Enable Javscript for better performance
அறத்தை முன்னெடுப்பதே இலக்கியம்- Dinamani

சுடச்சுட

  

  அறத்தை முன்னெடுப்பதே இலக்கியம்

  By எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர்  |   Published on : 30th December 2019 04:27 PM  |   அ+அ அ-   |    |  

  sr

   

  வேறு எந்த இலக்கியத்தையும்விட, தமிழ் இலக்கியத்திற்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. அது எல்லாக் காலத்திலும் மானுட அறத்தை முதன்மைப்படுத்தியே வந்திருக்கிறது. மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத் தருகிறது.வெறுமனாக இவை பொழுதுபோக்கிற்காகப் படைக்கப்பட்ட இலக்கியங்களே இல்லை. இன்னும் சொல்லப் போனால் இயற்கையை நேசிக்கவும், மனிதர்களை நேசிக்கவும், நிலம் சார்ந்து இந்த மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று இந்த இனத்தினுடைய வரலாற்றையும் அல்லவா நம்முடைய இலக்கியம் பதிவாக்கி இருக்கிறது!

  நாம் நம்முடைய மொழியின் சிறப்புகளை இழந்துவிட்டோம். அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போகவில்லை. நம்முடைய வரலாற்றை மறந்தவர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வரலாற்றை மறந்து,மொழியை மறந்து, யாரோ எங்கோ உருவாக்கி வரக்கூடிய சந்தைக்கு நம்முடைய இலக்கியத்தைப் பலிகொடுப்பது என்றால் அதற்கு நான் ஒப்பமாட்டேன். அது இலக்கியம் இல்லை.

  வரலாற்றை நாம் பார்ப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் ஒரு வரலாற்றுப் பார்வை வேண்டும். அவர் ஒரு கவிதை எழுதினாலும், கதை எழுதினாலும், கட்டுரை எழுதினாலும் அவருக்கு வரலாற்று நோக்கு என்று ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். யாருக்காக, எதை எங்கிருந்து எழுதுகிறார் என்பது முக்கியமானது.

  முன்னொரு காலத்தில் எல்லாம் எழுத்தாளர்கள் இருந்தார்கள். மன்னர்களோடு இருந்தார்கள்;துதி பாடினார்கள்; புகழ்பாடினார்கள். 19-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு அப்படியல்ல. ஒரு ஜனநாயகம் உருவானது. எழுதுகிறவன் சாமானியன்; எழுதப்படுகிற விஷயம் சாமானியனுடைய வாழ்க்கை.கேட்பவனும் சாமானியனுக்கு உரியவனாக இருந்தால் அவன் அந்த வாழ்க்கையைக் கேட்கலாம் என்று. சாதாரண ஏழை, எளிய மக்களினுடைய குரல் 19-ஆம் நூற்றாண்டில்தான் இலக்கியத்தில் ஒலிக்கத் தொடங்குகிறது.

  தமிழனுக்குக் கிடைத்த மிகப்பெரிய கொடை பாரதி. அவர்தான் முதன் முதலாக உலகு தழுவிய இலக்கியத்தோடு தமிழ் இலக்கியம் ஒன்றிணைய வேண்டும் என்று விரும்பியவர். அவர் ஷெல்லியைத் தன்னுடைய ஆசானாகக் கருதுகிறார். தமிழில் அப்படி ஒரு முன்னோடியை நான் கண்டது இல்லை. நம்முடைய ஆசான்கள் நம்மிடம்தான் இருந்தார்கள். ஆனால், உலகு தழுவிய ஒருவரைத் தன்னுடைய ஆசானாகக் கருதி, உலக இலக்கியத்தோடு தமிழ் இலக்கியமும் ஒன்றிணைய வேண்டும் என்ற கனவு பாரதிக்குத்தான் இருந்தது.

  ஜனநாயகப்படுத்துதலும் உலகு தழுவிய இலக்கியத்தோடு ஒன்றிணைந்து கொள்ளுவதும்தானே நவீன இலக்கியத்தினுடைய வருகை. அப்படித்தான் நவீன இலக்கியம் நம்மிடம் வளர்ந்தது; உருவானது. அதைக் கல்வி நிலையங்களுக்கும், இலக்கிய இயக்கங்களுக்கும் தூக்கிச் சுமந்து, புத்தகங்களை விற்று, பலர் தம் வாழ்க்கையை அழித்துக்கொண்ட தியாகமும் கொண்டதுதான் தமிழ் இலக்கியம். இது என்றோ தோன்றி அச்சிடப்பட்ட புத்தகங்களால், இயந்திரங்களால் உருவான மாற்றம் அல்ல. ஆனால் நம் காலத்தில் அதை வெறும் விற்பனைப் பொருளாகப் பார்க்கும்போது நாம் ஒன்றை மறந்துவிடுகிறோம்; இதற்குப் பின்பு இதற்காக அர்ப்பணித்துக்கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள்; வாழ்க்கை இருக்கிறது.

  தமிழ் கற்று, தமிழ் மொழியைத் தன் வாழ்க்கையெல்லாம் சொல்லித் தருவதையும், இலக்கியத்தைத் தம்முடைய வாழ்க்கையை அறமாகக்கொண்ட எத்தனை அறிஞர்கள் இங்கே கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறார்கள்? அவர்களுடைய படைப்புகள் வாசிக்கப்படவே இல்லை. மறுவாசிப்புக்கு உள்ளாகவே இல்லை. படிக்காத ஒரு மனிதன் முன்பு ஒருவன் ஒரு கிராமத்தில் இருந்து கிளம்பி வந்தால் எழுத்தாளன் ஆகிவிடலாம். ஒரு கி.ராஜநாராயணன், ஒரு சுயம்புலிங்கம் என்று எத்தனையோ முன்னோடிகள் அப்படியிருக்கிறார்கள். இன்றைக்கு அது நடக்காது. 

  இன்றைக்குப் படித்தவர்களினுடைய உலகம் - குறிப்பாக, இணையம் போன்ற ஊடகத்தில் அத்தனை பேரும் படித்தவர்கள்தான் இருக்கிறார்கள். ஆனால் படித்தவர்கள் செய்கிற சூதும், வஞ்சனையும் வன்முறையும்தான் சகிக்க முடியால் இருக்கிறது.யோசித்துப் பாருங்கள், அன்பிற்கு இடமேயில்லை. ஜப்பானில் ஒரு புகழ் பெற்ற சம காலத்து எழுத்தாளர் இருக்கிறார். ஹாரூக்கி முரோகாமி என்று சொல்லுகிறார்கள் அவரை. அவருடைய நேர்காணல் ஒன்றைப் படித்தேன். அவர் குறிப்பிடுகிறார் - அது அவர்களுக்கு அல்ல, நமக்கும் பொருந்தக்கூடிய ஒன்றுதான் - அவர் ஒரு கதையை உதாரணமாகச் சொல்லுகிறார்.

  ""எது இலக்கியம்?'' என்று கேட்டபோது, ஒரு பெரிய சுவர் ஒன்றை ஓர் அரசன் எழுப்பி விடுகிறான். இரண்டு ஊர்களுக்கு நடுவே உள்ள பாதையை அடைத்து ஒரு சுவரை எழுப்பிவிடுகிறான். அந்தச் சுவரைக் கடந்து அந்தப் பக்கம் இருப்பவர்கள் போக முடியவில்லை. இந்தப் பக்கம் இருப்பவர்கள் வர முடியவில்லை. ஆனால், அரசனுடைய ஆணை என்பதால் மீறவும் முடியவில்லை. கட்டுப்பட்டு இங்கிருப்பவர்கள் எல்லாம் நாற்பது ஐம்பது மைல் சுற்றிப் போகிறார்கள்.

  அந்த ஊரில் இருக்கக்கூடிய ஒரு பறவையினுடைய ஒரு முட்டை யோசித்ததாம். நாம் போய் அந்தச் சுவரின் மீது மோதினால் என்ன? சுவர் உடைந்துவிடாதா? அது இறங்கிப் போய் அந்த சுவரின் மீது மோதியதாம்.மோதினால், முட்டை உடைந்து சிதறத்தானே செய்யும். அது கற் சுவர். ஒரு முட்டை மோதி உடைந்து சிதறியதும், அடுத்த முட்டை இறங்கி வந்து "அந்த முட்டைக்கு இருக்கிற தைரியம் எனக்குக் கிடையாதா? நானும் மோதுகிறேன்' என்று வந்தது.

  ஒவ்வொரு முட்டையாகக் கற்சுவரின் மீது மோதி மோதி தோற்றுப்போய், முட்டைகள் விழும்போது மக்கள் பரிகாசம் செய்தார்கள். ""முட்டைகள் மோதி ஒருபோதும் சுவர் இடிந்துவிடாது''. அந்த முட்டைகள் அசரவேயில்லை. ஒவ்வொரு பறவையிடுகிற முட்டையும் அந்தச் சுவரின் மீது மோதி மோதி, காலம் கடந்து ஒருநாள் ஒரு முட்டை மோதியது. சுவர் இரண்டாக உடைந்து விழுந்தது.

  அந்த எழுத்தாளர் சொன்னார்: ""தன்னை அழித்துக் கொள்வதின் வழியாக எந்த ஒரு பெரிய அதிகாரத்தையும் எடுத்து அழித்துவிட முடியும் என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது. அது எதற்காக என்றால் மொழிக்காக, இனத்துக்காக, அடையாளத்திற்காக, மரபிற்காக, நம்முடைய பெருமைகளுக்காக நம்மை அழித்துக் கொள்வது தவறில்லை''. இலக்கியம் அப்படித்தான் எல்லாக் காலத்திலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கதையை அவர் சொல்லிவிட்டுச் சொல்லுகிறார். ""எங்கள் காலத்தில் நாங்கள் எல்லாம் முட்டைகள்தான், பலவீனமானவர்கள்தான். கற்சுவரில் மோதும்போது நீங்கள் எல்லாம் பரிகசிக்கத்தான் செய்வீர்கள். ஆனால் ஒன்றை உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். நாங்கள் தொடர்ந்து இயங்கினால் அது உடையத்தான் செய்யும். எந்தக் கற்சுவரும் அப்படியெல்லாம் உடையாத சுவர் கிடையாது. அதற்குப் பலியாவதற்குக் கொஞ்சம் பேர் வேண்டும்.'' 

  சென்ற தலைமுறையில் பல தமிழறிஞர்கள் அப்படியிருந்தார்கள். இந்தத் தலைமுறையில் எங்களைப் போன்றவர்கள் வருவோம். அடுத்த தலைமுறையிலும் அப்படி ஆள்கள் வருவார்கள். ஆனால் தமிழ் வளரும் நண்பர்களே. தமிழ் மேம்படும். தமிழ் மொழியும் இலக்கியமும் சர்வதேச அரங்கில் மிகப்பெரிய இடத்தை அடையும்.

  இன்று எழுதுகிற ஒருவனுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், நம்பிக்கை உன் நெஞ்சில் வேண்டும். நீங்கள் எழுதுவது தமிழ்தான் என்றாலும் தமிழ் இலக்கியம், தமிழ்நாட்டில் எழுதப்படுகிற இலக்கியம் அல்ல. உலகு தழுவிய இலக்கியம். நம் சகோதரர்கள் உலகமெங்கும் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். கனடாவில் எழுதுகிறார்கள், மலேசியாவில் எழுதுகிறார்கள்; சிங்கப்பூரில் எழுதுகிறார்கள். எல்லாத் தேசங்களிலும் தமிழ் எழுதுகிறோம்.சொல்லப்போனால் இத்தனை தேசங்களில் தமிழ் எழுதப்பட்டும் உலக அங்கீகாரம் கிடைக்கவில்லை.

  இன்றைய தேவை என்று நான் கருதுவது நாம் கொண்டு வந்து சேர்த்ததுபோல், நாம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டிய செல்வங்கள் நிறைய இருக்கின்றன. உலக அரங்கிற்கு நம்முடைய பங்களிப்பைக் கொண்டு போய்ச் செலுத்துவோமே. எத்தனை அரிய படைப்புகள் தமிழில் இருக்கின்றன. எந்த மொழியிலாவது சிறந்த எழுத்தாளர் யார் என்று கேட்டால் ஒருவரைச் சொல்லலாம்; இருவரைச் சொல்லலாம். தமிழில் அப்படிப் பட்டியல் போடவே முடியாது. யார் பட்டியல் போட்டாலும் ஓராயிரம் பேர் இருக்கிறார்கள். சிறந்த கவிஞர்கள், சிறந்த எழுத்தாளர்கள், சிறந்த கட்டுரையாளர்கள் என்று. ஆனால் இவர்களை உலக மொழிக்குத் தெரியவே இல்லை.

  ஆங்கிலத்தில் வாசிப்பவர்களுக்கு,சைனத்தில் வாசிப்பவர்களுக்கு, பிரெஞ்சில் வாசிப்பவர்களுக்கு இவர்களைத் தெரியாது. இன்றையத் தேவையில் இது முக்கியமென்று கருதுகிறேன். இன்னொன்று இணையம் வளர்ந்தபோது இணையத்தின் வழியாக அதை வாசிக்கிற ஒரு புதிய தலைமுறை உருவாகியிருக்கிறது. அவர்களுக்கு ஏற்றாற்போல நாம் பழைய இலக்கியங்களை மறுவாசிப்பு செய்யவும், எளிமைப்படுத்தவும் தேவைப்படுகிறது.

  ஷேக்ஸ்பியரை இன்று வாசிப்பவர்களுக்காக நோ ஃபியர் ஷேக்ஸ்பியர் என்று ஒரு எடிஷன் வெளியிடுகிறார்கள்."ஷேக்ஸ்பியரைக் கண்டு பயப்பட வேண்டாம். எளிமையாகப் படிக்கலாமே' என்று. அதைப் படிப்பவர்கள் எல்லாம் கல்லூரி மாணவர்கள். ஆனால்,தொல்காப்பியம் படிப்பதற்கு அப்படி ஒரு புத்தகம் எழுதப்படவில்லை. நம்மிடமும் இன்று நாம் நிறைய புதிய புத்தாக்கங்களை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது.

  அதே நேரத்தில் இன்றைய இலக்கியம் ஒரு பொறுப்புணர்ச்சி கொண்டிருக்கிறது. யார் பொறுப்புணர்ச்சியோடு அறத்தோடு அதை முன்னெடுத்துச் செல்கிறார்களோ அவர்கள் செய்வதுதான் இலக்கியம். அதுதான் இலக்கியப் பணி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai