ரூர்கேலா, ஜூலை 4: ஜார்க்கண்ட் எல்லைப் பகுதியில் உள்ள ஒரிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்து ரயில் பாதைகளை மாவோயிஸ்டுகள் சேதப்படு்த்தினர்.
ஜார்க்கண்ட் எல்லையில் உள்ள சரந்தா வனப் பகுதியில் இரு இடங்களில் மாவோயிஸ்டுகள் வைத்திருந்த கண்ணிவெடிகளால் ரயில் பாதைகள் சேதமடைந்தன.
இதனால் ரூர்கேலா உருக்கு ஆலைக்கு இரும்புத் தாது ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ரூர்கேலா மற்றும் ஜார்க்கண்ட் இடையே செல்லும் பஸ்களும் ரத்து செய்யப்பட்டன.
அந்த ரயில் பாதையை சரிசெய்யும் முயற்சியில் ரயில்வே போலீசாரும், பொறியியல் ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜார்க்கண்டில் இன்று 24 மணி நேர பந்த் நடத்த மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர். அதன் ஒருபகுதியாக இந்த ரயில்பாதையை அவர்கள் தகர்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.