கீழடி ஸ்பெஷல்: சங்க கால தமிழர்களின் நெசவு, அணிகலன்கள் மற்றும் பொழுது போக்குகள்

கீழடி அகழாய்வுகளில் நூல்களை நூற்க பயன்படும் தக்களி (Spindle whorls), துணிகளில் உருவ வடிவமைப்புகளை வரைவதற்கு உபயோகப்படுத்தப்படும் எலும்பிலான கூரிய முனைகள்கொண்ட
கீழடி
கீழடி


நெசவு (Weaving Industry)

கீழடி அகழாய்வுகளில் நூல்களை நூற்க பயன்படும் தக்களி (Spindle whorls), துணிகளில் உருவ வடிவமைப்புகளை வரைவதற்கு உபயோகப்படுத்தப்படும் எலும்பிலான கூரிய முனைகள்கொண்ட தூரிகை (20), தறியில் தொங்கவிடும் கருங்கல் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட குண்டு,செம்பினாலான ஊசி, சுடுமண்பாத்திரம் போன்ற தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்தியத் தொல்லியல் துறை ஏற்கனவே மேற்கொண்ட அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட கட்டுமானங்கள் சாயத்தொழிற்சாலை இருந்ததற்கான சான்றுகள் என்று கூறியுள்ளது.

தற்போதைய அகழாய்வுகளிலும் கிடைத்துள்ள நெசவு தொடர்பான தொல்பொருட்கள், இப்பகுதியில் நெசவுத் தொழில் சிறந்து விளங்கியதற்குச் சான்று பகர்கின்றன.

மதிப்புறு அணிகலன்களும்,ஏனைய அணிகலன்களும் தங்கத்தினால் ஆன தொல்பொருட்கள் (Precious ornaments )
 


கீழடியில் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் தங்கத்திலான ஏழு ஆபரணத் துண்டுகள், செம்பு அணிகலன்கள், மதிப்புமிக்க மணிகள், 4000க்கும் மேற்பட்ட கல்மணிகள், கண்ணாடி மணிகள், சுடு மண்ணாலான மணிகள், சங்கு வளையல்கள், தந்த வளையல்கள், பளிங்கு கற்களிலான மணிகள் ஆகிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, இத்தகைய மதிப்புறு அணிகலன்களும், ஏனைய அணிகலன்களும் சங்க காலச் சமூகம் வளமையுடன் இருந்ததற்கான சான்றுகளாகும்.

விளையாட்டு மற்றும் பொழுது போக்குகள் (Gamesmen and Pastimes)
தமிழ்நாட்டு அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ஆட்டக்காய்கள் அன்றைய சமுதாயத்தின் வாழ்க்கை முறையையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் பிரதிபலிக்கின்றன. அகழாய்வில் கிடைக்கப்பெற்ற விளையாட்டுப் பொருட்களில் பெரும்பாலானவை சுடுமண்ணால் ஆனவை.

கீழடி அகழாய்வில் பெண்கள் விளையாடும் விளையாட்டுப் பொருளான வட்டச்சில்லுகள் 600 எண்ணிக்கையிலும் (தற்போதும் இப்பகுதியில் இவ்விளையாட்டு ‘பாண்டி’ என்ற பெயரில் விளையாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது), தாய விளையாட்டுக்கான பகடைக்காய்களும் கிடைத்துள்ளன.

சிறுவர்கள் கயிறு கட்டி விளையாடும் சுடுமண்ணாலான வட்டச்சுற்றிகள், வண்டிஇழுத்து விளையாடும் வண்டிகளின் சக்கரங்கள் கிடைத்துள்ளன. மேலும், பெரியவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் விளையாடும் சதுரங்க விளையாட்டிற்கு பயன்படும் பல்வேறு அளவிலான 80 சதுரங்கக் காய்கள் கிடைத்துள்ளன.

கீழடியில் அதிக அளவில் கிடைத்துள்ள இந்தத்தொல்பொருட்கள் சங்க காலத்தில் ஆண், பெண், சிறுவர்கள் விளையாட்டினை கண் முன்னே படம்பிடித்துக் காட்டுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com