கல்வெட்டு - செப்பேடு - ஓலைச்சுவடிகள்

கல்வெட்டு, செப்பேடுகளில் காணப்படும் எழுத்துக்களுக்கும், ஓலைச்சுவடிகளில் காணப்படும் எழுத்துக்களுக்கும் இடையே சில
கல்வெட்டு - செப்பேடு - ஓலைச்சுவடிகள்

இன்றைய அச்செழுத்துக்களை வடிவமைக்கப் பெரிதும் துணையாக அமைந்தவை ஓலைச்சுவடிகளில் முன்னோர் எழுதிப் பயின்ற வடிவங்களேயாகும். ஓலைச்சுவடிகள் அழியும் தன்மையுடையனவாதலின் காலந்தோறும் அவை படியெடுத்துப் பாதுகாக்கப்பட்டு வந்தன. அவ்வாறு பெயர்த்து எழுதுந்தோறும் அவ்வக்கால் சூழலுக்கேற்ப அவை சிறுசிறு மாற்றம் பெற்று செம்மை பெறுதல் இயல்பே. இன்று கி.பி. 15 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஓலைச்சுவடிகளைக் காண்பது அரிது. எனவே, பழந்தமிழ் வரிவடிவங்களைக் கல்வெட்டுக்களிலும், செப்பேடுகளிலும் உள்ள வடிவங்களைக் கொண்டு அறிய முடிகிறது.

கல்வெட்டு, செப்பேடுகளில் காணப்படும் எழுத்துக்களுக்கும், ஓலைச்சுவடிகளில் காணப்படும் எழுத்துக்களுக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. அவ்வேறுபாடு எழுதும் கருவியாலும், எழுதும் முறையாலும் ஆனதேயாகும். கல்லிலும், செம்பிலும் எழுத்துக்களை தனித்தனியாக வரைந்து செதுக்கி அமைப்பது முறையாகும். ஓலையில் கூரிய முள் அல்லது ஆணியைக் கொண்டு எழுதுவர். ஆதனால் ஒன்றோடொன்று சங்கிலித் தொடர்போல் அமையுமேயன்றி தனித்தனியாக அமைதல் அரிதாகும். ஓரெழுத்தே கல்லில் வெட்டும்போது ஒரு வடிவாகவும், கையால் எழுதும்போது ஒரு வடிவாகவும் அமைதல் இயல்பேயாகும்.

தமிழ் மக்கள் இடமிருந்து வலமாக விரைந்து எழுதும் பழக்கம் உடையவர்கள். ஆதனால் எழுத்துக்கள் வளைந்து, உருண்டு செல்லும் அமைப்புடையனவாக இருந்தன. கல்லிலும், செம்பிலும் வெட்டும்போது சதுரம், கோணம், வட்டம் ஆகிய நிலைகள் செம்மையாக அமையும். ஓலைச்சுவடியில் எழுதும் முறையும், கல்வெட்டில் எழுதும் முறையும் வேறு வேறு அல்லனவாயினும் ஆய்வாளர்கள், கையெழுத்து முறையில் அமைந்தவற்றை கோலெழுத்து, வட்டெழுத்து என்றும் கல்லிலும், செம்பிலும் செதுக்கி அமைந்தவற்றை தமிழி எழுத்து என்றும் கூறுவர்.

தமிழ்மொழியில் கல்வெட்டுச் சாசனங்கள் பல்லவர்களின் ஆட்சிக்காலம் முதல் கிடைக்கின்றன. பாண்டி மண்டலம், சோழ மண்டலம், தொண்டை மண்டலம் ஆகியவற்றில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் காணப்படும் எழுத்துக்கள் பழைய வட்டெழுத்துக்களைச் சார்ந்துள்ளன என்பர்.

இராஜராஜசோழன் கொண்டுவந்த ஒரே முறை
பாண்டி மண்டலத்தை வென்று தன் ஆட்சிக்கு உட்படுத்திய முதலாம் இராஜராஜசோழன் அதற்கு முன் அந்நாட்டில் வழங்கி வந்த வட்டெழுத்துக்களை நீக்கி விட்டு தொண்டை மண்டலத்திலும், சோழ மண்டலத்திலும் வழங்கிய தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்துமாறு செய்தான். இச்செய்தியினை திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குற்றாலத்தில் காணப்படும் இரு கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது.

ஓலைகள்
ஓலைகள் பட்டோலை, பொன்னோலை, மந்திர ஓலை, வெள்ளோலை என்று இலக்கியங்களிலும், அறையோலை, கையோலை, சபையோலை, இறையோலை, கீழ் ஓலை, தூது ஓலை, ஓலை பிடிபாடு என்று கல்வெட்டுக்களிலும் பல வகையாகச் சொல்லப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கல்லில் எழுதப்பட்ட எழுத்துக்கள் கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. அவற்றில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படும் அறச்சலூர் கல்வெட்டில்தான் முதல் முதலாக எழுத்து என்ற சொல் காணப்படுகிறது. கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூலாங்குறிச்சிக் கல்வெட்டில்தான் முதன் முதலாக ஓலை என்ற சொல் காணப்படுகிறது. ஆனால், இவற்றிற்கு முன் சங்க இலக்கியம், சங்கம் மருவிய கால இலக்கியங்களில் ஓலை, எழுத்து பற்றிய செய்திகள் அறியக்கிடைக்கின்றன.
பூவார் அடிச்சுவடி என்தலைமேல் பொறித்தலுமே (241) என்று திருவாசகம் குறிப்பிடுகிறது. மேலும் இலக்கிய இலக்கணங்களில் சுவடி என்னும் சொல் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், பாளை எனக் குறிக்கப்பட்டு இருக்கின்றது.

தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும்
புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர் (தொல்.பொருள், மரபியல், 87)

என்பது தொல்காப்பியர் நூற்பா. பனை, தென்னை, பாக்கு முதலிய மரங்களின் இலையாகிய உறுப்பினைக் குறிக்கும் மரபுச் சொற்களாகத் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ் என்பனவற்றைத் தொல்காப்பியம் கூறுகின்றது.

தோடு
அணித்தொட்டு திருமுகத்து ஆயிழை எழுதிய
மணித்தொட்டு திருமுகம் மறுத்தற் கிரங்கி   (8: 111-112)

எனச் சிலப்பதிகாரம் தோடு பற்றிக் குறிப்பிடுகிறது. அதில் திருமுகம் என்னும் சொல்லும் ஓலையில் எழுதிய கடிதத்தைக் குறிக்கிறது என்பதும் தெரியவருகிறது.

மடல்
கண்மணி அனையாற்குக் காட்டுக வென்றே
மண்ணுடை முடங்கல் மாதவி யீத்ததும்  (13:76-77)
என்று சிலப்பதிகாரம் மடல் பற்றிக் கூறுகின்றது.
ஓலை
மூட்சியில் கிழித்த ஓலை படியோலை மூலவோலை
மாட்சியில் காட்ட வைத்தேன்

எனத்தடுத்தாட்கொண்ட புராணம் கூறுகிறது.

ஏடு
பள்ளித் தடுக்கும் கையேடும் படிக்கவும் சுவடியும்
(பள்ளியிற் பிள்ளையார் சிந்தனை)
செய்ய சிவஞானத் திரளேட்டில் ஓர் ஏடு
(தமிழ்விடு தூது-3)

என்ற இவ்வடிகளில்; ஏட என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது.

நூல்
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு (குறள்: 783)

நூல் என்னும் சொல் பழங்காலத்தில் இலக்கணத்தை மட்டுமே குறித்து வந்தது. தந்திரம், தூக்கு, பனுவல், புத்தகம் என்னும் சொற்களாலும் இலக்கண நூலைக் கூறியிருக்கின்றனர். இலக்கணம் அல்லாத பிற நூல்களைச் செய்யுள் என்றும், பாட்டு என்றும் குறித்து வந்திருக்கின்றனர்.
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்
(தொல். பாயிரம்)
ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே ( நன். நூ.54)
இவற்றுள் பனுவல் என்னும் சொல் நூலைக் குறிக்கின்றது.
நூலே, கரகம், முக்கோல், மணையே
ஆயும் காலை அந்தணர்க்கு உரிய
(தொல். பொரு.மர.71)
பாட்டு, உரை, நூலே, வாய்மொழி பிசியே
(தொல். பொருள். சேய்.76)

துணி
தூது அனுப்பப்படும் செய்திகளைத் துணிகளில் எழுதி அனுப்பியுள்ளதாக இலக்கியங்கள் வழி அறிய முடிகின்றது.
கையிற் புனையும் கழிநுண் ணானர்
ஏட்டிலும் கிடையினும் மூட்டலை கிழியினும்
(பெருங்கதை)

என்ற அடிகள் இலையும் துணியும் எழுதப் பயன்பட்டமையைத் தெரிவிக்கின்றன.
முதிர்பூந் தாழை முடங்கல் வெண்தோட்டு
விரைமலர் வாளியின்.... ....
திருமுகம் போக்கும் செவ்விய ளாகி (8:47-49)
எனும் சிலப்பதிகாரக் கூற்று. தாழைமடல் எழுதப்படு பொருளாகப் பயன்பட்டதைச் சுட்டுகிறது.

ஓலை, கடைகளில் விற்கப்பட்டதை சங்கப் புலவர்களான ஓலைக்கடையத்தார் மகன் வெண்ணாகன், மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் ஆகியோரின் பெயர்கொண்டு அறியமுடிகிறது.

தமிழகத்தில் கிடைக்கும் ஓலைச் சுவடிகள், இலக்கியம், மருத்துவம், மாந்திரியம், சோதிடம், சமயம், வணிகம், ஆவணங்கள், பள்ளி மாணவர்களுக்கான அரிச்சுவடி, எண்சுவடி என்ற வகைகளில் அடங்கிவிடக் கூடியவை. பொதுவாக எல்லாச் சுவடிகளும் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒவ்வொரு வகை ஓலைச்சுவடியிலும் ஒவ்வொரு வகையில் எழுதும் முறை தனித்துவம் பெற்றிருக்கும். இலக்கியச்சுவடிகளில் பாடல்களின் முடிவில் எண்களைக் காணலாம். இடதுபுற ஓரங்களில் அத்தியாயத் தலைப்புப் பெயர்களைக் காணலாம். மாந்திரீகச் சுவடிகளில் பலவகைச் சக்கரங்களின் (இயந்திரம்) படங்களைக் காணலாம். சோதிடச் சுவடிகளில் ராசிச் சக்கரங்களைக் காணலாம். குறியீடுகளையும் காணலாம். பள்ளிச் சுவடிகளில் பக்கவாட்டில் மூன்று நான்கு பத்திகள் பிரித்து எழுதப்பட்டுள்ளதைப் பார்க்கலாம்.

ஓலைகளில் எழுதப்பட்டுள்ள செய்திகளை அறிந்து கொள்ளவேண்டும். பொதுவாக ஒரு கட்டில் உள்ள சுவடிகள் ஒருவரால் எழுதப்பட்டிருந்தால் முதலிரு ஏடுகளைச் சிரமப்பட்டு படித்தால் அவர் எழுதுகின்ற முறை நமக்குப் புரிந்துபோகும். அதனை மனதில் கொண்டால் அடுத்த ஏடுகள் அவரது கையெழுத்து பழக்கப்பட்டதால் படிக்க எளிதாகிவிடும்.

ஓலைகளில் நார்த்தன்மை குறுக்கு வாட்டாக இருப்பதனால் ஆணியால் கிழித்து எழுதும்போதும், புள்ளியிடும்போதும், ஆணியை அடிக்கடி எடுத்து வைத்து எழுதும்போதும் இடர்பாடுகள் அதிகம் இருக்கும். எனவே ஓலை எழுத்துக்கள் புள்ளிகள் இல்லாமலும் மயங்கி மாறுபட்டும், கூட்டெழுத்துக்களாகவும் அமைந்தன. கணிதம், ஆவணம் மற்றும் வணிகச் சுவடிகளில் ஆண்டு, மாதம், தேதி, நிலம், பணம், ரூபாய், சாதிப்பெயர்கள் போன்றவை திரும்பத் திரும்ப வரும்போது அவை சுருக்கி எழுதப்பட்டு, பழக்கமான குறியீடுகளாக மாறின. அதுமட்டும் அல்லாமல் தமிழுக்கென்றே தனி எண்கள் இருந்தமையும் அவை இன்று வழக்கில் இல்லாமல் போனதையும் சுவடிகளில் அவற்றைத் தெரிந்து பழகிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன.

அழியும் நிலையில் உள்ள ஏடுகள் புதிதாகப் படியெடுக்கப்பட்டன. ஒருவரிடம் உள்ள நூல் மற்றவருக்கு தேவைப்படும் போதும் படியெடுக்கப்பட்டது. அப்படி படியெடுப்பது ஏடு திருப்புதல், பிரிநகல், சபாது என்று அழைக்கப்பட்டது.

ஏடு எழுதும்போது ஏற்படும் தவறுகள் ஏட்டுக்குத்தம், எழுத்துக்குற்றம், சொற்குற்றம், வாசகப்பிழை, வரி மாறாட்டம் எனப்பட்டன. எலிகடி, வெட்டுச்செதுக்கு, செல் அரிப்பு முதலியவையும் குற்றங்களே.

சுவடி வகை
ஓலைச்சுவடிகள் மூன்று வகைப்படும். அவை 1. ஆவணங்கள் 2. பதிவேடுகள் 3. நூல்கள் என்பனவாகும்.

ஆவணங்கள்
நிலங்கள் மற்றும் வீடுகள் போன்ற சொத்துக்களின் உரிமைப்பட்டயங்கள், கிரயம், தானம், கடன் ஒத்தி போன்ற சாசனங்கள், ஒப்பந்தப் பத்திரங்கள், சான்றுகள், தேர்தல் வாக்குச்சீட்டுகள், அரசு ஆவணங்கள், அறிவிப்புகள் போன்றவை எழுதப்பெற்ற ஓலைகள் ஆவணங்கள் எனப்படும்.

பதிவேடுகள்
பதிவேடுகள் வரவு-செலவு கணக்குகள், அன்றாட நிகழ்ச்சிக் குறிப்புகள், நிலங்கள் உரிமைப்பதிவுகள், வரி நிர்ணயம், வரி வசூல் விவரம், ஊழியர்கள் மற்றும் அவர்களின் ஊதியம் ஆகிய விவரங்கள், நன்கொடைகள் வழங்கும் விவரங்கள் போன்றவை எழுதப்பெற்ற ஓலைகள் பதிவேடுகள் எனப்படும்.

நூல்கள்
இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், விஞ்ஞானம், மந்திர சாத்திரம், ஜோதிடம் போன்றவை ஓலைகளில் எழுதப்பெற்றன. இவையே நூல்கள் எனப்படும்.

இவற்றுள் மூன்றாம் வகையான நூல்களே அதிக அளவில் காணப்படுகின்றன. ஆவணங்களும் பதிவேடுகளும் அதிகமாக காண இயலவில்லை.

ஓலைச்சுவடிகள் எழுத சாதாரண பனையோலைகள் தாளிப்பனை எனப்படும் பனை மரத்தின் ஓலைகள் ஆகிய இருவகையான பனை ஓலைகள் பயன்படுத்தப்பெற்றன. சாதாரண பனை ஓலையைவிட தாளிப்பனையின் ஓலைகள் அகலமாகவும், நீளமாகவும், மென்மையாகவும் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com