லக்னோ, ஜூலை 4- காவல் நிலையத்தில் சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு இன்னும் ஏன் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படவில்லை என்று உத்தரப் பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போலீஸார் தாக்கல் செய்துள்ள அறிக்கை திருப்திகரமாக இல்லை என்றும், இந்த வழக்கு இன்னும் ஏன் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படவில்லை என்றும் லக்னோ கிளை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், சிறுமி உயிரிழப்பு தொடர்பாக கூடுதல் விவரங்களை தாக்கல் செய்யும்படி மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 10-ம் தேதி, லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள நிஹசன் காவல் நிலைய வளாகத்தில் உள்ள மரம் ஒன்றில் 14 வயது சிறுமியின் சடலம் தொங்கிக் கொண்டிருந்தது. அவர் போலீஸாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, போலீஸார் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையில் போலீஸார் தாக்கல் செய்துள்ள அறிக்கை திருப்திகரமாக இல்லை என்று நீதிமன்றம் கூறியிருப்பது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.