சுடச்சுட

  

  அஷ்டாங்கயோகம்

  நியமம்

  அளவு சாப்பாடு

  ஓவிய ஆசிரியர் நாகூர், மாணவர்களுடன் நண்பன்போலப் பழகக்கூடியவர். அவர் கரும்பலகையில் ஒரு படத்தை வரைந்து அதைப் பார்த்து மாணவர்களை வரையச் சொல்லிவிட்டு, இறுதி கால் மணி நேரத்தில் அறிவுக்கு விருந்தான விஷயங்களைச் சொல்வது வழக்கம். கல்வி ஆண்டின் மத்தியில் மாணவர்களை வெளியூர்களுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லக்கூடியவர்.

  நாற்பது மாணவர்களில் முப்பது மாணவர்கள் பணம் கொடுத்துச் சேர்ந்துவிட்டார்கள். பத்து மாணவர்கள் மட்டும் சேர முடியவில்லை. காரணம், வறுமை. சில மாணர்களுக்குத் தாய் இல்லை. சில மாணவர்களுக்குத் தகப்பன் இல்லை. இருவரும் உள்ள மாணவர்களுக்கு வசதி இல்லை. அத்தகைய மாணவர்களை மட்டும் விட்டுவிட்டு சுற்றுலா செல்ல ஆசிரியர் நாகூருக்கோ மனசில்லை! அதனால், அந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அவரே கொடுத்து அரவணைத்துக்கொண்டார். முதல் ஊர் கொடைக்கானல். சென்னையில் இருந்து பேருந்து புறப்பட்டது.

  மறுநாள் அதிகாலை, வழியில் உள்ள பயணியர் மாளிகையில் கொஞ்சம் இளைப்பாறி குளித்துவிட்டு, டிபன் சாப்பிட எல்லோரும் தயாராக இருந்தனர். அனைவருமே இரண்டு இட்லி, ஒரு வடை மட்டும்தான் சாப்பிட வேண்டும் என்று மாணவர்களை ஆசிரியர் கேட்டுக்கொண்டார்.

  சார், என்ன சார் நீங்க. நாங்க எல்லாரும் ரொம்பப் பசியா இருக்கோம். இரண்டு இட்லியும் ஒரு வடையும் எப்படி சார் பத்தும். நிறைய சொல்லுங்க சார் என்று உரிமையோடு குரல் எழுப்பினர்.

  உஷ்… பஸ் மலைப் பாதியிலதான் போவும். வயிறு நிறைய சாப்பிட்டா வாந்தி வரும். அதுக்குதான் சொல்றேன். அளவா சாப்பிட்டா வாந்தி வராது. கொடைக்கானல் போனதும் நிறைய சாப்பிடலாம் என்று கெஞ்சாத குறையாகக் கேட்டுக்கொண்டார் நாகூர் வாத்தியார்.

  மாணவர்களும் அவரது அன்புக் கட்டளைக்குப் பணிந்தார்கள்.

  பாட்டுச் சத்தத்துடன் கொடைக்கானல் மலைச் சாலையில் பேருந்து ஏறியது. உயரம் ஏற ஏற பஸ் இன்ஜினின் அனத்தலும் முக்கல் முனகலும் அதிகரித்தது.

  காதுகள் அடைத்துக்கொண்டன. மலைப் பகுதி கோரைப் புற்களின் வாசனை நாசியைத் தீண்டியது. வளைவுகளில் திரும்பும்போது பாறைகள் பயமுறுத்தின. வளைவான சாலைகள், மாணவர்கள் அனைவரையும் ஆட்டிப்படைத்தன. மாணவர்களின் முகம் கலவரப்பட்டது. ஆபத்தான பயணம் என்று ஆழ்மனம் அனைவரையுமே எச்சரித்தது.

  பயத்தைப் போக்க மாணவர்கள் கூச்சலிட்டனர். மாணவர்களில் ஏறக்குறைய அனைவருமே முதன்முறையாக கொடைக்கானல் வருகின்றனர்.

  • ஆபத்தான வளைவு

  • ஒலி எழுப்பவும்

  • எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிடவும்

  • வளைவுகளில் முந்தாதே

  • விபத்துப் பகுதி - கவனம் தேவை!

  போன்ற சாலையோர அறிவிப்புப் பலகைகள், மாணவர்களிடம் பீதியைக் கிளப்பின.

  ஒரு சில மாணவர்களுக்கு தலை கிறுகிறுத்தது. சிலர் தலைவலி என்று தலையைப் பிடித்துக்கொண்டனர். ஒருவன் பஸ்ஸிலேயே வாந்தி எடுத்தான். பயத்துடன் இருந்த சில மாணவர்களை ஆசிரியர் ஆசுவாசப்படுத்தினார்.

  ஒருவழியாக, பஸ் அவர்கள் தங்க வேண்டிய பயணியர் விடுதியை வந்தடைந்தது. சில மணி நேர ஓய்வுக்குப் பிறகு, எல்லோரும் சுற்றிப் பார்க்கக் கிளம்பினர். ஒரு சில இடங்களை மட்டும் சுற்றிக் காண்பித்துவிட்டு, சரியாக ஒரு மணிக்கு ஒரு உணவகத்தில் பஸ் நிறுத்தப்பட்டது.

  அனைவரையும் வரிசையாக உள்ளே அழைத்துச் சென்று இருக்கைகளில் அமர்த்தினார் ஆசிரியர்.

  சர்வர் வந்து ஆர்டர் என்ன என்று கேட்க, எல்லோருக்கும் லிமிட்டெட் மீல்ஸ் என்றார்.

  மாணவர்கள் உடனே கூச்சல் போட்டார்கள்.

  சார், காட்டுப் பசி பசிக்குது சார். காலைலியே டிபன் சரியா சாப்பிடல. அன்லிமிட்டெட் மீல்ஸ் சொல்லுங்க சார் என்றார்கள்.

  இருங்கடா. நாம இப்ப மலைப்பிரதேசத்துக்கு டூர் வந்திருக்கோம். ஒரு நாளுக்குள்ள நிறைய இடங்கள சுத்திப் பார்க்கவேண்டி இருக்கு. வயிறு ஃபுல்லா சாப்பிட்டா மயக்கம் வரும். அப்பறம் தூக்கம் வந்துவிடும். பஸ்ஸுலயே தூங்கிடுவீங்க. அப்பறம் ஊரை சுத்திப் பாக்க முடியாது. அதனால நான் சொல்ற கேளுங்க. நிறைய பணம் செலவு பண்ணி வந்திருக்கோம். நிறைய சாப்பிட்டு பிரச்னை ஆகி, அதனால நல்ல பல அனுபவங்களை மிஸ் பண்ணிடக்கூடாது. சரியா? அதுமட்டுமில்ல, நாம இன்னிக்கே மதுரைக்கு போயாகனும். மலைப்பாதியில பஸ் இறங்கும்போதும் வாந்தி வரும். அதனால, லிமிட்டெட் மீல்ஸ்தான் என்றார்.

  ஆசிரியர் சொன்னதை மாணர்கள் வேதவாக்காக எடுத்துக்கெண்டார்கள். லிமிட்டெட் மீல்ஸ் என்றாலும், வயிறு நிறைய சாப்பிட்டார்கள்.

  மீண்டும் பஸ் பயணம். ஊர் சுற்றிப் பார்த்தல்…

  மாலை ஆறு மணிக்குள் எல்லா இடங்களையும் பார்த்தாயிற்று. திட்டமிட்டபடி, கொடைக்கானலில் இருந்து மதுரைக்குப் பயணம். உண்ட மயக்கமும் கண்ட மயக்கமும் மாணவர்களை தூங்க வைத்தது.

  காலையில் டிபன் சாப்பிட்ட அதே உணவகத்தில் போய் பஸ் நின்றது. இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு மதுரை செல்லத் திட்டம். பஸ்ஸில் இருந்து இறங்கும் முன் மாணவர்களிடம் ஆசிரியர் பேசினார்.

  இதோ பாருங்கப்பா. காலைலயும், மத்தியானமும் அளவா சாப்பிட்டதால எந்தப் பிரச்னையும் இல்லாம பயணமும் நல்லா இருந்துச்சி, எல்லா இடத்தையும் நல்லா சுத்தியும் பார்த்தோம். அதே மாதிரி, வெளியூர் போறப்ப அங்கல்லாம் நம்ம வீடு மாதிரி வசதிகள் இருக்காது. தங்கற எடம், பாத்ரூம் டாய்லெட் எதுவும் நாம எதிர்பாக்கற மாதிரி இருக்காது. அட்ஜெஸ்ட் பண்ணிக்கவேண்டி இருக்கும். முக்கியமா சாப்பாட்டு விஷயத்துல ரொம்பவும் கவனமா இருக்கனும். பணம் இருக்கேன்னு கண்டதை வாங்கிச் சாப்பிட்டா வயிறும் கெட்டுப்போயி, நம்ம பயணமும் கெட்டுப்போயிடும். தனி ஆளா இருந்தா பிரச்னையில்ல. நம்மள மாதிரி இப்படி குழுவா வந்தா பிரச்னை அதிகம். ஒருத்தரால மத்தவங்களுக்கும் கஷ்டம். இது தேவையா? அதனால, பயணத்தின்போது வாயைக் கட்டி அளவோட சாப்பிட்டாதான் நல்லது. அதுதான் புத்திசாலித்தனமும்கூட. என்ன, நான் சொல்றது புரியுதா?

  மாணவர்களும், அவரது பேச்சை ஆமோதித்து தலையாட்டினர். கைதட்டி உற்சாகமானார்கள். சரி, இப்ப நாம எல்லாரும் ஆளுக்கு ரெண்டு ஊத்தப்பம் சாப்பிடுவோம் என்று ஆர்டர் கொடுத்தார்.

  அளவோடு இருப்பது இயமம்.

   

   

  ஆசனம்

  பவனமுக்தாசனம்

  பெயர் விளக்கம்

  பவனம் என்றால் காற்று. முக்தா என்றால் வெளியேறுதல் என்று பொருள். உடலில் உள்ள அசுத்தக் காற்றை வெளியேற்றும் ஆசனம் என்பதால், இதற்கு பவனமுக்தாசனம் என்று பெயர்.

   

   

   

  செய்முறை

  • விரிப்பின் மீது மல்லார்ந்து படுத்துக்கொள்ளவும்.

  • வலது காலை மட்டும் விரைப்பாக மேல் நோக்கித் தூக்கி நிறுத்தவும்.

  • பின்னர் முழங்காலை மடக்கி முகத்துக்கு அருகே கொண்டுவந்து, இரண்டு கைகளாலும் இரண்டு கால்களையும் நெருக்கமாக உடம்போடு சேர்த்து அணைக்கவும்.

  • அதேநிலையில் சில சுவாசங்கள் எடுக்கவும்.

  • பிறகு கைகளை விடுவித்து, கால்களை மேலே உயர்த்தி பிறகு நீட்டி கீழே வைத்துவிடவும்.

  • இதுபோல, கால்களை மாற்றிச் செய்யவும்.

   

   

   

  பலன்கள்

  நம் உடம்பில் உள்ள அசுத்த வாயுக்கள் வெளியேறும். அதனால், உடம்பில் இருந்த தசை மற்றும் வாய்வுப் பிடிப்புகள் நீங்கி, உடல் லேசாகும். வாய்வுத் தொல்லையால் ஏற்படும் மூட்டுவலிகளுக்குச் சிறந்த ஆசனம் இது.

   

  வீடியோ: புஷ்பா

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai