Enable Javscript for better performance
ஆசனம் 30. ஜானு சிரசாசனம்- Dinamani

சுடச்சுட

  

  அஷ்டாங்க யோகம்

  சமாதி

   

  கூச்சமே விலகிப்போ…

  பயணிகள் நிரம்பிய பஸ், சென்னை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. புதுமணத் தம்பதிகளான பொன்னியும் சங்கரும், திருமணம் ஆன இரண்டாவது நாளே பயணம் செய்ய வேண்டிய கட்டாயம். திருமணத்தையொட்டி கடுமையான வேலைகள். ஆனால், முதலிரவின் இனிமையான அனுபவங்களை மனத்தில் அசைபோட்டவனாக நன்றாக உறங்கிப்போனான் சங்கர். பொன்னியும் களைப்பில் உட்கார்ந்தவுடன் தூங்கிப்போனாள்.

  கனவில் புது மனைவியோடு தாம்பத்திய விளையாட்டில் ஈடுபட்டிருந்த அவன், திடீரென்று பஸ் குலுங்கியதில் கண்விழித்தான். பொன்னி அவன் தோள் மீது சாய்ந்துகொண்டு நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள்.

  ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவள் முகத்தைப் பார்த்து புன்னகைத்தான். அந்த இரண்டு நாள் அனுபவங்களை மறக்கமுடியுமா? கண்ணை திறந்திருந்தாலும் அந்த நினைவுதான், கண்ணை மூடினாலும் அதே நினைவுதான். எங்கும் எப்போதும் அதே நினைவுதான். எனக்கு மட்டும்தான் இப்படியா இல்லை, எல்லா புதுமணத் தம்பதிக்கும் இப்படித்தான் இருக்குமா? ஆனால், இவள் மட்டும் ஏன் இப்படித் தூங்குகிறாள் என்று பொன்னியின் முகத்தைப் பார்த்தான். ஒருவேளை, அந்த விஷயம் இவளுக்கு பிடிக்கவில்லையோ. இருக்க வாய்ப்பு இல்லையே என்று அவளுடைய ‘ஒத்துழைப்பை’ நினைத்தபடி, சற்று விலகியிருந்த பொன்னியின் மாராப்பை சரி செய்ய முயல, ஏதோ நினைவில் திடுக்கிட்டு விழித்த பொன்னி, சங்கரைப் பார்த்து வெடுக்கென்று தன் கையால் புடவையை இழுத்துவிட்டுக்கொண்டாள்.

  என்னங்க, நீங்களா? என்று பயத்துடன் கேட்டாள் பொன்னி.

  ஒண்ணுமில்ல. புடவையை சரி பண்ணேன் என்றான் சங்கர் சிரித்துக்கொண்டே.

  சாரிங்க, நல்ல தூக்கம். அதான்… என்று இழுத்தாள்.

  பஸ்ல பாத்தியா. எல்லாரும் எப்படி தூங்கறாங்கன்னு பாரு. தன்னோட கோலத்தைப் பத்திக் கவலைப்படாம நல்லா தூங்கிக்கிட்டிருக்காங்க. இப்போதைக்கு இந்த பஸ்ஸுல முழிச்சிக்கிட்டிருக்கிறது மூணு பேர்தான். நீ, நான், டிரைவர்…

  இருட்டுக்குள் ஊடுருவி, டிரைவர் சீட்டைப் பார்த்துச் சிரித்தபடி சங்கரின் தோள் மீது சாய்ந்துகொண்டாள்.

  சின்ன தொடுதல், உரசல், கெஞ்சல் என பொன்னியிடம் சங்கர் விளையாட, பொன்னியும் கொஞ்சம் விளையாட்டுக் காட்ட, சிறிது நேரத்தில் இருவரும் தூங்கிப்போயினர்.

  *

  திடுக்கிட்டு கண் விழித்தான் சங்கர். பேருந்து நின்றிருந்தது. பஸ்ஸுக்குள் பார்த்தான். யாருமே இல்லை. பக்கத்தில், பொன்னி மட்டும் அலங்கோலமாக உறங்கிக்கொண்டிருந்தாள். இதுதான் சமயம் என்று எதைப்பற்றியும் யோசிக்காமல் அவள் மேல் கவிழ்ந்தான். அவள் திமிறினாள். பலவந்தமாக அவனைத் தள்ளிவிட்டு, பஸ்ஸுல போய் இப்படி…

   

  விட்டதைப் பிடிக்கனும் என்று அவள் மீது அவன் மீண்டும் கவிழப்போக, அவனை அவள் பக்கவாட்டில் தள்ளிவிட, சீட்டில் இருந்தபடி கீழே விழுந்தான். திடுக்கிட்டு கண் விழித்தவன், சுற்றுமுற்றும் பார்த்தான்.

  நல்லவேளை கனவு என்ற திருப்தியுடன், பொன்னியின் முகத்தைப் பார்த்தபடி மீண்டும் கண் மூடினான்.

  *

  அதிகாலை மூன்று மணி. பஸ் அப்படியும் இப்படியும் ஆடியபடி மெதுவாகச் சென்று ஓரிடத்தில் நின்றது. எந்த ஊர் என்று தெரியவில்லை. பயணிகளில் ஒரு சிலர் கண் விழித்தனர்.

  கண் விழித்த சங்கர், பக்கத்து சீட்டில் இருந்த பொன்னியைப் பார்க்க அவள் நெளிந்துகொண்டிருந்தாள். அவள் முகத்தில் ஒருவித தவிப்பு.

  என்ன?

  ஒண்ணுமில்ல. பொன்னி சொல்லமுடியாமல் தவித்தாள். சுற்றுமுற்றும் பயத்துடன் திரும்பிப் பார்த்தாள்.

  பஸ் கால் மணி நேரம் நிக்கும். பாத்ரூம் போறவங்க போயிட்டுவாங்க என்று தடால் தடால் என்று பஸ்ஸை தட்டியபடி கத்தினான் ஒரு கூலிக்காரன்.

  அவன் கத்தியதைப் பார்வையாலே உறுதிப்படுத்தினாள் பொன்னி.

  ஓ, பாத்ரூம் போகணுமா?

  ஆமாம் என்று தலையாட்டினாள்.

  அடச்சீ, இதுக்குதானா. வா போயிட்டு வரலாம்.

  ஐயோ நான் வரமாட்டேன்.

  பயப்படாத, லேடீஸுக்கு தனியா டாய்லெட் இருக்கும் என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

  பரவாயில்லீங்க. ஊருக்குப் போய் போய்க்கிறேன்.

  நான் சொல்றத கேளு பொன்னி. சென்னைக்கு போய்ச்சேர இன்னும் ஆறு மணி நேரம் ஆகும். அதுவரைக்கும் என்ன பண்ணுவே. வழியில பஸ் எங்கயும் நிக்காது. வா சீக்கிரம் என்று பரபரத்தான்.

  அவள் யோசித்தாள்.

  இதுக்கு ஏன் யோசிக்கிற. கூச்சமா இருக்கா.

  அவள் தலையாட்டினாள்.

  ஏய், இதுக்கெல்லாம் கூச்சப்படக்கூடாது. அடக்கினா கிட்னி ஃபெயிலியர் ஆயிடும். வா…

  பஸ்ஸுக்குள் சுற்றிலும் பார்த்துவிட்டு, வேற லேடீஸ் யாரும் இறங்கலியே…

  ஏன், அவங்களுக்கு வந்தாதான் உனக்கும் வருமா. பைத்தியம், வா போயிட்டு வரலாம் என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான்.  

  கொஞ்சம் தயக்கத்தோடே சங்கருடன் பஸ்ஸில் இருந்து இறங்கினாள் பொன்னி. டாய்லெட்டில் இருந்து நிம்மதிப் பெருமூச்சுடன் கொன்னி வெளியே வர, அவர்களைத் தொடர்ந்து பஸ்ஸில் இருந்த பெண்களும் டாய்லெட்டுக்கு வந்தனர்.

  நல்லவேள, இவங்க இறங்கினத பார்த்துத்தான் நாங்களும் இறங்கி வந்தோம். எங்களுக்கும் அவசரம்தான். யார்கிட்ட சொல்லவும் கூச்சமா இருந்துச்சி. நல்லவேள, இப்பதான் எங்களுக்கு நிம்மதியா இருக்கு என்று ஒரு பெண்மணி வந்து இவர்களிடம் சொல்ல, பொன்னி வெட்கப்பட்டாள்.

  பார், உன்னை மாதிரிதான் எல்லாரும் இருக்காங்க. பஸ் பயணத்துல இந்த மாதிரி இயற்கையான பிரச்னைகள் வரத்தான் செய்யும். ரயில்னா பிரச்னை இல்லை. அதுக்காக, அடக்கிக்கிட்டே உட்கார்ந்திருக்க முடியுமா. அப்பறம் அந்த பயணம் நரக வேதனையாயிடும். அதோட, உடலுக்குப் பிரச்னை. இதுல கூச்சப்படறதுக்கோ வெட்கப்படறதுக்கோ ஒன்னும் இல்ல. நம்ம பிரச்னை, நாமதான் சமாளிக்கனும். இப்ப பார், தைரியமா இறங்கி வந்து பாத்ரூம் போயிட்டு வந்தாச்சி. இனிமே நிம்மதியா பிரயாணம் பண்ணலாம் என்று இருவரும் இருக்கையில் வந்து உட்கார்ந்து சுகமாகச் சாய்ந்துகொண்டனர்.

  விலக்குதலே சுகம் என்கிறது சமாதி.

   

  ***

  ஆசனம்

  ஜானு சிரசாசனம்

   

  பெயர்க் காரணம்

  ஜானு என்றால் முழங்கால். சிரசு என்றால் தலை. தலையை முழங்காலுக்கு அருகே கொண்டுபோய் வைக்கும் ஆசனம் என்பதால், இதற்கு ஜானு சிரசாசனம் என்று பெயர்.

   

  செய்முறை

  • விரிப்பின் மீது இரண்டு கால்களையும் விரித்துவைக்கவும்.

  • வலது காலை மடக்கி, குதிகாலை தொடைகளின் சந்திப்பில் பொருந்தி வைக்கவும்.

  • கைகள் இரண்டையும் கூப்பி, சுவாசத்தை உள்ளிழுத்தவாறு தலைக்கு மேலே உயர்த்தவும்.

  • அப்படியே உடலை இடப்பக்கமாக திருப்பவும்.

  • பின்னர், சுவாசத்தை வெளியிட்டவாறு இரண்டு கைகளையும் இடப்பக்கமாக இறக்கிக்கொண்டே வந்து, இடது கால் விரல்களைப் பற்றிக்கொள்ளவும்.

  • முழங்காலை முகம் தொடுவதுபோல் இருக்க வேண்டும். இரண்டு முழங்கைகளையும் இடது முழங்காலுக்கு இரு பக்கமும் விரிப்பைத் தொடுவதுபோல் வைக்க முயலவும்.

  • அதே நிலையில் சில சுவாசங்கள் எடுக்கவும்.

  • பின்னர் சுவாசத்தை உள்ளிழுத்தவாறு கைகளை மேலே உயர்த்திக்கொண்டே வந்து, உடலை நேராகத் திருப்பி, கைகள் இரண்டையும் சுவாசத்தை வெளியிட்டவாறு பிரித்துக் கீழே கொண்டுவந்து ஓய்வு எடுக்கவும்.

  • இதேபோல் கால்களை மாற்றி வைத்து ஒருமுறை செய்யவும்.

   

   

  பலன்கள்
  • வயிற்றின் வலது இடது பக்கங்கள் அழுத்தப்படுவதால் கல்லீரல், மண்ணீரல் தூண்டப்பட்டு பித்தநீரும், இன்சுலினும் நன்றாகச் சுரக்கின்றன. அதனால் ஜீரண சக்தி தூண்டப்படுகிறது.

  • சர்க்கரை நோய் கட்டுப்படும்.

  விடியோ – சுந்தரி (ஆசனா ஆண்டியப்பன் யோகா மையம், சென்னை)

  புகைப்படம் – சுகன்யா, சந்தோஷ் தம்பதிகள்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai