ஹைதராபாத், ஜூலை.4: ஆந்திரத்தை இரண்டாகப் பிரித்து தனித் தெலங்கானா மாநிலம் அமைக்கக் கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் இன்று ராஜிநாமா செய்தனர்.
தங்களது ராஜிநாமா கடிதங்களை பேரவை துணைத் தலைவரிடம் அவர்கள் அளித்தனர்.
9 காங்கிரஸ் எம்பிக்கள், 53 எம்எல்ஏக்கள் மற்றும் 37 தெலுங்குதேச எம்எல்ஏக்கள் உள்ளிட்ட தெலங்கானா பகுதியைச் சேர்ந்த மேலும் பலர் இன்று தங்களது பதவியை ராஜிநாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக மற்றொரு முறை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு தெலங்கானா பகுதி எம்எல்ஏக்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தெலங்கானா எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் தொடர்பு கொண்டு வருகிறேன், இன்று பிற்பகலில் அவர்களில் சிலர் தில்லி வந்து சேருவர் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் ஒருசில சுற்றுக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட அவர்களை கேட்டுக் கொண்டுள்ளேன். நல்லது நடக்கும் என்று நம்புகிறோம் என காங்கிரஸ் பொதுச்செயலரும், மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆஸாத் தெரிவித்தார்.
இதனிடையே ராஜிநாமா கடிதங்களை அளிப்பதற்கு மக்களவைத் தலைவரிடம் நேரம் கேட்டிருந்த 9 காங்கிரஸ் எம்பிக்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த நேரத்தில் மக்களவைத் தலைவரை சந்திக்கவில்லை. மக்களவைத் தலைவரும் தனது அலுவலத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதனால் காங்கிரஸ் எம்பிக்களால் தங்களது ராஜிநாமா கடிதங்களை அளிக்க முடியவில்லை என்று தில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.