புதுதில்லி, ஜூலை.4: மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 பேரின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. அந்த மனுக்களில் பெரும்பாலானவை கொலை மற்றும் பாலியல் பலாத்கார குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவை.
2005-ம் ஆண்டு அளிக்கப்பட்ட கருணை மனுதான் முடிவெடுக்கப்படாமல் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மனுவாகும். 2011ல் மட்டும் 6 கருணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவரின் செயலகம் தெரிவித்துள்ளது.
மதச் சடங்குக்காக 9 வயது குழந்தையை கொலைசெய்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுஷில் முர்மு என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவர் 2005-ல் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்திருந்தார். மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜாபர் அலி என்பவர் 2006-ல் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களின் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது. இதேபோல் 17 கருணை மனுக்கள் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 10 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குடியரசுத் தலைவர் குறைத்துள்ளார். 2009-ல் மட்டும் 7 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் கருணை மனுவின் நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்படவில்லை.