சிங்களாந்தகபுரம் அமரேசுவரம் கோயில் கல்வெட்டுகள்

இக்கோயிலிலிருந்து இந்தியத் தொல்லியல்துறையின் கல்வெட்டுப் பிரிவு 1943இல் 10 கல்வெட்டுகளைப் படியெடுத்து அவற்றின் சுருக்கங்களைப்
சிங்களாந்தகபுரம் அமரேசுவரம் கோயில் கல்வெட்டுகள்

 சிராப்பள்ளித் துறையூர்ச் சாலையில் ஏறத்தாழ 40 கி. மீ. தொலைவில் காளிப்பட்டியிலிருந்து இடப்புறம் பிரியும் சாலையில் 1 கி. மீ. தள்ளியமைந்துள்ளது கல்வெட்டுகளில் சிங்களாந்தகபுரம் என்றழைக்கப்படும் சிங்களாந்தபுரம். சோழர் காலத்தில் வணிகநகரமாக விளங்கிய இவ்வூரின் நடுப்பகுதியில் உள்ளது கல்வெட்டுகளில் அமரேந்திர ஈசுவரமுடையார் என்றழைக்கப்படும் அமரசுந்தரேசுவரர் கோயில்.

 இக்கோயிலிலிருந்து இந்தியத் தொல்லியல்துறையின் கல்வெட்டுப் பிரிவு 1943இல் 10 கல்வெட்டுகளைப் படியெடுத்து அவற்றின் சுருக்கங்களைப் பதிப்பித்துள்ளது. அந்தக் கல்வெட்டுகளின் பாடங்களைப் படித்தறிய மேற்கொண்ட களஆய்வின்போது அவற்றுள் ஒன்றிரண்டு தவிர ஏனைய அனைத்தும் திருப்பணிகளால் சிதைக்கப்பட்டுச் சிதறுண்டு கிடப்பதைக் காணமுடிந்தது. துணுக்குகளாய்க் கட்டுமானத்தின் பல்வேறு இடங்களில் நுழைக்கப்பட்டிருக்கும் அக்கல்வெட்டுகளைத் தொடர்புபடுத்திப் பாடங்களைக் கண்டறிய மேற்கொண்ட முயற்சியின் போது 17 புதிய கல்வெட்டுகளும் பல துண்டுக் கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டன. இவ்வூர்ப் பெருமாள் கோயிலில் நடப்பட்டுள்ள பலகைக் கல்லில் ஒரு கல்வெட்டும்  ஊர்த்தெருவில் உள்ள சந்திக்கல்லில் ஒரு கல்வெட்டும்  உள்ளன. 
மன்னர் பெயரற்ற அவற்றின் சுருக்கங்களும் கல்வெட்டறிக்கையில் இடம்பெற்றுள்ளன. சந்திக்கல் கல்வெட்டின் பாடம் ஆவணம் 17ஆம் தொகுதியில் பதிவாகியுள்ளது.

 இக்கோயிலிலிருந்து தொல்லியல்துறையால் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் முதல் இராஜேந்திரசோழரின் 5ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டே காலத்தால் முற்பட்டது. இதே ஆட்சியாண்டில் இம்மன்னரின் புதிய கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இவர் காலத்தனவாக 9ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றும் ஆட்சியாண்டற்ற கல்வெட்டுகள் இரண்டும் இங்குள்ளன. முதல் குலோத்துங்க சோழரின் 28, 32ஆம் ஆட்சியாண்டுகளில் 2 கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதே மன்னரின் 45ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் ஆட்சியாண்டற்ற இரண்டு கல்வெட்டுகளும் களஆய்வில் கண்டறியப்பட்டன. மூன்றாம் இராஜராஜரின் 24ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் இரண்டும்
சடையவர்மர் சுந்தரபாண்டியரின் 22ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றும் 11 மன்னர் பெயரற்றனவாய் 2 கல்வெட்டுகளும் கல்வெட்டறிக்கையில் பதிவாகியுள்ளன.

 புதிதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளுள் ஒன்று சடையவர்மர் சுந்தரபாண்டியர் காலத்தது. ஒன்று, முதல் இராஜாதிராஜர் மெய்க்கீர்த்தியுடன் கிடைத்துள்ளது. எஞ்சிய புதிய கண்டுபிடிப்புகளும் துண்டுக் கல்வெட்டுகளும் சோழர் கால எழுத்தமைதியில் இருந்தபோதும் அவை பொறிக்கப்பட்ட காலத்திற்குரிய மன்னரைக் கண்டறியக்கூடவில்லை. சில துண்டுக் கல்வெட்டுகள் மெய்க்கீர்த்திகளின் எச்சங்களாக உள்ளன. அவற்றுள் ஒன்று வீரராஜேந்திரரையும் மற்றொன்று ஸ்ரீவல்லபப் பாண்டியர் (1120-1146) அல்லது விக்கிரமபாண்டியரையும் (1283-1296) சுட்டுகின்றன.

சிங்களாந்தகபுரம் 
  கல்வெட்டுகளில் இக்கோயில் உள்ள ஊர் சிங்களாந்தகபுரம் என்றே தொடக்கம் முதல் அழைக்கப்பட்டுள்ளது. இலங்கையை வென்றமை குறித்து முதல் இராஜராஜருக்குச் சிங்களாந்தகன் என்ற பெயர் வழங்கியது. அப்பெயரால் உருவாக்கப்பட்ட ஊராகச் சிங்களாந்தகபுரத்தைக் கருதலாம். ஊர்ப்பெயரின் பின்னொட்டாக உள்ள ‘புரம்’, இவ்வூரை நகரத்தார் குடியிருப்பாகக் காட்டுகிறது. அதற்கேற்பக் கல்வெட்டுகளும் இவ்வூரின் ஆட்சியாளர்களாக நகரத்தாரையே சுட்டுகின்றன. சோழர் காலத்தில் இவ்வூர்க் கரிகாலக்கன்ன வளநாட்டின் கீழிருந்த வள்ளுவப்பாடி நாட்டிற்கு உட்பட்டதாக அமைந்திருந்தது. இவ்வள்ளுவப்பாடிநாடு பிற்சோழர் காலத்தே இருபிரிவுகளாகிக் கீழ், மேல் வள்ளுவப்பாடி நாடுகளாக அறியப்பட்டது. 

நாடு, ஊர்
  இக்கோயில் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள பிற நாடுகளாக உச்சங்கப் பாண்டிநாடு, வடவழிநாடு, பாச்சில் குறுவட்டம், உறையூர்க் கூற்றம், கொல்லிமலை நாடு ஆகியன அறியப்படுகின்றன.  கொல்லிமலை நாடு கொங்க வீரசோழ மண்டலத்துக்கு உட்பட்டிருந்தது. கொடையாளர்கள், சான்றாளர்களின் வாழிடங்களாகவும் கொடையளிக்கப்பட்ட, விற்கப்பட்ட நிலங்களின் இருப்பிடங்களாகவும் 32 ஊர்களின் பெயர்களை இங்குள்ள கல்வெட்டுகள் வழங்குகின்றன. அவற்றுள் கொழுவாடிப் பனையூர், காட்டூர், கிரமந்தூர், துறையூர், கிரியூர், சிறுகண்ணனூர், ஊற்றத்தூர், கரும்பனூர், பிலாண்டூர், ஆதனூர், அடியூர், வெங்களூர் ஆகிய 12 ஊர்களின் பெயர்கள் ஊர் என்ற பின்னொட்டுடன் முடிய, அவனிமங்கலம், இஞ்சிமங்கலம், கீழ்மாறமங்கலம் ஆகிய மூன்றும் மங்கலம் எனும் பின்னொட்டுடன் பிராமணர் குடியிருப்புகளாக இருந்தன. 

  சிற்றம்பரான உத்தமசோழபுரம், கிடாரங் கொண்ட சோழபுரம், திரிசிரபுரம் ஆகியவை புரம் எனும் பின்னொட்டுடன் வணிகக் குடியிருப்புகளாகத் திகழ்ந்தன. பல்வேறு பின்னொட்டுக்களைக் கொண்ட ஊர்களாக வேப்பந்திட்டை, சிறுகல், குன்றணி, புல்லாணி, குறுச்சி, மேல்பாலை, வாழ்பாறை, செட்டிக்குளம், வெண்மணி, உலகப்பள்ளி ஆகிய 10 ஊர்கள் அறியப்படுகின்றன. நல்லூர் என்ற பின்னொட்டுடன் அணிகோவைநல்லூரும் குடி என்ற பின்னொட்டுடன் நெட்டணங்குடி, பூலாங்குடி, சிறு கள்ளிக்குடி ஆகிய மூன்று ஊர்களும் இருந்தன.

 துறையூர் மேல்வள்ளுவப்பாடி நாட்டில் இணைக்கப்பட்டிருந்தது. சிங்களாந்தகபுரம், கிடாரங் கொண்ட சோழபுரம், சிற்றம்பரான உத்தமசோழபுரம் ஆகிய ஊர்கள் நகரத்தார் ஆட்சியிலும்  பிலாண்டூர் ஊரார் ஆளுகையிலும் வடவழி, வள்ளுவப்பாடி, பாச்சில் குறுவட்டம், கொல்லிமலை ஆகிய நாடுகள் நாட்டார் மேலாண்மையிலும் இருந்தமை கல்வெட்டுகளால் தெரியவருகிறது. நிலவிற்பனை, வரிநீக்கம், வரிப் பொறுப்பேற்றல் முதலியன இந்த ஆட்சியமைப்புகளின் செயற்பாடுகளாக இருந்தன. கீழ்வள்ளுவப்பாடி நாட்டார் துறையூர் சிவன்கோயிலான பெருமாட்டீசுவரத்தின் திருமண்டபத்தில் கூடிச் செயற்பட்டமை கல்வெட்டொன்றால் அறியக்கிடக்கிறது. நாட்டார் அமைப்பின் வரவு செலவுகளைப் பதிவுசெய்யும் பொறுப்பிலிருந்த கணக்காளர் நாட்டுக்கணக்கு எனப்பட்டார்.

வேளாண்மை
  விளைநிலங்கள் நன்செய், புன்செய், நீர்நிலம் எனப் பல வகையாக இருந்தன. சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் தேவதானமாகவும் பெருமாள் கோயில் நிலங்கள் திருவிடையாட்டமாகவும் அய்யனார் நிலத்துண்டுகள் அய்யன்பாத்தி என்றும் பிடாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிலப்பகுதிகள் பிடாரிப்பட்டி என்றும் துர்க்கைக்குத் தரப்பட்டிருந்த நிலம் துக்கை இறையிலி என்றும் அழைக்கப்பட்டன. நிலத்துண்டுகள் குவளைச் செய், உவன்றிச் செய் எனப் பல்வேறு பெயர்கள் ஏற்றிருந்தன. சில நிலத் துண்டுகள் உரிமையாளர் பெயரையேற்று பட்டர்கள் இறையிலி, உத்தமசோழக்கோன் செய், கிடாரங் கொண்ட சோழக்கோன் நிலம் என்றும் அளிக்கப்பட்ட அறக்கட்டளைகளுக்கேற்ப விளக்குச் செய் என்றும் பெயர் கொண்டிருந்தன. மச்சிறுப்பாள் செய், தும்பி நாவல் என்பன போன்ற பெயர்களும் சில நிலத்துண்டுகளுக்கு வழங்கின. பயிரிடமுடியாத நிலப்பகுதிகள் களர், கரம்பை எனக் குறிக்கப்பட்டன. 

நீர்ப்பாசனம்
  சிங்களாந்தகபுரத்து நிலங்கள் ஆறு, குளம், கிணற்றுப் பாச னத்தில் செழித்தன. ஐய்யாறும் படகதன் ஆறும் கொல்லிமலைப் பகுதியை வளப்படுத்திய சிற்றாறுகளாகலாம். துண்டுக் கல்வெட்டொன்றில் இடம்பெறும் குண்டாறு இப்பகுதியிலிருந்த சில ஊர்களின் கழனிகளுக்கு வளமளித்தது போலும். சிங்களாந்தக புரம், துறையூர், ஆதனூர், வெங்களூர் ஆகிய ஊர்கள் பெரிய குளங்களைக் கொண்டிருந்தன. நகரத்தாரிடம் பொன்னளித்துச் சிங்களாந்தகபுரப் பெரிய குளத்தில் வாய்க்கால் வெட்டப்பட்டது. ஆதனூர்ப் பெரிய குளத்திலிருந்து குமிழி வழி வாய்க்கால்களில் பாய்ந்த நீர் கண்ணாறுகளை அடைந்து நிலங்களுக்கு வளமூட்டி யது. சில கண்ணாறுகள் பெயரேற்றிருந்தன. வெங்களூர் நிலங்கள் அவ்வூர்ப் பெரிய குளத்தைச் சூழ இருந்து வளம் பெற்றன. பிலாண்டூர் எல்லைகளுள் ஒன்றாக நம்பியேரி குறிக்கப்படுவதால் அவ்வூர் நிலங்களின் பாசனத்துக்கு ஏரிநீரும் பயன்பட்டதெனலாம்.

  மணிக்கிராம வாய்க்கால் என்ற நீர்வழியின் பெயர் முக்கியத் துவம் வாய்ந்தது. இப்பெயர் மணிக்கிராமம் என்றழைக்கப்படும் வணிகக் குழுவினர் அவ்வாய்க்காலை அமைத்தமை பற்றியோ அல்லது இப்பகுதியில் வாழ்ந்த மணிக்கிராமத்தார் நிலங்களுக்கு அவ்வாய்க்கால் நீரளித்தமை பற்றியோ ஏற்பட்டதாகலாம். சிங்களாந்தகபுரம், நகரத்தார் வாழிடமாக இருந்தமை அதன் பெயராலும் கல்வெட்டுகளாலும் உறுதிப்படுவதால் மணிக்கிராமத்தார் இங்கு வாழ்ந்த நகரத்தார் சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். துறையூரின் வடக்குப் பகுதியில் இருந்த குளத்தின் நீர் அவ்வூரிலிருந்த அமரசுந்தரேசுவரர் கோயில் நிலங்களை வளப்படுத்தியது. நிலங்களின் மிகைநீர் வதிகளின்வழி வடிந்து பாசனத்திற்குப் பயன்பட்டதைத் திருவரங்க வதி சுட்டுகிறது. 

வரிகள்
  இக்கோயில் கல்வெட்டொன்று சுட்டும் இறை, நிலஉரிமையாளர்களிடம் பெறப்பட்ட முதன்மையான நிலவரியாகும். இதுவே கடமை என்றும் அழைக்கப்பட்டது. இவ்வரி வேற்றூர்க் கல்வெட்டுகள் சிலவற்றில் காணிக்கடன், மேல்வாரம், ஒபாதி என்ற பெயர்களாலும் சுட்டப்பட்டுள்ளது. குடிமை, உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்பட்ட வரியாகும். இதை உழுகுடிகள் செலுத்திய வரி என்றும் குறிப்பிடுவர்.  உடலுழைப்புச் சார்ந்த வரியாக இது கருதப்படுகிறது. வெட்டி, அமஞ்சி, முட்டையாள், வேதினை என்பன இதனுள் அடங்கும். நீர்நிலைகளைப் பராமரிக்கவும் அவற்றின் கரைகளைப் பலப்படுத்தவும் இத்தகு உடலுழைப்பு வரியாகக் கொள்ளப்பட்டது. அமரசுந்தரேசுவரர் கல்வெட்டுகளில் குடிமை, வெட்டி எனும் இரண்டு வரியினச் சொற்களுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.   

  அலுவல் காரணமாக ஊருக்கு வரும் அரசுஅலுவலர்களுக்கு உணவிடப் பெறப்பட்ட வரி எச்சோறு எனப்பட்டது.16 அமரசுந்தரேசுவரர் கல்வெட்டொன்றில் நிலஞ்சார்ந்து தண்டப்பெற்ற வரியினங்களுள் ஒன்றாக இது குறிக்கப்படுகிறது. இராசகரம் அரசுக்குப் பெறப்பட்ட வரியாகும்.

கோயில் 
  முதல் இராஜேந்திரர், முதல் குலோத்துங்கர் காலக் கல்வெட்டுகளில் அமரேந்திர ஈசுவரத்து மகாதேவராகக் குறிக்கப்படும் இக்கோயில் இறைவன், மூன்றாம் இராஜராஜர் கல்வெட்டில் அமரசுந்தர நாயனாராகப் பெயர் மாற்றம் பெறுகிறார். முதல் இராஜேந்திரர் திருஅவதாரஞ் செய்தருளின சித்திரைத் திருவாதிரையை ஒட்டி, இக்கோயில் இறைவனுக்கு ஏழு நாள்கள் விழா எடுக்க முடிவு செய்த சிங்களாந்தகபுர நகரத்தார், அதற்கெனத் தருவார் தரும் பொன்னும் காசும் வஸ்துக்களும் கொண்டதோடு, விளக்குகள் வைக்கவும் வழியமைத்தனர். இந்நிவந்தத்திற்குச் சிங்களாந்தகபுர வளஞ்சியர்கள் அவரவர் விற்பனைப் பொருளில் ஒரு பங்கினை வழங்கவும் இசைந்தனர். கல்வெட்டுப் பெரிதும் சிதைந்திருப்பதால் விற்பனைப் பொருள்களையோ, அவற்றிலிருந்து அளிக்கப்பட்ட பங்கினையோ அறியக்கூடவில்லை.

  தொடர்பற்றுக் கிடைக்கும் முதல் இராஜேந்திரரின் 9ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு,  ஆரிதன் கோவிந்தன் காளன், சிங்களாந்தகபுர நகரத்தாரிடம் கிரமந்தூரில் 40 காசுக்கு நீர்நிலம் விலைக்குப் பெற்றமையைத் தெரிவிக்கிறது. இந்நிலம் எதற்காகப் பெறப்பட்டது என்பதை அறியக்கூடவில்லை. 

முதல் இராஜேந்திரரின் ஆட்சியாண்டு தெரியாத கல்வெட்டு, கொங்க வீரசோழ மண்டலத்துக் கொல்லிமலை நாட்டுப் பிலாண்டூர் ஊரவையார் தங்கள் ஊரை, உரிய பொன் பெற்றுக் கோயிலுக்குத் தேவதானமாக விற்றதாகக் கூறுகிறது. குறும்பரும் வன்னியரும் இப்பிலாண்டூர் ஊராரைத் துன்புறுத்தி அவர்களுள் சிலரைச் சிறைபிடித்துச் சென்றமையால், அவர்தம் தொல்லைகளிலிருந்து விடுபடப் பிலாண்டூர் ஊரார் தம் பாதுகாப்பிற்காக இவ்விற்ப னையை மேற்கொண்டனர். இப்பிலாண்டூரின் எல்லைகளாக ஐய்யாற்றில் விழுந்த நீர்வாரை, கீழ்மாறமங்கலம், கொழுவாடிப் பனையூர், படகதனாறு, புறப்பாதை, முக்கறைச்சிமலை ஆகியன குறிக்கப்படுகின்றன.  இறைவனின் தேயமாக அறிவிக்கப்பட்ட பிலாண்டூரில் அவ்வூர் மக்கள் குடியிருக்கவும் கடமை, குடிமை முதலிய வரிகளை அவர்களே செலுத்தவும் இவ்விற்பனை ஆவணம் இடமளித்துள்ளது. 

  முதல் குலோத்துங்கரின் 28ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இக்கோயில் இறைவனின் வழிபாட்டிற்கும் திருப்பணிக்கும் உடலாக நிலம் முற்றூட்டாக அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. கல்வெட்டுச் சிதைந்திருப்பதால் கொடையாளி உள்ளிட்ட பிற தகவல்களை அறியமுடியவில்லை.  அதே மன்னரின் 32ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, சிங்களாந்தகபுரத்தைச் சேர்ந்த வணிகர் நெட்டணங்குடையான் சுந்தரன் இக்கோயில் இறைவனுக்கு மூன்று சந்தியிலும் திருவமுது அளிக்கத் தந்த கொடையைச் சிங்களாந்தகபுர நகரத்தார் ஏற்றமை குறிக்கிறது.

   மூன்றாம் இராஜராஜரின் 24ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இக்கோயில் மேலைத் திருமடைவிளாகத்திருந்த சோமிதேவி சிறுப்பிள்ளைகளில் உச்சங்கப் பாண்டிநாட்டு உலகப்பள்ளி கேசுவன் தேவன் மகன் தன்னரசன், தம் கைப்பொன்னைச் செலவழித்துச் சிங்களாந்தகபுரத்தில் மடம், நந்தவனம், கிணறு அமைத்த தகவலைத் தருகிறது. அவரே நந்தவனப் பணியாளருக்கு வாழ்வூதியமாக 300 குழி நிலம் உள்ளூர் வணிகர்களிடம் இறையிலியாக விலைக்குப் பெற்றுத் தந்தார். கரிகாலக்கன்ன வளநாடு, வள்ளுவப்பாடி, வடவழிநாடு, பாச்சில் குறுவட்டம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நாட்டாரும் நகரத்தாரும் இம்மடத்தில் தேசாந்திரிகளாய் உள்ள மாகேசுவரர் உணவருந்தவும் மடத்துக்கான நிருவாக, திருப்பணிச் செலவுகளுக்காகவும் மடத்தில் விளக்குகள் ஏற்றவும் துறையூரில் நன்செய்க் குழி 200ம் கிரியூரில் புன்செய்நிலம் 2 வேலியும் இறையிலியாக அளித்தனர்.

  இதே மன்னரின் காலத்ததாகக் கொள்ளத்தக்க மற்றொரு பலகைக் கல்வெட்டு, கேசுவதேவர் மகன் காசுவன் சோழகோன் தாம் அமைத்த நந்தவனத்திற்கும் அதன் குடிகளுக்குமாய்ச் சிங்களாந்தகபுரத்துத் தானத்தாரிடம் பொன் அளித்து இறையிலியாகப் பெற்ற நிலத்தைத் தன்னரசனும் போகனாச்சனும் உழுது மேல்வாரம் கொள்ள இசைந்தமை கூறுகிறது.

  பெருமண்டபத் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளுள் ஒன்று, வள்ளுவப்பாடி நாட்டான் நூற்றுக்கால் மண்டபத்திருந்த அத்தூணைச் செய்தவர்களாகக் கரிகாலக்கன்ன வளநாட்டுச் சிறுகண்ணனூரைச் சேர்ந்த இடையர் ஊரன் சொக்கன் தண்டேசுவரநம்பி, வேம்பன் பெருமாள் சக்கரவர்த்தி, சிரன், தெற்றி ஆகியோர் பெயர்களைத் தருகிறது.  மற்றொன்று, அக்கல்வெட்டுள்ள திருக்காவணக் காலைச் செய்தவராக அணிகோவைநல்லூரைச் சேர்ந்த அரைசில் அஞ்சாத கோபாலனைச் சுட்டுகிறது.

  சடையவர்மர் சுந்தரபாண்டியரின் 22ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு வடகரை ஊற்றத்தூர் மேல்வழிக் கீழ்வள்ளுவப்பாடி நாட்டு  நாட்டார், மேலை வள்ளுவப்பாடி நாட்டுத் துறையூர்ப் பெருமாட்டீசுவரமுடைய நாயனார் கோயில் திருமண்டபத்தில் கூடி, மன்னரின் நலத்துக்காக அமரசுந்தர நாயனாருக்கு அமுதுபடி சாத்துபடி, திருநாள், திருப்பணித் தேவைகளுக்கான முதலுக்காக நாயன்மார் தேவதானம், திருவிடையாட்டம், ஐயன்பாத்தி, பிடாரிப்பட்டி, துக்கையார் இறையிலி, பட்டர்கள் இறையிலி தவிர்த்த நன்செய், புன்செய், மாவடை, குளவடை உள்ளிட்ட கரும்பனூரை ஊரமை இறையிலியாக அளித்ததாகக் கூறுகிறது. அவ்வூருக்கான இராசகரம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் நாட்டாரே செலுத்துவதாக ஆவணம் அமைந்தது. இக்கல்வெட்டுச் சுட்டும் நாயன்மார் தேவதானம் திருத்தொண்டர்களாக அறியப்படும் 63 நாயன்மார்களின் வழிபாட்டிற்கு அளிக்கப்பட்ட நிலமாகலாம்.

  கரும்பனூர் நத்தத்திலும் ஊரின் நான்கு எல்லைகளிலும் அது கோயிலுக்குரிய ஊர் என்பதைச் சுட்டுமாறு முத்தலைஈட்டி (அஸ்திரதேவரை) பொறித்த கற்களை நட்டுக்கொள்ளவும் ஆவணம் வழியமைத்தது. இந்த ஆவணத்தில் பாண்டியராயன், செம்பியதரை யன், வளவகோன், அதிகைராயன் ஆகிய நாட்டார் உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். நம்புசெய்வார், செல்வன் செல்வ நம்பி ஆகிய நாட்டார் உறுப்பினர்கள் இருவரும் எழுத்தறிவற்றவர் களாய் (தற்குறிகளாய்) இருந்தமையால், ஆவணத்தில் அவர்களுக்கு மாற்றாகச் சமைய சேனாபதியும் வில்லவதரையனும் கையெழுத்திட்டுள்ளனர். இவ்வாவணம் எழுதப்பட்ட காலத்து நாட்டுக் கணக்காகப் பணியாற்றியவர் வேப்பந்திட்டை வில்லவ தரையர்.

எறிவீரதளக் கல்வெட்டு
  சிங்களாந்தகபுர மடத்துத் தெருவில் நடப்பட்டிருக்கும் சந்திக் கல் ஐயபொழில் ஐநூற்றுவர் வணிகக் குழுவின் கல்வெட்டையும் அவர்தம் சின்னங்களையும் கொண்டுள்ளது. சந்திக்கல்லின் ஒருபுறம் தொடங்கும் கல்வெட்டு, கல்லின் பக்கப்பகுதிகளில் வளர்ந்து, மறுபக்கத்தில் வணிகக் குழுவின் சின்னங்கள் செதுக்கப்பட்டிருக்கும் பகுதிக்குக் கீழ் முடிகிறது.  முத்தலைஈட்டி, கத்தி, குத்துவிளக்கு, கொற்றக்குடை, கவரி, வில், வேல், அங்குசம், பசும்பை, வளைதடி ஆகியன ஐநூற்றுவர்ச் சின்னங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.

  அரசர் பெயரோ, காலக்குறிப்போ அற்ற இக்கல்வெட்டில் 103 வரிகள் உள்ளன. முதல் 20 வரிகள் ஐநூற்றுவரின் பெருமை களை சமஸ்கிருதத்திலும் தமிழிலும் பதிவு செய்துள்ளன. எறியும் எறிவீர தளமுமான சிங்களாந்தகபுரத்தில் வாழும் வணி கர்களான இவ்ஐநூற்றுவர் ஐநூறு வீரசாசனங்களைப் பெற்றவர்; வாசுதேவன், கண்டழி, மூலபத்திரர் ஆகிய கடவுள்களின் வழியில் வந்தவர்; ஐயபொழில்நகர்ப் பரமேசுவரியின் மக்கள்; அறம் வள ரும் செயலாற்றி அனைத்துத் திசைகளிலும் புகழ் பொலிய வாழ்பவர்; செங்கோலைத் தெய்வமாகக் கொண்டவர்; சமைய (குழுவின்) ஒழுக்கத்தை ஒழுங்குற ஒழுகுபவர். 

  கல்வெட்டில் அடுத்துள்ள பகுதி வலங்கை உய்யக்கொண் டார் குழுவின் மூன்று வீரச் செயல்களைப் பதினெண்பூமி வீரக்கொடியார் நினைவுகூர்வது போல அமைந்துள்ளது. 

  1. குறுநிலத் தலைவரான இருங்கோளராலும் அவரது வீரர்களாலும் வைகுந்தநாடாள்வார் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், உய்யக்கொண்டார்  படை அவரைக் காப்பாற்றியது. அப்போரில் உய்யக்கொண்டார் வீரர் இருவர் உயிரிழந்தனர். 

  2. மகதை நாடாள்வாரின் வீரர்களுள் ஒருவர் வணிகக்குழு வீரரான தேசியாபரணப் பிள்ளைமீது அம்பு எய்ய, சேதன் திடை கால் எனும் உய்யக்கொண்டார் வீரர் மகதை நாடாள்வாரைக் கொன்றார்.

   3. வீரக்கொடியாருள் ஒருவரான எதிரான் சிங்கன் தம் குழுவோடு சென்றபோது வழிமறித்த வேட்டுவர்கள் வீரகள்மதலை என்பாரைப் பிடித்துச் சென்றனர். உய்யக்கொண்டார் படை போராடி அவ்வீரரை மீட்டது.

இவ்வீரச் செயல்களுக்கு நன்றிக்கடனாகச் சிங்களாந்தகபுரப் பதினெண்பூமி வீரக்கொடியார் தாங்கள் அந்நகரத்தில் பெற்று வந்த வருவாயை வலங்கை உய்யக்கொண்டாருக்கு வழங்கினர். இவ்வீரக்கொடியார் ஐநூற்றுவர் வணிகக் குழுவின் காவல் வீரர்களாவர். 

புதிய கல்வெட்டுகள் 
   இங்குக் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகளுள் முதல் இராஜேந்திரரின் 5ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு, இக்கோயில் சித்திரைத் திருவாதிரைத் திருவிழாவின்போது எழுந்தருளும் இறைவனுக்குச் சிறுகாலைச் சந்தியில் திரு அமுது அளிக்க ஆதனூர் ஊரார் அவ்வூர்ப் பெரிய குளத்தின் கீழ் இருந்த குவளைச்செய் கால்வேலியை இறையிலியாகக் கொடையளித்ததாகக் கூறுகிறது. அவர் காலத்ததான மற்றொரு துண்டுக் கல்வெட்டு, வெங்களூர்ப் பெரிய குளத்தின் கீழிருந்த நிலப்பகுதி இக்கோயில் அர்ச்சனாபோகத்திற்குத் தரப்பட்டதாகச் சொல்கிறது. முதல் இராஜாதிராஜரின் மெய்க்கீர்த்தியோடு உள்ள கல்வெட்டு, கிடாரங் கொண்ட சோழபுரத்து வணிகர் விருத்திரி கோயிலாரிடம் ஒப்புவித்த கொடையொன்றைச் சுட்டுகிறது. 

   முதல் குலோத்துங்கரின் 45ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இக்கோயில் இறைவனுக்கு நாகன் சுந்தரன் என்னும் வணிகர் அளித்த கொடையைச் சுட்ட, அதே மன்னரின் துண்டுக் கல்வெட்டுகளுள் ஒன்று, இறைவன் முழுக்காட்டிற்குப் பிறகு மந்திரபோனக அமுது கொள்ள அளிக்கப்பட்ட கொடையைத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டால், கரணநாழி என்ற முகத்தலளவை இப்பகுதியில் வழக்கிலிருந்தமை தெரியவருகிறது. மற்றொரு துண்டுக் கல்வெட்டு, இறைவன் கோயில் பள்ளியறை நம்பிராட்டியாருக்கான வழிபாடு, படையலுக்காக அன்றாடு நற்காசு 30 தரப்பட்டமை சொல்கிறது. 

  இறைவன், அம்மன் கோயில் பெருமண்டபத் தூண்களில் கண்டறியப்பட்ட பிற்சோழர் காலப் புதிய கல்வெட்டுகள் மூன்றும் அத்தூண்களைச் செய்தவர்களாகக் காட்டூர் சோழக்கோன், சிறுகள்ளிக்குடியில் காவலுடைய சேமன் வல்லானான கோன், நாயன், குன்றணி உடையதரையன், நம்பி, பெரியகோன் ஆகியோரைச் சுட்டுகின்றன. 

  மன்னர் பெயரற்ற நிலையில் மதில்சுவரில் காணப்படும் முழுமையான பிற்சோழர் காலக் கல்வெட்டு அரசரின் சாமந்த முதலிகளில் ஒருவரான இருங்கோளரையும் அவரது குதிரையையும் குறிக்கிறது.  சிங்களாந்தகபுரத்து நன்செய்க் கங்காணியில் உறைகாழீசுவரம் தவிர வேறோர் வரி கொள்ளக்கூடாது என்று கூறும் இக்கல்வெட்டு, அப்படிக் கொள்வார், இருங்கோளன் குதிரைக்குப் புல்லிடுவானுக்குத் தம் மனைவியை அளித்தவராகக் கருதப்படுவர் என்றும் எச்சரிக்கிறது.

சடையவர்மரின் சிதைந்த கல்வெட்டு, மேல் வள்ளுவப்பாடி நாட்டார் இக்கோயில் இறைவனின் வழிபாடு, படையல், திருவிழா, கோயில் திருப்பணி ஆகியவற்றின் தேவைக்கெனத் தேவதான இறையிலியாக ஊரொன்றைக் கொடையளித்ததுடன் அவ்வூருக்கான இராசகரத்துக்கு ஒரு பொன் செலவாக்கவும் இசைந்த தகவலைத் தருகிறது. 

துண்டுக் கல்வெட்டுகள்

   மன்னர் பெயரோ, ஆட்சியாண்டோ இல்லாத நிலையில் இக்கோயிலின் பல பகுதிகளிலும் காணப்படும் துண்டுக் கல்வெட்டுகள் இங்கு நிகழ்ந்த பல பயனுள்ள செயற்பாடுகளை முன்வைக்கின்றன. முழுமையான தகவல்களாக இல்லை எனினும், இக்கோயில் சார்ந்த கொடைகளையும் அறக்கட்டளைகளையும் அவை வெளிப்படுத்துகின்றன. உத்தமசோழபுரத்து வணிகர் வைகினான் குன்றுடையான் இக்கோயிலில் மத்தியான சந்தியில் ஒரு சட்டிச் சோறு அளிக்கக் கொடையளித்துள்ளார். அது போலவே ஒரு கொடையாளி பொற்காசு தந்து சட்டிச்சோறு வழங்க உதவியிருக்கிறார். பரதேவர்தானம், மணிக்கிராம வாய்க்கால், வணிகர் நக்கன் அலங்காரன் திருச்சென்னடைக்கு அளித்த நிலத்துண்டு ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட கரம்பை நிலம் இக்கோயிலுக் குக் கொடையளிக்கப்பட்டுள்ளது. 120 கழஞ்சு நிறையுள்ள வெள்ளித்தளிகை, 21 கழஞ்சு நிறையுள்ள வெள்ளி வட்டில் ஆகியன இக்கோயிலுக்குத் தரப்பட்டன. விலைக்குப் பெறப்பட்ட புன்செய்ப் புறணி நிலம் கோயில் நிவந்தக்காரர்களான மெய்மட்டி, உடுக்கைக்காரர் ஆகியோருக்குத் தலைக்கு ஒரு வேலி என்றும் பாணருக்கு ஒன்றரை வேலியாகவும் பிரித்து அளிக்கப்பட்ட தகவலைத் தரும் கல்வெட்டால் இக்கோயிலில் கருவிக்கலைஞர்களும் பாடுநர்களும் வாழ்ந்தமை அறியலாம். வணிகர் நக்கன் அலங்காரன் நிலத்துக்கு வடக்கிலிருந்த நிலத்துண்டொன்று இக்கோயிலுக்கு 68 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. கோயிலில் விளக்கேற்றக் கொடையளிக்கப்பட்டுள்ளது. 

   இக்கோயிலில் உள்ள சாமுண்டி அம்மனுக்கான கரகங்கள் சில, எழுத்துப் பொறிப்புக்களைக் கொண்டுள்ளன. அவற்றுள் ஒன்று அதைச் செய்தளித்தவர்களாகச் செட்டிக்குளம் அருணாசலரெட்டி, நல்லப்பரெட்டி, அண்ணாமலை ரெட்டி ஆகியோரைக் குறிக்க, மற்றொன்று பெயர்கள் ஏதுமின்றிச் சாமாண்டி அம்மனுக்கு உபையம் என்ற பொறிப்பை மட்டும் பெற்றுள்ளது. மூன்றாவது கரகம் திருசிரபுரம் கோட்டையிலிருக்கும் பாகவதம் இராமய்யர் சிங்களாந்தபுரம் சாமுண்டி அம்மாளுக்கு உபையமாக அளித்தது. இங்குள்ள சின்னாரய்யப்பனுக்குச் செய்விக்கப்பட்ட பித்தளைக் குதிரையில் அதை அளித்தவராக ஆதனூர் உத்தண்ட பூசாரி மகன் மூத்த காவல்காரன் குறிக்கப்படுகிறார். 

காலம்  
   இங்குள்ள கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டது முதல் இராஜேந்திரரின் மூன்றாம் ஆட்சியாண்டிற்குரியது. ஊரின் பெயர் கொண்டும் கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையிலும் சிங்களாந்தகபுரம் அமரேசுவரர் கோயிலை முதல் இராஜராஜர் காலத்ததாகக் கொள்ளலாம். பல்வேறு காலக்கட்டத் திருப்பணிகளின் விளைவாகக் கட்டுமானம் உருமாறியிருந்தபோதும் கல்வெட்டுகள் கண்காட்டுவதன் வழிக் கோயிலின் காலத்தை உறுதிசெய்ய முடிகிறது.

குறிப்புகள்
1.      ARE 1943-44: 226 - 235.
2.     The Hindu 12. 9. 2017.
3.     ARE  1943-44 : 236. 
4.     ARE  1943-44 : 237. 
5.     எ. சுப்பராயலு, இல. தியாகராசன், சிங்களாந்தபுரம் எறிவீர தளக் கல்வெட்டு, ஆவணம்-17, பக். 14 - 18.
6.     ARE 1943-44: 233.
7.     ARE 1943-44: 230. கல்வெட்டறிக்கையில் ஆட்சியாண்டு 6 எனக் குறிக்கப்பட்டுள்ளது. 
8.     ARE 1943-44: 229. ஒன்று புதிதாகக் கண்டறியப்பட்டது.
9.    ARE 1943-44: 228, 232.
10.    ARE 1943-44: 234, 235.
11.    ARE 1943-44: 231. 
12.    ARE 1943-44: 226, 227.
13.     பூ. சுப்பிரமணியம், மெய்க்கீர்த்திகள், பக். 219, 270.
14.    Y.Subbarayalu, South India under the Cholas, PP.93 - 94.  
15.    மேற்படி, ப. 94.  
16.     மு. நளினி, இரா. கலைக்கோவன், பாச்சில் கோயில்கள், பக். 127.
17.     தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி, தொகுதி 1, ப. 68.
18.     ARE 1943-44: 233. இக்கல்வெட்டைப் பாண்டியருடையதாகக் குறிக்கும் கல்வெட்டறிக்கை, விழா கோயில் இறைவிக்கு எடுக்கப்பட்டதாகவும் சுட்டுகிறது. 
19.    ARE 1943-44: 239. 
20.    ARE 1943-44: 229. முக்கறைச்சிமலை என்ற சொல் வழக்கு பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக் குறிப்பிடும் பச்செறிச்சின்மலை என்ற பெயருடன் ஒப்புநோக்கத் தக்கது. ஆவணம் 1, ப. 68.
21.     ARE 1943-44: 228.
22.    ARE 1943-44: 232.
23.    ARE 1943-44: 234.
24.    ARE 1943-44: 233.
25.     ARE 1943-44: 226.
26.    ARE 1943-44: 227.
27.    ARE 1943-44: 231. 
28.    இது போன்ற இரண்டு கல்வெட்டுகள் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களால் காருகுடியிலும் மலம்பட்டியிலும் கண்டறியப்பட்டுள்ளன. பாடங்களுக்குக் காண்க: வரலாறு 24, பக். 17-18, ஆவணம் 20, பக். 6-8.

29.     இலால்குடி சப்தரிஷீசுவரர் கோயில் பெருமண்டப வடக்குச் சுவரிலுள்ள ஐநூற்றுவர் கல்வெட்டு பசும்பையைக் கோட்டுருவச் செதுக்கலாகக் கொண்டுள்ளது.

30.    ‘உய்யக்கொண்டான்’ முதல் இராஜராஜரின் விருதுப்பெயர்களுள் ஒன்றாகும். இப்பெயரில் சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பாசன வாய்க்கால் உள்ளது. பேட்டைவாய்த்தலையில் தொடங்கி வாழவந்தான்கோட்டை ஏரியில் முடியும் இது பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் சோழமாதேவி கயிலாசநாதர் கோயிலிலும் உய்யக்கொண்டான் திருமலை விழுமிய நாயனார் கோயிலிலும் உள்ளன. இரா. கலைக்கோவன், உய்யக்கொண்டான் ஆறு, பதிப்பிக்கப்படாத கட்டுரை, 2018. 

31.    இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளாற் போல் எறிவீரதளக் கல்வெட்டிலும் இருங்கோளன் எனும் குறுநிலைத் தலைவர் குறிக்கப்பட்டுள்ளமை எண்ணத்தக்கது. கல்வெட்டில் அவரது குதிரைக்கு அளிக்கப்பட்டிருக்கும் முதன்மை கருதியோ என்னவோ இன்றைக்கும் அமரசுந்தரர் கோயிலில் குதிரை வீரர் திருமேனிகள் வழிபாட்டுச் சிறப்பு பெறுகின்றன. 

32.    உறைகாழீசுவரம் எனும் வரியினம் பற்றிய குறிப்பேதும் கல்வெட்டுச் சொல்லகராதியில் இல்லை. இந்நூலாசிரியர்கள் அறிந்தவரையில் சிராப்பள்ளி மாவட்டக் கல்வெட்டுகளில் இவ்வரியினம் பற்றிய சுட்டல் இல்லை. இது குறித்த ஆய்வு தொடர்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com