தமிழால் இணைவோம்

இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், பிராமி போன்ற வடமொழிகள் இருந்ததால்தான் தொல்காப்பியர் வடசொல்
தமிழால் இணைவோம்

இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், பிராமி போன்ற வடமொழிகள் இருந்ததால்தான் தொல்காப்பியர் வடசொல் இலக்கணமே வகுத்திருக்கிறார்.

2000 ஆண்டுகளாக வடமொழி இருந்திருக்கிறது. 1100 ஆண்டுகளாக உருது இங்கே பேசப்பட்டு வருகிறது. 700 ஆண்டுகளாக தெலுங்கு பரவலாகவே வழக்கத்தில் வந்துவிட்டது. 500 ஆண்டுகளாக மராட்டியம் தமிழகத்தில் நுழைந்து அரசவை மொழியாகவே இருந்திருக்கிறது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் தமிழ் அழிந்துவிடவில்லை; மாறாகத் தழைத்தோங்கி இருக்கிறது. சமய இலக்கியங்கள் தோன்றின. சிலம்பும்,மேகலையும், சீவக சிந்தாமணியும், கம்பகாதையும், வில்லி பாரதமும், அருணகிரியாரும், குமரகுருபரரும், தாயுமானவரும் இயற்றிய அற்புதமான படைப்புகளும் இந்தக் காலகட்டத்தில்தான் தமிழுக்கு உரமூட்டின.

வெறும் 250 ஆண்டுகள்தான் ஆங்கிலேயர் நம்மை ஆண்டனர். ஆனால், தமிழ் தன் அடையாளத்தையே அல்லவா இழந்துவிட்டது! வடமொழிக் கலப்பில்லாத, உருதுக் கலப்பில்லாத,தெலுங்கின் தாக்கமில்லாத, மராட்டியத்தின் வாடையே இல்லாத தமிழை நாம் பேசிவிட முடியும். ஆங்கிலக் கலப்பில்லாத தமிழை நம்மில் எத்தனை பேரால் பேச முடியும்? இந்த உண்மைதான் பயமுறுத்துகிறது.

இப்படிப்பட்ட மொழிக் கலப்புதான் மெல்ல மெல்லப் புற்றுநோயாகத் தமிழை அழித்து அடையாளம் தெரியாமல் சிதைத்து விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஆங்கிலவழிக் கல்வி கூடாது என்பதல்ல நமது கருத்து. ஆனால், தமிழின் அழிவில் ஆங்கிலவழிக் கல்வி தேவையில்லை என்பதுதான் நமது வாதம். உலகமே வியக்கும் வகையில் விஞ்ஞான சாதனை படைத்திருக்கும் நமது மேதகு அப்துல்கலாம் அவர்கள் தாய்மொழியில் தமது பள்ளிக் கல்வியைப் பயின்றவர். தாய்மொழிக் கல்விதான், அவரது அறிவியல் மேற்படிப்புக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்பதுதானே உண்மை!

ஆங்கிலேயர்களும் அமெரிக்கர்களும் அறிவியல் சாதனைகளைப் படைக்கிறார்கள் என்றால் அவர்கள் அவர்களது தாய்மொழியான ஆங்கிலத்தில் பயில்கிறார்கள்; சாதனை படைக்கிறார்கள்.ஜெர்மானியர்கள், ஜப்பானியர்கள், பிரெஞ்சு நாட்டவர், ரஷியர்கள் என்று யாரை எடுத்துக் கொண்டாலும், அவர்களும் அமெரிக்காவுக்கு நிகரான முன்னேற்றம் கண்டவர்கள்தான். காரணம், அவர்கள் தாய்மொழியில்தான் படிக்கிறார்கள்.
சின்ன நாடான சிங்கப்பூரில் பாடமொழியாக ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, சீனப் பெற்றோர்கள் அதற்கு எதிராகப் போராடி வெற்றி கண்டனர். அடிப்படைக் கல்வி சீன மொழியில்தான் இருக்க வேண்டும் என்றும், எங்கள் குழந்தைகள் தாய்மொழியான சீனம் தெரியாத குழந்தைகளாக வளரக்கூடாது என்றும் பிடிவாதமாக இருந்தனர்.

இங்கே தமிழில் பேசினால் தரக்குறைவு, அவமானம் என்று கருதுகிறோமே, அந்த மனநிலை மாற வேண்டும்; மாற்றப்பட வேண்டும். குழந்தைகள் ஆங்கிலவழிக் கல்வி பயில்வதில் தவறில்லை. அவர்கள் வீட்டில் பெற்றோருடனும், உற்றார் உறவினருடனும் தமிழில் பேச வேண்டும் என்று வலியுறுத்தி அவர்களை வழிநடத்தும் கடமை நமக்கு இல்லையா?

முல்லைப் பதிப்பகத்தார், சின்ன அண்ணாமலை தொகுத்த "ராஜாஜி உவமைகள்' என்கிற புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் "தமிழ் எங்ஙனம் வளரும்?' என்கிற தலைப்பில் மூதறிஞரின் கருத்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

""பல்வேறு விஷயங்களை அறிந்தும் ஆராய்ந்தும் வரும் தமிழர், தாங்கள் சாதாரணமாகப் பேசும்போது முழுதும் தமிழிலேயே பேசினால்தான் தமிழுக்கு வளர்ச்சி ஏற்படும். விஷயங்களைப் பேசும்போது, தமிழ்மொழி தெரியாத இடத்திலும், மறந்துபோன இடத்திலும் புதுத் துறைகளில் ஆராய்ச்சி செய்யும்போதும், வாதப் பிரதிவாதம் செய்யும்போதும், அறிவையும் நினைவையும் செலவழித்துத் தமிழ் வார்த்தைகளைத் தேடி உபயோகிப்பதற்குப் பதில், எளிதில் கிடைக்கக் கூடிய ஆங்கில வார்த்தைகளை, அதாவது பிற தேசத்தார் கஷ்டப்பட்டுத் தங்களுக்கென்று உருவாக்கி இருக்கும் வார்த்தைகளை, எந்தவிதக் கூச்சமுமின்றி இடையிடையே கலந்து பேசித் தமிழுக்குச் சோறு போடாமல் அதைக் கொல்கிறோம்.

நுட்பமான பொருள் பேதங்களும் அவைகளுக்குத் தகுந்த வார்த்தைகளும், நடையும் ஒரு பாஷையில் எவ்வாறு தோன்றும்?தோன்றியவை எவ்வாறு உயிருடன் நிற்கும்? கிடைத்த புல்லையும் தவிட்டையும் ஆங்கில மாட்டுக்கே போட்டு வந்தால் நம்முடைய பசு எவ்வாறு பால் கொடுக்கும்? தடை தோன்றிய இடங்களிலெல்லாம், அதற்கான தமிழ் வார்த்தைகளைக் கண்டுபிடித்துப் பேசாமல், ஆங்கிலத்தைப் போட்டு நிரவிப் பேச்சை கூட்டிக்கொண்டு போனால், தமிழ் எங்ஙனம் வளரும்? அறிஞர்களெல்லாம் ஒன்றுகூடித் தமிழைக் கொல்வதற்குச் சதியாலோசனை செய்தால்கூட இதைவிடச் சிறந்த உத்தியைக் கண்டுபிடிக்க முடியாது!''

மூதறிஞர் ராஜாஜி இப்படியொரு நிலைமை தமிழுக்கு ஏற்படப் போகிறது என்பதை 1938-இல் அவர் முதல்வராக இருந்தபோதே சிந்தித்திருக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது. எண்பதாண்டுகளாகியும் நாம் புரிந்து கொள்ளாமல், கலப்படச் சுகத்தில் மிதக்கிறோமே என்பது வேதனையாகவும் இருக்கிறது.

தமிழின் மீது நெஞ்சார்ந்த பற்றுக் கொண்ட நாமெல்லோரும் ஓரிடத்தில் கூடுவதன் மூலம், தமிழை, தமிழர்தம் இதய சிம்மாசனத்தில் ஏற்றி, தமிழில் பேசுவது, தமிழில் சிந்திப்பது, தமிழ் படிப்பது என்பதைப் பெருமைக்குரியவையாகத் தமிழ்ச் சமுதாயத்தை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com