சென்னை, ஜூலை 4- கிருஷ்ணகிரியில் லாரி மோதி உயிரிழந்த காவல்துறை உதவி ஆய்வாளர் சிவகுமாரின் குடும்பத்தினருக்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. சிவகுமார், கிரானைட் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இத்தகவல் அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். அகால மரணமடைந்த சிவகுமாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிவகுமாரின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவியாக ரூ. 5 லட்சமும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.