சென்னை, ஜூலை.4: திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளைச் சேர்ந்த கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 3 மீனவர்களின் பெற்றோர்களிடம் நிவாரணத் தொகையாக தலா ரூ 1 லட்சம் வீதம் ரூ 3 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் குப்பம், எண்ணூர் பகுதிகளைச் சேர்ந்த கடலுக்கு மீன்பிடிக்க சென்று காணாமல் போன 3 மீனவர்களின் பெற்றோர்களிடம் மீனவர் நல வாரியத்தின் மூலம் நிவாரணத் தொகையாக ரூ. 1 லட்சம் வீதம், ரூ. 3 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த ரவி , பன்னீர்செல்வம் மற்றும்
எண்ணூரைச் சேர்ந்த சுதாகரன் ஆகிய 3 மீனவர்களும் கடந்த 17.5.2010 அன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்று, கரை திரும்பவில்லை.
ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, காணாமல் போன மீனவ குடும்பங்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பரிசீலித்து, அந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு மீனவர் நல வாரியத்தின் மூலம் நிவாரணத் தொகை வழங்கிட ஆணையிட்டார். அதன்படி, காணாமல் போன மூன்று மீனவர்களின் பெற்றோர்களிடம் நிவாரணத் தொகையாக ரூ. 3 லட்சத்திற்கான காசோலையினை முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.