வாஷிங்டன், ஜூலை 4- அமெரிக்கா அதிபர் ஒபாமா சுடப்பட்டதாக ஃபாக்ஸ் டி.வி.,யின் டுவிட்டர் இணையதளத்தில் தகவல் பரவியதால் அதை படித்த அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அமெரி்க்காவின் முன்னணி தொலைக்காட்சியான "ஃபாக்ஸ் நியூஸ்" பயன்படுத்தி வரும் டுவிட்டர் இணையதளப் பக்கத்தில், "ஜூலை 4 மிகவும் வருத்தமான தினம். அதிபர் ஒபாமா இறந்துவிட்டார். அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்." என்று கூறப்பட்டிருந்தது.
பின்னர், ஜான் பைடன் என்பவர் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை படித்தவர்களில் பலர் அதை உண்மை என்று நம்பி தங்கள் அனுதாபக் கருத்தையும் பதிவு செய்தனர். இன்னும் சிலரோ புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவித்து எழுதினர்.
ஜூலை 4 அமெரிக்காவின் தேசிய தினம் என்பது குறிப்பிடத்தக்கது. யாரோ சில விஷமிகள் "ஃபாக்ஸ் நியூஸ்" தொலைக்காட்சியின் டுவிட்டர் இணையப் பக்கத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ஒபாமா குறித்து தவறான தகவலை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, ஒபாமா பற்றிய தகவலை வெளியிட்டதற்கு பொறுப்பு ஏற்பதாக "த ஸ்கிரிப்ட் கிட்டீஸ்" என்ற இணையதளக் குழுவினர் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
மே 2011-ல், ஃபாக்ஸ் பொழுதுபோக்கு குழுமத்தின் "ஃபாக்ஸ்.காம்" இணையதளத்தை மென்பொருள் விஷமிகள் ஏற்கெனவே சேதப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.