புதுதில்லி, ஜூலை.15: புதன்கிழமை நிகழ்ந்த 3 குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு சுமார் 15 நிமிடங்கள் போலீசாரைத் தொடர்புகொள்ள முடியாமல் செல்போன் நெட்வொர்க்குகள் செயலற்ற நிலையில் இருந்ததாக மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் அதிர்ச்சியான தகவலைத் தெரிவித்துள்ளார்.
முதல் 15 நிமிடங்கள் தொலைத்தொடர்பு முற்றிலும் தடைபட்டிருந்தது. இது அதிர்ச்சியானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. செல்போன் நெட்வொர்க்குகள் 15 நிமிடங்கள் செயலிழந்திருந்தன. அதை மேம்படுத்து அவசியம் என சவாண் தெரிவித்தார்.
குண்டுவெடிப்புகளையடுத்து மக்கள் கோபமடைந்தது நியாயமானதுதான். மீண்டும் மீண்டும் குண்டுவெடிப்புகள் நிகழ்வதை அரசால் ஏன் தடுக்க முடியவில்லை என்று பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர் என்று அவர் கூறினார்.
2008 பயங்கரவாதத் தாக்குதலின்போது இருந்ததைவிட இப்போது நிலைமை எவ்வளவோ பரவாயில்லை எனத் தெரிவித்த சவாண், 100 சதவீத பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று கூறுவது அதிகப்படியானதாக இருக்கும் என்றார்.
சிசிடிவி போன்ற பாதுகாப்புக் கருவிகள் வாங்குவதற்காக சிவப்பு நாடா முறை வைத்திருப்பதை சவாண் குறைகூறினார். போலீஸ் இடமாற்றம் மற்றும் நியமனங்களில் கடுமையான பிரச்னைகள் ஏற்படுவதால் பாதுகாப்பு மற்றும் புலனாய்வில் குறைபாடு உள்ளது என அவர் கூறினார்.