பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து

மக்கள் வாழ்வில் வளமும் நலமும் செழிக்கட்டும்! மகிழ்ச்சியும் இன்பமும் பொங்கிப் பெருகட்டும்!
பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து

முதல்வர் கருணாநிதி:

தைத்திங்கள் முதல் நாள்  - தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் திருநாள்!  தமிழர் வாழும் இடமெல்லாம் மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கோடு கொண்டாடப்படும் பொன்னாள் இந்நாள்!

தமிழகம் முழுவதும் சீரான மழை - செழிப்பான விளைச்சல் என உழவர் பெருமக்கள் உளம் குளிர வேளாண்மையின் வளம் பெருகியுள்ள வேளையில், இவ்வாண்டின் பொங்கல் விழாவையும், தமிழ்ப்புத்தாண்டுத் திருநாளையும்  கொண்டாடும் எனதருமைத் தமிழ்ச்சமுதாய மக்கள் வாழ்வில் வளமும் நலமும் செழிக்கட்டும்! மகிழ்ச்சியும் இன்பமும் பொங்கிப் பெருகட்டும்! - என என் உளமார வாழ்த்துகிறேன்.

தமிழகத்தில் வாழும் ஏழை எளியோர் நலம்பெற வேண்டும் எனும் விழைவோடு - தமிழகம் இந்தியாவில் அனைத்து வகையிலும் முன்னோடி மாநிலமாகப் புகழ்குவிக்க வேண்டும் என்னும் உணர்வோடு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றிவரும் தமிழக அரசின் சார்பில் தமிழக மக்கள் அனைவர்க்கும் எனது உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.,.

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா:

தமிழக மக்கள் மனதில் நிலைத்து நிற்கக் கூடிய, இயற்கையை நேசிக்கும் விழாவாம் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் இனிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழை, எளியவர் என்ற பேதமோ, சாதி, மத வித்தியாசமோ இல்லாமல் நன்றியுணர்வு என்ற இலக்கோடு கொண்டாடப்படும் நாள் பொங்கல் திருநாள்! உழைக்கும் மக்கள் தமக்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாள் பொங்கல் திருநாள்! உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாள் பொங்கல் திருநாள்!

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த உழைக்கும் மக்கள் பயிர்க் கடன் இல்லாமை, உரத் தட்டுப்பாடு, மின்சார தட்டுப்பாடு என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. கடந்த மூன்றரை ஆண்டு காலமாக விவசாயிகளின் வாழ்க்கையே கேள்விக்குறியாக உள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப, விவசாயிகளுக்கு விரைவில் விடிவு காலம் பிறக்க வேண்டும். தமிழக மக்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிமுக பொதுச்செயலர் வைகோ:

தலைமுறை தலைமுறையாக தமிழர்கள் கொண்டாடி வரும் இனிய விழாதான் தைப் பொங்கல் விழா ஆகும். இது இயற்கைக்கு நன்றியும் உழைப்புக்கு உயர்வும் தந்து உலக மக்களை வாழ வைக்கும் உழுதொழில் வேளாண்மைக்கு மகுடம் சூட்டும் விழா ஆகும்.

கரும்பும் சர்க்கரைப் பொங்கலும் தமிழர் திருநாளில் நாவுக்குச் சுவை தரும் என்றாலும் நம் இதயத்தில் இனிப்பு இல்லை, உப்பு கரிக்கிறது நெஞ்சில் வடிந்த கண்ணீரால். இலங்கைத் தீவில் நம் தமிழ் இனம் கொலைக்களத்தில் வதைபட்டது. அவர்களின் வேதனை நீங்கி உரிமை வாழ்வு பூக்கவும், சுதந்திரத் தமிழ் ஈழம் மலரவும் உறுதி கொண்டு பணியாற்றி இப்பொங்கல் திருநாளில் சூளுரைப்போம்.

தமிழகத்தில் முல்லைப்பெரியாறு உள்ளிட்ட நதிகளின் வாழ்வாதாரங்களுக்கு ஆபத்து நேர்ந்துள்ளது. இந்த அறைகூவல்களை எதிர்கொண்டு தமிழகத்தின் உரிமைகளைக் காக்கவும், விவசாயிகளின் அல்லல்களைப் போக்க உரிய கடமை ஆற்றவும் இந்த தைப் பொங்கல் நாளில் உறுதி கொள்வோம்.

தமிழக மக்கள் நலனுடன், மகிழ்வுடன், ஒற்றுமையுடன் வாழவும், தைத் திருநாளில் தங்கள் வீடுகளில் பொங்கலைக் கொண்டாடவும் எனது இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

தமிழர் புத்தாண்டு பிறக்கும் இந்த நன்னாளில், தமிழர்களின் இல்லந்தோறும் பொங்கலோடு இன்பமும் பொங்கிட வாழ்த்துகின்றேன்.

நாடு வாழ நாம் வாழுதல் வேண்டும் என்ற எண்ணம் அனைவரது உள்ளத்திலும் பொங்கிட வேண்டும்.

தமிழகம் இன்று மிதமிஞ்சி குடிப்பழக்கத்தால் பெரும் குடிகார மாநிலமாக மாறிக்கொண்டு வருகிறது. சமரசத்திற்கு இடமில்லாத மதுவிலக்கின் மீதான நமது நம்பிக்கையை பிரகடனப்படுத்த வேண்டும். இதற்கு இந்த நன்னாளில் அனைவரும் சூளுரை எடுத்துக் கொள்வோம்.

எம் தமிழர் எழுந்துவிட்டார், எங்கும் தமிழ் முழக்கம், இனி ஏற்றம் தமிழுக்கு என்ற நிலையினை உருவாக்கிட சூளுரைத்து பாடுபடுவோம்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் தா. பாண்டியன்:

புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாட்டு மக்கள், பன்னெடுங்காலமாகக் கொண்டாடி வரும் அறுவடைத் திருநாள் தமிழர் திருநாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

மக்கள் பல விழாக்களைக் கொண்டாடினாலும், பகுத்தறிவுக் கொத்த சாத்திரச் சடங்குள் இல்லாத, உழைப்பையும், உழைப்பிற்கு ஒத்துழைத்த கால் கடைகளையும் போற்றும் விழாவாகும் பொங்கல் திருநாள். இது சாதிமத வேறுபாடுகளைக் கடந்து, உண்டி விளைவித்து உயிர்காக்கும் உயர் மனிதர்களான உழவர்களை வாழ்த்தும் நாளும் ஆகும்.

நீதிக்கும், வீரத்திற்கும், பண்பாட்டிற்கும் உறைவிடமாகத் திகழ்ந்த தமிழ் நாட்டில் பல்வகைச் சீரழிவுகள் அதன் பண்டையப் பெருமையைக் குலைத்து வருகின்றன.

எனவே 2010-ல் கொண்டாடும் தமிழர் திருநாட்களின் போது, தமிழ்நாட்டின் பண்பாட்டைப் பாதுகாக்கவும், நீதியையும், ஜனநாயக நெறிகளையும் மீட்டுக் காத்திடவும், இந்த நந்நாளின் போதும் சித்திரவதைக் கூடங்களில் சிக்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் மனித உமைகளை மீட்டிடவும் உறுதி ஏற்க வேண்டுகிறேன்.

தமிழ் மக்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலகுழுவின் சார்பில் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெவித்துக் கொள்கிறேன். அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கிட வாழ்த்துகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com