சென்னை, ஜூலை 9: சென்னை ராணுவக் குடியிருப்பில் சிறுவன் தில்ஷனை சுட்டுக் கொன்ற வழக்கில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது பெயர் கே. ராம்ராஜ் (58). மதுரையைச் சேர்ந்தவர். ஓய்வுபெற்ற லெப்டினட் கர்னல். அவர் சிறுவனை சுடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கியை கூவம் ஆற்றிலிருந்து போலீஸார் மீட்டனர்.
சிறுவனை சுட்டுக் கொன்றது தொடர்பாக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை சிபி-சிஐடி போலீஸ் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. சேகர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை தீவுத்திடல் இந்திரா நகரைச் சேர்ந்த குமார் என்பவரின் 2-வது மகன் தில்ஷன். இச்சிறுவன் ஜூலை 3-ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து தீவுத்திடல் அருகேயுள்ள ராணுவக் குடியிருப்புக்குள் பாதாம் பழங்களை எடுக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு ஒருவர் தில்ஷனை துப்பாக்கியால் சுட்டதில், அவன் இறந்தான். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய சிபி-சிஐடி போலீஸார் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ராம்ராஜை கைது செய்தனர்.