தமிழ் மொழி : புவிசார் ஆளுகையும் ஏற்பும்

தமிழ் நிலப்பகுதியை ஆண்ட அரசர்களின் அரசியல் ஆர்வம் இமயத்தில் அரச அடையாளங்களைப் பொறிப்பதாகவும், வடபுல ஆரியர்களை வணங்கச்
தமிழ் மொழி : புவிசார் ஆளுகையும் ஏற்பும்

உலகம் முழுமையும் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு அடிப்படையிலான பரவலையும் ஆளுமையையும் செலுத்திய மொழிகளும் இனங்களும் சிலவே. ஐரோப்பாவில் கிரேக்கம், உரோமானியம் ஆசியாவில் சீனம், தமிழ் ஆகிய மொழிகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய இனங்களுக்கு இப்பெருமை உண்டு.

‘தமிழ்’என்னும் சொல் மொழி, நிலம், இனம், இலக்கியம் ஆகிய அனைத்தையும் குறிப்பதாக இருக்கிறது. சில இடங்களில் அது காதலையும் குறிக்கிறது. சங்க இலக்கியத்தில் உள்ள குறிஞ்சிப் பாட்டு ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தற் பொருட்டுப் பாடப்பட்டது என்ற குறிப்பில் வரும் ‘தமிழ்’என்பது ‘தமிழ்க் காதலை’க் குறிக்கும். தமிழில் கிடைக்கும் முதல் நூலான தொல்காப்பியத்தின் பாயிரத்தில் இடம்பெறும் ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்’எனும் வரிகள் தமிழ்நாட்டை மொழிவழக்கு அடிப்படையில் தனித்து விளங்கிய ஒரு பிரதேசமாக அடையாளப்படுத்துகின்றது. தமிழில் ‘உலகம்’என்ற சொல் நில எல்லையை வரையறுக்கும் பொதுச் சொல்லாகக் கையாளப்பட்டுள்ளது.

தொல்காப்பியர் நிலத்தைக் ‘காடுறை உலகம்’,‘மைவரை உலகம்’ என்ற இயற்கையின் அடிப்படையில் பாகுபாடு செய்கின்றார். தொல்காப்பியப் பனுபலுக்குள்ளும் ‘தமிழ்’என்ற சொல் பலவிடத்துக் (தமிழென் கிளவி) கையாளப்பட்டுள்ளது. வடக்கில் வேங்கடம், தெற்கில் குமரி, கிழக்கிலும் மேற்கிலும் கடல் என்ற தமிழ்நாட்டின் அரசியல் எல்லை வரையறுப்பு சங்க காலத்திலேயே நிகழ்ந்திருக்கின்றது.

            ‘‘தென்குமரி வடபெருங்கடல்
             குண குட கடலாவெல்லை
             குன்று மலை காடு நாடு
             ஒன்றுபட்டு வழிமொழியக்
             கொடிது கடிந்து கோல் திருத்தி’’
                            (குறுங்கோழியூர் கிழார், புறம் - 17)

    தமிழ் நிலப்பகுதியை ஆண்ட அரசர்களின் அரசியல் ஆர்வம் இமயத்தில் அரச அடையாளங்களைப் பொறிப்பதாகவும், வடபுல ஆரியர்களை வணங்கச் செய்வதாகவும், யவனர்களைப் பிணிப்பதாகவும் இருந்திருக்கின்றது. (இமயவரம்பன், பதிற்றுப்பத்து). சங்க இலக்கியத்தில் ‘தமிழகம்’ என்ற சொல் தனி நிலப்பரப்பைக் குறிக்கும் சொல்லாக (புறம். 168) ஆளப்பட்டிருக்கிறது.

பழந்தமிழ் இலக்கியத்தில் ‘நாடு’என்ற சொல் ‘தமிழ்கூறு நல்லுலகின்’ உட்பிரிவாக அடையாளப்படுத்துகிறது. தமிழ் உலகம் ஒட்டுமொத்த புவிப்பரப்பின் ஒரு பகுதி என்ற உணர்வும் தமிழர்களுக்கு இருந்திருக்கிறது. எனவே வையகம் என்ற பெயரில் இந்நிலவுலகம் அடையாளப்-படுத்தப்பட்டிருக்கிறது.

    சங்க காலத்திலேயே கிரேக்கம், இலத்தீன், சீனம் ஆகிய நாடுகளுடன் கடல் வணிகத் தொடர்பு தமிழர்களுக்கு இருந்திருப்பதால் ஒட்டுமொத்த புவியியல் நனவுநிலை இருந்திருக்கிறது. உலகிலுள்ள எல்லா மனிதர்களையும் ஒன்றாக இனங்காணும் மனப்பாங்கும் உருவாகியிருக்கிறது. 

இதன்காரணமாகவே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’என்று கணியன் பூங்குன்றனார் பாடியிருக்கிறார். உலகிலுள்ள எல்லாவற்றையும் சமமாகக் கருதி பெரியோரைக் கண்டு வியக்காத, அதே சமயத்தில் சிறியோரை இகழாத மனப்பாங்கும் உருவாகியிருக்கிறது. (பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே) சங்க கால வணிகத் தொடர்பினால் மதுரையும் புகாரும்‘புலம்பெயர் மாக்கள்’ உரையும் பெருநகரங்களாகத் திகழ்ந்திருக்கின்றன.

மதுரை நகரத்திலும் காவிரிப்பூம்பட்டினத் துறைமுக வீதியிலும் கிரேக்க உரோமானியர்கள் வணிகர்களாகவும் காவலர்களாகவும் அலைந்து திரிந்திருக்கிறார்கள். யவணர்கள் செய்த பாவை விளக்கு தமிழகத்து வீடுகளுக்கு வந்துவிட்டது. தமிழ்நாட்டின் அரிசியும் மிளகும் மயில்தோகையும் சந்தனமும் அகிலும் கிரேக்க உரோமானிய இல்லங்களை சென்று சேர்ந்துவிட்டன.

கிரேக்க மொழியில் அரிசி (ஒருசா), இஞ்சி (சிஞ்சிர்) முதலிய சொற்கள் கிரேக்க நாடுகளில் கிரேக்கர்களின் நாவால் உச்சரிக்கப்பட்டன. கிரேக்கர்களும் உரோமானியர்களும் சீனர்களும் தமிழ் மொழியைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள். கிரேக்க வணிகன் தமிழ் வணிகனோடு ஒப்பந்தம் செய்திருக்கிறான். இது இன்று காகிதச்சுருள் ஆவணமாகக் கிரேக்கத்தில் கிடைத்திருக்கிறது.

கிரேக்க உரோமானிய நாணயங்கள் அமராவதி ஆற்றங்கரையில் ஏராளமாகக் கிடைத்திருக்கின்றன. கரூர் வணிகப் பெருவழியாகவும் பன்னாட்டு வணிகர்கள் கூடும் இடமாகவும் இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அரபிக் குதிரை துள்ளிப் பாய்ந்து திரிந்திருக்கிறது. குதிரையை விற்க வந்த அரபு வணிகர்கள் ‘சோணகர்கள்’ என்று அடையாளப்படுத்தப்பட்டனர். இவ்வாறு தமிழ் மொழியும் தமிழர்களும் இந்திய நிலப்பரப்பு மட்டுமல்லாது உலகின் தொழில் நாகரீகம் மிக்க ஏனைய புவிப்பரப்புகளோடும் பரவலும் ஆளுகையும் பெற்றிருந்தனர். இதன் காரணமாகத்தான் நன்னூல் ஆசிரியர் பவணந்தியார்,
            ‘‘செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
             ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத்தினும்
             தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப.’’
                            (நன். சொல். 273)
(12 நூ. ஆ.) வட்டார வழக்கான திசைச் சொற்களை வரையறுக்கும்போது தென்பாண்டி, குட்ட, குட, கற்கா, வேண், பூழி முதலான 16 நாடுகளில் தமிழ் வழங்கியதாகக் குறிக்கப்படுகின்றது. இப்புவியில் தமிழ்நாடு உள்ளிட்ட 18 நாடுகளில் (சீனம், சிங்களம், சோனகம் (அரபு), சாவகம், துளு, கன்னடம் முதலானவை இருப்பும் அதே நூற்பாவில் சுட்டப்படுகின்றது.

    தமிழ் மொழி 2600 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுத்து மரபு உடையது. இது அதனுடைய மற்றொரு தனிச்சிறப்பாகும். ‘தமவயங்க சூத்திரம்’ என்னும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண நூலில் குறிப்பிடப்படும் தொன்மையான எழுத்து வடிவங்களுள் ‘தமிழி’என்பதும் ஒன்றாகும். இதனைத் ‘தமிழ்ப் பிராமி’ என்று சொல்வோரும் உள்ளனர்.

அசோகர் காலத்தில் இந்தியா முழுவதும் எழுதுவதற்குப் பயன்படுத்திய (பாலி, பிராகிருத மொழிகள்) எழுத்து வடிவம் பிராமி ஆகும். இப்பிராமியில் இல்லாத புதிய எழுத்துக் குறியீடுகள் (ஏ, ஓ, ர, ழ, ன) தமிழில் உள்ளன. பழந்தமிழ் எழுத்தின் தொன்மைக்கு ஆதாரமாக கீழடி அகழாய்வு சான்றாகிறது. இங்கு கிடைத்துள்ள மட்பாண்டங்களில் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. இம்மட்பாண்டங்களின் காலம் கி.மு.600 என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

புலிமான்கோம்பை, பொருந்தல், கீழடி ஆகிய அகழாய்வுகளின் கண்டுபிடிப்புகள் தமிழ் எழுத்துக்களின் காலத்தை அசோகர் காலத்திற்கு முன்பே 400 ஆண்டுகள் பழமையானதாக உறுதிப்படுத்தியிருக்கின்றன. எழுத்து வடிவங்கள் வடக்கிலிருந்து தெற்கில் சமண பௌத்தர்களால் கொண்டுவரப்பட்டன என்ற பழைய கருதுகோள் நீக்கம் செய்யப்பட்டுவிட்டது.

மேலும் தமிழகத்தில் வாழ்ந்த சாதாரணமானப் பொதுமக்களும் எழுத்தறிவு உடையவர்களாக இருந்தனர் என்பதை அவர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களின் எழுத்துப்பொறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. தொல்காப்பியம் எழுத்து, சொல் ஆகியவற்றிற்கு இலக்கணம் அமைத்திருந்தாலும் சொல் இலக்கணத்தைத் தொடர் அமைப்பு நிலையிலிருந்துதான் தொல்காப்பியர் விளக்கியிருக்கிறார். தொடரில் சொற்கள் எங்ஙனம் வரிசைமுறையில் இடம்பெற வேண்டும் என்பதையே கிளவியாக்கம் விளக்குகிறது. இச்சிறப்பினால் புலூம் ஃபீல்டு போன்ற மேனாட்டு அறிஞர்கள் தொல்காப்பியத்தைப் போன்ற காலப்பழமை உடைய சமஸ்கிருத இலக்கண நூலான பாணியில் இல்லாத தொடர் அமைப்பைத் தொல்காப்பியர் பேசியிருக்கிறார் எனக் குறிப்பிடுகின்றனர்.

தொல்காப்பியம் தொடர் இலக்கணத்தைப் பேசுவதால் அவர் காலத்திற்கு முன்பே குறைந்தது 400 அல்லது 500 ஆண்டுகள் தமிழ் எழுதப்பட்ட மொழியாக இருந்திருக்க வேண்டும். எழுத்து வழக்கு உடைய மொழி என்பதுதான் சமஸ்கிருதத்திற்கு இல்லாத தமிழின் தனிச் சிறப்பாகும். வடமொழியில் உள்ள வேதங்கள் மிக நீண்ட காலமாக வாய்மொழியாகவே ஓதப்பட்டு வந்திருக்கின்றன. இதனால் சங்கப் புலவன் ஒருவன் வேதம் ஓதும் வடமொழியாளர்களை ‘வாய்மொழிப் பலவீர்’ என்று அழைத்திருக்கிறார். 

            ‘‘நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்
             வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது
             காதற் காமம்.’’
                            (பரிபாடல், 9 செவ்வேள்)

எழுத்து மரபு நிலைபெற்றதன் காரணமாகவே 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கத் தொகை நூல்கள் உருவாகியுள்ளன. மேற்குறிப்பிட்ட பரிபாடலில் காதற் காமம் சிறந்ததாக எடுத்துக்காட்டப்பட்டிருப்பதைப்போல சங்கக் கவிதைகளில் காதல் முன்மைப் பாடுபொருளாக அமைந்துள்ளது. 2681 பாடல்களில் 1863 பாடல்கள் காதலைப் பேசும் அகப்பாடல்கள். காதல் பொது மானுட உணர்வாகப் பெயர் சுட்டப்படாமல் இயற்கை நில வெளிகளைப் பிணைத்துப் பாடப்பட்டுள்ளன. இயற்கைச் சூழல்மீது நேயம் கொண்டு சூழலியல் கவிதையாகத் திகழ்கிறது.

    சங்க அகக்கவிதை மரபு பின்னாளில் வடமொழியில் உள்ள காளிதாசர் போன்ற பெருங்கவிஞர்களுக்குக் காதலைப் பாடுவதில் முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்கின்றன. பழந்தமிழ்க் கவிதையில் நிலமும் காலமும் நிலத் தலைவர்களும் நிலக் கடவுளர்களும் சிறப்பிடம் பெறுகின்றனர். சமயச் சார்பற்ற பொதுநெறியின் பன்முகச் சமூகப் பண்பாட்டுச் சமய மரபுகளை அரவணைத்துச் செல்வதும் தமிழ் மரபின் தனித்தன்மையாக இருந்திருக்கின்றது. எல்லாப் பண்பாடுகளையும் எல்லா நாட்டினரையும் உட்படுத்துகின்ற பெருநகரவியல் பண்புகொண்ட நட்பு அரசியலே தமிழ் அரசியலாக இருந்திருக்கின்றது. ஆயினும் தமிழ் அரசு அசோகப் பேரரசு தொடங்கி இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு வரை பிறரது ஆளுகைக்கு உட்படாத ஒற்றைமயப்படுத்தப்பட்ட பொதுத் தன்மைகளோடு கலக்காது தனித்துவத்துடன் காட்சியளிக்கிறது.

    இன்று பவணந்தியார் குறிப்பிடும் 16 தேசங்களைக் கடந்து முப்பதுக்கும் மேற்பட்ட தேசங்களில் தமிழ் வழக்கில் இருக்கிறது. தொன்மையும் அண்மைக்கால இளமையும் ஒருங்கிணைந்த மொழியாகத் தமிழ் விளங்குகிறது. காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துத் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

கணிப்பொறி, மின்னணு ஊடகங்களின் வளர்ச்சியில் தன்னைத் தகவமைத்துக்கொண்ட மொழியாகத் தமிழ் விளங்குகிறது. இத்தகைய புதிய தொழில்நுட்பங்களுக்குள் தன்னைத் தகவமைத்துக்கொண்ட மொழிகள் உலகில் மிகக் குறைவே.

நவீனத் தொழில்நுட்பத்தின் விளைவாகத் தமிழில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய சொற்கள் உருவாகியுள்ளன. இதற்கு ஒட்டுக்களை முன்னும் பின்னும் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்கும் ஆற்றல் கொண்ட ஒட்டு நிலைமொழியாகத் தமிழ் விளங்குவதே காரணமாகும். இதனால் அறிவியல் தமிழ், கணினித் தமிழ் எனத் தமிழ் தன் எல்லைகளை விரித்துக்கொண்டே செல்கிறது.

தமிழ்த்தேசியம் என்பது ‘வடவேங்கடம் தென்குமரி’என்கிற பழைய நில எல்லையைக் கடந்த நாடு கடந்த தேசியமாக - ‘புவிசார் தேசியமாக’விளங்குகிறது. தமிழ்த்தேசிய இலக்கியம் என்பது புவிசார் இலக்கியமாக விளங்குகிறது. தமிழ், தமிழர் அரசியல் என்பதும் புவிசார் அரசியலாக உருமாற்றம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com