சென்னை, ஜூலை.4: தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளிகளிலும், அரசு கல்லூரிகளிலும் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் வழங்கப்படும் நடப்பு கல்வியாண்டிற்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்து, சென்னை மாநகரைச் சேர்ந்த 7 பள்ளிகளில் பயிலும் 7 மாணவ மாணவியர்களுக்கு இலவச பஸ் பாஸ்களை வழங்கினார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் பயிலும் 26.3 லட்சம் மாணவ, மாணவியர்கள் இலவச பஸ் பாஸ் பெற்று பயனடைந்து வருகிறார்கள்.
மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னையில் கடந்த ஆண்டு 3.40 லட்சம் மாணவ மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கியது. நடப்பு கல்வியாண்டில் சுமார் 3.60 லட்சம் மாணவ, மாணவியர் இலவச பஸ் பாஸ் பெறுவார்கள்.
முதல்வர் ஜெயலலிதா இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை, விருகம்பாக்கம் சின்மயா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவி என். ஹரிணி, அரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பி.லோகநாதன், கீழ்ப்பாக்கம் ஸ்ரீ பாலகிருஷ்ண கோத்தாரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவன் டி.விஷ்ணு, அடையாறு ராணி லேடி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி மாணவி பி.நசீராபேகம், எழும்பூர் பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி என்.ஒய். மௌலிஷா, மௌலிவாக்கம் அரசு ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளி மாணவன் ஏ. ஸ்ரீநாத், பெரியமேடு செயிண்ட் மார்க்ஸ் நடுநிலைப்பள்ளி மாணவி டி. காயத்ரி ஆகிய 7 மாணவ, மாணவியர்களுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள பஸ் பாஸ் வழங்கினார்.
இதேபோன்று தமிழகத்தில் உள்ள பிற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கும் இலவச பஸ் பாஸ்களை விரைந்து வழங்கிட வேண்டுமென்று அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.