சீனிவாசநல்லூர்க் குரக்குத்துறைக் கோயில் சிற்பங்கள்

மேற்குக் கோட்டங்களில் சாலைக்கோட்டம் நோக்கி ஒருக்கணித்த நிலையில் இளமையும் அழகுமாய் இரு கவரிப்பெண்கள். சிதைக்கப்பட்ட நிலையிலும்
குரங்கநாதர் கோயில்
குரங்கநாதர் கோயில்


சிராப்பள்ளித் தொட்டியம் சாலையில் முசிறியிலிருந்து 10 கி. மீ. தொலைவில் காவிரியின் வடகரையிலுள்ள சீனிவாசநல்லூரின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது கல்வெட்டுகளில் குரக்குத்துறைப் பெருமானடிகள் என்றழைக்கப்படும் குரங்கநாதரின் கோயில். இந்தியத் தொல்லியல் துறையின் காப்பில் கோபுரம், மதில், சுற்றாலைத் திருமுன்களற்ற பரந்த வெளியில் முற்சோழர் கைவண்ணமான முத்தள நாகர விமானம், இடைநடை, முகமண்டபம் மட்டுமே கொண்டு ஒளிரும் இக்கோயில் சோழர் கட்டமைப்பு, சிற்பத் திறனின் உச்சமாய்த் திகழ்கிறது. 

சிற்பங்கள்
குரங்கநாதர் கோயில் சிற்பங்களைக் கோட்டச் சிற்பங்கள், சிற்றுருவச் சிற்பங்கள் என இருவகைப்படுத்தலாம்.

கோட்டச் சிற்பங்கள்
முப்புறச் சாலைப்பத்திகளிலும் அவற்றை ஒட்டிய சுவர்த்துண்டுகளிலும் உள்ள கோட்டங்களில், தெற்கில் மூன்று கோட்டங்களிலும் மேற்கிலும் வடக்கிலும் சுவர்த்துண்டுக் கோட்டங்களிலும் விமானக் காலச் சிற்பங்கள் உள்ளன. வடசாலைக் கோட்டத்திலுள்ள நான்முகன் விமானக் காலத்தவராகலாம். 

தெற்குக் கோட்டங்கள்
இங்குள்ள கோட்டச் சிற்பங்கள் அனைத்துமே சிறப்புக்குரியவை என்றாலும், சிதைந்திருந்தபோதும் சிறப்பின் உச்சப் படைப்பாகத் திகழ்கிறார் தென்கோட்ட ஆலமர்அண்ணல். வீராசனத்திலுள்ள இறைவனின் வலப்பாதம் கீழே குப்புறக் கவிழ்ந்து படுத்துள்ள முயலகன் முதுகின் மீதமைய, இடக்கால் சிதைக்கப்பட்டுள்ளது. நுனிகளில் சிரஸ்திரகமாய்ச் சுருட்டப்பட்ட சடைப்பாரம், மகர, பனையோலைக் குண்டலங்கள், சவடி, பெருமுத்துக்கள் பதித்த ஆரம், தோள், கை வளைகள், மோதிரங்கள், இடைக்கட்டுடனான சிற்றாடை பெற்றுள்ள இறைவனின் தலையை மண்டையோடும் நெருஞ்சிப்பூக்களும் நெற்றிப்பட்டமும் அலங்கரிக்கின்றன. 

பின்கைகளில் அக்கமாலை, சுவடி பெற்றுள்ள பெருமானின் நெற்றியில் மூன்றாவது கண். அகலமான உதரபந்தமும் முப்புரி நூலென  மடித்த துண்டும் அணிந்துள்ள அவரது முன்கைகளும் சிதைந்துள்ளன. இறைவனின் பின்னுள்ள மரத்தின் பொந்தில் ஆந்தை. அதன் கிளைகளில் தாவியேறும் அணில். மரத்தின் வலக் கீழ்க் கிளையில் இறைவனின் பொக்கணப்பையும் அக்கமாலையும் இருக்க, இடக்கீழ்க்கிளையில் மடித்த நிலையில் இறைவனின் துண்டு. ஆகமம் உரைக்கும் அண்ணலின் முகப்பரப்பில் கருணையும் கனிவும்.  

இறைவனின் இருபுறச் சிற்பத்தொகுதிகளும் மேலிருந்து கீழாக மூன்று பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இடமேல் பிரிவிலுள்ள கின்னரர்களுள் ஒருவர் வீணை இசைக்க, மற்றொருவர் கையில் தாளம். இடைப்பிரிவில் அமர்ந்துள்ள இரண்டு புலிகளுள் முன்னது தூங்க, பின்னது தலைநிமிர்த்தி உறுமுகிறது. கீழ்த் தொகுதியின் சடைமகுட முனிவர் சுவடியேந்தியுள்ளார். வலமேல் பிரிவில் ஆண், பெண் இணையாக இரு பூதங்கள். தலையிலிருந்து கால்வரை போர்த்திய ஆடையை இருகைகளிலும் பிடித்தபடி இலலிதாசனத்திலுள்ள அவற்றுள், முதல் பூதம் சன்னவீரம், உதரபந்தம் அணிந்துள்ளது. இடைப்பிரிவில் ஆணும் பெண்ணுமாய் இரு சிங்கங்கள். ஆண்சிங்கம் துணையைப் பார்த்து உறும, மூன்றாம் பிரிவின் இளமுனிவர் சுவடியேந்தியுள்ளார். 

தெற்குச் சுவர்த்துண்டுக் கோட்டங்களுள் கிழக்கில் சடைமகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், சவடி, பூப்பதக்க ஆரம், பாம்புத் தோள்வளை, முப்புரிநூலென மடித்த துண்டு, இடைப்பட்டையாய்ப் பாம்பு கொண்டு ஆடையற்று நிற்கும் பிச்சையேற்கும் பெருமானின் திருவடிகளில் உயரமான காலணிகள். வல முன் கையில் அவர் கொண்டுள்ள புல்லை உண்ணுமாறு போலத் தாவும் மான். வலப்புறத்தே இடத்தோளில் சாய்க்கப்பட்டுள்ள கவரியின் தண்டை இடப் பின் கை பிடித்துள்ளது. அதைத் தாங்குமாறு போல இடுப்பிலுள்ள பாம்பின் தலை விரிந்துள்ளது. மார்பருகே உள்ள இட முன் கை சிதைந்திருக்க, வலப் பின் கையில் உடுக்கை. அவருக்கு முன்னே இடப்புறத்தே சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், பதக்கம் பெற்ற ஆரம், இடைக்கட்டுடனான சிற்றாடை, கைவளைகள் கொண்டு நடை பயிலும் பூதத்தின் கைகளில் சிரட்டைக் கின்னரி. இறைவனின் நடையிலும் உடலிலும் வெளிப்படும் நளினம் அப்பர் பெருமான் பாடியுள்ள வட்டணை நடையையே கண்முன் காட்டுகிறது. 

தெற்குச் சுவர்த்துண்டுக் கோட்டங்களுள் மேற்கில் கோட்டத்தினும் சற்றுப் பெரிய வடிவமாகக் காட்சிதரும் வானவர், கீர்த்திமுகம் பொறித்த கரண்டமகுடமும் கோரைப்பற்களும் கொண்டுள்ளார். பனையோலைக் குண்டலங்கள், சிம்மமுகத் தோள்வளைகள், சரப்பளி, அலங்கார முப்புரிநூல், வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடை, அதை இருத்தும் சிம்மமுக அரைக்கச்சு  அணிந்து, இரு கைகளையும் மார்புக்காய்க் குறுக்கீடு செய்து பணிவின் விளக்கமாய் நிற்கும் அவரது சடைக்கற்றைகள் இருபுறத்தும் நெகிழ்ந்துள்ளன. தமிழ்நாட்டுக் கோயில்களின் விமானக் கோட்டங்களில் இத்தகு பத்திமை நிறை வானவர் சிற்பங்களைக் காண்பதரிது.

மேற்குக் கோட்டங்கள்
மேற்குக் கோட்டங்களில் சாலைக்கோட்டம் நோக்கி ஒருக்கணித்த நிலையில் இளமையும் அழகுமாய் இரு கவரிப்பெண்கள். சிதைக்கப்பட்ட நிலையிலும் முற்சோழர் கலைத்திறம் காட்டும் இவ்விரு நங்கையரும் சோழர் கால ஒப்பனையாற்றலின் உச்சங்களாகத் திகழ்கின்றனர். தமிழ்நாட்டுக் கோயில்கள் பலவற்றில் கவரிப்பெண்களை மகரதோரணம், தூண்பாதம், தூண்சதுரம், கொடிக்கருக்கு வளையங்கள், சிறு கோட்டங்கள் எனக் கட்டுமானம் சேர்ந்த பல உறுப்புகளில் காணமுடிந்தாலும் இங்குள்ளாற் போல் சுவர்த்துண்டுக் கோட்டங்களில் சாலைக் கோட்டச் சிற்பத்திற்கு இணையான அளவில் பேருருப் படைப்புகளாய் யாங்கனும் காணமுடிவதில்லை. கவரிப்பெண்களுக்குக் குரக்குத்துறைச் சிற்பிகள் அளித்துள்ள இணையற்ற இந்தப் பெருமை தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.
இருவரின் பாதங்களும் ஒருக்கணிப்பிற்கேற்ப சமத்திலும் திரயச்ரத்திலும் உள்ளன. வெளிக் கைகளைக் கடியவலம்பிதமாகக் கொண்டுள்ள அவர்தம் உள்கைகள் கவரியேந்தியுள்ளன. நன்கு சீவிமுடித்த கூந்தலுடன் அழகிய நெற்றிப்பட்டமும் பூட்டுக் குண்டலங்களும் பெரிய அளவிலான கற்கள் பதித்த ஆரமும் தோள், கை வளைகளும் முத்துக்கள் பதித்த முப்புரிநூலும் பூப் பதக்க அரைக்கச்சும் இடைக்கட்டுடனான ஆடையும் அணிந் துள்ள அவ்விருவருள், தென்மேற்கர் வலக்கையில் ஏந்தியுள்ள கவரி இடத்தோளுக்குப் பின் நெகிழ்ந்துள்ளது. அவர் இடையில் சிற்றாடை. வடமேற்கரின் கவரி அவர் தோளின் பின்புறத்தே இடப்புறம் நெகிழ்ந்துள்ளது. 

வடக்குக் கோட்டங்கள்

                                                     வடக்குச் சுவர் கோட்டங்கள்


வடக்குச் சாலைக் கோட்ட நான்முகனின் கால்கள் சிதைந் துள்ளன. சடைமகுடம், பூட்டுக்குண்டலங்கள், சரப்பளி, முப்புரி நூல், உதரபந்தம், இடைக்கட்டுடனான பட்டாடை, தோள், கை வளைகள் பெற்றுள்ள அவர் பின்கைகளில் அக்கமாலை, குண் டிகை. வல முன் கை காக்க, இட முன் கை கடியவலம்பிதத்தில்.

வடக்குச் சுவர்க்கோட்டங்களில் சாலைப்பத்திக்காய் ஒருக் கணித்த இரண்டு ஆடவ அடியவர்கள். சடைமகுடமும் பட்டாடை யும் பெற்றுள்ள அவர்களுள், கிழக்கர் வலக்கையில் மலரேந்தி வலக்காலைச் சற்றே முழங்காலளவில் மடித்துப் பாதத்தைத் திரயச் ரத்தில் இருத்தியுள்ளார். இடக்கால் சமத்தில். சரப்பளி, தோள், கை வளைகள், மகரகுண்டலங்கள் அணிந்துள்ள அவரது இடை யாடையை அரைக்கச்சு இடுப்பிலிருத்தியுள்ளது. மலர்கள் ஏந்திய கைகளைக் குவித்துத் தாமரையில் நிற்கும் மேற்கர் பாதங்களை சமத்திலும் திரயச்ரத்திலும் இருத்தித் தோள், கை வளைகள், சரப் பளி, முப்புரிநூல், இடைக்கட்டுடனான பட்டாடை அணிந்து பத்திமையின் சிகரமாக விளங்குகிறார்.

முகமண்டப வடகோட்டத்தில் சடைப்பாரம், முப்புரிநூல் என மடித்த துண்டு, சரப்பளி, சவடி, தோள், கை வளைகளுடன் வீராசனத்திலுள்ள பின்னாளைய பேரளவிலான ஆலமர்அண்ண லின் நான்கு கைகளும் இடக்காலும் சிதைந்துள்ளன. 

சிற்றுருவச் சிற்பங்கள்
குரங்கநாதர் கோயில் சிற்றுருவச் சிற்பங்களைத் தூண் சிற்பங்கள், மகரதோரணச் சிற்பங்கள் என இருவகைப்படுத்தலாம். தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான முற்சோழர் கோயில்களில் இத்தகு சிற்றுருவச் சிற்பங்கள் சிறப்பான வடிப்புகளாகப் பார்வைக்குக் கிடைக்கின்றன. சோழர் கால ஆடல், இசைக்கலை, ஒப்பனையாற்றல், சமூகச் செயற்பாடுகள், வாழ்வியல் நிகழ்வுகள் எனப் பல் துறை சார்ந்த பதிவுகளை இத்தகு சிற்பங்களில் பரவலாகக் காணமுடிகிறது. 

தூண் சிற்பங்கள்
குரங்கநாதர் சுவர்த்தூண்கள் சிலவற்றின் மாலைத்தொங்கல், கட்டுப்பகுதிகள் சிற்றுருவச் சிற்பங்களைக் கொண்டுள்ளன. வானவர் கோட்டத்தை வலப்புறம் அணைத்துள்ள உருளை அரைத்தூணின் மாலைத்தொங்கல் செங்குத்து நிலையில் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒரு நிகழ்வு சார்ந்த மூன்று காட்சிகளைப் பதிவு செய்துள்ளது. 

மகப்பேற்றுக் கொண்டாட்டம்

இடமிருந்து வலமாக முதல் பிரிவில் பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, பட்டாடையணிந்த மூன்று பெண்கள். சடைப்பாரத்துடன் நடுவிலிருப்பவர் கருவுற்ற நிலையில் தளர் நடையுடன் தன் இருபுறத்தும் கொண்டையுடன் நிற்கும் தோழியர் தோள்களில் கைகளை வைத்தவாறு காட்சிதர, அவரை அணைத்துக் கைத்தாங்கலாக அழைத்துவரும் தோழியரில் வலப்புறத்தார் வலக்கையை மடக்கி மார்பருகே கொள்ள, உடலைச் சற்றே குறுக்கித் தாங்கும் இடப்பெண் இடக்கையை நெகிழ்த்தியுள்ளார். 

நடுப்பிரிவில் அழகிய குத்துவிளக்கு. அதன் இருபுறத்தும் தமிழம்கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், முத்துமாலை, பட்டாடை அணிந்த இரு இளநங்கையர் குத்துவிளக்கிற்காய் ஒருக்கணித்துக் கால்களை சுவஸ்திகமாக்கி ஒல்கி நிற்கின்றனர். வலப்பெண் கைகளில் செண்டுதாளம். இளநகையுடன் உள்ள இடப்பெண் கைகளில் எண்ணெய்ச் செப்பு. மூன்றாம் பிரிவில் முக்காலி ஒன்றின்மீது அமர்ந்துள்ள மங்கை தொடையில் தாங்கலாக நிறுத்தியுள்ள நரம்புக்கருவியை இசைக்கிறார். அவரது இடுப்பிலிருந்து தலைவரை நீளும் அந்த இசைக்கருவியின் மேல் நுனியில் இடக்கை இருக்க, கருவியின் கீழ்ப்பகுதியில் வலக்கை. 

அதே தூணின் கட்டுப்பகுதியில் இரண்டு காட்சிகள். முதற் காட்சியில் மகவுக்குப் பாலூட்டும் பெண். இரண்டாம் காட்சியில் மகப்பேற்றைக் கொண்டாடும் பெண்களின் கூத்து. பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, கைவளைகள், பட்டாடை அணிந்தவராய் வலக்கையைத் தலைக்கு அணையாக்கி, இடக்கையால் அருகே படுத்திருக்கும் மகவை அணைத்தபடி பாலூட்டும் இளந்தாய் அழகிய கட்டிலில் படுத்துள்ளார். பின்புறம் முடித்த கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், தொடையளவாய்ச் சுருக்கிய ஆடை என அவரது தலைப்புறம் குத்துக் காலிட்டு அமர்ந்துள்ள செவிலி, அத்தாயின் தலையை அன்போடு வருடுகிறார். 

தாயின் கால்புறம் ஒருவர் பின் ஒருவராக அமர்ந்துள்ள மூன்று பெண்களில், கட்டிலின் பின்னிருந்தவாறு அன்னையின் கால்களைப் பிடித்துவிடும் முதலாமவர், பாலூட்டும் பெண் ணின் தாயாகலாம். அக்காட்சி கண்டு பூரிக்கும் பிற இருவரும் நெருங்கிய உறவுகள் போலும். அவர்களுள் முதலாமவர் பட் டாடையுடன் வலக்கையைத் தொடையிலிருத்தி இடக்கையை மார்பருகே பதாகமாய்க் கொண்டுள்ளார். பனையோலைக் குண்டலங்களுடன் குத்துக்கால் அமர்விலுள்ள இரண்டாமவர் கைகளை மடித்து மார்பருகே கொண்டுள்ளார். 
தமிழ்நாட்டுச் சோழர் காலக் கூத்துக்கலையைப் படம் பிடிக்கும் ஆடற்காட்சியில், மூன்று அரிவையர் பனையோலைக் குண்ட லங்களும் சிற்றாடையும் விளங்க, வெவ்வேறு நிலைகளில் ஆடு வதைக் காணமுடிகிறது. உடலை வில் போல் வளைத்துக் குனித்தல் நடனம் நிகழ்த்தும் முதற்காரிகை வலக்கையைத் தலை மீதிருக்கு மாறு உயர்த்தி, இடக்கையைப் பின்புறம் நெகிழ்த்தியுள்ளார். மண்டலநிலை நடுப்பெண் இடப்பாதத்தைப் பார்சுவத்திலும் வலப் பாதத்தை அக்ரதலசஞ்சாரத்திலும் இருத்தி, வலக்கையைப் பதாகத்தில் கொண்டுள்ளார். இடக்கை அர்த்தரேசிதத்தில். மூன்றாம் நங்கையின் சிற்பம் தெளிவாக இல்லை. 

தொங்கலிலும் கட்டிலுமாய் இணைந்து விளைந்துள்ள இக் காட்சித்தொடர் ஊர்ப்புறத்துக் குடும்ப நிகழ்வையும் அதன் காரண மான களியாட்டங்களையும் கண்முன் நிறுத்துகிறது. கருவுறுதல், மகப்பேறு சார்ந்த சடங்குகளை இத்தனை விரிவான அளவில் படக்காட்சி போலத் தமிழ்நாட்டின் வேறெந்தச் சோழர் காலக் கோயில்களிலும் கண்டதில்லை. மேல்பாடிக்கு அருகிலுள்ள திருவலம் சிவன்கோயிலின் அரைவட்ட வடிவிலான கல்தொட்டியின் புறப்பகுதியில் விஜயநகரக் காலப் படப்பிடிப்பாக மகப் பேற்றுடன் தொடர்புடைய சடங்குகள் காட்டப்பட்டுள்ளமை இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

கரணக் காரிகை
தெற்கிலுள்ள நான்முக அரைத்தூணின் கட்டும் தொங்கலும் இசை, ஆடற்காட்சியைக் கொண்டுள்ளன. இரு பிரிவுகளாக்கப்பட்டுள்ள தொங்கலில் வலப்புறம் வக்ஷசுவஸ்திகத்தில் கரணக் காரிகையும் இடப்புறம் அவ்வாடலுக்கு இசைநயம் கூட்டும் இடக்கைக் கலைஞரும் பொலிகின்றனர். மண்டலத்தில் கால்களைக் குறுக்கீடு செய்து பாதங்களைத் திரயச்ரமாக்கியுள்ள ஆடலழகியின் வலக்கை நெகிழ, இடக்கை மார்பருகே பதாகம் காட்டுகிறது. வலச்சாய்வாயுள்ள முகம் இடந்திரும்ப, தமிழம்கொண்டை, பட்டாடையுடன் உள்ள அவரது செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். சரப்பளி, தோள், கை வளைகள், கடகவளை, இடைத்தொங்கலுடன் அவரது கழுத்தில் மெல்லிய ஆரம். பெருங்கொண்டையும் சிற்றாடையும் இடப்புறம் பறக்கும் தோள்துண்டும் பெற்று, நீள் வெறுஞ் செவிகளுடன் மண்டலப் பார்சுவத்தில் பாதங்கள் அமைய, தோளின் இடப்புறத்திருந்து தொங்கும் இடக்கையை இயக்கும் ஆடவரின் வலக்கை கருவியை முழக்க, இடதுகை இசைக்கருவியின் கயிற்றுப் புரிகளுக்குள் நர்த்தனமிட்டு இசையை ஆடலுக்குத் தக்கவாறு வெளிப்படுத்துகிறது. இது மேடைநிகழ்ச்சி என்பதை உணர்த்துமாறு இருவர் சார்ந்தும் பின்னணியில் மலர்த் தோரணங்கள். 

பூதக்கலைஞர்கள்
செவ்வகத் துண்டாய்ச் செம்மைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பகுதியில் வலமும் இடமுமாய்க் குந்திய பூதக்கலைஞர்கள். இடை யில் வலக்காலைத் தளத்திலிருக்குமாறு மடித்து அமர்நிலையில் விருச்சிகக் கரணம் காட்டும் ஆடலர். சடைமகுடம், பனையோ லைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், கழுத்தணி, இடைக்கட்டுடனான சிற்றாடை பெற்றுள்ள மூவருமே நேர்நோக்கிய  அமர்வினர். இடஒருக்கணிப்பிலுள்ள முதற்பூதம் செண்டுதாளம் இசைக்க, முப்புரிநூலுடன் வலஒருக்கணிப்பிலுள்ள மூன்றாம் பூதம் இடத்தோளிலிருந்து தொங்கும் மத்தளம் ஒத்த தோலிசைக் கருவியை இரு கைகளாலும் முழக்குகிறது. இடக்காலைத் தேள் கொடுக்கென வளைத்து விருச்சிகம் காட்டும் இடைப்பூதம் உதரபந்தம், முப்புரிநூல், கடகவளை பெற்றுள்ளது. அதன் வலக்கை மார்பருகே அமைய, இடக்கை அர்த்தரேசிதமாக, முகம் இடச்சாய்வாக உள்ளது. 

ஆடலும் இசையும்
தென்மேற்குக் கர்ணபத்தியைத் தழுவியுள்ள நான்முக அரைத் தூணின் கிழக்குமுகத் தொங்கலிலும் ஆடல், இசைக்கலைஞர் களின் காட்சிதான். இருவருமே பெண்கள். மண்டலத்தில் வலப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்திலும் இடப்பாதத்தைப் பார்சுவத் திலும் இருத்தி, இடஒருக்கணிப்பில் வலக்கையைப் பதாகமாக்கி, இடக்கையை ரேசிதத்தில் வீசியுள்ள ஆடலரசியின் இடைக்கட்டுடனான சிற்றாடை இடைத்தொங்கலும் பெற்றுள்ளது. முகம் வலச்சாய்வாய் இடத்திருப்பத்தில். தமிழம்கொண்டை, பனை யோலைக் குண்டலங்கள் அணிந்துள்ள அவரது உடல்வளைவுகள் ஆடலுக்கேற்ப அழகு காட்டுகின்றன. தொங்கலின் இடப்புறத்தே குழலிசைக்கும் நங்கை, பட்டாடையும் நீள்குழலுமாய் நிற்கிறார். பின்புறம் காட்டி முகத்தை வலப்புறமாய்த் திருப்பிக் குழல் பிடித்திருக்கும் அந்நங்கையின் கொண்டை ஊரகப் பெண்களின் தலையலங்காரத்தை நினைவூட்டுகிறது. தமிழ்நாட்டிலுள்ள பின்புறம் காட்டும் சிற்றுருவச் சிற்பங்களில் இணையற்ற பேரழகுடன் திகழும் சிற்பமாக இதைக் குறிக்கலாம். இப்பெண்ணின் வலப்புறம் நிற்கும் குள்ளச் சிறுபூதம் செண்டுதாளம் வாசிக்கிறது. பனையோலைக் குண்டலங்கள், சிற்றாடையுடன் இடஒருக்கணிப்பிலுள்ள அதன் முகம் குழலிக்காய்த் திரும்பியுள்ளது.  

பூதக்குறும்பு
இத்தூணின் இடைக்கட்டில் சடைமகுடம், உதரபந்தம், சிற்றாடை பெற்ற மூன்று பூதங்கள் அமர்ந்துள்ளன. வலஒருக் கணிப்பில் சற்றே வலச்சாய்வாய் உள்ள முதல் பூதம் நடுப்பூதத்தைக் கடைக்கண் பார்வையால் நோக்குகிறது. தோள் வளைகளோடுள்ள அதன் கைகள் வலப்புறத்துள்ள ஒருமுக முழவை வாசிக்க, இடஒருக்கணிப்பில் அச்சம்நிறை பார்வையுடன் இடச்சாய்வாய் உள்ள மூன்றாம் பூதத்தின் முகம் வலத்திருப்பமாக உள்ளது. பனையோலைக் குண்டலங்களுடனுள்ள அதன் இருகைகளும் பிடித்திருப்பது வீணையாகலாம். இரண்டிற்கும் இடையிலுள்ள சுருள்முடிப் பூதம் கடக, கைவளைகள் உள்ள தன் இரு கைகளையும் இதழ்க்கடையில் வைத்து வாயைக் கிழிக்குமாறு போலப் பழிப்பு காட்டுகிறது. மூன்று பூதங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளபோதும் அவற்றுக்குரிய ஆறு கால்களுக்குப் பதிலாக நான்கு கால்களே காட்டப்பட்டுள்ளன. முதல் பூதத்தின் இடக்கால் நடுப்பூதத்தின் வலக்காலாக அமைய, மூன்றாம் பூதத்தின் வலக்கால் அதன் இடக்காலாகியுள்ளது. இது போன்ற கண் மயக்குக் காட்சிகள் சிற்ப அற்புதங்களாய்ப் பாச்சில் அவனீசுவரம் உள்ளிட்ட பல முற்சோழர் கோயில்களில் காணக்கிடைக்கின்றன. 

மேற்கு நான்முகத்தூணின் இடைக்கட்டில் பூதக்குறும்புகளாய் இரண்டு காட்சிகளும் தொங்கலில் ஆடல் நிகழ்வுகளாய் இரண்டு காட்சிகளும் பதிவாகியுள்ளன. தூண்கட்டின் முதற் படப்பிடிப்பு கண் மயக்குக் காட்சியாக உள்ளது. இரண்டு பூதங்கள் மேலும் கீழுமாகவும் இரண்டு பூதங்கள் பக்கவாட்டிலும் படுத்திருக்குமாறு படைக்கப்பட்டுள்ள இச்சிற்பத்தில் நான்கு உடல்களுக்கு இரண்டு தலைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. மிக நேர்த்தியாக இரண்டு தலைகளுக்கேற்ப நான்கு உடல்களைப் பொருத்தமான கிடத்தல் கோலங்களில் காட்டியுள்ள முற்சோழர் சிற்பிகளின் கற்பனையாற்றலும் கைச்செறிவும் வியத்தகு சிறப்பின. வழக்கமாகச் சோழப் பூதவரிகளில் இடம்பெறும் பூதத்தின் பிறப்புறுப்பை வாத்து கவ்வும் காட்சி அடுத்துள்ளது. 
சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், உதரபந்தம், கை வளைகள், சிற்றாடையுடன் வலக்காலால் வாத்தை உதைத்தவாறு கண்ணீருடன் கதறும் அப்பூதத்தின் வலக்கை தலை மீதுள்ளது. இடக்கை வாத்தை விலக்கும் முயற்சியில். பூதத்தின் துன்பத்தையோ விலக்க முயற்சிக்கும் அதன் உழைப்பையோ சற்றும் பொருட்படுத்தாத வாத்து, கால்களால் பூதத்தை உதைத்தவாறே தன் செயலில் முனைப்பாக உள்ளது. பொதுவாகப் பிற கோயில்களில் காணப்படும் இத்தகு சிற்பங்களில் வாத்து பூதத்தை உதைக்கும் செயற்பாடு இருப்பதில்லை. அவ்வகையில் இச்சிற்பம் தனித் தன்மையதாக ஒளிர்கிறது. வலபி வரியிலேயே இடம்பெறும் இச்சிற்பம் இங்குத் தூண்கட்டில் காணப்படுவதும் இக்கோயிலின் சிறப்பெனலாம். 

சுவஸ்திகக் கரணங்கள்

அதே தூணின் தொங்கல், பூச்சரங்களால் இரண்டாகப் பிரிக்கப்பட்டு சுவஸ்திகக் கரணக்கோலங்களைப் பதிவுசெய்துள்ளது. இரண்டு பிரிவுகளிலுமே மேற்பகுதியில் மூவரும் கீழ்ப்பிரிவில் இரு பூதஇசைக்கலைஞர்களும் உள்ளனர். முதற் பிரிவின் மேற்பகுதியில் வலப்புற ஆடலரசியின் வடிவம் சிதைந்துள்ளது. தமிழம் கொண்டையும் குண்டலங்களும் கைவளைகளும் பட்டாடையும் பெற்று நடுவிலுள்ளவர் கால்களைக் குறுக்கீடு செய்து சுவஸ்திகக் கரணத்தில் மார்பருகே உள்ள வலக்கையில் பதாகம் காட்டி, இடக்கையை அர்த்தரேசிதமாய் வீசியுள்ளார். அவரின் இடப்புறத்தே இடஒருக்கணிப்பிலுள்ள பெண்கலைஞர் கைகளில் செண்டுதாளம். கீழ்ப்பகுதி பெரிதும் சிதைந்துள்ளதால், அங்குள்ள பூதக்கலைஞர்களின் கைக்கருவிகளை இனங்காண முடியவில்லை.

தொங்கலின் இடப்பிரிவில் உள்ள மூவரில் முதலிரு பெண்களும் வக்ஷசுவஸ்திகக் கரணத்தில் அவிநயிக்கும் அழகிகளாய் வலக்கையை மார்பருகே பதாகமாக்கி, இடக்கையை நெகிழ்த்தியுள்ளனர். தமிழம்கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், பட்டாடை பெற்றுள்ள இருவரில் கூடுதலாகச் சரப்பளியும் அணிந்துள்ள முதலாமவர் இடப்பாதத்தைப் பார்சுவமாக்கி வலப்பாதத்தை அதன் முன் குறுக்கீடு செய்து அக்ரதலசஞ்சாரத்தில் நிறுத்தியுள்ளார். முகம் இடச்சாய்வாக இருந்தபோதும் வலத் திருப்பமாக எழில் காட்டுகிறது. முதன்மைக் கலைஞராய்ப் பொலியும் நடுக்கலைஞர் வலப்பாதத்தைப் பார்சுவமாக்கி இடப்பாதத்தை அதன் முன் குறுக்கீடு செய்து அக்ரதலசஞ்சாரமாக்கியுள்ளார். முகம் இடச்சாய்வில் இடத்திருப்பமாக உள்ளது. மூன்றாவதாக உள்ள ஆடவ இசைக்கலைஞர் இடஒருக்கணிப்பில் ஆடலரசியர் போலவே கால்களைக் குறுக்கீடு செய்து ஆடியவாறே செண்டு தாளம் இசைக்கிறார். அவரது இடப்பாதம் பார்சுவமாக, வலப்பாதம் அதன் பின் குறுக்கீடு செய்த நிலையில் அக்ரதலசஞ்சாரத் தில். இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ள தொங்கலின் கீழ்ப் பகுதிப் பூதங்களில் வலமுள்ளது அமர்நிலையில் இரு கால்களுக்கிடையில் உள்ள குடமுழவை இயக்க, இடமுள்ளது நின்றவாறே இலைத் தாளம் இசைக்கிறது. பொதுவாக இறையாடல் காட்சிகளிலேயே காட்டப்படும் குடமுழவு இங்கு மானுட ஆடலின் தாளக் கருவியாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.  

அர்த்தரேசிதக் கரணம்
விமானத்தின் வடபுற நான்முக அரைத்தூணின் தொங்கல் இரு பிரிவுகளாகி இரண்டு ஆடற்காட்சிகளைப் பெற்றுள்ளது. முதல் காட்சியில் பனையோலைக் குண்டலங்களும் இடைத் தொங்கலுடனான பட்டாடையும் அணிந்து அர்த்தரேசிதக் கரணம் காட்டும் பெண்ணின் வலக்கை பதாகத்திலும் இடக்கை அர்த்தரேசிதத்திலும் உள்ளது. வலப்பாதம் பார்சுவமாக, அதன் பின் குறுக்கீடு செய்யப்பட்டுள்ள இடப்பாதம் அக்ரதலசஞ்சாரத்தில் அமைய, உடலை இடஒருக்கணிப்பிலும் முகத்தை வலச்சாய்விலும் காட்டி ஆடும் தமிழம்கொண்டை அழகியின் உடல்மொழி கண்களை நிறைக்கும். ஆடலுக்கு இடக்கைக் கருவியின் இசையால் தாளம் தரும் இடப்புற ஆடவக்கலைஞர் மண்டலப் பார்சுவத்தில் சரப்பளியும் சிற்றாடையுமாய்க் காட்சிதருகிறார். அவரது தோளிலிருந்து தொங்கும் இசைக்கருவியின் கயிற்றுப்புரிகளைக் கலைஞரின் இடக்கை இயக்க, வலக்கை முழவு முகத்தில் கொட்டித் தாளம் தருகிறது. 

குழலோடு ஆடல்
இரண்டாம் பிரிவில் பனையோலைக் குண்டலங்களும் சிற்றாடையுமாய் உள்ள ஆடவ இசைக்கலைஞர் சுவஸ்திகத்தில்  கால்களமைத்து ஆடியவாறே தம் இரு கைகளிலும் உள்ள இலைத்தாளங்களை இசைக்க, நடுவிலுள்ள குழல்கலைஞரும் இடப்பாதம் பார்சுவத்தில் அமைய, வலப்பாதம் அதன் பின் குறுக்கீடாக அக்ரதலசஞ்சாரத்திலிருக்கக் குழலிசைத்தவாறே வலச்சாய்வாய் முகத்தை இடந்திருப்பி சுவஸ்திகத்தில் ஆடுகிறார். பட்டாடை அணிந்துள்ள அவரது இருகைகளிலும் நீளமான குழல். குழலி சைத்தவாறு ஆடும் காட்சிகள் தமிழ்நாட்டுக் கோயில்களில் அரிதானவை. உச்சிக்கொண்டையும் மீசை தாடியுமாய் இடப்புறத்துள்ளவர் ஆடல் ஆசிரியராகலாம். அவரது இடக்கை மார்பருகே. 

சிவபெருமானின் ஊர்த்வஜாநு
முகமண்டப வடபுற அரைத்தூண்களில் இரு தொகுதிகள் உள்ளன. ஒரு தூணின் கட்டுப்பகுதியில் சிவபெருமானின் ஊர்த்வஜாநு கரணமும் மற்றொரு தூணின் மாலையில் சண்டேசுவர அருள்மூர்த்தி சிற்பமும் இடம்பெற்றுள்ளன. வலக்காலை முழங்காலளவில் மடக்கி இடைவரை உயர்த்தியுள்ள சிவபெருமானின் இடத்திருவடி பார்சுவமாக உள்ளது. அவரது வல முன் கை காக்கும் குறிப்பு காட்ட, இட முன் கை அர்த்தரேசிதத்தில். பின்கைகளில் உடுக்கை, முத்தலைஈட்டி. சடைமகுடம் மகர, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டுடனான சிற்றாடை அணிந்துள்ள இறைவனின் உடல் இடஒருக்கணிப்பில் இருக்க, முகம் இடச்சாய்வில்.  

இறையாடலைக் காணுமாறு போல நந்தி இடப்புறம் நிற்க, கீழே இறைவனின் இருபுறத்தும் இசைக்கலைஞர்கள். சடைமகுடத்துடன் இலலிதாசனத்திலுள்ள தாளப்பூதம் இறைவனைப் பார்த்தவாறே செண்டுதாளம் இயக்கச் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சிற்றாடை பெற்றுள்ள முழவுப்பூதம் இரு கால்களுக்கிடையில் இருத்தியுள்ள குடமுழவை முழக்கியவாறே இறைவனை நோக்கியுள்ளது. இச்சிற்பத்தொகுதியில் மேல்புறத்துள்ள தோரணவளைவும் பூத்தொங்கலும் இவ்வாடலை மேடைக் காட்சியாக்கிக் கண்களை ஈர்க்கின்றன. 

சண்டேசுவர அருள்மூர்த்தி
இங்குள்ள சண்டேசுவர அருள்மூர்த்தி சிற்பத்தொகுதி சிறப்பானது. தலைதாழ்த்திப் பத்திமையுடன் கைகளைக் குறுக்கீடு செய்து பணிவுடன் மண்டியிட்டுள்ள சண்டேசுவரரின் இடையில் சிற்றாடை. தலைமுடி சடைப்பாரமாய் விரிந்துள்ளது. அவர்முன் சடைமகுடமும் சிற்றாடையுமாய் இருக்கையில் அமர்ந்துள்ள சிவபெருமானின் முன்னிரு கைகளில் கொன்றைமாலை. தொகுதியின் மேற்புறத்தே தவப்பேறு செய்த சண்டேசுவரரை வாழ்த்துமாறு வானவர்கள். இந்நிகழ்வு முல்லை நிலத்தில் நிகழ்ந்ததைச் சுட்டுமாறு இறைவன் இருக்கை முன் இரண்டு மான்கள்.   

யானையை அழித்த மூர்த்தி
மேற்குத் தூண் மாலைத் தொங்கலில் யானையை அழித்த மூர்த்தி. யானைத்தோல் மீது வலப்பாதம் இருத்தி, இடக்காலை ஊர்த்வஜாநுவாக்கி, முழங்காலால் யானைத்தலைக்கு முட்டுக் கொடுத்தவாறு வலஒருக்கணிப்பிலுள்ள இறைவனின் செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். சடைப்பாரம், சிற்றாடை, முப்புரிநூல் பெற்றுள்ள அவரது வல முன் கை  மார்பருகே. இட முன் கை சூசியில் அமைய, பின்கைகள் உரிக்கப்பெற்ற யானைத்தோலைப் பிடித்தவாறுள்ளன. இறைவனின் இடப்புறம் இடஒருக்கணிப்பி லுள்ள உமையின் வலக்கை நெகிழ்ந்துள்ளது. கரண்டமகுடம், சரப்பளி, பட்டாடை அணிந்துள்ள அம்மையின் இடக்கையில் மலர். நிகழ்விடத்தை நீங்குமாறு போலத் திரும்பியுள்ள உமையைத் தொடர்வது போலச் சிறுபிள்ளையாய் முருகன். யானையின் துளைக்கை கொடிக்கருக்கு வளைவுச்சுற்றில் சுழன்றுள்ளது. இவ்வரிய காட்சியைக் கண்களால் பருகுமாறு போலத் தொகுதியின் இடப்புறம் நிற்கும் முனிவரின் வலக்கை நிகழ்வு போற்ற, இடக்கை மார்பருகே.        

மகரதோரணங்கள்

விமானத்தின் மூன்று சாலைக் கோட்டங்களின் மேலும் மகரதோரணங்கள் தலைப்பிட்டுள்ளன. அவற்றுள் மேற்குத் தோரணம் சிறக்க அமைந்துள்ளது. 

அரக்கனை அழிக்கும் காளி - 1
தெற்குச் சாலைக் கோட்ட மகரதோரணத்தில் கீழே இரண்டு பெருமகரங்களும் மேலே இரு சிறுமகரங்களும் உமிழும் யாளி வீரர்கள் உயிர்த்துடிப்புடன் இருபுற மேல்வளைவிலும் வீரம் காட்ட, இரண்டாம் வளைவாய் நான்கு தோரணத் தொங்கல்கள். ஒவ்வொரு தொங்கலுக்குள்ளும் ஒரு பூதம். கீழ்வளைவில் அரக்கனை அழிக்கும் காளி. அழகிய பதக்க வளையத்தால் இணைக்கப்பட்டுள்ள சிறு மகரங்களின் கழுத்துப் பகுதிக்கு மேல், தோரணத்தின் நெற்றிப்பொட்டென எழிலார்ந்த கீர்த்திமுகம். வலப் பெருமகரவாயிலிருந்து வெளிப்படும் யாளி வீரர் மேல் நோக்கி நகர, சிறுமகரம் உமிழும் மூன்று வீரர்கள் அவரை எதிர்கொள்கின்றனர். அனைவர் கைகளிலும் ஓங்கிய வாளும் கேடயமும். அதற்கு நேர்மாறாக இடப்பெரு மகரவாயிலிருந்து மூன்று யாளி வீரர்கள் வெளிப்பட்டு மேல் நோக்கி நகர, சிறுமகரம் உமிழும் ஒற்றை வீரர் அவர்களை எதிர்கொள்கிறார். அவர்தம் கைகளிலும் ஓங்கிய வாளும் கேடயமும். இருபக்க வீரர்களுமே சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், சிற்றாடை அணிந்துள்ளனர். அனைத்து யாளிகளும் அகலத்திறந்த வாயுடன் ஆர்ப்பரிக்க, தோரணத்தின் மேல் வளையம் முழுவதும் போர் முழக்கம்தான்.

நடுவளையத் தொங்கல்கள் நான்கிலும் குந்திய நிலையில் அழகுப் பூதங்கள். சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல் அணிந்த அவற்றுள், வலக்கையை முழங்கால் மீதிருத்தி, இடக்கையால் தொங்கலைப் பிடித்துள்ளது இரண்டாவதாக உள்ள பெண் பூதம். அதன் வலமுள்ள பூதத்தின் கைகளும் முழங்கால்கள் மீதே. வலக்கை மட்டும் முஷ்டிமுத்திரையில். இடப்பூதங்களில் கீழ்ப்பூதம் இருகைகளையும் முழங்கால்கள் மீதிருத்தி நக்கல் செய்ய, மேல்பூதம் வலக்கையால் அதற்கான பதில் குறிப்பு காட்டி, இடக்கையை முழங்கால் மீதிருத்தியுள்ளது. 

கீழ்வளைய வெளிவிளிம்புகளில் வலப்புறத்தே ஓங்கிய கத்தியும் கேடயமுமாய் ஒரு வீராங்கனை விரைய, இடப்புறத்தே கால் மடக்கிச் சண்டையிடுபவராய்க் கத்தி, கேடயத்துடன் வீரர் ஒருவர். வளைவிற்குள் வலக்காலைத் தரையில் ஊன்றி இடக்காலை உயர்த்தியுள்ள காளியின் எட்டுக்கைகளிலும் கருவிகள். அவரது இட முன் கை மார்பருகே அமைய, ஓங்கிய வலக்கையில் மழு. அம்மையின் எதிரே ஒடுங்கிச் சுருங்கிய பாவனையில் தோற்று வீழ்ந்தவனாய் அரக்கன். 

நிலமகள் ஏந்திய பன்றியாழ்வார்

நான்கு வளைவுகளாக விளங்கும் மேற்குச் சாலைக் கோட்டத் தோரணத்தின் மேல் வளைவில் கொடிக்கருக்கு. இரண்டாம் வளைவு மேலும் கீழும் மகரங்களில் முடிகிறது. பெருமகரங்களாய் விளங்கும் கீழ்மகரங்களின் தோகை கோட்டத்தை அணைத்துள்ள உருளை அரைத்தூண்களின் மீது படிய, அகலத்திறந்த அவற்றின் வாய்களிலிருந்து வெளிப்படும் யாளிவீரர்கள் கைகளில் வாளும் கேடயமும் கொண்டுள்ளனர். மேல்மகரங்களின் வாய் களிலிருந்தும் இது போல் யாளிவீரர் வெளிப்பாடு. பெருமகரங் களின் கழுத்தில் பக்கத்திற்கொரு பூதம் இருகைகளையும் உயர்த் தியவாறு மகிழ்வுப் புன்னகையுடன் இவர்ந்திருக்க, மேல்மகரங்கள் இணையுமிடத்திருந்து இறங்கும் பூத்தொங்கல் மூன்றாம் வளை வைப் பக்கத்திற்கிரண்டாகப் பிரித்துள்ளது. 

பூச்சரங்களால் சூழப்பட்டுள்ள இந்நான்கு பிரிவுகளிலும் சடைப்பாரம், குண்டலங்கள், கழுத்தாரம், சிற்றாடை பெற்ற அழகிய பூதங்கள். வலப்புறத்தே இலலிதாசனத்திலுள்ள முதற் பூதத்தின் இடக்கை பதாகம் காட்ட, வலக்கை மேலுயர்ந்துள்ளது. முப்புரிநூல், உதரபந்தம் கொண்டுள்ள இரண்டாம் பூதத்தின் வலக்கை கடகம் காட்ட, இடக்கை குடை போல் தொங்கும் கொடிக்கருக்கில். வயிற்றிலும் ஒரு முகம் பெற்றுள்ள மூன்றாம் பூதம் குந்தியவாறு விரல்களால் இதழ்களை விரித்துப் பழிப்பு காட்டுகிறது. இலலிதாசனத்திலுள்ள நந்திமுக நான்காம் பூதம் சிரட்டைக்கின்னரி வாசிக்கிறது. 

நான்காம் வளைவாக வரையறுக்கப்பட்டிருக்கும் கீழ்வளை வில் நிலமகள் ஏந்திய பன்றியாழ்வாரின் எழிலார்ந்த படைப்பு. வலப்பாதத்தை அக்ரதலசஞ்சாரமாக்கியுள்ள அவரது இடமுழங்கால் உயர்த்தப்பட்டுள்ளது. சடைமகுடம், பனையோலைக் குண்டலம், பட்டாடை பெற்றுள்ள நிலமகள் இரு கைகளாலும் இறைவனைத் தொழுதவாறு அவரது உயர்த்திய தொடையில் அமர்ந்துள்ளார். பின்கைகளில் சக்கரம் சங்கு ஏந்தியுள்ள இறைவனின் வல முன் கை தொடைமீதிருக்க, இட முன் கை இறைவியை அணைத் துள்ளது. கரண்டமகுடம், முப்புரிநூல், உதரபந்தம், கழுத்தாரம், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடையுடன் இடஒருக்கணிப்பில் உள்ள அவரது தலை உயர்ந்துள்ளது. கீழே இடப்புறம் பாம்பரசனும் அவன் தேவியும் ஒருவர் மேல் ஒருவராகக் கிடக்க, பாம்பரசனின் கைகளில் வாள், கேடயம். 

அரக்கனை அழிக்கும் காளி - 2 
கீழ்ப்பகுதி சற்றே சிதைந்திருந்தாலும் கண்களை நிறைக்குமாறுள்ளது கருவறைக்குள்ளிருக்கும் மகரதோரணம். கீழே பக்கத்திற்கொன்றாக உள்ள இரு பெருமகரங்களை நோக்கியவாறு  மேலே நடுப்பகுதியில் பக்கத்திற்கொன்றாக இரு சிறுமகரங்கள். பெருமகரங்களின் கழுத்தில் இருகைகளையும் உயர்த்திய நிலையில் பக்கத்திற்கொரு வீரர். அங்காத்திருக்கும் அவற்றின் வாயிலிருந்து வலப்புறத்தும் இடப்புறத்துமாய்ப் பக்கத்திற்கு நான்கென எட்டுப் போர்வீரர்களின் அணிவகுப்பு. அனைவருமே ஓங்கிய வாளும் உயர்த்திய கேடயமுமாய் வெளிப்பட்டுள்ளனர். மகரவாயிலிருந்து வெளிப்படும் நிலையிலுள்ள வீரர்களை அதற்கேற்ற வகையில் சற்றே மடங்கிய கால்களுடன் காட்டியுள்ளமை சிறப்பாகும். சிறுமகரங்களும் வாய்திறந்து பக்கத்திற்கொரு வீரரை வெளிப்படுத்தியுள்ளன. இச்சிறுமகரங்கள் இணையுமிடத்தை மணிப்பதக்கமிட்டுச் சிறப்பித்துள்ளனர். இவ்வீரர் அணிவகுப்புக்கு மேலிருக்குமாறு உள்ள வளைவில் முகமண்டப வாயிலில் காட்டியுள்ளாற் போன்ற பாம்புத்தலைக் கொடிக்கருக்குத் தொடர். இத்தொடரின் இடையில் தோரணத்தின் நெற்றிப்பொட்டாக சிறுமகரங்களுக்கு மேலிருக்குமாறு கொடிக்கருக்கு, மணிவளை யப் பதக்கமென நடுவே கீர்த்திமுகம். 

வீரர் அணிவகுப்பிற்குக் கீழுள்ள வளையம் நடுவில் மலர்ப் பதக்கங்கள் பெற்று இருபுறத்தும் முத்துத்தொங்கல்களால் பக்கத்திற்கு மூன்றென ஆறு பிரிவுகள் பெற்றுள்ளது. வலமும் இடமுமாக உள்ள முதல் பிரிவில் அமர்நிலைப் பூதங்கள். இடைப்பிரிவில் யாளிவீரர்கள். பதக்கத்தை நெருங்கும் பிரிவில் சங்கூதும் பூதங்கள். மகரதோரணத்தின் கீழ்வளைவு முத்தாய்ப்பாகப் போர்க்கோலக் காளியைக் கொண்டுள்ளது. ஒரு கையில் வாளும் ஒரு கையில் கேடயமுமாகப் போரில் தோற்றுக் கீழே வீழ்ந்துள்ள அரக்கனின் வயிற்றில் அம்மையின் இடமுழங்கால் அழுந்த, அவன் மார்பை அம்மையின் இடக்கைகளுள் ஒன்று அழுத்துகிறது. பிற கைகளில் குறுந்தடி, வாள், கேடயம் உள்ளிட்ட கருவிகள். இடக் கால் மடிப்பிற்கு ஏற்ப வலக்கால் நீண்டுள்ளது. அம்மையின் தோற்றமே அவரின் வீரப்பெருமிதத்துக்கும் வலிமை நிறை போர் முறைக்கும் கட்டியம் கூறுகிறது. வீரத்தின் உச்சம் காட்டும் இவ் வளைவுக் காட்சியின் இருபுறத்தும் காளியின் பேய்த் தோழர்கள் பனையோலைக் குண்டலங்களும் சிற்றாடையுமாய். வலப்புறத்துள்ள பெண் பேய் இருகைகளையும் வாயருகே கொண்ட நிலையில் இடக்காலை மடக்கி, வலக்காலைப் பின்னோக்கி நீட்டியுள்ளது. இடப்புற ஆண் பேய் வலக்காலை மடக்கி, இடக்காலைப் பின்னோக்கி நீட்டிய நிலையில் இடக்கையை மார்பருகே கொண்டு, வலக்கையை உயர்த்தி வளையத்தைத் தொட்டவாறு காளியைப் போற்றுகிறது. 

குரங்கநாதர் வளாகக் கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டது முதலாம் ஆதித்தருடையதென்பதால் இக்கோயிலின் காலத்தைப் பொ. கா. 9ஆம் நூற்றாண்டின் இறுதியாகக் கொள்ளலாம். கோயில் கட்டமைப்பும் சிற்பயிருப்பும் அக்காலத்தை உறுதி செய்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com