புதுதில்லி, ஜூலை.15: 2ஜி ஊழல் தொடர்பாக அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்று பாஜக குழு ஒன்று சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங்கை நேரில் சந்தித்து வலியுறுத்தியது.
பொதுவாக சிபிஐ இயக்குநர் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திப்பதில்லை. எனினும் தற்போது பாஜக எம்பி பிரகாஷ் ஜவதேகர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் தன்னை சந்திக்க சிபிஐ இயக்குநர் அனுமதி அளித்தார்.
அந்த குழுவில் எம்பிக்கள் மாயா சிங், சிவகுமார் உடாசி மற்றும் பாஜகவைச் சேர்ந்த பூபேந்திர யாதவ் மற்றும் ஜகத் பிரசாத் நடா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஸ்பெக்ரம் அலைக்கற்றை விற்பனை கொள்கைக்கு ப.சிதம்பரம் அனுமதி அளித்திருந்ததாகக் குறிப்பிடும் ஆதாரங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற ஆவணங்களை பாஜக குழுவினர் சிபிஐ இயக்குநரிடம் அளித்தனர்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூலமாக அரசுக்கு ஒட்டுமொத்தமாக எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பதை சிபிஐ கணக்கிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ராசா கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் அப்போது நிதி அமைச்சராக இருந்த சிதம்பரத்தின் பங்கு குறித்து சிபிஐ விசாரிக்காததற்கான காரணங்கள் குறித்து ஆச்சரியமாக உள்ளது என்று அந்தக் குழுவினர் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுவீர்களா எனக் கேட்டபோது, இப்போது சிபிஐயிடம் மனு அளித்துள்ளோம். அது நடவடிக்கை எடுக்கிறதா என்று பார்ப்போம். நடவடிக்கை ஏதும் இல்லையெனில் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்போம் என ஜவதேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஸ்பெக்ட்ரம் விலையைத் நிதி அமைச்சகமும், தொலைத்தொடர்பு அமைச்சகமும்தான் தீர்மானிக்க வேண்டும் என்று 2003-ம் ஆண்டு அமைச்சரவையில் முடிவுசெய்யப்பட்டிருந்தது. எனவே எந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும் இரண்டு அமைச்சகங்களுக்கும் சமமாக பொறுப்பு உள்ளது என பாஜக தெரிவித்துள்ளது.