கீழடி ஸ்பெஷல்: ஆதிச்சநல்லூர் மக்கள் வாழ்வியல்

உலக நாகரிகத்தின் தொடக்கம் பொருநை நதிக்கரை என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன். உலகத்தின் முதல் இனம் தமிழினம்
கீழடி ஸ்பெஷல்: ஆதிச்சநல்லூர் மக்கள் வாழ்வியல்

பொருநை நாகரிகம்
உலகத்தின் முதல் இனம் தமிழினம். அந்தத் தமிழ் இனம் தோன்றிய இடம் இந்தப் பொருநை நதிக்கரைதான் என்பதை ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி உறுதிப்படுத்தியிருக்கிறது. 
 
இங்கிருந்து பிறந்த நாகரிகம் உலகின் முதல் நாகரிகம் என்பதனை தாமிரம் என்ற பெயர் இந்த நதிக்கு சூட்டப்பட்டதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். ஆதிமனிதன் கண்டுபிடித்த முதல் உலோகம் தாமிரம்தான். அந்தத் தாமிரத்தின் பெயரில் ஒரு நதியே அமைந்திருக்கிறது, ஒரு ஊரே அமைந்திருக்கிறது என்றால், இங்குதான் ஆதிமனிதன் தோன்றியிருக்க வேண்டும் என்பதை அகழ்வாராய்ச்சிகளும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இங்கிருந்துதான் தாமிரம் தோன்றியது என்பதற்காகவும், தாமிரம் கண்டறியப்பட்ட இடம் என்பதாலும் பஞ்ச சபைகளில் இது தாமிர சபையாகிறது. அதனால்தான் மனித இனத்தின் முதல் நாகரிகம் தோன்றிய இடம் பொருநை நதிக்கரை என்கிறார்.

அலெக்ஸாண்டர் ரீ கண்டெடுப்புகள்
அலெக்ஸாண்டர் ரீ 1899-1900 இல் முதல் அகழாய்வுக் குழி எடுக்கும் நிலையிலேயே அப்பகுதிகள் மணல்குவாரிகளால் பாதிப்படைந்திருந்ததாக பதிவு செய்துள்ளார். கடந்த நூற்றாண்டில் ஆய்வாளர்களால் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அரும்பொருள்கள் போல் தமிழகத்தில் வேறு எந்த அகழாய்வுகளிலும் அரும்பொருள்கள் இதுவரை கிடைத்ததில்லை. 

வெண்கல பொருட்கள் 


ஆதிச்சநல்லூரில் வெண்கலத்தால் ஆன பொருள்கள் 123ம், ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மோதிரங்கள், கைவளைகள், வளையல்கள் மற்றும் வெண்கலத்தால் ஆன கிண்ணங்கள் (bowl), ஜாடிகள், குவளைகள், குடம், குவளை இருப்பு (Vase stand), கலயம் கைப்பிடியுடன் கூடிய குவளை, விளக்குகள் என வீட்டு உபயோகப்பொருள்கள், நாய், 5 மணியுடன் கூடிய கொலுசு (anklet with bells)பல்வகை விலங்கு உருவங்களுடன் கூடிய அலங்காரப் பொருள்கள் போன்றவை மிகுந்த அளவில் கிடைத்தன.

தமிழகத்தில் இதுவரை 175-க்கும் மேற்பட்ட ஊர்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தான் பெருமளவில் பொன் மற்றும் வெண்கலத்தால் ஆன பொருள்களும் கருப்பு, சிவப்பு நிறத்தால் ஆன முதுமக்கள் தாழிகளும் பெருமளவில் கிடைத்துள்ளன

இரும்பு வேளாண்கருவிகள்
ஆற்றங்கரைகளில்தான் நாகரிகம் முதன் முதலில் தோன்றி வளர்ச்சி பெற்றுள்ளது. நாடோடிகளாக அலைந்த ஆதி மனிதன் ஆற்றங்கரைகளில் தங்கி உழவுத்தொழில் செய்து பயிரிட்டு வாழ்ந்துள்ளான். ஆதிச்சநல்லூர் தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ளது. இங்கு கிடைத்துள்ள இரும்புக் கலப்பைகள்,கொழு/ ஏர்க்காறு எனும் கலப்பையின் முனைகள்(Ploughshare), மண்வெட்டிகள் போன்றவை உழவுத்தொழிலில் ஈடுபட்ட மக்கள் பயன்படுத்தியவை.

இரும்பு போர்க்கருவிகள்


பாதாளக் கரண்டிகள், திரிசூலம்(Trident), ஈட்டி(Spear), இரட்டைகூர் வாள்கள், முள் ஈட்டி(Barbed javelin), 5 ½ அடி நீளமுள்ள ஆயுதம்(Lance), குத்துவாள்(Dagger), கூரான அம்பு (Barbed arrow-heads), குறுங்கத்தி (lances with narrow blades), முனையில் ஜல்லி மற்றும் மணல் ஒட்டப்பட்ட கம்பி (Rod with gravel and quartz in corner), உளி (Chisel), ஊக்குகள், அறுவடை ஊக்குகள், கோடரிகள் என 394 இரும்புக் கருவிகள் கிடைத்துள்ளன.

இரும்பு ஆயுதங்கள் போர் ஆயுதங்களாக இருப்பதால் மன்னர்களும், வீரர்களும் இப்பகுதியில் வாழ்ந்திருக்கலாம். இவ்வூருக்கு அருகே ஆற்றின் வடக்கே அமைந்துள்ள கொங்கராயக்குறிச்சியில் பண்டைய நகரம் மற்றும் அரசர்கள் வாழ்ந்த அரண்மனையும் இருந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். மிகப்பெரிய போர் ஒன்று நடைபெற்று நகரமும் மக்களும் அழிந்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

தங்க அணிகலன்கள்


தங்கத்தால் ஆன அணிகலன்கள் 20ம் மற்றும் மணி அணிகலன்களும் பெருமளவில் கிடைத்துள்ளன. பொன் அணிகலன்களில் அருமணிகளைக் கோத்துள்ளனர். அலெக்ஸாண்டர் ரீ செய்த அகழாய்வில் பொன்னால் செய்யப்பட்ட நெற்றிச்சுட்டிகள், நெற்றிப்பட்டங்கள், தங்கச்சரம், தங்கத்துகள்கள் பல கிடைத்துள்ளன. இவை தட்டையான நீள்சதுர வடிவம் (Pyriform) அல்லது இலை வடிவில் உள்ளன. இவற்றின் இருபக்க ஓரங்களிலும் நூலைக் கோப்பதற்கான துளைகள் உள்ளன. இங்கு வாழ்ந்த மக்களால் சடங்கின் போது இவை நெற்றிப் பட்டங்களாகப் பயன்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். இது போன்ற பொன்னால் செய்யப்பட்ட நெற்றிப் பட்டங்கள் தமிழகத்தின் வேறு எந்த அகழாய்விலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் தமிழகத்தில் திருமணத்தின் பொழுது மணப்பெண்ணிற்கும், மணமகனுக்கும் தங்கமுலாம் பூசப்பட்ட செம்பாலான நெற்றிப் பட்டங்களைக் (Diadem) கட்டுவது மரபாகஇருந்துள்ளது.

தாழிகள்
இந்த இடம் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஈமக்காடாகப் பயன்படுத்தப்பட்டது. இங்கு மூன்று அடுக்குகளில் தாழிகள் மண்ணில் புதைக்கப்பட்டுக் காணப்படுகின்றன. ஆனால் இந்த இடத்துடன் தொடர்புடைய வாழ்விடம் எங்கு இருந்தது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.  அந்த விவரங்கள் அனைத்தும், ‘திருநெல்வேலி மாவட்ட வரலாற்று காலத்திற்கு முற்பட்ட பழம் பொருட்களின் பட்டியல்(Catalogue Of The Prehistoric Antiquities) என்ற தலைப்பில் தனிப்புத்தகமாக வெளியிடப்பட்டது. இதில் உள்ள எழுத்துக்கள் தமிழி எனலாம். இந்தப் பட்டியல்கள் மூலம் தான் ஆதிச்சநல்லூர் நாகரிகம் எவ்வளவு பழமையானது என்பது வெளி உலகுக்குத் தெரிய வந்தது.

அந்த புத்தகத்தில் அலெக்சாண்டர் ரீ குறிப்பிட்டு இருப்பதாவது:–
‘ஆதிச்சநல்லூர் கிராமத்திலும் அதன் அருகிலுமாக 110 ஏக்கர் பரப்புக்கும் மேலாக இந்த இடுகாடு காணப்படுகிறது. விவசாயத்திற்கு பயன்படாத இடமாகப் பார்த்து இந்த இடத்தை பழங்கால மக்கள் தேர்ந்து எடுத்து இருப்பது தான் இதன் சிறப்பு அம்சம் ஆகும். மரணக் கடவுளான எமனின் திசை தெற்கு என்பதால், இந்த இடம் நகரில் இருந்து தெற்குப் பக்கமாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு முதுமக்கள் தாழியும் சுமார் 6 அடி இடைவெளியிலும், 3 அடி முதல் 12 அடி அல்லது அதற்கும் ஆழமாகவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு ஏக்கர் பரப்பளவிலும் தலா 1,000 தாழிகள் இருக்கலாம். தென் இந்தியாவிலேயே மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான இடுகாடாக ஆதிச்சநல்லூர் விளங்குகிறது. சென்னை மாகாணத்தில் வரலாற்றுக்கு முந்திய கால இடங்களாக சுமார் நூறு இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கெல்லாம் ஒன்று அல்லது இரண்டு என்ற அளவில்தான் முதுமக்கள் தாழிகள் உள்ளன. ஆதிச்சநல்லூருக்கு ஈடான அளவுக்கு எங்குமே முதுமக்கள் தாழிகள் இல்லை.

‘அங்கு கிடைத்த மண்பாண்டங்கள் மிக நேர்த்தியானவை. மற்ற எந்தப் பகுதியிலும் இல்லாத காலத்திலேயே அங்கு இரும்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. பல உலைகள் செயல்பட்டதற்கான ஆதாரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’என அலெக்சாண்டர் ரீ தனது கருத்தைப் பதிவு செய்து இருக்கிறார். ஆதிச்சநல்லூர் நாகரிகம் பற்றி, முதன்முதலில் சாத்தான்குளம் அ.ராகவன் 1980-ல், ‘ஆதித்தநல்லூரும், பொருநை வெளி நாகரிகமும்’ என்றதொரு நூலினை எழுதினார்.

பானை வகைகள்
இங்கு கருப்பு-சிவப்பு, சிவப்பு, கருப்பு ஆகிய வகைப் பானைகள் கிடைத்துள்ளன. இவை எகிப்த்-ல் கிடைத்த பானைகளுடன் ஒத்துப் போகின்றன. ஒரு பானையின் மீது ஒரு பெண்ணுருவம், நெற்கதிர்கள், ஒரு மான் மற்றும் ஒரு பல்லி ஆகியவற்றின் உருவங்கள் ஒட்டுருவமாகக் (applique) காணப்படுகின்றன.

காலக்கணிப்பு 
மத்திய அரசு தொல்லியல் துறை இரண்டு காலங்களை அறிவியல் முறைப்படி வரையறுத்துள்ளது; வெப்ப உமிழ் காலக்கணிப்பு (Thermoluniscence dating) வழியாக இந்த இடம் ஒன்று கி.மு. 905 மற்றொன்று கி.மு. 696. இவை இரண்டுமே இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளில் காலக்கணிப்பு செய்யப்பட்ட அகழாய்வு இடங்களில் காலத்தால் முற்பட்டவையாக விளங்குகின்றன. அதாவது இன்றிலிருந்து 3000 முதல் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனலாம்.

மட்பாண்டங்கள்
தாழிகள் (தாழிக்குள் தாழி, மனித எலும்புக்கூடுகள், மிகச் சிறிய பாத்திரங்கள், மக்கிய நிலையில் கிடைத்த அரிசி, இரும்புக்கத்தி, வளையல், உமி, பொன் பட்டங்கள், வெண்கல ஏனங்கள்)

இரும்பின் பயனை உணர்ந்து, அதைப் பயன்படுத்தும் தொழில் நகரமாக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். முதுமக்கள் தாழியில் உள்ள தானியங்களைப் பார்க்கும்போதும், இற்றுப்போன துணிகளைக் காணும்போதும், சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பே பயிர்த் தொழில் மற்றும் நெசவுத் தொழிலில் தமிழர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. 

ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி மையம்


ஆதிச்சநல்லூரில் இருக்கும் 114 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது. இங்கு எடுக்கப்பட்ட பழம்பொருட்களை இங்கேயே பாதுகாக்க வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, அருங்காட்சியகம் ஒன்று 25 லட்சம் ரூபாய் செலவில் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கே ஒன்றும் கிடையாது. வாயில் இரும்புக் கதவுகள் உடைக்கப்பட்டுக் கிடக்கின்றன. கட்டிடம் முழுவதும் உடைந்த மது பாட்டில்கள்.. உடைந்த ஓடுகள்.. கதவு உடைக்கப்பட்ட நிலையில் குளியலறை. அருங்காட்சியகத்தில் அலுவலர் நியமிக்கப்பட்டு, பொருட்களும் வைக்கப்பட்டிருந்தால், மக்கள் பார்த்துச் செல்ல ஏதுவாக இருக்கும்.

தமிழி எழுத்துக்கள் 
சிந்துவெளி மற்றும் தமிழகத்து ஊர்களில் கிடைத்த பானை ஓடுகளில் குறியீடுகளும், எழுத்துகளும் உள்ளன. ஆதிச்சநல்லூரில் பானை ஓடுகளில் எழுத்துக்கள் இல்லை என்பதால் எழுத்து வரி வடிவம் தோன்றியிருந்த மிகப்பழங்காலத்தைச் சேர்ந்தவை இவை என்று அறியலாம்.

மனிதர்களின் மண்டையோடுகள்
அலெக்ஸாண்டர் ரீதன் ஆய்வில் பெருமண்டையோடுகளை (Hyperdolichosephalic) ஆய்வு செய்தார். அதில் 40 பள்ளி, 40 பறையன் மற்றும் 40 வேளாளர் எனக் குறிப்பிடுகிறார்.

2004 - இந்திய அரசு தொல்லியல் துறையின் அறிஞர் சத்தியமூர்த்தி 2004-ம் ஆண்டு நடத்திய ஆய்வே முக்கியமானது. அதில், பல்வேறு எலும்புக்கூடுகள், உடையாத மண் பாண்டங்கள், பல்வேறு வடிவக் கிண்ணங்கள், பானைகள், குடுவைகள், ஜாடிகள், கழுத்து மாலைகள், மணிகள், மாவரைக்கும் கல், கழுத்தணிகள், காப்புகள், வளையல்கள், மோதிரங்கள் என நிறைய சான்றுகள் கிடைத்து உள்ளன.

ஆதித்தநல்லூரில் கிடைத்த தாழி, பலுசிஸ்தாநனில் கிடைத்த தாழி, சிந்துசமவெளியில் கிடைத்த தாழி, செங்கல்பட்டில் கிடைத்த தாழிகள், தென்னிந்தியாவில் கிடைத்துள்ள தாழிகள் தமிழர்கள் பண்பாட்டு தொடர்பை கொண்டுள்ளதாகவும், சங்கிலி பிணைப்புபோல உள்ளதாகவும் மேற்குவங்க தொல்லியல் ஆராய்சியாளர் ஆர்.டி. பானர்ஜி உறுதிபடுத்தியுள்ளார். 10 வருடங்கள் ஆகியும் ஆய்வு குறித்த அறிக்கையை இன்னும் தாக்கல் செய்யவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com