரக் கண்ணீரைத் துடைத்தபடி தூங்கிப்போனான் விஜயசங்கர்.

  ***

  அன்று பிள்ளைகளுக்கு உணவு பரிமாறிவிட்டு படுக்கைகளை விரித்துப்போட்டாள் பிரபாவதி.

  விஜயசங்கர், பிள்ளைகளின் வருகையை எதிர்பார்த்து படுக்கையில் காத்திருந்தான். பதினோறு மணியாகியும் அவர்கள் வந்தபாடில்லை.

  மகன் உதய்யும் மகள் சரிகாவும், தங்களது ஆண்ட்ராய்டு போன்களில் மூழ்கிப்போயிருந்தார்கள். படுக்கைக்கு வருமாறு பிரபாவதி குரல் கொடுத்தாள்.

  அவர்கள் காதில் வாங்கிக்கொள்வதாக இல்லை.

  பள்ளிப் பருவத்தில் கூப்பிட்ட குரலுக்கு ஓடிந்து நிற்பார்கள். வளர வளர அவர்கள் காலமாற்றத்துக்குப் பலியாகி வருவதை உணர்ந்தாள்.

  என்னங்க, பிள்ளைங்க இப்பல்லாம் உங்ககிட்ட கதை கேட்க வர்றதில்லையே!

  கைகள் இரண்டையும் தலைக்கு மேலே மடக்கி வைத்தபடி, பழைய நாட்களை எண்ணிப் பார்த்தான் விஜயசங்கர்.

  பிள்ளைகளின் விளையாட்டு மைதானமாகத் திகழ்ந்த அவனது மார்பு, அற்ற குளத்து அருநீர்ப் பறவைபோல வெற்றிடமாகக் கிடந்தது.

  உதய்யும், சரிகாவும் மாறி மாறி மார்பில் ஏறிக் குடியேறிய நாட்களை எண்ணி ஏங்கினான்.

  சீரியல்கள் கவனத்தை ஈர்த்தபோது, அப்பாவின் நீதிக் கதைகளை மறந்தார்கள். பக்கத்தில்கூட வர மறுத்தார்கள்.

  உதய் இப்போது ப்ளஸ் டூ, சரிகா பத்தாவது.

  ஆண்ட்ராய்டுளைப் போரிட்டு வென்றார்கள். முகநூல், சாட்டிங் என்று நட்பு வட்டங்களில் கொடிகளை நாட்டிக் கோலோச்சினார்கள்.

  ஒரு வேகத்தோடு எழுந்த விஜயசங்கர் பிள்ளைகளிடம் சென்று, பெட்ரூமுக்கு வந்து கதை கேட்குமாறு அழைத்தான்.

  நாங்க இன்னும் சின்னப்பிள்ளைகளாப்பா? இப்பப் போய் கதை சொல்லக் கூப்பிடறீங்களே?

  திரும்பிக்கூடப் பார்க்காமல் பதிலளித்தாள் சரிகா.

  கதை கேட்கறதுக்கு வயசு என்னம்மா? உங்களுக்காக நல்ல நல்ல கதைகளா அப்பா யோசிச்சி வெச்சிருக்கேன். வாங்கப்பா, வாங்க என்று வாஞ்சையோடு அழைத்த விஜயசங்கருக்கு, அப்படி ஒரு பதில் வரும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

  சூடான பாலில் வாய் வைத்த பூனைபோல் ஆகிவிட்டார்!

  நல்லாத்தான இருந்தீங்கப்பா, உங்களுக்கு என்ன ஆச்சு? பேசாம போய்ப் படுத்துத் தூங்குங்க. தூக்கம் வரலன்னா, மொட்டமாடிக்குப் போய் வாக்கிங் போங்க என்றான் உதய்.

  “க்ளுக்” என்று சிரித்தாள் சரிகா.

  விஜய்சங்கர் நடக்கவே தெம்பில்லாமல், படுக்கையில் போய்க் குப்புற விழுந்தான்.

  உறக்கம் வர மறுத்தது. மனம் தவிதவித்தது. தனிமைத் துயரோடு உருண்டு புரண்டான். அவனது வேதனையை உணர்ந்த பிரபாவதி எழுந்துபோய், பிள்ளைகளை படுக்க வருமாறு அன்போடு பேசி அழைத்தாள்.

  அன்பு விழலுக்கு இரைத்த நீராயிற்று.

  அதட்டியும் அழைத்துப் பார்த்தாள்.

  அதுவும் பயனற்றுவிட்டது.

  இருவரும் மொபைல் கடல்களுக்குள்ளேயே முத்துக் குளித்துக்கொண்டிருந்தார்கள்.

  மறுநாள், அலுவலக விஷயமாக கோவைக்கு “கேம்ப்” போய்விட்டான் விஜயசங்கர். வருவதற்கு நான்கு நாட்கள் ஆகிவிட்டன.

  மனைவி பிரபாவதியிடம் பிள்ளைகளைப் பற்றி போனில் விசாரித்தான்.

  அப்பா இல்லாம போரடிக்குதும்மா. அதனால “கேம்” ஆடிட்டு படுக்கறோம்னு சொல்றாங்க. எனக்குதான் நீங்க இல்லாம தூக்கம் வரல. மறுமுனையில் சோகத்தோடு “கட்” பண்ணினான் விஜயசங்கர்.

  வெளியூர் பயணம் முடிந்து வீடு திரும்பினான்.

  இரண்டு தினங்கள் ஆயிற்று.

  பள்ளியிலிருந்து வீடு திரும்பிய உதய்வும், சரிகாவும் வீடு பூட்டியிருக்கக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். பிரபாவதி அவசர வேலையாக பக்கத்து வீட்டில் சாவியைக் கொடுத்துவிட்டு, பாட்டி ஊருக்குப் போயிருப்பதாகச் சொன்னாள், அடுத்த வீட்டு ஆன்ட்டி.

  வீட்டில் எங்கு திரும்பினாலும் வெறுமை குடியிருந்தது. சோகமே சுற்றி நின்று அவர்களை வாட்டிக்கொண்டிருந்தது.

  இரவு ஒன்பது மணிக்கு அலுவலகத்திலிருந்து திரும்பிய விஜயசங்கர், “அம்மா வர்றதுக்கு நாலு நாள் ஆகுமாம். உங்கள சாப்பிட்டு படுக்கச் சொன்னாங்க” என்று சொல்லிவிட்டு, தனது படுக்கையில் போய் போர்வையால் மூடிக்கொண்டான்.

  மணி இரவு பன்னிரெண்டாயிற்று. சுவர்க் கடிகாரத்தின் நாடித் துடிப்பு மட்டும் அச்சமூட்டிக்கொண்டிருந்தது.

  உதய்யும், சரிகாவும் ஒருவகை பயத்தோடு பார்வைகளைப் பரிமாறிக்கொண்டார்கள்.

  ஆண்ட்ராய்டுகள் செல்வாக்கு இழந்தன. அவர்களையும் ஒரு சோகம் ஆட்கொண்டது. அப்போதே அம்மாவைத் தொலைபேசியில் அழைத்தார்கள்.

  பிரபாவதி உறுதியோடு, நிதானமாகப் பேசினாள்.

  உங்களுக்குதான் மொபைல் இருக்கே. அது போதாதா? இனிமே நான் எதற்கு? வேலைக்கார ஆயா வேண்டியத செஞ்சு குடுப்பாங்க. சாப்பிட்டுக்கிட்டு சமத்தாக இருங்க. அப்பாவை முடிஞ்சா பாத்துக்குங்க.

  என்னம்மா இப்படிச் சொல்றே, எங்க மேல கோபமா?

  ஆமாம். நீங்க இரண்டு பேரும் மொபைலே கதியா இருக்கீங்க. யூஸ் பண்ண வேண்டியதுதான், அதுக்கு ஒரு அளவு இல்லையா? ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கீங்க! என்னையும் அப்பாவையும் மறந்துட்டீங்க. ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் மொபைல்களை என் கையில ஒப்படைக்கறதா இருந்தா நான் திரும்பி வர்றேன். இல்லேன்னா, திரும்பி வரவே மாட்டேன். இது சத்தியம். மறந்துடாதீங்க. எனக்கு ஃபோன் பண்ணி தொந்தரவு செய்யாதீங்க என்று சொல்லிவிட்டு “கட்” செய்தாள் பிரபாவதி.

  அம்மா, பாட்டிக்குச் செல்லப்பிள்ளை. வசதிகள் ஏராளம். அம்மா அங்கேயே உட்கார்ந்தால் உட்கார்ந்ததுதான் என்று தெரிந்துபோயிற்று.

  நள்ளிரவு -

  முகத்தை மூடியிருந்த போர்வையை யாரோ பிடித்து இழுப்பதை உணர்ந்து கண் விழித்தான் விஜயசங்கர்.

  அம்மா இல்லாம வீட்டுல இருக்க முடியலப்பா. அம்மாவை உடனே வரச் சொல்லுங்கப்பா. எங்களுக்கு தனியா இருக்கப் பயமா இருக்குப்பா.

  ஏன், நான் ஊருக்குப் போயிருந்தப்பபலாம் பயமா இல்லையா? நமுட்டுச் சிரிப்புடன் கேட்டான் விஜயசங்கர்.

  அப்பவும் பயமாத்தான் இருந்துச்சுப்பா. ஆனா அம்மா இருந்தாங்களே. கட்டிப்புடிச்சு படுத்துக்குவோம். அவங்க தைரியம் சொல்லுவாங்க. அம்மா பயப்படும்போது நாங்க தைரியம் சொல்லுவோம்.

  அப்போ, அம்மா வரணும்னா ஒரு கண்டிஷன். நாளையிலிருந்து உங்க மொபைல் போனை இரவு ஒன்பது மணியானா என்கிட்ட குடுத்தடணும், சம்மதமா?

  ஹைய்யா! அம்மா எட்டு மணிக்கே குடுக்கச் சொன்னாங்கப்பா. நீங்க ஒரு மணி நேரம் எக்ஸ்ட்ரா குடுக்கறீங்க. ஓகே, தேங்க்ஸ். உடனே அம்மாவை வரச் சொல்லுங்கப்பா.

  ம்ஹும். அதுக்கு ஒரு வாரம் ட்ரெய்னிங் இருக்கு. நீங்க ஒரு வாரத்துக்கு ஒழுங்கா ஒன்பது மணிக்கெல்லாம் ஃபோன தர்றீங்களான்னு டெஸ்ட் பண்ணச் சொல்லியிருக்கா.

  மறுநாள் அதே நிபந்தனையை ஃபோனில் மறுஒலிபரப்புச் செய்தாள் பிரபாவதி.

  அதன்படி தினமும் இரவு ஒன்பது மணியானதுமே பிள்ளைகள் அலைபேசிகளை அப்பா விஜயசங்கரிடம் ஒப்படைத்தார்கள்.

  ஒரு வாரம், இரண்டு வாரமாயிற்று.

  அதற்குள் பிள்ளைகளும் பழகிப்போனார்கள். அதன்பிறகுதான் ஊரிலிருந்து திரும்பினாள் பிரபாவதி.

  *

  ஆசனம்

  அர்த்த ஊர்த்துவமுக புஜங்காசனம்

  பெயர் விளக்கம்

  அர்த்த என்றால் பாதி என்று பொருள். ஊர்த்துவமுகம் என்றால் மேல் நோக்கிய என்று பொருள். புஜங்காசனம் என்றால் புஜங்களை ஊன்றிச் செய்யும் ஆசனம் ஆகும்.

  செய்முறை

  • குப்புறப் படுத்த நிலையில், இரண்டு உள்ளங்கைகளையும் தொண்டைக்கு இணையாக பக்கவாட்டில் வைத்து, நெற்றியை விரிப்பில் படியுமாறு வைத்துக்கொள்ளவும்.

  • முழங்கைகளை விரிப்பில் நன்றாக ஊன்றி அழுத்தம் கொடுத்தபடி, சுவாசத்தை உள்ளிழுத்தவாறு முகத்தை உயர்த்திக்கொண்டே நிமிரவும்.

  • மார்புப் பகுதியை முடிந்த அளவு உயர்த்தி நிறுத்தவும்.

  • முழங்கைகளால் உடலைத் தாங்கி நிற்கவும்.

  • முகம் ஆகாயத்தைப் பார்த்தவாறு இருத்தல் வேண்டும்.

  • கழுத்திலிருந்து வயிற்றுத் தசைகள் வரை அனைத்தும் இழுத்துப் பிடித்தது போன்ற உணர்வைப் பெற்றிருக்க வேண்டும்.

  • ஆறு முறை ஆழ்ந்து சுவாசிக்கவும்.

  • பிறகு மெதுவாக தலையைத் தாழ்த்தியவாறு, அடிவயிறு, பிறகு வயிறு, பிறகு மார்பு என்று இறக்கிக்கொண்டே வந்து, இறுதியாக நெற்றியை விரிப்பின் மீது வைத்து படியச் செய்து, ஆரம்ப நிலைக்கு வரவும்.

  • இதே ஆசனத்தை மூன்று முறை செய்யவும்.

  பலன்கள்

  • இவ்வாசனத்தால், மார்பு நன்றாக விரிவடைகிறது. நிறையக் காற்றை உள்ளிழுக்க முடிகிறது.

  • முதுகுத் தண்டுவடத்தின் கீழ்ப்பகுதியும் மேல் பகுதியும் இணையும் இடத்தில் அழுத்தம் கிடைப்பதால் உடலைத் தாங்குதிறன் கூடுகிறது.

  • முதுமை அகல்கிறது.

  • கூனல் போடாமல் முதுகு காப்பாற்றப்படுகிறது.

  • தலைப் பகுதியிலிருந்து கால் பகுதிக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கிறது.

  வீடியோ - ப்ரியா

   

   

   

   

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai