ஆசனம் 50. சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரம் என்ற ஆசனம், உடல் மன வளத்துக்கு உத்திரவாதமான ஆசனம்.

அஷ்டாங்க யோகம் – நியமம்
யோக நீதிக் கதை

ஞானோதயம்

பழைய மதுரையின் புறநகர்ப் பகுதி.

வெயில் கொளுத்த ஆரம்பித்திருக்கும் நேரம்.

காசி விஸ்வநாதர் கோயில் இருக்கும் அக்ரஹார வீட்டின் முற்றத்துக்கு அடியில் கயிற்றுக் கட்டிலில் கண்ணயந்து படுத்திருந்தார் அம்பி ஐயர். வயது எண்பதைக் கடந்துவிட்டது. மிகவும் தளர்ந்துபோயிருந்தார். அக்னி நட்சத்திர வெயில், கண்ணகி சாபம்விட்டபோது மதுரை இப்படித்தான் எரிந்திருக்குமோ என்று மதுரைவாசிகளை எண்ணவைத்திருக்கும்!

நெருப்பைச் சிவப்பாகத்தான் பார்த்திருப்போம். சிவன் ஆடிய ஐந்து சபைகளில் வெள்ளிச் சபைதான் மதுரைச் சபை என்பதால், வெயிலையே வெள்ளியாக்கி உருக்கி ஊற்றிக்கொண்டிருந்தது!

காலணி இல்லாமல் எவர் நடந்தாலும், சூடு பொறுக்கமாட்டாமல் கால்களைத் தூக்கிக்கொண்டுதான் ஓடியாக வேண்டும்; சிவனோடு சேர்ந்து ஆடியும் தீர வேண்டும்!

அம்பி ஐயரின் பழங்காலத்து டிரான்ஸிஸ்டரில் மதுரை வானொலியிலிருந்து என்.ரமணியின் புல்லாங்குழல் இசை சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்தது. என்.ரமணியா, என்னுடைய ரமணியா என்று பிரிக்கமுடியாமல் அந்த இசைக்குள் லயித்துக் கிடந்தார் அம்பி ஐயர்.

அவரது மயக்கத்தைக் கலைப்பதுபோல, மடார் என்ற சத்தத்தோடு அருகில் இருந்த மாமரக் கிளையில் உரசியபடி சீரிப் பாய்ந்த கருங்கல்,
அவரது தலையைச் சரியாகப் பதம் பார்த்துவிட்டது.

கல்லடி விழுந்த தலையில் கைவைத்தபடி மேலே அண்ணார்ந்து பார்த்தபோதுதான், தனது வீட்டு வளாகத்தில் மாமரம் இருப்பதே நினைவுக்கு வந்தது. அம்பி ஐயருக்கு. ஆனால் ஊர்ச் சிறுவர்களுக்கு அவரது மாமரம் ஒரு சிம்ம சொப்பனம்!!

தெருச் சிறார்கள் மாங்காய்க்காக எரிந்த கல்தான் அம்பி ஐயரின் தலையை உடைத்துவிட்டது!

பகவானே! என்றபடி, கையால் தலையை அழுத்தியபடி எழுந்தபோதுதான், முதன் முறையாகத் தனது ரத்தத்தில் தானே கைகழுவும் அனுபவத்தைப் பெற்றார்!
ஓடோடி வந்த மாட்டுப் பொண்ணு அலமேலு, “ச்சோ.. கிருஷ்ணா என்ன கொடுமை இது. தெருப்பசங்களோட “அழிச்சாட்டிய”த்துக்கு அளவே இல்லாமப் போச்சே! இவாளை எல்லாம் தட்டிக் கேட்கறதுக்கு யாருமே இல்லாமப் போயிட்டாளே. கிருஷ்ணா.. ரெத்தம்வேற கொட்டின்டே இருக்கே, நிக்கமாட்டேங்கறதே. இப்போ என்ன பண்ணுவேன், என்ன சோதனை இது. ஆத்துல வேற யாருமே இல்லாத நேரத்துல இப்படி ஆயிடுத்தே என்று புலம்பியபடி குறுக்கும் நெடுக்குமாக ஓடினாள். மாமனாரைக் குளியல் அறைக்குக் கூட்டிச்சென்று குனியச் சொல்லி, குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்வதுபோல் அள்ளி அள்ளி ஊற்றினாள்.

சேலையிலிருந்து சிவப்புச் சாயம் கரைவதுபோல், அம்பி ஐயரின் தலையிலிருந்து ரத்தம் கொட்டிக்கொண்டே இருந்தது!

கிழிந்த புடவை ஒன்றைக் கொடுத்து அழுத்திப் பிடித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, மாமனாரை பின்னால உட்கார வைத்துக்கொண்டு, தானே இரண்டு சக்கர வாகனத்தைக் கிளப்பினாள் அலமேலு.

24 மணி நேர மருத்துவமனைக்குப் போய் தையலும் கட்டும் போட்டு, மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொண்டு மாமனாரோடு வீடு திரும்பினாள்.

அதற்குள் இச்செய்தி காட்டுத்தீபோல பரவிவிட்டது!

அம்பி ஐயர் மீது தீராத பக்திகொண்டவர், ஊர்த் தலைவர் ராசப்பன்.

அம்பி ஐயர் வாத்தியாராக இருந்தபோது, அவரது வகுப்பில் படித்தவன் ராசப்பன். அவர் அப்போது சொல்லிக்கொடுத்த சனாதன தர்மங்களைத்தான் இப்போதும் கடைப்பிடிக்கிறான் ராசப்பன்.

மூச்சிரைக்க வீட்டுக்குள் நுழைந்த ராசப்பன், வாத்தியாரே கொஞ்சம் பொறுங்க, அஞ்சே நிமிஷத்துல உங்க மரத்து மேல கல் விட்ட பயல்களைக் கொண்டுவந்து நிறுத்தறேன். உங்க செருப்பக் கழட்டி உங்க கையாலயே அடிங்க!

அம்பி வாத்தியார் தலைவலியோடு குறுக்கிட்டார்.

இப்படியாடா  பேசக் கத்துக்குடுத்தேன். ஊர்த் தலைவர் ஆனதும் புத்தியே மாறிடுச்சே!

நீங்க கத்துக்குடுத்ததெல்லாம் இந்தக் காலத்துக்கு உதவாது வாத்தியாரய்யா. நீங்க அடிக்கலேன்னா விடுங்க, நானே கூப்பிட்டு மிதி மிதின்னு மிதிக்கிறேன்.

நிறுத்துடா ராசப்பா. கல்லுவிட்டவன் ஒருத்தன், மிதிபடறவன் இன்னொருத்தனாடா?

ஊர்ல எவன் எவன் மாங்கா தேடி அலையறானுங்கன்னு எனக்குத் தெரியும் வாத்தியாரய்யா. இன்னிக்கு காலையிலகூட உங்க தெரு வழியாத்தான் கல்லும் கையுமா தெருப்பசங்க போய்ட்டிருந்தானுங்க. இப்பப் பாருங்க வேடிக்கைய... என்று சொல்லிவிட்டு வெளியேற முயன்ற ராசப்பனின் முதுகுச் சட்டையைப் பிடித்து இழுத்தார் அம்பி ஐயர்.

பாருடா ராசப்பா. பள்ளிக்கூடத்துல நான் உனக்கு பாடத்தை மட்டும் சொல்லித் தரலை; தர்மத்தையும்தான் சொல்லிக் குடுத்திருக்கேன். மறந்துட்டியாடா. பிறருக்கு நாம என்ன செய்றமோ அதுதான் நமக்கு திரும்பிவரும்.
என்ன சொல்றீங்க வாத்தியாரய்யா?

நான் சின்னப் பையனா இருந்தப்ப, எங்க வீட்டு மாமரம் சின்னது. அப்போ இது காய்க்கலை. அதனால குடியானவங்க தெருவுக்கு மாமரங்களைத் தேடிப்போறது வழக்கம். ஒருநாள் ஒரு வீட்டு மாமரத்துல கல் வீசினப்பபோ அது யார் மேலயோ பட்டுடுச்சு. ஐயோன்னு சத்தம். திரும்பிப் பார்க்காம ஓடி வந்துட்டேன். அது உனக்கு நினைவு இருக்காடா ராசப்பா?

அப்போதுதான் அந்தச் சம்பவம் ராசப்பனுக்கு நினைவுக்கு வந்தது. அப்போது அவன் இளைஞன்.

எவனோ ஒரு தெருப்பையன் தனது வீட்டு மாமரத்தின் மீது கல்விட, அது தன் தாத்தா இருளப்பன் தலையில பட்டுக் காயமாகி ரத்தம் பீறிட்டதும் தையல் போட்டதும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. கடைசியாக, தாத்தா இறந்தபோதுகூட அவரது தலையில் அத் தழும்பைத் தடவிப் பாத்தது நினைவுக்கு வந்தது.

நேத்து நடந்ததுபோல இருக்கே வாத்தியாரய்யா!

இன்னிவரைக்கும் அந்தக் கல்லை எரிஞ்சது யாருன்னே யாருக்குமே தெரியாதுடா ராசப்பா. ஆனா அன்னிக்கு எரிஞ்சவனுக்கு இன்னிக்கு தண்டனை வீடு தேடிவந்துடுச்சு பார்த்தியா என்று சொல்லி முடிப்பதற்குள் அவரது கால்களில் விழுந்தான் ராசப்பன்!

என்னை மன்னிச்சுடுங்க வாத்தியாரய்யா. உங்க மரத்து மேல கல்லு விட்டுட்டு ஓடிவந்தது என்னோட புள்ளைதான்! எனக்கு நல்லா தெரியும். அவன்தான் மூச்சிரைக்க ஓடிவந்து வீட்டுக்குள்ள ஒளிஞ்சான். நான் என்னமோ சும்மாதான் விளையாடறானுங்கன்னு நெனைச்சேன் சாமி, என்னை மன்னிச்சுடுங்க!

பாத்தியா, அவனவன் கடனை அவன்னவன்தான் தீர்க்கனுன்டா. பொறப்பே அதுக்குத்தான்டா. நான் உங்க தாத்தா மண்டைய உடைச்சதுக்கு, உன் புள்ள என் மண்டைய உடைச்சிட்டான். அதுக்கு இது சரியா போச்சு. இத்தனை நாளும் இந்த ஞானோதயம் வரலியேடா ராசப்பா!

என்ன ஞானோதயம் வாத்தியாரே. கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க…

மாங்கான்னா புளிச்சுடுமாடா? எதையுமே சொன்னா ருசிக்காதுடா. சாயங்காலமா கோயிலுக்கு இந்த வழியாத்தானே வருவே, அப்போ தெரிஞ்சுக்குவே. போடா போ என்றார் அம்பி ஐயர்.

சாயங்காலம்வரைக்கும் என்னால பொறுத்துக்க முடியாது வாத்தியாரே, இப்பவே சொல்லிடுங்க என்று கெஞ்சினான் ராசப்பன்.

நான் சொல்றதை நீ கேட்கமாட்டே, நீ சொல்றதை நான் கேட்கணுமா? நீ வாத்தியாரா இல்ல நான் வாத்தியாரா என்று தலையில் போட்டிருந்த கட்டை தொட்டுப் பார்த்து ராசப்பனை பார்த்து முறைத்தார் அம்பி ஐயர்.

அதற்கு மேல் அவனால் அங்கே நிற்க முடியவில்லை.

அம்பி ஐயர் டியூசன் நடத்தியபோது பயன்படுத்திய கரும்பலகை உடைந்துபோய் சுவற்றோடு சரிந்து கிடந்தது.

அவர் அக்கரும்பலகையை நோக்கித் தள்ளாடியபடி நடந்தபோது, ராசப்பன் வீட்டை விட்டு வெளியே நடந்தான்.

தினமும் ஏழு மணிக்கு வரும் ராசப்பன், அன்று மாலை நடை திறப்பதற்கு முன்னதாகவே புறப்பட்டுவிட்டான், அவ்வளவு ஆவல்!

அம்பி ஐயரின் வீட்டுக்கு அருகே வந்தபோதுதான், அவர் புதிர் போட்டதன் காரணம் புரிந்தது!

அவரது வீட்டுத் திண்ணையில் டியூஷன் கரும்பலகை வைக்கப்பட்டிருந்தது.
அதில் “இங்கு விலையில்லாத மாங்காய் கிடைக்கும். மரத்தின் மீது யாரும் கல்லெரிய வேண்டாம்” என்று அழகாக எழுதியிருந்தார் வாத்தியார்.

அதைப்படித்துவிட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டபடி, கோயிலுக்கு நடந்தான் ராசப்பன்.

வினைப் பயன்கள் அனுபவத்தே தீர வேண்டும் என்பது நியமம்.
***

ஆசனம்

சூரிய நமஸ்காரம்

பெயர் விளக்கம்
சூரியன் இல்லாமல் எதுவுமே இல்லை. அனைத்து உயிர்களின் சக்திக்கும் சூரியன்தான் ஆதாரம். பல்வேறு ஆசனங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள சூரிய நமஸ்காரம் என்ற ஆசனம், உடல் மன வளத்துக்கு உத்திரவாதமான ஆசனம்.

முதல் சுற்று
1. பிரணாம ஆசனம் - நேராக நின்றுகொள்ளவும். இரண்டு கைகளையும் எடுத்து மடக்கிக் கும்பிடவும்.


2. ஹஸ்த உத்தனாசனம் - சுவாசத்தை உள்ளிழுத்தவாறு கைளை மேலே உயர்த்திக்கெண்டே பின்பக்கமாகச் சாய்ந்து மல்லாந்த நிலையில் மார்பை ஆகாயத்தைப் பார்த்தவாறு வைக்கவும். தலையைப் நன்றாக பின்பக்கமாக தொங்கவைத்துக்கொண்டு நிறைய காற்றை உள்வாங்கவும்.

3. பாதஹஸ்தாசனம் - சுவாசத்தை மெள்ள வெளியிட்டவாறு முன்பக்கமாக வளைந்து குனிந்து, கைகளால் கால்கள் இரண்டையும் தொட்டுக்கொண்டு நிற்கவும்.


4. அஸ்வசன்சால ஆசனம் - இரண்டு கைகளையும் இரண்டு கால்களுக்கு பக்கவாட்டில் வைக்கவும். வலது காலை மட்டும் முழங்கால் தரையில் படுமாறு பின்பக்கமாக நீட்டி வைக்கவும்.

இடது உள்ளங்கை, வலது உள்ளங்கை, இடது பாதம் இம்மூன்றும் ஒரே கோட்டில் இணையாக இருக்க வேண்டும். இதே நிலையில் சுமார் ஆறு சுவாசங்கள் இருக்கவும்.

5. பர்வதாசனம் - பிறகு சுவாசத்தை வெளியிட்டவாறு இடது காலை பின்பக்கமாகக் கொண்டுசென்று, வலது காலுக்கு இணையாக வைத்து, முதுகை உயர்த்தி தலையை கவிழ்த்தி குன்றுபோல் நிற்கவும்.

6. அட்டாங்க நமஸ்காரம் - பின்னர் நெஞ்சுப்பகுதியை இறக்கிக்கொண்டே வந்து, இரண்டு கைகளுக்கும் நடுவே வைக்கவும். தாடை விரிப்பில் படுமாறு இருக்க வேண்டும். பிருஷ்டப் பகுதி படத்தில் காட்டியிருக்குமாறு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். இரண்டு கால்களும் விரிப்பின் மீது வைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு கால் விரல்களும் விரிப்பின் மீது ஊன்றப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாசனத்தில் உடம்பின் எட்டு பகுதிகள் மட்டும் (தாடை 1 + மார்பு 1 + உள்ளங்கைகள் 2 + முழங்கால்கள் 2 + கால் விரல் பகுதிகள் 2 = 8) தரையில் படிந்திருக்க வேண்டும்.

அஷ்டாங்க யோகத்தில் ஆறு சுவாசங்கள் எடுக்கவும்.

7. ஊர்த்துவமுக புஜங்காசனம் - பிறகு சுவாசத்தை உள்ளிழுத்தவாறு நெஞ்சை உயர்த்தி, முகத்தை ஆகாயத்தைப் பார்க்குமாறு வைக்கவும். அடிவயிறு மற்றும் தொடைகள், முழங்கால்கள் யாவும் விரிப்பின் மீது படிந்திருக்க வேண்டும்.

8. பர்வதாசனம் - அப்படியே முதுகை உயரரே தூக்கி, தலையை இரண்டு கைகளுக்கும் நடுவே குனிந்தபடி வைத்து, கால்களை மடக்காமல் விரைப்பாக நிற்கவும்.

9. அஸ்வசன்சால ஆசனம் - இப்போது இடதுகாலை இடது கை அருகே கொண்டுவந்து மடக்கிவைத்து, மீண்டும் அஸ்வசன்சால ஆசனத்துக்கு வரவும். முகம் மேல்நோக்கிப் பார்த்திருக்க வேண்டும். இடது உள்ளங்கை, வலது உள்ளங்கை, இடது பாதம் இம்மூன்றும் ஒரே கோட்டில் இணையாக இருக்க வேண்டும்.

10. பாதஹஸ்தாசனம் - அடுத்தபடியாக பின்னால் இருக்கும் வலது காலையும் முன்னால் கொண்டுவந்து, இடது காலோடு சேர்த்துவைத்து குனிந்து நிற்கவும்.

11. ஹஸ்த உத்தனாசனம் - பிறகு கைகளை நீட்டியவாறு நிமிர்ந்துகொண்டே வரவும். முகம் ஆகாயத்தைப் பார்ப்பது போன்று கைகள்இரண்டையும் பின்பக்கமாக நீட்டி வைக்கவும்.

12. பிரணாம ஆசனம் – இறுதியாக, சுவாசத்தை வெளியிட்டவாறு கைகளை தளர்த்திக்கொண்டே நேராக வந்து, கைகளை மடக்கி கும்பிட்டவாறு ஆரம்ப நிலையில் நிற்கவும்.

சூரிய நமஸ்காரத்தின் முதல் சுற்று முடிந்தது. அடுத்து, இரண்டாவது சுற்று ஆரம்பம். மேலே சொன்னவற்றை மீண்டும் தொடரவும்.

முக்கியக் குறிப்பு
இரண்டாம் முறை செய்யும்போது, குனிந்து பாதஹஸ்தாசனத்தில் இருந்து இடது காலைப் பின்பக்கமாக எடுக்கவும். முதல் முறையாக செய்தபோது வலது காலை பின்பக்கமாக எடுத்திருப்பீர்கள். இம்முறை இடது காலைப் பின்பக்கமாக எடுக்க வேண்டும். இறுதிநிலையில், இடது காலை முன்பக்கமாகக் கொண்டுவந்து சேர்த்து வைக்க வேண்டும். இதை மனதில் கொண்டு இரண்டாவது சுற்றைத் தொடரவும்.

பலன்கள்
சூரிய நமஸ்காரம் செய்யும்போது, நுரையீரல்களால் ஏராளமான காற்றை உள்இழுக்க முடிகிறது. அதுமட்டுமல்ல, குனிந்து நிற்கும்போது பெருமூளை, சிறுமூளை மற்றும் நரம்பு மண்டலங்களுக்கு ரத்த ஓட்டம் செல்கிறது. அதனால் நரம்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன.

மூளைக்கு பிரணா சக்தி செல்வதால், பிரணாயாமம் செய்வதற்கான ஆயத்த நிலைக்கு மூளை தயாராகிறது.

தவிர, நுரையீரல்கள், இதயம் இரண்டும் தலைகீழான முறையில் ரத்த ஓட்டம் பெறுவதால், பிராணாயாமம் செய்யும்போது உடல் முழுமைக்கும் பிரணா சக்தி தங்கு தடையில்லாமல் எடுத்துச் செல்லப்படுவதற்கு உதவிகரமாக இருக்கிறது.

காணொளி: ஐ.பிரியா
புகைப்படம்: சிவகாமி இளமதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com