Enable Javscript for better performance
தமிழிலிருந்து தமிழ்களை நோக்கி- Dinamani

சுடச்சுட

  

  தமிழிலிருந்து தமிழ்களை நோக்கி

  By எச்.ஹாமீம் முஸ்தபா,எழுத்தாளர்  |   Published on : 29th December 2019 04:18 AM  |   அ+அ அ-   |    |  

  letters

   

  திருவிளையாடல் திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்மிக்கப் பாடல் "பழம் நீ அப்பா ஞானப்பழம் நீ அப்பா /தமிழ்ஞானப் பழம் நீ அப்பா". கே.பி.சுந்தரம்பாளின் கணீர் குரல் பாடலை கண்காணா உயரத்துக்குப் பாடலைக் கொண்டு செல்லும். அந்தப் பாடலில் இடம்பெறும் வரியொன்று இவ்வாறு அமையும்

              "உன்
          தத்துவம் தவறென்று சொல்லவும் ஒளவையின்
        தமிழுக்கு உரிமையுண்டு
       ஆறுவது சினம் கூறுவது தமிழ்...."

           தமிழா / சமஸ்கிருதமா என்னும் மொழி அரசியல் விளையாட்டில் அதிகாரம் தன்னை இறக்கிக் கொண்டிருக்கும் காலமிது. ஆனால் வரலாறும் அடுத்தடுத்து கிடைக்கின்ற தொல்லியல் தரவுகளும் தமிழ் மொழியின் மூப்பினை மறுபடியும் உறுதிப்படுத்துகின்றன. தொல்லியல் ஆய்வாளர் கே.ராஜன் அவர்கள் பொந்தல் என்னுமிடத்தில் சமீப காலத்தில் கண்டடைந்த தரவு தமிழ் பிராமி எழுத்துருவின் காலத்தை கி.மு.ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்கொண்டு செல்கிறது .மக்களின் பேச்சு மொழியாக.ஆண்டவனின் மொழியாக, அதிகாரத்தின் மொழியாக,அதிகார எதிர்ப்பின் மொழியாக, பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது தமிழ்.

           தொல்காப்பியம் வரையறை செய்யும் தரப்படுத்தல்களுக்கு வெளியே பரந்துபட்டு கிடக்கின்றன  ஒரு பெருங்கூட்டம் தமிழிகள். தமிழ் மொழி என்று சொல்கிறோம் ஆனால் தமிழ் என்பது ஒன்றல்ல,ஒருகூட்டம் தமிழ்கள் தமிழ் நிலப்பரப்பில் இருகின்றன சென்னைத்தமிழ், மதுரைத்தமிழ், கொங்கு தமிழ், திருநெல்வேலி தமிழ், நாஞ்சில் நாட்டுத் தமிழ், என நிலப்பரப்புகள் சார்ந்தும் சாதி, தொழில் உளிட்ட பண்பாட்டு,பொருளியல் அடையாளங்கள் சார்ந்தும் பன்மீயப் பண்புகொண்டதாக தமிழ் இருக்கிறது.

            சேரர்,சோழர், பாண்டியர் என்னும் வேந்தர் சார்ந்த அரசு உருவாக் கங்களில் சேர நாடு என்று அறியப்பட்ட நாட்டின் நிலப்பரப்பில் பெருமளவு கேரளாவின் நிலப்பரப்பாக மாறிப்போய்விட்டது. அந்த வட்டாரத்தின் தமிழும் அப்படியே ஆகிப்போனது.மலையாள மொழியில் தாய்மாமனை அழைக்க "அம்மாமன்''என்னும் சொல்லை பயன்படுத்துகிறார்கள். இது எந்த மொழிசார்ந்த சொல் ? தமிழுக்குரியதா? மலையாளத்தில் உருவானதா? என்னும் மயக்கம் வருகிறது.

          கவிஞர்.கண்ணதாசன் தன்னுடைய திரைப்பட பாடல்ஒன்றில் இதே பொருளினைத் தருகிற  ஏறத்தாழ இதுபோன்றதொரு சொல்லை எடுத்தாள்கிறார் "அத்தை மகனே போய்வரவா /அம்மான் மகனே போய்வரவா" என்பது அப்பாடலின் வரி.இதில் இடம்பெற்றுள்ள "அம்மான்'' என்னும் சொல்லும் மலையாள மொழியில் இருக்கின்ற "அம்மாமன்'' என்னும் சொல்லும் எழுத்துருவிலும், பொருளுருவிலும்,உச்சரிப்பிலும் அருகருகே இருப்பதைப் பார்க்கிறோம். அதுபோன்று "ஒடுக்கம்'' என்னும் சொல். "பின்னர்'' , "பிறகு'' என்னும் பொருளினைத் தருகிற இச்சொல் தமிழிலிருந்து மலையாளத்துக்கு சென்று சேர்ந்துள்ளது

          தந்தையைக் குறிப்பிட அல்லது தலைவனைக் குறிப்பிட  தமிழில் "அத்தன்'' என்னும் சொல்லும் இருக்கிறது .''அத்தன்''"அத்தா''என்றெல்லாம் இச்சொல் இலக்கியத்தில் எடுத்தாளப்படுகிறது.சங்க இலக்கியம் "அத்தன்'' எனும் சொல்லை எடுத்தாள பக்தி இலக்கியமோ "அத்தா'' எனும் சொல்லினை எடுத்தாள்கிறது.  

  "பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா!
  எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
  வைத்தாய்,பெண்ணைத் தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
  அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே!"

  என்கிறது சுந்தரர் தேவாரம் .

          மதுரையில் இருந்து தொடங்கி சென்னைவரை வாழ்கிற தமிழ் பேசுகிற முஸ்லிம்கள் தந்தையைக் குறிப்பிட அத்தா என்னும் சொல்லையே இன்றும் பயன்படுத்துகிறார்கள்.  "அத்தா''  என்னும் சொல் எங்கிருந்து எங்கு வந்தது? அல்லது இங்கிருந்து எங்கு சென்றது? என்பது இங்கு கேள்வியாகிறது. "அத்தா'' எனும் சொல் துருக்கி மொழியிலும் இதே பொருளில் கையாளப்படுகிறது. நவீன துருக்கியை உருவாக்கியவரான முஸ்தபா கமால் பாஷாவை அந்த நாட்டு மக்கள் "அத்தாதுருக்கி''என்றே அழைகின்றனர். "துருக்கியின் தந்தை'' என்பது இதன் பொருள்.

           தமிழ் மொழியின் புழங்குதளம் பரந்துபட்டது. வணிகத்தின் பொருட்டும், சமயப் பரப்புரையின் பொருட்டும் தமிழ் மண்ணுக்கு அறிமுகமான எல்லா மொழிகளோடும் தமிழ் கணிசமான கொள்வினை கொடுப்பினைகளை நடத்தியிருக்கிறது. பரிவர்த்தனை மற்றும் பண்பாட்டுத் தளங்களில் நிகழ்ந்த இத்தகைய மொழிசார் பரிமாற்றம் என்பதுடன் தேவைக்கு ஏற்ப தனக்கான எழுத்துருவையும் தமிழ் வளர்த்தெடுத்து வந்திருக்கிறது. பிராமி, வட்டெழுத்து, கிரந்தம், இன்றைய தமிழ் எழுத்துரு என்று தமிழ் மொழி எழுத்துருக்களின் வளர்வரலாறு நெடியது.

            தமிழை ஒத்த தொன்மையுடைய மொழிகளின் இருப்பு காலத்தில் கரைந்துபோக தமிழ் மொழியும் அம்மொழியில் உருவான இலக்கியமும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இடையிறாத தொடர்ச்சியினையும் செழுமையான வரலாற்றையும் கொண்டிருகின்றன. இத்தகைய சிறப்புக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது தன்னுடைய அடையாளம் எதையும் விட்டுக்கொடுக்கமால் மாறியும் வளர்ந்தும் வருகின்ற தமிழ் மொழியின்,அதன் எழுத்துருக்களின் நெகிழ்வுத்தன்மைதான்.

            மொழித்தளத்தில் எதிரிட வேண்டிவந்த அகப்புற நிலைப்பட்ட அனைத்து சவால்களையும் வேற்று மொழிகளின் உச்சரிப்பு ஏற்படுத்திய சவால்களையும் சந்திக்க இந்த நெகிழ்வுத்தன்மைதமிழுக்குப்பேருதவியாக இருந்தது.  வட மொழி என்று வரும்போது சமஸ்கிருதம் என்னும் சித்திரமே நம்மனதுள் உருவாகிறது

           எதார்த்தம் என்னெவென்றால் சமஸ்கிருத மொழிக்கான எழுத்துருக்கள் கி.பி.ஒன்றாம் நூற்றாண்டில் இருந்துதான் உருவாகின்றன.இன்று வரை சமஸ்கிருத மொழிக்கு முழுமையான எழுத்துருக்கள் உருவாகவில்லை. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தமிழ் மொழி  எதிரிட வேண்டிவந்த வடமொழி பிராகிருதம் ஆகும்.வடமொழியான பிராகிருதமும் தமிழ் மொழியைப் போன்று  மக்களின் பேச்சு மொழியாகவே வடநாட்டில் பேசப்பட்டு வந்தது . பௌத்த,ஜைன சமயங்களின் செல்வாக்கில் பிராகிருதம் வளர்ந்து வந்தது. ''தம்மம்'' என்னும் சொல் பௌத்த மரபில் அதிகம் எடுத்தாளப்படுகிறது.''புத்ததம்மம்''என்றெல்லாம் கூறுகிறோம் .''தம்மம் எனும் சொல் பிராகிருத சொல்லாகும்,சமஸ்கிருதம் இதனை "தர்மம்''என்று குறிப்பிடும் ஐந்தாம் நூறாண்டுக்குப் பிறகு பல்லவர் ஆட்சி காலத்தில்தான் சமஸ்கிருதம் தமிழகத்தில் அரச செல்வாக்குடன் அதிகார மொழியானது .

     பிராகிருதமாக இருந்தாலும் சரி, சமஸ்கிருதமாக இருந்தாலும் சரி அம்மொழிகள் சார்ந்து உருவான உச்சரிப்பு சவால்களை, எழுத்துருக்களின் போதாமையை தமிழ் மொழி திறமையாகக் கையாண்டது. ஜ,ஷ.ஸ்ரீ,ஸ என்று வடமொழிக்கான எழுத்துருக்களை உள்வாங்கிக்கொண்ட தமிழ்  மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்தியாவின் பிற மொழிகளைப் போல் வர்க்க எழுத்துக்களை தன்னுள் உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதும் கவனத்திற்குரியது. சான்றாக தமிழ் மொழியில் ஒரேயொரு "க'' தான் இருக்கிறது. ஆனால் பிற மொழிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட "க''-கள் இருக்கின்றன

           இன்றுள்ள தமிழ் உயிர் எழுத்து வகைமையுள் காணப்படுகிற "ஐ''என்னும் உயிர் எழுத்துக் குறியீடு தமிழின் தொடக்க நிலைப்பட்ட  எழுத்துரு வடிவமான பிராமியில்   இல்லை என்று தெரிகிறது. அதவாது ஐ என்கிற சொல் இருந்திருக்கிறது அனால்  அதற்கான எழுத்துரு இல்லை. ஒருவேளை "அய்'' என்னும் எழுத்துருவில் அச்சொல் எழுதப்பட்டிருகலாம். உயிர் மெய் எழுத்துக்களில் இந்த எழுத்து இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் கிடைக்கின்ற பிராமி எழுத்துகளாலான கல்வெட்டுகள் எதிலும் "ஐ" என்னும் எழுத்துரு இடம் பெறவில்லை. பிராமியைத் தொடர்ந்து வந்த வட்டெழுத்தில் எழுதப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகான கல்வெட்டு ஒன்றில் "ஐ'' என்னும் எழுத்து இடம்பெற்றுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதுபோல் ஒள என்ற எழுத்து பிராமியிலும், வட்டெழுத்திலும் இடம்பெறவில்லை. இந்தப் புரிதலுடன்தான் தந்தை பெரியார் தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் பற்றி கருத்துரைத்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

  சமீபகாலம் வரை தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற தொன்மையான கல்வெட்டுகளில் காணப்பட்ட எழுத்துருக்களை "அசோகபிராமி''எழுத்துருக்கள் என்றே ஆய்வாளர்கள் அடையாளப்படுத்தினர். ஆனால் சமீப காலங்களில் தொல்லியல் ஆய்வுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தமிழ் எழுத்துருக்களின் தொன்மையை அசோகரின் வடமொழி பிராமிக்கும் முற்பட்டது என்று காலக் கணிப்பு செய்கிறது .எனவே இப்போது தமிழின் தொன்மையான எழுத்துருவை "தமிழ் பிராமி'' என்றும் "தமிழி'' என்றும் அழைக்கும் வழக்கம் உருவாகி இருக்கிறது.

  இணையத்தின் பெரும்பரப்பில் தமிழ் இப்போது புது பரிமாணம் எடுத்திருக்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai