சென்னை, ஜூலை 10- தமிழகத்தில் நில அபகரிப்பு புகார் தொடர்பாக விசாரிக்க காவல்துறையில் தனி சிறப்புப் பிரிவு ஒன்று தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2006 முதல் 2011 வரையிலான ஆட்சிக் காலத்தில் தனியார் நிலங்கள் அபகரிப்பு மற்றும் கட்டாய விற்பனை பெருமளவில் நடைபெற்றதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எனவே தான், அதிமுக தேர்தல் அறிக்கையில் மக்களை அநியாயமாக மிரட்டி பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு, அவற்றை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
நில அபகரிப்பு தொடர்பாக கடந்த ஆட்சியிலேயே புகார்கள் அளிக்கப்பட்டிருந்தும் அதுகுறித்து எந்தவித நடவடிக்கையையும் முந்தைய திமுக அரசு எடுக்கவில்லை. 1.7.2011 வரை தமிழகம் முழுவதும் நில அபகரிப்பு தொடர்பாக 1,449 புகார்கள் பொது மக்களிடமிருந்து தமிழகக் காவல் துறையினரால் பெறப்பட்டுள்ளன.
புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், இவற்றை தற்போதுள்ள காவல் நிலையங்களில் விசாரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். எனவே, நில அபகரிப்பு வழக்குகளை பதிவு செய்து, தகுந்த விசாரணை மேற்கொள்வதாக காவல் துறையில் தனியாக சிறப்புப் பிரிவு ஒன்றை காவல்துறை தலைமை அலுவலகத்திலும், மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த நான் ஆணையிட்டுள்ளேன்.
மேலும், இந்த நில அபகரிப்பு தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளேன்.
இந்த சிறப்புப் பிரிவு, 2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான புகார்கள் மீதான விசாரணைகளை மேற்கொண்டு, இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள இதர சட்டங்களின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கும்.
இதன் மூலம், நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதையும், மீட்கப்பட்ட நிலங்கள் உரியவர்களிடம் சட்டப்படி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது இந்த நடவடிக்கை, நிலத்தை இழந்தவர்களுக்கு தங்கள் நிலங்கள் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.
இவ்வாறு தனது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.