தன்னை இனங்கண்ட தமிழ்

தன்னை இனங்கண்ட தமிழ், ஒலிவேறுபாடு மட்டும் கருதிப் பிராகிருத எழுத்துகளைக் கடன் வாங்காமல், தன்உள்ளார்ந்த அமைப்பை உணர்ந்து
தன்னை இனங்கண்ட தமிழ்



  எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
  மங்காத தமிழென்று சங்கே முழங்கு
.... ..................
  திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
 விண்ணோடும் உடுக்களோடும்
 மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்
 பிறந்தோம் நாங்கள்

என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன். இது தமிழ்ப்பற்று மீதூர்ந்த கவியுணர்ச்சியின் மிகை என்றுதான் தோன்றும். தவறில்லை. இதனை உணர வரலாற்றில் பின்னோக்கிச் செல்லவேண்டும்.

இந்தியத் துணைக் கண்டத்தின்  வளமோங்கிய சமற்கிருத மொழியையும் வழக்கில் பரவியிருந்த பிராகிருத மொழிகளையும் வடமொழிகள் எனக் கொண்டு தன்னைத் தென்மொழியாக இனங்கொண்ட தமிழின் வரலாற்றையும் பார்க்க வேண்டும்.

தமிழின் தலையூற்றாக எஞ்சி நிற்கும் முழு முதல் இலக்கணமாகிய தொல்காப்பியம் உணர்ச்சி கலவாமல் புறநிலைநின்று தமிழை இயற்கையான மொழியாகக் கண்டு இலக்கணம் கூறியிருக்கிறது.

தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழ் மொழியும், இலக்கண மரபும் உருவாகிவிட்டன.

தொல்காப்பியப்பாயிரம் (முன்னுரை) 'முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத்தோன்' என்று தொல்காப்பியரைத் தொகுத்தவராகச் சுட்டுகிறது.

'எழுத்தெனப்படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப' என்று தொடங்குகிறது தொல்காப்பியம். 'என்ப' என்பதற்கு 'என்பார்கள்' என்று பொருள். தமிழ்எழுத்துகள் முப்பது என்பது தொல்காப்பியருக்கு முன்பே வரையறுக்கப்பட்டுவிட்டது.

மாங்குளம் குகைக்கல்வெட்டுக் கண்டுபிடிப்பு (1882-1903) முதல் கீழடிப் பானையோட்டுக் கீறல் கண்டுபிடிப்பு(2013-19) வரை தமிழகத்தின் பரவலான பழந்தமிழ் எழுத்து வடிவங்களைக்காட்டுகின்றன.

அந்த எழுத்து வடிவத்தை அசோகன்பிராமி என்று குறிப்பிட்டது போய்த் தமிழ்ப் பிராமி என்று சுட்ட நேரிட்டது; ஆய்வாளர் சிலர் தமிழி என்று சொல்ல வேண்டும் என்கின்றனர். இது புதிதன்று .பொதுக்காலத்திற்கு முந்தைய (கி.மு.) முதல் நூற்றாண்டிலேயே பந்நவணா சுத்த என்னும் சமணநூல் 'தாமிளி' என்னும் எழுத்து வடிவம் ஒன்றைக் குறிப்பிடுகிறது.

கரகங்கள்-என்றும் சொல்லின் உச்சரிப்பை karahangal என்று உரோமானிய எழுத்தில் காட்டலாம். இதில் 'க' மூன்று இடங்களில் வருகிறது. முதலில் உள்ளதை ka என்றும், இடையில் உள்ளதை ha என்றும் மூன்றாவதை ga என்றும் ஒலிக்கிறோம்.

ஆனால், 'க' என்ற ஓர் எழுத்தாலேயே எழுதுகிறோம். மூன்று தனித்தனி எழுத்துகள் இல்லையே ஏன்? தேவையில்லை. தமிழ் ஒலியமைப்புக்கு ஓர் எழுத்துப் போதும். இதுகுறையா? இல்லை, நிறை.

இந்தக் கால மொழியியலின் உட்பிரிவாகிய ஒலியன் இயல், ஒலியன், மற்றொலிகள் என இந்த இயல்பைவிளக்குகிறது. க் k என்னும் ஒலியனுக்கு (phoneme) k, g, h என்று மூன்றுமற்றொலிகள் (allophones) உள்ளன. k சொல்லின் முதலிலும் இடையில் இரட்டிக்கும்போதும் -kk-(எ.கா.- பக்கம்) வரும். மெல்லெழுத்தை அடுத்து வரும்போது g வரும். இடையெழுத்துகளை அடுத்தும் (எ.கா- வாழ்க) உயிர் ஒலிகளுக்கு இடையிலும் h வரும்.

இவ்வாறுஇடங்கள் வரையறுக்கப்பட்டிருப்பதால் ஓர் எழுத்தே போதுமானது என இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே உணரபட்டிருக்கிறது. ச, ட, த, ப போன்ற எழுத்துகளும் இடத்துக்கேற்ப ஒலியில் வேறுபடும்.

தமிழ்முதலில் பெருமளவு எதிர்கொண்ட மொழி பிராகிருதம். பிராகிருதத்தில் k(a), h(a), g(a)  ஆகியவற்றுக்குத் தனித்தனி எழுத்துகள் உண்டு. பிராகிருத மொழி அமைப்பிற்கு அவை தேவை.

தன்னை இனங்கண்ட தமிழ், ஒலிவேறுபாடு மட்டும் கருதிப் பிராகிருத எழுத்துகளைக் கடன் வாங்காமல், தன்உள்ளார்ந்த அமைப்பை உணர்ந்து வரையறுத்துக் கொண்டது. பிற பிராமி எழுத்துகள் தமிழிலிருந்து தோன்றியவை என்னும் கருத்தும் உண்டு. ஆனால் இதுபோதிய அளவு நிறுவப்படவில்லை.

பழந்தமிழிக்கல்வெட்டுகளில் மிகச்சில பிராகிருத எழுத்துகள் இல்லாமலில்லை. ஆனால், பெரும்பாலான பிறமொழிச் சொற்கள் தமிழ் ஒலி மரப்பிற்கேற்ப மாற்றிக்கொள்ளப்பட்டன.

இதனைத் தொல்காப்பியம், 

 'வடசொற் கிளவி வடஎழுத்து ஓரீஇ
 எழுத்தொடு புணர்ந்த சொல்ஆ கும்மே'

என்று இலக்கணமாக விதித்தது (ஒரீஇ=நீக்கி)

இலக்கியத்தமிழில் இவ்விதி பல நூற்றாண்டுகள் இயல்பாகத் தொடர்ந்தது. பிற்காலவட்டடெழுத்துக் கல்வெட்டுகளிலும், மிகப்பிற்கால இலக்கியங்களிலும் வடஎழுத்துகள் கலந்தாலும் அவை தமிழ் அகர வரிசையில் அயல் எழுத்துகள் என்னும் தெளிவுடன்தான் பயிற்றுவிக்கப்பட்டன.

தென்னகத்தில்பொதுக்காலத்துக்கு முன்பே (கி.மு.) கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் வழங்கியதற்கான சான்றுகள் இருந்தாலும் அவை தம்மைத் தனிமொழிகளாக இனங்கண்டு வரையறுத்துக் கொள்ளவில்லை.

தமிழகத்திலோ அரசியல்வணிக முக்கியத்துவமற்ற பகுதிகளிலும் கூட, பரவலாகத் தமிழ் எழுத்தறிவுநிலவியதற்குப் பானையோட்டு எழுத்து வடிவங்களே சான்று. பானைகள் சுட்ட பின் தனித்தனியே எழுத்துகள் கீறப்பட்டுள்ளன. இதிலிருந்து பலரும் எழுத்தறிவு பெற்றிருந்தது புலனாகிறது என்கிறார் அறிஞர்  ஐராவதம் மகாதேவன்.

தமிழ்தன்னை இனங்கண்டு வரையறுத்துக் கொண்டதற்குத் தெய்வீகக் காரணம் ஏதுமில்லை; வரலாற்றுச் சூழல் வாய்ப்பாக அமைந்திருந்தது. தமிழகத்திற்கு வடக்கிலிருந்ததென்னகப் பகுதிகள் நந்தர்- மௌரியர் ஆளுகை எல்லைக்குள் இருந்தன. அசோகரின் பதின்மூன்றாம் பாறைக் கல்வெட்டு சூத்திரம் அசோகர் ஆட்சிக்குட்பட்டிருந்ததைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. எனவே, அப்பகுதிகளில் பிராகிருதமே ஆட்சிமொழியாக இருந்தது.

ஊர் ஊராகச்சென்று பாடிப் பரிசில் பெற்ற வளமான பாணர் மரபு, இன்னார்தாம் பயில வேண்டும், இன்னார் பயிலக் கூடாது என விதிக்கும் குருமார் ஆதிக்கம் இன்மை, வலிமையானஉள்ளூர்த் தன்னாட்சி, சமண பவுத்தப் பரவல், அயலக வணிகத் தொடர்பு ஆகியவற்றோடுஎளிதாகப் பயிலத்தக்க வகையிலான எழுத்தெண்ணிக்கைக் குறைவும் சனநாயகப் பூர்வமான எழுத்தறிவுப் பரவலுக்குக் காரணம் என்கிறார் ஐராவதம் மகாதேவன்.

தமிழ் வெறும் புற அடையாளமாகத் தனித்தன்மைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை. அதன் ஒலி, எழுத்து, சொல், தொடர்மரபுகளின் உள்ளார்ந்த கட்டமைப்பிலேயே தனித்தன்மை பேணியது.

அதனால்தான் அயல் தொடர்புகள் அளவு கடந்த நிலையிலும் கூட அவற்றில் அமிழாமலும் அவற்றைப் பகையாகக் கருதாமலும் உள்வாங்கித் தன்மயமாக்கிக் கொண்டது.

முனைவர் பா. மதிவாணன்

'ஐந்தெழுத்தால்ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே... வடமொழி தமிழ் மொழி எனும் இருமொழியினும் இலக்கணம் ஒன்றே' என்றார் பதினேழாம் நூற்றாண்டுத் தமிழ்ப்புலவர் சாமிநாத தேசிகர். அவர் அப்படி நம்பினார்.

சமற்கிருதத்தில்இல்லாத தமிழ் எழுத்துகள் எ,ஒ,ழ,ற,ன என்னும் ஐந்து மட்டுமே. இந்தஐந்தெழுத்தால் ஒரு மொழி (பாடை-பாஷை) தனித்தது என்று கூற இயலாது என்றுகருதினார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. காலத்தின் கோலம் அது.

மாறாகஅடுத்த நூற்றாண்டில் பிறந்த சிவஞான முனிவர், 'தமிழ் மொழிப்புணர்ச்சிகட்படும் செய்கைகளும் குறியீடுகளும் வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சில சொல் இலக்கணங்களும் உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும்...' வடமொழியிற்பெறப்படாதவை; தமிழுக்கே உரியவை என்றார்.முனிவர் சமற்கிருதம் பயின்றவர் மட்டுமல்லர்; அதனிடம் பெருமதிப்புகொண்டிருந்தவராவார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டுத்தொடக்கத்தில் ஃபிரான்சிஸ் வைட் எல்லிஸ்துவக்கிக் காட்ட, அந்நூற்றாண்டின் இறுதியில் தமிழ் முதலிய திராவிடமொழிகளின் தனித்தன்மையை ஒப்பிலக்கணம் என்னும் நவீன அணுகுமுறையில் ராபர்ட்கால்டுவெல் நிறுவினார். கடந்த ஒன்றரை நூற்றாண்டில் திராவிட மொழிக்குடும்பம் பற்றிய ஆய்வுகள் வளர்ந்து மேம்பட்டுத் திராவிட மொழிக் குடும்பத்தனித்தன்மை ஐயமின்றி உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. என்றாலும் சச்சரவு ஓயாததற்குக் காரணம் அரசியலே அன்றி மொழியியல் அன்று.

வடமொழிகளைநன்கறிந்த தொல்காப்பியர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழின்தனித்தன்மையை உணர்ந்து  இலக்கணம் தொகுத்திருக்கிறார். எழுத்ததிகாரத்தின்முதல் நூற்பா (சூத்திரம்) 'எழுத்தெனப் படுப' (எழுத்து என்று சொல்லப்படுவன)என்று தொடங்குகிறது. அப்படியானால் சொல்லதிகாரம், 'சொல் எனப் படுப' என்றுதானே தொடங்க வேண்டும்? இல்லை. 'உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே, அஃறிணைஎன்மார் அவரல பிறவே' என்று தொடங்குகிறது.

கிளவியாக்கம், வேற்றுமை இயல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு என்னும் நான்கு இயல்கள்கடந்து ஐந்தாவதாகிய பெயரியலின் நான்காவது நூற்பா 'சொல் எனப் படுப' என்றுதொடங்குகிறது.

ஏன்?

தமிழின் உயர்திணை, அஃறிணைப் பாகுபாடும் அவற்றுள் அடங்கிய ஆண்பால், பெண் பால்முதலிய பால் பாகுபாடும் தமிழ்க் கிளவியாக்க (தொடர், வாக்கிய) கட்டமைப்பில் இன்றியமையாதவை; மரபு வழிப்பட்ட தனித்தன்மையுடையவை; வடமொழிகளில் காணப்படாதவை. எனவேதான், இவற்றை முதலில் முன்வைக்கிறது தொல்காப்பியம்.

எல்லிஸும்அவரது குழுவில் இயங்கிய தென்னிந்திய மொழிகளின் பண்டிதர்களும் தம் மொழிக்குழுவின் தனித்தன்மையைத் தேட அகத்தூண்டுதலாக அமைந்தது அவற்றின் இலக்கணமரபில் காணப்பட்ட, இலக்கியச் சொற்பாகுபாடுதான்.

கன்னட, தெலுங்கு மொழி இலக்கணங்கள் தற்சமம், தற்பவம், தேசியம், கிராமியம் எனவகைப்படுத்தின. முதலில் உள்ள தற்சமம், தற்பவம் இரண்டும் வட சொற்களின் வகைப்பாடு. பின்னரே வடசொல் அல்லாத, அவ்வம் மொழிக்கே உரிய சொல் வகைகள் இடம்பெற்றன.

இதிலும் தொல்காப்பியம் தொட்டுத் தொடரும் தமிழ் இலக்கண மரபு தனித்தன்மை பேணியது; இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்றது; வடசொல்லுக்குஇறுதியில்தான் இடமளித்தது.

உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகள். குற்றியலுகரம் முதலிய சார்ந்துவரும் எழுத்துகள். இவை சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கும் மரபுகள். எழுத்துகளின் ஒலிகள் எழுப்பப்படும் முறை, ஒலியன் மற்றொலித்தெளிவோடு கூடிய எழுத்து வடிவங்கள், ஒரு தொடரின் அடுத்தடுத்த சொற்கள்ஒலியும் பொருளும் சார்ந்து புணரும் முறை, சொற்கள் தொடராக அமைந்து பொருள் குறிக்கும் போக்கு, சொற்களின் இலக்கண இலக்கிய வகைப்பாடு முதலிய ஒவ்வொன்றிலும் தமிழின் தனித்தன்மையைக் காண முடியும். இவற்றை இலக்கண மொழியியல் நோக்கில் விளக்கலாம்; விரிப்பின்பெருகும்.

பிராகிருதம், சமற்கிருதம் தொடங்கிக்காலந்தோறும் பல்வேறு மொழிகளின் தொடர்பை ,செல்வாக்கை, ஊடுருவலை, ஆதிக்கத்தைத் தமிழ் எதிர் கொண்ட போதிலும் ஆட்சிமொழி நிலையிலிருந்து வழுவியபோதிலும் மொழி, இலக்கண மரபுகள் சிலவற்றை நெகிழவிட்டுச் சில பலவற்றைப் புதிதாகக் ஏற்றுக் கொண்ட பிறகும் உள்ளார்ந்த இழையொன்று இடையறாமல்தொடர்கிறது. 'என்றுமுள தென்றமிழ்' என்றார் கம்பர்.

தொல்காப்பியத்துக்குப்பாயிரம் (முன்னுரை) தந்த பனம்பாரனார் 'வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத்தமிழ்கூறு நல்லுகம்' என்கிறார். மொழியால் தன்னை இனங்கண்டு கொண்ட இந்தமக்கட்குழு பின்னர் நாட்டு எல்லை முதலிய பலவற்றையும் தன்மொழி சார்ந்தேஉணர்ந்து கொண்டது.

'நல் தமிழ் முழுதறிதல்' என மோசி கீரனார் (புறநானூறு 50) மொழியைச் சுட்டினார்.

'தண்டமிழ்க் கிழவர்... மூவர்...' என வெள்ளைக்குடி நாகனார் (புறநானூறு 35) தமிழ்நாட்டைச் சுட்டினார்.

'தமிழ்கெழு கூடல்' எனக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரி கண்ணனார் (புறநானூறு 58) தமிழ்ச் சங்கப் புலவர்களைச் சுட்டினார்.

'தன்னாப் பொருள் இயல்பின் தண்டமிழ்' எனக் குன்றம் பூதனார் (பரிபாடல் 9) அகப்பொருள் இலக்கண மரபைச் சுட்டினார்.

'தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானம்' எனக் குடபுலவியனார் (புறநானூறு 19) தமிழ் மன்னர் படைகளைச் சுட்டினார்.

'அருந்தமிழ் ஆற்றல்' எனத் தமிழ் வேந்தர்தம் பேராற்றலைச் சுட்டினார் இளங்கோவடிகள் (சிலப்பதிகாரம், கால்கோட் காதை)

' தமிழ் தழிய சாயல் 'எனத் திருத்தக்க தேவர் (சீவகசிந்தாமணி 2026) இனிமையைச் சுட்டினார்.

சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் தத்தம் பக்தி நெறியைத் தமிழ் என்றே சுட்டியதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. பக்தி இயக்கத்தின் பிறப்பிடம்தமிழகம் என்பது நிறுவப்பட்ட உண்மை.

வைணவர் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களைத் தமிழ் வேதம் என்றனர் எனில் சைவர் தமிழே சிவபெருமான் அருளியது என்றனர்.

'ஆயுங்குணத்து அவலோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு ஏயும் புவனிக்கு இயம்பியதண்தமிழ்' என்று தமிழைத் தந்தவர் அவலோகிதராகிய புத்தரே என்கிறார் வீரசோழியஇலக்கண ஆசிரியர் புத்தமித்திரர்.

பக்தி இயக்க எழுச்சிக்காலம் போல் தமிழை எண்ணற்ற அடைமொழிகளால் ஏற்றிப் போற்றிய காலம் பிறிதொன்று இல்லை என்றே சொல்லலாம்.

'பயிலுவதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய் பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய், திருவருள் வலத்தாற்கிடைத்த தென்மொழி' என இராமலிங்க அடிகள் தமிழை ஆன்மிக மொழியாகக் காண்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் சமயச் சார்பற்ற தமிழ் எழுச்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான அடைமொழிகளில் தமிழ் சீராட்டப்பட்டது, தமிழே தெய்வ நிலைக்கு  உயர்த்திக்காணப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் 'மெல்லத் தமிழினிச் சாகும்' என்று பேதையர் சிலர் பேசக் கேட்டுப் பதைத்தார் பாரதி. தமிழ் என்னும் கருவியை உலகியல் நலன் நோக்கித் தமிழரே கைநெகிழவிடுவது கருதிய பதற்றம் அது. இருபத்தோராம் நூற்றாண்டிலும் அந்தப் பதற்றம் தொடர்கிறது. தமிழ் மொழிப் பயன்பாடு திட்டமிட்டு ஓரங்கட்டப்படுகிறது என்றே சொல்லலாம்.

தமிழ் ஒரு மொழிதான்; கருவிதான். ஆனால்தமிழ்ச் சமூகம் தன் முதல் தனி அடையாளமாக அதனைக் கண்டுணர்ந்து பின்னர் நாடு, அரசு, ஆற்றல், அகப்பொருள், பக்தி, இனிமை முதலிய பலவற்றினதும் அடையாளமாக விரித்துக் கொண்டது. பன்னூற்றாண்டுகளில் படியும் ஆற்றுப்படுகை மணற்பரப்புப்போல நுண்மையான பண்பாட்டுணர்வாகவும் 'தமிழ்' படிந்து கிடக்கிறது.

'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்'.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com